என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    தன்னிடம் பணம் இல்லாததால் உதவியாளர்களிடம் இருந்து கடன் வாங்கியதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மோடி அரசு அவசர கோலத்தில் கொண்டு வந்து உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ஒழிப்பால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. ரூ.500, ரூ.100 நோட்டுகள் வரவில்லை. வங்கியில் ஏழை-எளிய மக்கள் தான் நிற்கின்றனர். வங்கி முன் வெயிலில் நிற்பவர்களுக்கு பந்தல் அமைத்தும் தண்ணீர் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும்.

    மின்சார வாரியம், உள்ளாட்சி துறைகளில் பழைய நோட்டுகளை வாங்குவது போல் கூட்டுறவு சங்கங்களிலும் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாங்கிய கடன்களை செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இறந்து போன விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடாக ரூ.15 லட்சம் வழங்க வேண்டும்.

    விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன்கள் மட்டுமின்றி, வங்கிகளில் வாங்கிய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். நெல்லுக்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம், கரும்பு, வாழைக்கு ரூ.50 ஆயிரம் என நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

    மக்களிடத்தில் இருந்து பிரிக்கப்பட்டதால் தான் மோடி அழுகிறார். மக்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்பை கண்டு தான் அவர் அழுகிறார். தெருவில் வைத்து கொல்லுங்கள் என ஒரு பிரதமர் பேசுவதா? அனுதாபத்தை பெற வேண்டும் என்பதற்காக அவர் பேசுகிறார்.

    விளம்பரம் வேண்டும் என்றால் பா.ஜனதா கட்சி தலைவர்கள், பிரதமர், மத்திய மந்திரிகள் வங்கி முன் வரிசையில் போய் நிற்கவேண்டியது தானே.

    என்னிடம் பணமில்லாததால் உதவியாளர்களிடம் இருந்து கடன் வாங்கி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சென்னையில் இருந்து புறப்படும் டெல்லி விமானம் தாமதம் ஏற்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இன்று காலை டெல்லி புறப்பட வேண்டிய விமானம் வரவில்லை. இதனால் அதில் செல்ல இருந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 162 பயணிகள் அவதி அடைந்தனர்.

    சார்ஜாவில் இருந்து வர வேண்டிய அந்த விமானம் மோசமான வானிலை காரணமாக சென்னை வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன் உள்பட 18 பயணிகள் மாற்று விமானத்தில் டெல்லி சென்றனர். மற்ற பயணிகள் இன்று மதியம் வேறு விமானத்தில் புறப்பட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூரில் மர்ம காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் பெரியார் காலனி விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி நளினி. இவர்களது மகன் சாருபிரியன் (வயது9). 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த வாரம் புதன்கிழமை சாருபிரியனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவனுக்கு காய்ச்சல் குறையாததால் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாருபிரியன் நேற்று இரவு இறந்தான்.

    மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியானதால் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.
    காங்கிரஸ் செய்த துரோகம்தான் இந்த கருப்பு பண பதுக்கல் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நாளைய தினம் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இந்த பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    புதிய 500 ரூபாய் நோட்டு கிடைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் அருண்ஜெட்லியும் தெரிவித்து உள்ளனர்.

    தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் சொல்வதைப் போல் கருப்பு பண ஒழிப்பு குறித்து முன் அறிவிப்பு கொடுத்துவிட்டு நடவடிக்கை எடுத்து இருக்கலாம் என்று கூறுவது சரியல்ல. அது கருப்பு பண முதலாளிகள் ஆதாயம் பெற வழிவகுத்து இருக்கும்.

    காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடாது. அவர் பிரதமர் மோடியை உணர்ச்சி வசப்பட்டு பேசுவது சரியல்ல.

    காங்கிரஸ் செய்த துரோகம்தான் இந்த கருப்பு பண பதுக்கல். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தை சரி செய்யவே பிரதமர் மோடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கருப்பு பண ஒழிப்பை குறை கூறியதற்கு பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இடைத்தேர்தல் நெருங்கியிருக்கும் நேரத்தில் நேர்மையாக நடைபெறுமா? என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அங்கே அதிகளவில் புழங்கி கொண்டு இருக்கிறது. துணை தேர்தல் அதிகாரியோ எந்த ஒரு புகாரும் வரவில்லை என்று சொல்லி இருக்கிறார். தேர்தல் ஆணையம் முழு கவனம் செலுத்தி தேர்தலை நேர்மையாக நடத்த வழிவகை செய்ய வேண்டும்.

    மோடி கொண்டு வந்த கருப்பு பணம் ஒழிப்பு திட்டத்துக்கு மக்கள் முழு ஆதரவு தந்துள்ளனர். நான் கூட வங்கிகளுக்கு சென்று பார்க்கும் போது, இது நல்ல நடவடிக்கைதான். இப்போது ஏற்பட்டுள்ளது தற்காலிகமாக சிரமம்தான் என்று பொதுமக்கள் கூறினார்கள்.

