என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சீபுரம்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சிவன்தாங்கல் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் கார்த்திக் (வயது 30). கார் டிரைவர்.

    நேற்று இரவு அவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஜெயவேலுவுடன் சிவன்தாங்கலில் உள்ள பள்ளிக்கூடம் அருகே பேசிக் கொண்டு நின்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் 2 பேரையும் சுற்றி வளைத்தனர்.

    அதிர்ச்சி அடைந்த கார்த்திக் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். அவரை விரட்டிச் சென்ற மர்ம கும்பல் சரமாரியாக வெட்டினர். இதனை தடுக்க முயன்ற ஜெயவேலுவுக்கும் பலத்த வெட்டு விழுந்தது.

    தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை கண்டதும் கொலைக் கும்பல் தப்பி ஓடி விட்ட னர். பலத்த காயம் அடைந்த ஜெயவேலுக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கடந்த 18-ந் தேதி சிவன் தாங்கலில் ஒருவரது இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் கார்த்திக்கிக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் கண்ணையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கொலையுண்ட கார்த்திற்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    துரைப்பாக்கம் கண்ணகி நகரில் கஞ்சா விற்கும் தகராறில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து 7 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பூ விற்கும் 2 பெண்களை தேடி வருகின்றனர்.
    திருவான்மியூர்:

    துரைப்பாக்கம் கண்ணகி நகரில் நேற்று முன்தினம் இரவு கஞ்சா விற்கும் தகராறில் இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் கண்ணகிநகரை சேர்ந்த ரவுடி களியா என்ற ரஞ்சித்குமார், சக்திவேல் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். தப்பி ஓடிய போது ஹார்பர் என்ற ஜெபஸ்டின் மில்லர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.

    இந்த மோதலில் செங்கோட்டையன் என்பவர் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை மோசமாக உள்ளது.

    கஞ்சா விற்கும் ததராறில் 3 பேர் கொலையுண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பதட்டமான நிலை உள்ளதால் கண்ணகி நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே கொலை தொடர்பாக கண்ணகிநகரை சேர்ந்த ஜோபிடாமணி என்ற மணிமாறன், தாட்சா என்ற தமிழரசன், தில்லானா என்ற அற்புதராஜ் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் கஞ்சா விற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் கொலையில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்காக 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பழைய குற்றவாளிகளின் பட்டியலை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் கண்ணகிநகர் பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

    கண்ணகிநகர் பகுதியில் போலீசாரின் எந்தவித கெடுபிடியும் இன்றி கஞ்சா வியாபாரம் கொடிகட்டி பறந்துள்ளது. இதில் ரஞ்சித்குமார் தலைமையில் ஒரு கோஷ்டியும், செங்கோட்டையன் தலைமையில் மற்றொரு கோஷ்டியும் ஈடுபட்டுள்ளனர்.

    தீபாவளியை யொட்டி கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்துள்ளது. கண்ணகி நகரில் கஞ்சா வியாபாரத்திற்காக பூ விற்கும் பெண்களையும் அவர்கள் வளைத்துள்ளனர்.

    இதில் 2 பெண்கள் பூக்களுடன் வைத்து கஞ்சா வியாபாரத்தை ஜோராக நடத்தி வந்துள்ளனர். கொலைகள் பற்றி அறிந்ததும் அந்த 2 பெண்களும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதைப்போல் போலீசாரின் துணை இல்லாமல் இந்த அளவு கஞ்சா வியாபாரம் நடைபெற வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

    எனவே கஞ்சா கோஷ்டியுடன் தொடர்பில் உள்ள போலீசார் பற்றிய விபரத்தை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள். இதனால் போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர்.
    துரைப்பாக்கம் கண்ணகி நகரில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் கொலை செய்யப்பட்டனர். அப்போது தப்பி ஓட முயன்ற எதிர்க்கோஷ்டியை சேர்ந்த வாலிபர், கழிவுநீர் குழாயில் ஏறும் போது தவறி விழுந்து இறந்தார்.
    ஆலந்தூர்:

    சென்னையில் சாலையோரம் குடியிருந்தவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டு உள்ளனர். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் கூலித்தொழிலாளர்கள் ஆவர்.

