என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    குரோம்பேட்டை மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதிய விபத்தில் 8 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
    தாம்பரம்:

    கோயம்பேட்டில் இருந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் சென்றது. டிரைவர் நாயக்பாட்சா வண்டியை ஓட்டினார். பஸ்சில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    அதிகாலை 3 மணியளவில் குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலத்தில் பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இதில் டிரைவர் நாயக் பாட்சா, நடத்துனர் விஜயகுமார் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் பல்லாவரம்-தாம்பரம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மாமல்லபுரம் அருகே நிலப்பிரச்சனையில் வாலிபரை கொன்று நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த வெண்புரு‌ஷம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27) இவரது மனைவி ரங்கீலா. இவர்களுக்கு கடந்த செப்டம்பர் 15-ந் தேதி திருமணம் நடந்தது.

    கார்த்திக் கடந்த அக்டோபர் 8-ந் தேதி சூளேரிக்காட்டில் உள்ள மனைவி ரங்கீலாவின் அக்காள் ரஞ்சிதாவின் வீட்டிற்கு சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை.

    இந்த நிலையில் கார்த்திக்கை சொத்துதகராறில் கொலைசெய்ததாக ரஞ்சிதாவின் கணவரும் சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான டில்லிபாபு செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    அவரிடம் மாமல்லபுரம் போலீசார் விசாரித்த போது கார்த்திக்கை கொலை செய்து மாமண்டூர் பாலாற்றில் புதைத்ததாக தெரிவித்தார். இதற்கு உடந்தையாக மாமண்டூரை சேர்ந்த நண்பர்கள் சுதாகர், வினோத்குமார் ஆகியோர் இருந்ததாக கூறினார்.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பாலாற்றில் புதைக்கப்பட்ட புது மாப்பிள்ளை கார்த்திக்கின் உடலையும் தோண்டி எடுத்து அதே இடத்தில் பரிசோதனை செய்தனர்.

    அப்போது கார்த்திக்கின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருப்பது தெரிந்தது. அவரது தலை தனியாக புதைக்கப்பட்டு இருந்தது. மேலும் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மஞ்சள், குங்குமம் மற்றும் பூஜைகள் நடந்ததற்கான தடயங்கள் காணப்பட்டன.

    இதைத் தொடர்ந்து கொலை வழக்கில் கைதானவர்கள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சுதாகர் மாந்தீரிகம் செய்து வந்ததும் சொத்து பிரச்சனையை தீர்ப்பதற்காக கார்த்திக்கை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்து இருப்பதும் தெரியவந்தது.

    இது குறித்து டில்லிபாபு போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    நிலப்பிரச்சனை தொடர்பாக மந்திரவாதி சுதாகரை சந்தித்தேன். அப்போது கார்த்திக் இருந்தால் தொடர்ந்து பிரச்சனை வரும். நிலமும் கைவிட்டு போய்விடும். அவரை இங்கு அழைத்து வந்தால் பூஜை செய்து சரிசெய்யலாம் என்று தெரிவித்தார்.

    எனவே கார்த்திக்கை அழைத்து சென்று சுதாகரை சந்தித்தேன். அங்கு பேச்சு வார்த்தைக்கு கார்த்திக் சம்மதிக்கவில்லை. இதையடுத்து அவரை கொலை செய்ய முடிவு செய்தோம்.

    பாலாற்றுக்கு அழைத்து சென்று கார்த்திக்கிற்கு மது கொடுத்தோம். போதை ஏறியதும் அவரை துண்டு துண்டாக வெட்டி பூஜை செய்து புதைத்து விட்டோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    கைதான டில்லிபாபு உள்பட 3 பேரும் தற்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    கார்த்திக் கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து டில்லிபாபு உள்பட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். அப்போது மேலும் பரபரப்பு தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நிலப்பிரச்சனையில் வாலிபரை கொன்று நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு சோழிங்கநல்லூர் தாலுக்காவை சேர்ந்த ஒக்கியம் துரைபாக்கத்தில் வசிக்கும் திருநங்கைகள் ஏராளமானோர் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் கஜலட்சுமி தலைமையில் நடைபெற்றது. அப்போது சோழிங்கநல்லூர் தாலுக்காவை சேர்ந்த ஒக்கியம் துரைபாக்கத்தில் வசிக்கும் திருநங்கைகள் ஏராளமானோர் திடீரென கூட்டத்திற்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து திருநங்கைகள், மாவட்ட கலெக்டர் கஜலட்சுமியிடம் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

    சோழிங்கநல்லூர் தாலுக்கா ஒக்கியம் துரைபாக்கத்தில் 15 ஆண்டுகளாக தனித்தனியாக வசித்து வருகிறோம். அனைவரும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம். குடியிருக்க வீடு கேட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகைமை திட்ட இயக்குனரிடம் சென்றால் நாங்கள் வசிக்கும் பகுதி சென்னை மாவட்டம் என சொல்கிறார்.

