என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணிக்கு தாமதமாக வந்ததாக கூறி இன்ஸ்பெக்டர் அடித்ததால் ஏட்டு மயங்கி விழுந்தார்
    X

    பணிக்கு தாமதமாக வந்ததாக கூறி இன்ஸ்பெக்டர் அடித்ததால் ஏட்டு மயங்கி விழுந்தார்

    காஞ்சீபுரத்தில் பணிக்கு தாமதமாக வந்ததாக கூறி இன்ஸ்பெக்டர் அடித்ததால் ஏட்டு மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ஆயுதப்படை பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் லோகநாதன். அதே ஆயுதப்படை பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் வேல்முருகன். இவர் பணிக்கு சேர்ந்து 3 மாதங்களே ஆகிறது.

    ஆயுதப்படையில் தினமும் நடைபெறும் அணிவகுப்பில் பங்கேற்க ஏட்டு வேல்முருகன் தாமதமாக வருவது வழக்கம். அவரை இன்ஸ்பெக்டர் லோகநாதன் கண்டித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலையிலும், ஏட்டு வேல்முருகன் அணிவகுப்புக்கு தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் லோகநாதன் அவரது கன்னத்தில் அறைந்தார்.

    அடிபட்டதும் ஏட்டு வேல்முருகன் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸ்காரர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து ஏட்டு வேல்முருகனை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஏட்டு வேல்முருகன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனால் இன்ஸ்பெக்டர் அடித்ததும் அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

    சிகிச்சைக்கு பிறகு ஏட்டு வேல்முருகனை போலீசார் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். நடந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரித்தனர்.

    இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×