    கண்ணகி நகரில் ரவுடி களியா என்ற ரஞ்சித்குமார் (வயது 24) என்பவர் தலைமையில் ஒரு கோஷ்டியும், செங்கோட்டையன் என்பவர் தலைமையில் மற்றொரு கோஷ்டியும் கஞ்சா விற்று வந்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இவர்களுக்கு போலீஸ் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது.

    தீபாவளியையொட்டி கஞ்சா விற்பதில் இரு கோஷ்டியினருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் செங்கோட்டையனை, களியா தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் செங்கோட்டையன் ஆதரவாளர்களுக்கும், களியா ஆதரவாளர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    அப்போது ரவுடி களியாவை எதிர் கோஷ்டியினர் அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த களியா என்ற ரஞ்சித்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த களியாவின் ஆதரவாளர்கள் செங்கோட்டையன் கோஷ்டியை சேர்ந்த ஹார்பர் என்ற செபஸ்டின் என்ற மில்லர் (23) என்பவரை விரட்டிச் சென்றனர். இவர்களிடம் இருந்து தப்பிக்க மில்லர் அங்குள்ள ஒரு குடியிருப்பின் கழிவுநீர் குழாய் வழியாக ஏறி மொட்டை மாடிக்கு தப்பிச்செல்ல முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மில்லர் கீழே தவறி விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த மில்லர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இந்த கோஷ்டி மோதலில் படுகாயம் அடைந்த செங்கோட்டையன், சக்திவேல் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சக்திவேல் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், கொலையான ரவுடி களியா மற்றும் தவறி விழுந்து இறந்த மில்லர் ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் கண்ணகி நகரில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இது பற்றி தகவல் அறிந்ததும் தென்சென்னை இணை கமிஷனர் அன்பு, அடையாறு துணை கமிஷனர் சுந்தரவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அசம்பாவிதங்களை தடுக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பையும் சேர்ந்த தில்லானா (23), தமிழரசன் (20), மணிமாறன் (23) ஆகிய 3 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 8-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்ணகி நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் சமூக விரோத சம்பவங்கள் அதிகமாக நடந்து வருவது உண்டு. கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா விற்பனை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர் இறந்துவிட்டார். இதையடுத்து கண்ணகி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதையும் மீறி கஞ்சா விற்பதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சீபுரம் அருகே தீயில் கருகி இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த புள்ளலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கனகா (வயது 23). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது.

    தீபாவளியையொட்டி நேற்று காலை கனகா பலகாரம் செய்ய வீட்டின் வெளியே விறகு அடுப்பை பற்றவைத்தார். எதிர் பாராதவிதமாக கனகாவின் புடவையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமள வென்று பரவியதால் படுகாயம் அடைந்த அவர் உடல் கருகி அலறினார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகா பரிதாபமாக இறந்தார். இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    காவிரி பிரச்சினை பற்றி பேச தி.மு.க.வுக்கோ, காங்கிரசுக்கோ எந்த தகுதியும் இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
    ஆலந்தூர்:

    பொன்.ராதாகிருஷ்ணன், கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    எல்லையில் இருந்து நம்மை காத்து வரும் ராணுவ வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறேன். தீபாவளி பட்டாசு மாசுகளை அகற்றும் வகையில் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். தூய்மையான பாரதமாக இருக்க இந்த தீபாவளியின் போது சபதம் ஏற்க வேண்டும்.

    காவிரி விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி துரோகங்களை செய்து உள்ளதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, அறிக்கையில் கூறி உள்ளார். இந்திரா காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில் வழக்கை திரும்ப பெற்று உள்ளேன் எனக்கூறி உள்ளார்.