    நாங்கள் காஞ்சீபுரம் வருவாய் மாவட்டத்தில் இருப்பதற்கான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. எனவே நாங்கள் வசிக்கும் பகுதியில் எங்களுக்கு வீடு ஒதுக்கி தர வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் சாலை விபத்தில் பலியான 9 பேரின் குடும்பத்தினருக்கு 8 லட்சத்திற்கான காசோலைகளையும், காயமடைந்த 2 நபர்களுக்கு 60 ஆயிரத்திற்கான காசோலைகளையும் கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சௌரி ராஜன், சப்-கலெக்டர் அருண் தம்புராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் மாணவன் பலியானார். விபத்தில் மாணவன் பலியானது அறிந்ததும், அவரது உறவினர்கள் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அருகே உள்ள மானாம்பதி மேட்டுக்காலனியை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் கோகுல் (வயது 16). மானாம்பதி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இன்று காலை கோகுல் அதே பகுதியை சேர்ந்த உடன் படிக்கும் நண்பர் ராகுலுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். கோகுல் வண்டியை ஓட்டினார்.

    பள்ளி அருகே சென்ற போது ஆலந்தூரில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே கோகுல் பலியானார். ராகுல் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்தில் மாணவன் கோகுல் பலியானது பற்றி அறிந்ததும், அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். திடீரென அவர்கள் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் உத்திரமேரூர் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    இது குறித்து பெருநகர் போலீசார் அரசு பஸ் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விவசாயிகள் தற்கொலை விரும்பத்தகாத ஒன்று என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது விரும்பத்தகாத ஒன்று. பிரதமர் மோடி விவசாயிகள் முன்னேற்றத்திற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் விவசாய, கிராம முன்னேற்றத்திற்கு அதிக கவனம் செலுத்தப்படும்.

    மோடி மீனவர் பிரச்சினையில் மிகுந்த அக்கறை கொண்டு உள்ளார். இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இருநாட்டு வெளியுறவு துறை, மீன்வளத்துறை மந்திரிகள், அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நடந்தது. இரு நாட்டு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    3 மாதங்களுக்கு ஒரு முறை அதிகாரிகள், 6 மாதங்களுக்கு ஒரு மந்திரிகள் கூட்டம் நடத்தப்படும். மீனவர்கள் விடுதலை, படகுகள் விடுவிப்பு பற்றி பேசப்பட்டது. நீண்டகால பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட இருக்கிறது. மீனவர்கள், படகுகள் விடுப்பு குறித்து டிசம்பர் மாத இறுதியில் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். ஜனவரி மாதம் 2-ந் தேதி மந்திரிகள் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

    ராகுல்காந்தி இருக்கும் வரை காங்கிரஸ் கட்சி முன்னேறாது. ராகுல்காந்தியை பிரதமர் மோடியுடன் ஒப்பிட முடியுமா?... காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தை பேசலாமா?...

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு பிப்.1-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என்று காஞ்சி சங்கராசாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறி உள்ளார்.
    காஞ்சீபுரம்:

    பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு 1841-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 100 ஆண்டுக்கு பின் 1941-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் 1976-ம் ஆண்டும், கடைசியாக 1995-ம் ஆண்டும் கும்பாபிஷேகம் நடந்தது.

