என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி பிரச்சினை பற்றி பேச தி.மு.க.வுக்கோ,காங்கிரசுக்கோ எந்த தகுதியும் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறார்
    X

    காவிரி பிரச்சினை பற்றி பேச தி.மு.க.வுக்கோ,காங்கிரசுக்கோ எந்த தகுதியும் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறார்

    காவிரி பிரச்சினை பற்றி பேச தி.மு.க.வுக்கோ, காங்கிரசுக்கோ எந்த தகுதியும் இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
    ஆலந்தூர்:

    பொன்.ராதாகிருஷ்ணன், கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    எல்லையில் இருந்து நம்மை காத்து வரும் ராணுவ வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறேன். தீபாவளி பட்டாசு மாசுகளை அகற்றும் வகையில் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். தூய்மையான பாரதமாக இருக்க இந்த தீபாவளியின் போது சபதம் ஏற்க வேண்டும்.

    காவிரி விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி துரோகங்களை செய்து உள்ளதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, அறிக்கையில் கூறி உள்ளார். இந்திரா காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில் வழக்கை திரும்ப பெற்று உள்ளேன் எனக்கூறி உள்ளார்.

    யாரையும் கலந்து பேசாமல் தன்னிச்சையாக காவிரி விவகாரத்தில் வழக்கை கருணாநிதி திரும்ப பெற்று உள்ளார். இந்த துரோகத்தை தமிழ் சமுதாயத்துக்கு வேறு யாரும் செய்து இருக்கமுடியாது. அதன் பின்னர் இந்திரா காந்தியோ, கருணாநிதியோ தமிழகத்துக்கு நன்மை செய்யவில்லை.

    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காவிரி பிரச்சினையில் 2 நாள் கவனம் செலுத்தி இடைக்கால தீர்ப்பு கிடைக்கவும், தமிழகத்துக்கு நன்மை செய்யவும் கவனம் செலுத்தியதாக கருணாநிதி கூறி உள்ளார்.

    அனைத்துக்கட்சி கூட்டம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சில கட்சிகளை கூட்டி தன்னுடைய கருத்துகளை ஏற்றுக்கொள்ள வைப்பது போன்ற பல விஷயங்களை தமிழக மக்களும், விவசாயிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    காவிரி பிரச்சினை பற்றி பேச தி.மு.க.வுக்கோ, காங்கிரசுக்கோ எந்தவித தகுதியும் இல்லை. தி.மு.க.-காங்கிரஸ் உறவு இல்லை என்றும், உறவை பிரிக்க முடியாது என்றும் கூறுகின்றனர். புதுச்சேரி மாநில இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க.வுடன் காங்கிரஸ் உறவாடுகிறது. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழக மக்களுக்கு காங்கிரஸ்-தி.மு.க. செய்து உள்ள துரோகங்களுக்கு அளவே கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×