என் மலர்tooltip icon

    செய்திகள்

    500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற காஞ்சீபுரத்தில் வங்கிகள் முன்பு திரண்ட பொதுமக்கள்
    X

    500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற காஞ்சீபுரத்தில் வங்கிகள் முன்பு திரண்ட பொதுமக்கள்

    பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற காஞ்சீபுரத்தில் இன்று அதிகாலை முதலே வங்கிகள், தபால் நிலையங்கள் முன்பு பொதுமக்கள் குவிந்தனர்.
    காஞ்சீபுரம்:

    ரூ.500, ரூ.1000 நோட்டுகள் புழக்கத்தில் செல்லாது என்று நேற்று முன்தினம் இரவு பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளை வங்கிகளில் இன்று முதல் மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து காஞ்சீபுரத்தில் இன்று அதிகாலை முதலே வங்கிகள், தபால் நிலையங்கள் முன்பு பொதுமக்கள் குவிந்தனர். வாடிக்கையாளர்கள் பணமாற்றம் செய்யவும், டெபாசிட் வழிமுறைகள் குறித்தும் தெரிவிக்க வங்கி ஊழியர்கள் அடங்கிய சிறப்பு கவுண்டர் அமைக்கப்பட்டது.

    மேலும் வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனை குறித்து நிரப்ப விண்ணப்பங்களும் அளிக்கப்பட்டன.

    காஞ்சீபுரம் நகரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் அனைத்து வங்கிகள். மற்றும் தபால் நிலையங்களுக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

    காஞ்சிபுரம் நகரில் மட்டும் 70 வங்கிகள், 136 ஏடிஎம் மையங்கள், 14 தபால் அலுவலகங்கள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள், மற்றும் தபால் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் காஞ்சீபுரம் நகரமே பரபரப்பாக காணப்படுகிறது.

    500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் தினசரி டாஸ்மாக் விற்பனையில் 10 முதல் 20 சதவீதம் வரை சரிந்தது.

    இது குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:-

    12 மணிமுதல் 2 மணிவரை விற்பனை ஓரளவு இருக்கும். இரவு நேரங்களில் விற்பனை கூடுதலாக இருக்கும்.

    ஆனால் நேற்று காலையில் கடைக்கு மது வாங்க வந்தவர்களிடம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாங்க மாட்டோம் என சொன்னதால் மாலை 5 மணிவரை மொத்த விற்பனையில் ஏறத்தாழ 30 சதவீதமே வியாபாரம் நடைபெற்றது.

    நாள் ஒன்றுக்கு விற்பனை ஆகும் தொகையில் 10 முதல் 20 சதவீதம் குறைவாகவே விற்பனையானது என்றனர். பல இடங்களில் டாஸ்மாக் ஊழியர்களுக்கும், குடிமகன்களுக்கு மிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    காந்திசாலை, மேட்டு தெரு, சேக்குபேட்டை நடுத்தெரு, சங்குசாபேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள பட்டு, ஐவுளி கடைகளில் 500, 1000 நோட்டுகள் வாங்கபடாது என தெரிவித்ததால் சேலை வாங்க வந்தவர்கள் வருத்தத்துடன் திரும்பினர்.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. காய்கறி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தாலும் வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலை இருந்தது.

    திருவள்ளூரில் உள்ள வங்கிகள் முன்பும் இன்று அதிகாலையிலேயே ஏராளமானோர் திரண்டனர். அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றி சென்றனர்.

    திருவள்ளூர் நகரத்தை சுற்றி உள்ள 71 வங்கிகளிலும் எஸ்.பி. சாம்சன் உத்தரவின்பேரில் திருவள்ளூர் டி.எஸ்.பி. ஈஸ்வரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் செவ்வாப்பேட்டை, கடம்பத்தூர், வெள்ளவேடு, மணவாளநகர், பெரியகுப்பம், காக்களூர், புல்லரம்பாக்கம், பட்டறை பெரும்பத்தூர் ஆகிய பகுதியில் சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×