    காஞ்சீபுரம் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்த நிலையில் காமாட்சி கோவிலுக்கு அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி 1-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என்று காஞ்சி சங்கராசாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் காஞ்சி சங்கரமடத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் துர்முகி வருடம் தை மாதம் 19-ந்தேதி (2017-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி) உத்தராட்டதி நட்சத்திரத்தில் வசந்த பஞ்சமி சுப தினத்தில் காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் மீன லக்னத்தில் நடக்கிறது. கும்பாபிஷேக பணிக்காக ரூ.25 கோடி செலவிடப்பட்டு உள்ளது. அதில் தங்க விமானத்துக்கு மட்டும் ரூ.20 கோடி செலவிடப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காஞ்சீபுரத்தில் பணிக்கு தாமதமாக வந்ததாக கூறி இன்ஸ்பெக்டர் அடித்ததால் ஏட்டு மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ஆயுதப்படை பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் லோகநாதன். அதே ஆயுதப்படை பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் வேல்முருகன். இவர் பணிக்கு சேர்ந்து 3 மாதங்களே ஆகிறது.

    ஆயுதப்படையில் தினமும் நடைபெறும் அணிவகுப்பில் பங்கேற்க ஏட்டு வேல்முருகன் தாமதமாக வருவது வழக்கம். அவரை இன்ஸ்பெக்டர் லோகநாதன் கண்டித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலையிலும், ஏட்டு வேல்முருகன் அணிவகுப்புக்கு தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் லோகநாதன் அவரது கன்னத்தில் அறைந்தார்.

    அடிபட்டதும் ஏட்டு வேல்முருகன் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸ்காரர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து ஏட்டு வேல்முருகனை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஏட்டு வேல்முருகன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனால் இன்ஸ்பெக்டர் அடித்ததும் அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

    சிகிச்சைக்கு பிறகு ஏட்டு வேல்முருகனை போலீசார் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். நடந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரித்தனர்.

    இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மேல்மருவத்தூர் அருகே ரெயில்வே லெவல்கிராசிங் கேட்டை உடைத்து சென்ற லாரியால் ரெயில் தாமதமாக சென்றது.
    மேல்மருவத்தூர்:

    மேல்மருவத்தூர் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் ரெயில்வே லெவல் கிராசிங்கேட் உள்ளது. மேல்மருவத்தூரில் இருந்து இந்த வழியாக செய்யூர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அந்த ரெயில்வே கேட்டில் ரெயில் வருகைக்காக லாரி நிறுத்தப்பட்டிருந்தது. ரெயில் சென்ற பிறகு ரெயில்வே கேட்டை தூக்கும் பணியில் ஊழியர் ஈடுபட்டிருந்தார். கேட்டை தூக்கும் முன்பே லாரி அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இதனால் லாரி மோதியதில் லெவல்கிராசிங் கேட் உடைந்து விழுந்தது.

    அந்த நேரத்தில் ஈரோட்டில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. கேட்டை மூட முடியாததால் ரெயில் சிக்னல் கிடைக்காமல் அங்கேயே நின்றது. இதையடுத்து அங்கு ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் ரெயில்வே கேட்டின் இருபுறமும் நின்று போக்குவரத்தை நிறுத்தினர். பின்னர் ரெயிலை அனுப்பி வைத்தனர்.

    இதனால் ரெயில் தாமதமாக சென்றது. அதேபோல் சென்னையில் இருந்து விழுப்புரம சென்ற மின்சார ரெயில்களையும் அதேபோல அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ரெயில்வே கேட்டின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்களும் அணிவகுத்து நின்றன.
    வைகோ தினமும் ஒரு கருத்து கூறுவார். அவர் சொல்கிற கருத்துக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று பிரேமலதா கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தே.மு.தி.க. மகளிர் அணி செயலாளர் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் நடக்க உள்ள 3 இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கிறது. தே.மு.தி.க. பிரசாரத்தை இன்று முதல் தொடங்குகிறோம்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் பிரசாரத்துக்கு வருகிறார். அவர் பிரசாரம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    நடக்க இருக்கும் 3 தொகுதி தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் மற்ற 2 தொகுதிகளில் நடப்பது மறு தேர்தல் இது தமிழ்நாட்டில் நடக்கும் அவமான தேர்தல்.

    ஏனென்றால் பணபட்டு வாடா பெரும் அளவில் நடந்ததினால் 2 தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் நல்ல முறையில் தேர்தலை நடத்தினால் தே.மு.தி.க. கண்டிப்பாக வெற்றி பெறும்.

    இந்த தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ ஆதரவு இல்லை என்று கூறி இருக்கிறார். அவர் உணர்ச்சி வசப்படக்கூடிய குணம் உள்ளவர்.

