என் மலர்
காஞ்சிபுரம்
ஆலந்தூர்:
தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரை முருகன், கடந்த சில நாட்களாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அதன்பிறகு சென்னை வந்தார்.
இன்று மாலை அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
இதற்காக சென்னை கோட்டூர்புரம் வீட்டில் இருந்து அவர் காலை 10 மணி அளவில் கார் மூலம் சென்னை விமான நிலையம் சென்றார்.
அங்கு திருச்சி செல்லும் விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட்டுடன் விமான நிலையத்திற்குள் காத்திருந்தார். அப்போது திடீரென அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது. மயக்கம் வருவதுபோல் உணர்ந்தார்
உடனடியாக அங்கிருந்த அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு விமான பயணத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
அதன்பிறகு துரை முருகனை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பயப்படும்படி எதுவும் இல்லை. சிகிச்சை பெற்று ஓய்வெடுத்தால் சரியாகி விடும் என்று தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் 3 ஏ.டி.எம்.கள் உள்ளன. தற்போது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அங்குள்ள ஏ.டி.எம்களில் பணம் நிரப்பவில்லை. எனவே இன்று அங்குள்ள அனைத்து ஏ.டி.எம்.களும் செயல்படவில்லை எனவே, அங்குள்ள தபால் நிலையத்தில் பணத்தை மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணிவரை மட்டுமே இயங்கியது. பணம் இல்லாததால் அதன் பின்னர் மூடிவிட்டு சென்று விட்டனர்.
மேலும், விமான நிலையதில் வெளிநாட்டு பணத்தை ரூபாயாக மாற்றும் ‘மணி எக்சேஞ்ச்’ அலுவலகமும் செயல்படாமல் மூடப்பட்டது. இதனால் விமான பயணிகளும், மூத்த குடிமக்களும் மிகவும் சிரமப்பட்டனர்.
ஆலந்தூர்:
இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக மதுரை புறப்பட்டு சென்ற மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்து இருப்பது ஏழை-எளிய கிராமப்புற மக்கள் மீது ஒரு ‘சர்ஜிகல்’ தாக்குதலாகும். மக்களிடம் பணம் இல்லை. ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். போதுமான பணம் உள்ளது என ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது.
அது உண்மை நிலை இல்லை. இது ஒருவகை பொருளாதார நெருக்கடி நிலை. புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள ரூ.2000 நோட்டுகளில் வழக்கமாக அச்சிடப்படும். ஆங்கில வார்த்தைகள் தவிர தேவநகரி வார்த்தைகள் அச்சிடப்பட்டுள்ளது.
இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. தூய்மை இந்தியா திட்டத்தின் வாசகத்தை புதிய ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ளது. இது இந்தி திணிப்பு. ஒட்டுமொத்த இந்தியாவின் பெரும் பான்மையான மக்கள் இத்திட்டத்தினால் கோபம் அடைந்துள்ளனர்.
கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் ஏன் ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கிறார்கள். 60 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடனை பெறுவதற்கு மத்திய அரசுக்கு அருகதை இல்லை.
பெரிய நிறுவனங்கள் ரூ.1.14 லட்சம் கோடி கடனாக பெற்று இருக்கிறார்கள். யார் பயனடைகிறார்கள் என ரிசர்வ் வங்கி தெரிவிக்கவில்லை. சாதாரண மற்றும் நடுத்தர மக்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் இத்திட்டம் வெற்றி பெறாது. வெற்றி என கூறுபவர்கள் கிராமப்புறங்களில் சென்று பார்க்கட்டும். மோடி அரசு ஆட்சிக்கு வந்த 100 நாளுக்குள் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை கொண்டு வருவோம்.
குடிமக்களுக்கு தலா ரூ.15 லட்சம் தருவோம் என சொன்னார்கள். ஆனால் அதை இன்னும் செய்யவில்லை.
தமிழ்நாட்டில் நடை பெறும் 3 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். இந்த ஆட்சியாளர்கள் மீது மக்கள் வெறுப்பாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறி னார்.
இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கருப்பு பணத்தை எதிர்ப்பதிலும், ஊழலை எதிர்ப்பதிலும் இந்திய கம்யூனிஸ்டு உள்பட இடதுசாரிகள் முன்னிலையில் இருந்து போராடி வருகிறது.
கருப்பு பணம் கையகப்படுத்த வேண்டும். ஊழல் அகற்றப்பட வேண்டும் என்பதை இடதுசாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்காக போராடி வருகிறது.
இன்றைக்கு மோடி அரசின் அறிவிப்பு கருப்பு பணத்தை முழுமையாக வெளி கொண்டு வர முடியுமா? பலன் தருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏனென்றால் மோடி பொறுப்பு ஏற்ற உடனே கருப்பு பணத்தை வெளிநாடுகளில் இருந்து கையகப்படுத்தி உள்நாட்டுக்கு கொண்டு வருவோம். குடிமக்களுக்கு தலா ரூ.15 லட்சம் தருவோம் என்று சொன்னார். தற்போது அதைபற்றி மோடி வாய் திறக்க மறுக்கிறார்.
