என் மலர்
செய்திகள்

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது: ஏழை மக்கள் மீது மோடி ‘சர்ஜிகல்’ தாக்குதல்- ஜவாஹிருல்லா
ஆலந்தூர்:
இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக மதுரை புறப்பட்டு சென்ற மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்து இருப்பது ஏழை-எளிய கிராமப்புற மக்கள் மீது ஒரு ‘சர்ஜிகல்’ தாக்குதலாகும். மக்களிடம் பணம் இல்லை. ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். போதுமான பணம் உள்ளது என ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது.
அது உண்மை நிலை இல்லை. இது ஒருவகை பொருளாதார நெருக்கடி நிலை. புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள ரூ.2000 நோட்டுகளில் வழக்கமாக அச்சிடப்படும். ஆங்கில வார்த்தைகள் தவிர தேவநகரி வார்த்தைகள் அச்சிடப்பட்டுள்ளது.
இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. தூய்மை இந்தியா திட்டத்தின் வாசகத்தை புதிய ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ளது. இது இந்தி திணிப்பு. ஒட்டுமொத்த இந்தியாவின் பெரும் பான்மையான மக்கள் இத்திட்டத்தினால் கோபம் அடைந்துள்ளனர்.
கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் ஏன் ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கிறார்கள். 60 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடனை பெறுவதற்கு மத்திய அரசுக்கு அருகதை இல்லை.
பெரிய நிறுவனங்கள் ரூ.1.14 லட்சம் கோடி கடனாக பெற்று இருக்கிறார்கள். யார் பயனடைகிறார்கள் என ரிசர்வ் வங்கி தெரிவிக்கவில்லை. சாதாரண மற்றும் நடுத்தர மக்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் இத்திட்டம் வெற்றி பெறாது. வெற்றி என கூறுபவர்கள் கிராமப்புறங்களில் சென்று பார்க்கட்டும். மோடி அரசு ஆட்சிக்கு வந்த 100 நாளுக்குள் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை கொண்டு வருவோம்.
குடிமக்களுக்கு தலா ரூ.15 லட்சம் தருவோம் என சொன்னார்கள். ஆனால் அதை இன்னும் செய்யவில்லை.
தமிழ்நாட்டில் நடை பெறும் 3 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். இந்த ஆட்சியாளர்கள் மீது மக்கள் வெறுப்பாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறி னார்.