    தினமும் ஒரு கருத்து சொல்வார். அவர் சொல்கிற கருத்துக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    தே.மு.தி.க.வுடன் கூட்டணி வேண்டும் என்று தேடி வந்தவரும் அவரே. இப்போது விமர்சனங்களை வைப்பதும் அவரே. இதற்கு அவரே பதில் சொல்வார்.

    3 தொகுதிகளில் தே.மு.தி.க. ஜெயித்தால் அந்தந்த தொகுதிகளில் எது முக்கியமோ, என்ன தேவையோ அது செய்து தருவோம் என்று கூறி பிரசாரம் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பல்லாவரத்தில் கடனை கேட்டு மிரட்டியதால் ரவுடியை வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    தாம்பரம்:

    சென்னை குன்றத்தூர் சபாபதி நகரை சேர்ந்தவர் குருராஜ் என்கிற நந்த குமார் (33). இவர் மீது பல்லாவரம், குன்றத்தூர் போலீஸ் நிலையங்களில் ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் நந்த குமாரின் நண்பர் காஜா ரூ.1 லட்சம் பணத்தை மெர்வின் என்பவருக்கு கடனாக கொடுத்திருந்தார். அதற்கான வட்டியை மெர்லின் கட்டவில்லை. இதையடுத்து காஜா பணத்தை திருப்பி கேட்டார். அதையும் மெர்லின் கொடுக்கவில்லை.

    இதுபற்றி காஜா, நந்த குமாரிடம் கூறி கடனை வசூலித்து தருமாறு கேட்டார்.

    இந்த நிலையில் நந்த குமார், மெர்லினுக்கு போன் செய்து பணத்தை கேட்டு மிரட்டினார். அப்போது அவர்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    நந்தகுமார், மெர்லினிடம் நான் பல்லாவரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் தான் நிற்கிறேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்றார். இதனால் மெர்லின் தனது ஆதரவாளர்கள் 3 பேருடன் அங்கு சென்றார். ரவுடி நந்தகுமாரை அவர்கள் சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவரது கை, வாய் போன்ற பகுதிகளில் வெட்டு விழுந்தது. பின்னர் 4 பேரும் தப்பிச் சென்று விட்டனர்.

    பலத்த காயம் அடைந்த நந்தகுமார் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

    இதுகுறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

    திடீரென பிரேக் போட்டதால் அரசு பஸ்சில் இருந்து கீழே விழுந்த கண்டக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    செங்கல்பட்டு:

    உத்திரமேரூரை அடுத்த திருப்புலிவனம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் கல்பாக்கம் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று கல்பாக்கத்தில் இருந்து வேலூர் சென்ற அரசு பஸ்சில் சென்றார். செங்கல்பட்டு பாலூரை அடுத்த மேளச்சேரியில் பஸ் சென்று கொண்டிருந்த போது ஒருவர் குறுக்கே வந்ததால் டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.

    அப்போது படிக்கட்டு ஓரம் நின்றிருந்த கண்டக்டர் குமார் நிலை தடுமாறி பஸ்சில் இருந்து சாலையில் விழுந்தார். இதில் பஸ்சில் மோதி படுகாயம் அடைந்த அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பலியான குமாருக்கு கலைவாணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    அச்சரப்பாக்கம் அருகே 6 கடைகளை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேல்மருவத்தூர்:

    அச்சரப்பாக்கம் அருகே கீழ் அத்திவாக்கம் பகுதியில் தொழுப்பேடு-ஒரத்தி சாலையில் ஒரே கட்டிடத்தில் 6 கடைகள் உள்ளன. இங்கு உரமருந்து கடை, அரிசி ஆலை, பெட்டிக்கடைகள், டீக்கடை உள்பட 6 கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    நேற்று இரவு 6 கடைகளையும் அதன் உரிமையாளர்கள் பூட்டிவிட்டு சென்றனர்.

    இரவில் கொள்ளையர்கள் சிலர் அங்கு வந்தனர். அவர்கள் 6 கடைகளின் பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த கல்லா பெட்டியை உடைத்து பார்த்தனர். ஆனால் 6 கடைகளிலுமே பணம் கிடைக்கவில்லை.

    இதையடுத்து ஆத்திரத்தில் கடையில் இருந்த பொருட்களை தூக்கி வீசி சூறையாடினர். பின்னர் டீக்கடையில் இருந்த ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து ஒரத்தி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    ×