    யாரையும் கலந்து பேசாமல் தன்னிச்சையாக காவிரி விவகாரத்தில் வழக்கை கருணாநிதி திரும்ப பெற்று உள்ளார். இந்த துரோகத்தை தமிழ் சமுதாயத்துக்கு வேறு யாரும் செய்து இருக்கமுடியாது. அதன் பின்னர் இந்திரா காந்தியோ, கருணாநிதியோ தமிழகத்துக்கு நன்மை செய்யவில்லை.

    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காவிரி பிரச்சினையில் 2 நாள் கவனம் செலுத்தி இடைக்கால தீர்ப்பு கிடைக்கவும், தமிழகத்துக்கு நன்மை செய்யவும் கவனம் செலுத்தியதாக கருணாநிதி கூறி உள்ளார்.

    அனைத்துக்கட்சி கூட்டம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சில கட்சிகளை கூட்டி தன்னுடைய கருத்துகளை ஏற்றுக்கொள்ள வைப்பது போன்ற பல விஷயங்களை தமிழக மக்களும், விவசாயிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    காவிரி பிரச்சினை பற்றி பேச தி.மு.க.வுக்கோ, காங்கிரசுக்கோ எந்தவித தகுதியும் இல்லை. தி.மு.க.-காங்கிரஸ் உறவு இல்லை என்றும், உறவை பிரிக்க முடியாது என்றும் கூறுகின்றனர். புதுச்சேரி மாநில இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க.வுடன் காங்கிரஸ் உறவாடுகிறது. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழக மக்களுக்கு காங்கிரஸ்-தி.மு.க. செய்து உள்ள துரோகங்களுக்கு அளவே கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மழை வெள்ளத்தை சமாளிக்க தாம்பரத்தில் 21 கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
    தாம்பரம்:

    வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது காஞ்சீபுரம் மாவட்டம் வெள்ளப் பெருக்கில் பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஏராளமான பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டது. எனவே, வர இருக்கின்ற வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்படும் வெள்ள அபாயத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் மற்றும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றபட்டுள்ளன. பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    டார்ச் விளக்குகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், ரெயின் கோட்டுகள், மணல் மூட்டைகள் போன்ற பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மழை வெள்ளத்தை சமாளிக்க அதிகாரிகளை கொண்ட 51 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து குழுக்களிலும் தலா 11 அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். கடந்த வடகிழக்கு பருவமழையின் போது தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

    எனவே தாம்பரம் பகுதியில் மட்டும் 21 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதற்கிடையே வர இருக்கின்ற பருவமழையின் போது ஏற்படும் வெள்ள அபாயத்தை தடுத்து சமாளிப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் பல்லாவரத்தில் இன்று நடந்தது.

    கூட்டத்துக்கு முதன்மை செயலாளர் ராஜாராமன் தலைமை தாங்கினார். 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அதிகாரிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சி செயல் அலுவலர்கள், போலீஸ் உயர் அதிகரிகள் தீயணைப்பு துறை அதிகாரிகள் என அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
    அடையாறில் போலீஸ் விரட்டியபோது ஆற்றில் குதித்து ரவுடி தப்பியோடி சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    திருவான்மியூர்:

    சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் சுதாகர் (36). இவர் மீது கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்தார்.

    இவர் நேற்று மாலை 5.30 மணி அளவில் அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கோட்டூர்புரம் போலீசார் சுதாகரை பிடிக்க முயன்றனர்.

    போலீஸ் பிடியில் இருந்து தப்புவதற்காக சுதாகர் அங்கிருந்து தப்பிச் சென்றார். மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்ற அவரை போலீசாரும் பின்னால் துரத்திச் சென்றனர்.

    அடையாறு திரு.வி.க. பாலம் அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு சுதாகர் ஓட்டம் பிடித்தார். போலீசாரும் விரட்டினர். இதனையடுத்து சுதாகர் அடையாறு ஆற்றில் குதித்தார்.