இதே போல தேசியமய வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றி வருகின்ற கார்ப்பரேட் கம்பெனிகள் பற்றி மோடி பேச மறுக்கிறார்.
ரூ.500, ரூ1000 வெற்று காகிதம் என்று அறிவித்த மோடி அதை டிசம்பர் 30-ந்தேதிக்குள் மாற்றி கொள்ளலாம் என்று அறிவித்து இருக்கிறார். அதை சாதாரண மக்கள் மாற்றுவதற்கு அவதிப்படுகிறார்கள். இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய மத்திய அரசு தவறி விட்டது.
பாராளுமன்றம் கூட இருக்கிறது. இதை பற்றி பேச இருக்கிறோம். ஆட்சியாளர்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள் என்று மக்கள் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுராந்தகம் அருகே பேக்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன். விவசாய தொழிலாளி.
இவரது மகள் மகாலட்சுமி (வயது 8). மதுராந்தகம் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். மகாலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டார். அவரை பெற்றோர் செய்யூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் காய்ச்சலின் பாதிப்பு குறையாததால் செய்யூர் அரசு மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்கு சென்னைக்கு கொண்டு செல்லுங்கள் எனக் கூறியுள்ளனர்.
உடனே சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் மகாலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே உள்ள முதுகரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது21).இவர் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் அருளுடன் திண்டிவனத்தில் நடந்த உறவினர் திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். இன்று அதிகாலை இருவரும் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
தொழுப்பேடு சுங்கச் சாவடி அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜ்மோகன் பலியானார். பலத்த காயம் அடைந்த அருளுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பீர்க்கன்கரணையில் வசித்து வருபவர் அரிராமகிருஷ்ணன். தலைமை செயலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டில் தங்கினார்.
இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அரிராமகிருஷ்ணன் வீட்டு கதவை உடைத்து ரூ.6 ஆயிரம், 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டது. இது குறித்து பீர்க்கன்கரணை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருப்போரூர்:
திரூப்போரூர் அடுத்த காயாரை ஈச்சங்காட்டை சேர்ந்தவர் நிர்மலா. தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நிர்மலா கழுத்தில் கிடந்த 3 பவுன் நகை மற்றும் அவரது செல்போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்து காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் பறித்து சென்ற செல்போன் மூலம் துப்பு துலக்கினர். விசாரணையில் கண்ணாபுரத்தை சேர்ந்த விஜய், கார்த்திக், சதீஷ்குமார் உள்பட 5 பேர் நிர்மலாவிடம் செயினை பறித்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 5 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் மோட்டார் சைக்கிளில் திருட்டு வழக்கில் தண்டலத்தை சேர்ந்த ஏழுமலை, பிரகாஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் இருந்து 3 பவுன் செயின், செல்போன் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டரம்பாக்கம் ஊராட்சியில் ஏராளமான கூலித்தொழிலாளர்கள் ஓலை குடிசை வீடுகளில் அருகருகே வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு இதில் ஒரு குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென அருகில் இருந்த மற்ற குடிசைகளுக்கும் பரவியது.
குடிசை வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குடிசைகளில் எரிந்த தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.
தீ விபத்தில் முருகன், அன்பழகன், ராஜேஷ், யுவராஜ், சுரேஷ், சுரேஷ்குமார், ஏகவல்லி, கமல், கர்முபிந்தானி, லட்சுமிபிந்தானி, காகேஷ்சர்ஷெட்டி, அரவிந்த் தால், சஞ்சய் ஷெட்டி, சரோஜ்குமார் ஷெட்டி ஆகிய 14 பேரின் குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகின.
இதில் சுரேஷ்குமார் என்பவரது வீட்டில் வேலை ஆட்களுக்கு சம்பளம் கொடுக்க வைத்து இருந்த ரூ.8 லட்சம் தீயில் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தீ விபத்து நடந்த இடத்தை ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் தாமோதரன், வருவாய் ஆய்வாளர் சவுந்திரவடிவு, கிராம நிர்வாக அலுவலர் திவ்யா ஆகியோர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், 10 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்கினர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தலா ரூ.5 ஆயிரம் பணம் அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகளாக இருந்தது. அந்த பணம் செல்லாது என்பதால் அவசரத்துக்கு அவற்றை மாற்ற முடியாதே என பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் கேட்டனர்.
இதையடுத்து தாசில்தார் தாமோதரன், இது தொடர்பாக வங்கிக்கு ஒரு கடிதம் எழுதி கொடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார்.
மடிப்பாக்கம் அய்யப்பா நகரில் ஏரி உள்ளது. இங்கு நேற்று காலையில் இருந்தே துர்நாற்றம் வீசியது. பொது மக்கள் அங்கு சென்று பார்த்தபோது ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.
இதுபற்றி மாநகராட்சி மண்டல அதிகாரியிடம் பொதுமக்கள் புகார் செய்தனர். இன்று காலையில் மாநகராட்சி அதிகாரிகளும், மீன் வளத்துறை அதிகாரிகளும் ஏரிக்கு சென்று பார்த்தனர்.
