என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்ணகிநகரில் 3 பேர் கொலை: 7 பேர் கும்பல் கைது
    X

    கண்ணகிநகரில் 3 பேர் கொலை: 7 பேர் கும்பல் கைது

    துரைப்பாக்கம் கண்ணகி நகரில் கஞ்சா விற்கும் தகராறில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து 7 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பூ விற்கும் 2 பெண்களை தேடி வருகின்றனர்.
    திருவான்மியூர்:

    துரைப்பாக்கம் கண்ணகி நகரில் நேற்று முன்தினம் இரவு கஞ்சா விற்கும் தகராறில் இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் கண்ணகிநகரை சேர்ந்த ரவுடி களியா என்ற ரஞ்சித்குமார், சக்திவேல் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். தப்பி ஓடிய போது ஹார்பர் என்ற ஜெபஸ்டின் மில்லர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.

    இந்த மோதலில் செங்கோட்டையன் என்பவர் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை மோசமாக உள்ளது.

    கஞ்சா விற்கும் ததராறில் 3 பேர் கொலையுண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பதட்டமான நிலை உள்ளதால் கண்ணகி நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே கொலை தொடர்பாக கண்ணகிநகரை சேர்ந்த ஜோபிடாமணி என்ற மணிமாறன், தாட்சா என்ற தமிழரசன், தில்லானா என்ற அற்புதராஜ் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் கஞ்சா விற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் கொலையில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்காக 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பழைய குற்றவாளிகளின் பட்டியலை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் கண்ணகிநகர் பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

    கண்ணகிநகர் பகுதியில் போலீசாரின் எந்தவித கெடுபிடியும் இன்றி கஞ்சா வியாபாரம் கொடிகட்டி பறந்துள்ளது. இதில் ரஞ்சித்குமார் தலைமையில் ஒரு கோஷ்டியும், செங்கோட்டையன் தலைமையில் மற்றொரு கோஷ்டியும் ஈடுபட்டுள்ளனர்.

    தீபாவளியை யொட்டி கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்துள்ளது. கண்ணகி நகரில் கஞ்சா வியாபாரத்திற்காக பூ விற்கும் பெண்களையும் அவர்கள் வளைத்துள்ளனர்.

    இதில் 2 பெண்கள் பூக்களுடன் வைத்து கஞ்சா வியாபாரத்தை ஜோராக நடத்தி வந்துள்ளனர். கொலைகள் பற்றி அறிந்ததும் அந்த 2 பெண்களும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதைப்போல் போலீசாரின் துணை இல்லாமல் இந்த அளவு கஞ்சா வியாபாரம் நடைபெற வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

    எனவே கஞ்சா கோஷ்டியுடன் தொடர்பில் உள்ள போலீசார் பற்றிய விபரத்தை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள். இதனால் போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர்.
    Next Story
    ×