    பின்னர் சிறிது தூரம் தண்ணீரில் நீந்திச் சென்ற அவர் மேடான பகுதி சென்றடைந்தார். அங்கிருந்து மீண்டும் ஓட்டம் பிடித்து ஆற்றின் மறுமுனையில் கரையேறி தப்பிச் சென்றார். ஆனால் இதனை போலீசார் முதலில் கண்டுபிடிக்கவில்லை.

    சுதாகர் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரில் இறங்கி சுதாகரை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் பின்னரே, சுதாகர் கரையேறி தப்பிச் சென்றது தெரிய வந்தது. தீயணைப்பு படையினர் தேடுதல் வேட்டையை கைவிட்டனர்.
    திருப்போரூர் அருகே கெமிக்கல் கம்பெனியில் வாலிபர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருப்போரூர்:

    திருப்போரை அடுத்த ஆலத்தூரில் உள்ள சிப்காட் வளாகத்தில் தனியார் கெமிக்கல் தொழிற்சாலை உள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுசாந்த்போய் (வயது22) வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு அவர் பணியில் ஈடுபட்டபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் சுசாந்த்போய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மதுராந்தகம் அருகே இன்று காலை அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது.பஸ்சில் இருந்த 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    மதுராந்தகம்:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்கிறார்கள். இதனால் பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது.

    சென்னையில் இருந்து காரைக்குடிக்கு இன்று அதிகாலை அரசு விரைவு பஸ் புறப்பட்டது. சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் இருந்தனர்.

    அதிகாலை 5 மணி அளவில் அச்சரப்பாக்கத்தை அடுத்த தொழபேடு நோக்கி பஸ் வந்து கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் பஸ்சில் இருந்த 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    காயம் அடைந்த பயணிகள் அனைவரும் அச்சரப்பாக்கம், திண்டிவனம், மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மதுராந்தகம் அருகே காகித ஆலை எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கத்தை அடுத்த கீரல்வாடி கிராமத்தில் தனியார் காகிதம் மற்றும் அட்டை தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு பீகாரை சேர்ந்த அங்கித் தூபே (வயது24) உள்பட ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று மாலை கம்பெனியில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கித்தூபே எந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

    அவரை மற்ற தொழிலாளர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அங்கித்தூபே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தாமூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விமானங்களிலும் இன்று(வெள்ளிக்கிழமை) வரை டிக்கெட் இல்லை.
    ஆலந்தூர் :

    தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதேபோல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

    இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விமானங்களிலும் இன்று(வெள்ளிக்கிழமை) வரை டிக்கெட் இல்லை.

    சென்னையில் இருந்து மதுரைக்கு தினமும் 8 விமானங்களும், திருச்சிக்கு 4 விமானங்களும், தூத்துக்குடிக்கு 2 விமானங்களும் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் 2 தினங்களுக்கு டிக்கெட்டுகள் முழுவதும் நிரம்பி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பண்டிகை காலங்களில் பஸ்கள், ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவது போல் தற்போது விமானங்களிலும் கூட்டம் நிரம்பிவிட்டன. எனவே பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு விமான சேவையையும் அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    பல்லாவரம் அருகே பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் பொருட்கள் நாசமானது.
    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் லட்சுமி நகரில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் குடோன் உள்ளது. இன்று காலை 6 தொழிலாளர்கள் அங்கு பணியில் ஈடுபட்டனர்.

    திடீரென குடோனிக் ஒரு பகுதியில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் குடோனில் இருந்து அலறியடித்து வெளியே வந்தனர்.

    இது குறித்து சங்கர் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் முழுவதும் எரிந்ததால் அப்பகுதியே புகை மூட்டமானது. துர்நாற்றமும் வீசியது. இதனால் தீயணைப்பு வீரர்களால் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

    சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. சேதமதிப்பு பல லட்சம் இருக்கும்.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    ×