அவர்களிடம் பொது மக்கள் கூறுகையில், “லாரியில் கொண்டு வரும் கழிவு நீரை இந்த ஏரியில் கொட்டி விடுகிறார்கள். மேலும் அருகில் உள்ள மருத்துவமனை கழிவுகளும் இந்த ஏரியில் கொட்டப்படுகின்றன. இதனால் மீன்கள் செத்து மிதக்கலாம்” என்றனர்.
ஆனால் ஏரியில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர். இது குறித்து ஏரி நீரை எடுத்து ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் புழக்கத்தில் செல்லாது என்று நேற்று முன்தினம் இரவு பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளை வங்கிகளில் இன்று முதல் மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து காஞ்சீபுரத்தில் இன்று அதிகாலை முதலே வங்கிகள், தபால் நிலையங்கள் முன்பு பொதுமக்கள் குவிந்தனர். வாடிக்கையாளர்கள் பணமாற்றம் செய்யவும், டெபாசிட் வழிமுறைகள் குறித்தும் தெரிவிக்க வங்கி ஊழியர்கள் அடங்கிய சிறப்பு கவுண்டர் அமைக்கப்பட்டது.
மேலும் வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனை குறித்து நிரப்ப விண்ணப்பங்களும் அளிக்கப்பட்டன.
காஞ்சீபுரம் நகரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் அனைத்து வங்கிகள். மற்றும் தபால் நிலையங்களுக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
காஞ்சிபுரம் நகரில் மட்டும் 70 வங்கிகள், 136 ஏடிஎம் மையங்கள், 14 தபால் அலுவலகங்கள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள், மற்றும் தபால் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் காஞ்சீபுரம் நகரமே பரபரப்பாக காணப்படுகிறது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் தினசரி டாஸ்மாக் விற்பனையில் 10 முதல் 20 சதவீதம் வரை சரிந்தது.
இது குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:-
12 மணிமுதல் 2 மணிவரை விற்பனை ஓரளவு இருக்கும். இரவு நேரங்களில் விற்பனை கூடுதலாக இருக்கும்.
ஆனால் நேற்று காலையில் கடைக்கு மது வாங்க வந்தவர்களிடம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாங்க மாட்டோம் என சொன்னதால் மாலை 5 மணிவரை மொத்த விற்பனையில் ஏறத்தாழ 30 சதவீதமே வியாபாரம் நடைபெற்றது.
நாள் ஒன்றுக்கு விற்பனை ஆகும் தொகையில் 10 முதல் 20 சதவீதம் குறைவாகவே விற்பனையானது என்றனர். பல இடங்களில் டாஸ்மாக் ஊழியர்களுக்கும், குடிமகன்களுக்கு மிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
காந்திசாலை, மேட்டு தெரு, சேக்குபேட்டை நடுத்தெரு, சங்குசாபேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள பட்டு, ஐவுளி கடைகளில் 500, 1000 நோட்டுகள் வாங்கபடாது என தெரிவித்ததால் சேலை வாங்க வந்தவர்கள் வருத்தத்துடன் திரும்பினர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. காய்கறி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தாலும் வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலை இருந்தது.
திருவள்ளூரில் உள்ள வங்கிகள் முன்பும் இன்று அதிகாலையிலேயே ஏராளமானோர் திரண்டனர். அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றி சென்றனர்.
திருவள்ளூர் நகரத்தை சுற்றி உள்ள 71 வங்கிகளிலும் எஸ்.பி. சாம்சன் உத்தரவின்பேரில் திருவள்ளூர் டி.எஸ்.பி. ஈஸ்வரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் செவ்வாப்பேட்டை, கடம்பத்தூர், வெள்ளவேடு, மணவாளநகர், பெரியகுப்பம், காக்களூர், புல்லரம்பாக்கம், பட்டறை பெரும்பத்தூர் ஆகிய பகுதியில் சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆதம்பாக்கம், என்.ஜி. ஓ காலனி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் திருநெல்வேலியை சேர்ந்த என்ஜினீயர் அஸ்டின் சாமுவேல் என்பதும் சென்னையில் பல்வேறு இடங்களில் விடுதியில் தங்கி நகை பறிப்பு, கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.
சிவில் என்ஜினீயரான அஸ்டின் சாமுவேல் முதலில் தனியாக என்ஜினீயரிங் நிறுவனம் நடத்தி வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் கொள்ளையனாக மாறி இருக்கிறார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விடுதியில் தங்கி அங்குள்ள இடங்களை நோட்டமிடுவதும், பின்னர் தனியாக செல்லும் பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் சென்று நகை பறித்து வந்ததாகவும் அகஸ்டின் சாமுவேல் கூறி உள்ளார்.
அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 10 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையடித்த நகை, பணத்தை அவர் சொந்த ஊரில் பதுக்கி வைத்துள்ளாரா? கூட்டாளிகள் யாரேனும் உள்ளனரா என்று விசாரணை நடந்து வருகிறது.






