என் மலர்tooltip icon

    செய்திகள்

    6075 உள்ளாட்சி பதவிகளுக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 494 பேர் மனு
    X

    6075 உள்ளாட்சி பதவிகளுக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 494 பேர் மனு

    காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 6075 உள்ளாட்சிப் பதவிகளுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 25 ஆயிரத்து 494 பேர் வேட்பு மனுக்கள்தாக்கல் செய்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 17 மற்றும் 19-ந்தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது, மாவட்டம் முழுவதும் உள்ள 6075 உள்ளாட்சிப் பதவிகளுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 25 ஆயிரத்து 494 பேர் வேட்பு மனுக்கள்தாக்கல் செய்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் 4,394 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி ஆய்வு செய்து வருகிறார்.

    மாவட்டத்தில் முதல் கட்டமாக 17-ந்தேதி 8 ஒன்றியங்கள், 6 பேரூராட்சிகள் மற்றும் 2 நகராட்சிகளிலும், 2-ம் கட்டமாக 5 ஒன்றியங்கள், 11 பேரூராட்சிகள் மற்றும் 7 நகராட்சிகளிலும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் 29 லட்சத்து 37 ஆயிரத்து 577 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

    40 வார்டுகளை கொண்டிருந்த காஞ்சீபுரம் நகராட்சி தொகுதி சீரமைப்பிற்கு பின்னால் 51 வார்டுகளாக விரிவுபடுத்தப்பட்டது. நேற்று வேட்புமனு தாக்கலின் இறுதிநாளில் அனைத்து வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய தங்கள் ஆதரவாளர்களுடன் திரண்டனர். இதனால் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள இந்திராகாந்தி சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    நகராட்சி வாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    காஞ்சீபுரம் நகராட்சியில் 51 வார்டுகளுக்கு 1-ந்தேதி வரை 46 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்து இருந்தனர்.

    நேற்று ஒரே நாளில் 287 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் காஞ்சீபுரம் நகராட்சியில் வேட்பாளர்கள் எண்ணிக்கை 333 பேராக உள்ளது. இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனு வாபஸ் பெற 6-ந்தேதி கடைசி நாள் ஆகும். இதன் பின்னரே இறுதி வேட்பாளர் நிலை தெரியவரும்.
    Next Story
    ×