    மக்களையும், மோடியையும், இனி யாராலும் பிரிக்க முடியாது. மக்களும், பி.ஜே.பி.யும்தான் இனி கூட்டணி. மோடி தனக்கு எவ்வளவு சோதனை வந்தாலும், விமர்சனங்கள் வந்தாலும் பெரிய முடிவை எடுத்திருக்கிறார் என்று மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். மோடி எந்த முடிவை எடுத்தாலும் அது மக்கள் நலனுக்குதான் என்பதை உணர்ந்துள்ளனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மோடி நடிக்கிறார் என்று சொல்லி இருக்கிறார், திருநாவுக்கரசர் சினிமாவில் நடித்துவிட்டு அரசியலில் இருப்பவர்.

    ராகுல்காந்தி வங்கி ஏ.டி.எம்.மில் வரிசையில் நின்றது அரசியல் நடிப்பா? குஷ்புவும், திருநாவுக்கரசுவும் எந்த விமர்சனங்களை சொன்னாலும் மக்கள் நம்பமாட்டார்கள்.

    தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மக்கள் வங்கிகளில் வரிசையில் நிற்பதை பிச்சை எடுக்கிற மாதிரி நிற்கிறார்கள் என்று சொல்லி இருப்பது கண்டனத்துக்குரியது.

    மக்கள் தன்மானமாக வாழ மோடி இப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற தமிழக மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், மக்கள் பிரச்சினைகளில் அ.தி.மு.க.வுக்கு எப்போதும் அக்கறை இருந்ததே இல்லை என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. தி.மு.க. சார்பாக காவிரி பிரச்சினை, மீனவர் பிரச்சினை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிப்போம்.

    தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று மத்திய அரசு பலமுறை உறுதி அளித்தும் அதை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. மத்திய அரசு இந்த முறையாவது ஜல்லிக்கட்டை நடத்த வழிவகை செய்ய வேண்டும்.

    500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சாதாரண, நடுத்தர, ஏழை எளிய மக்கள் பெரிதும் துன்பப்பட்டு வருகிறார்கள். அவர்கள் படும் அவதி பற்றியும் நாடாளுமன்றத்தில் பேசுவோம். தமிழ்நாட்டில் இது தொடர்பாக அ.தி.மு.க. அரசு எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. மக்கள் பிரச்சினைகளில் அ.தி.மு.க.வுக்கு எப்போதும் அக்கறை இருந்ததே இல்லை.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.
    காஞ்சீபுரம் நகரில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம் மையங்கள் செயல்படாத நிலையில் திறந்திருக்கும் ஏடிஎம் மையங்களில் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்துள்ளனர்.

    காஞ்சீபுரம்:

    500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என கடந்த 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் பணத்தினை மாற்றவும், வங்கிகளில் டெபாசிட் செய்யவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

    இதையடுத்து பொது மக்கள் பணத்தினை எடுக்க வங்கி வாயில்கள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் கால் கடுக்க காத்திருக்கும் நிலை உள்ளது.

    காஞ்சீபுரம் மற்றும் சுற்றுப்புறங்களில் 70 வங்கிகள், 136 ஏடிஎம் மையங்கள் உள்ளது.ஆனால் பெரும்பாலான ஏ.டி.எம் மையங்களில் பணம் இல்லை, செயல்படாது என்ற அறிவிப்பு பலகை தொங்குவதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

    காஞ்சீபுரம் நகரில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம் மையங்கள் செயல்படாத நிலையில் திறந்திருக்கும் ஏடிஎம் மையங்களில் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்துள்ளனர்.

    ஏறத்தாழ 2 மணிநேரம் காத்திருந்தும் திடீரென பணம் காலி ஆகிவிட்டது என ஏ.டி.எம் மையங்கள் மூடப்படுவதால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சில ஏ.டி.எம் மையங்களில் பணம் டெபாசிட் மட்டுமே செய்ய முடியும், எடுக்க முடியாது என்ற அறிவிப்பு பலகை தொங்குகிறது. இந்நிலையில் காஞ்சீபுரம் இந்திரா காந்தி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி வாயிலில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இன்று அதிகாலை 6 மணி முதலே நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். காவல் துறையினர் அவர்களை வரிசையில் நிற்க வைத்து அதிகாலையிலேயே ஒழுங்குபடுத்தினர்.

    பணம் எடுக்க வந்த பெண் மணி காஞ்சனா என்பவர் கூறுகையில், “ஏடிஎம் மையங்களில் பெண்களுக்கு தனி கியூ இருக்கும் என நம்பி இன்று கூலி வேலைக்கு செல்லாமல் இங்கு வந்தால் ஏற்கனவே 100 பேருக்கு மேல் உள்ளனர்.

    பணம் எடுக்க முடியுமா முடியாதா என தெரியவில்லை” என வருத்தத்துடன் கூறினார். காஞ்சீபுரம் நகரில் பெரும்பாலும் ஒருவரை ஒருவர் சந்திப்பவர்கள் அனைவரும் எந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முடியும் என்ற தகவல்களையே மற்றவர்களை கேட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர் பகுதியில் உள்ள வங்கிகளில் இன்று கூட்டம் குறைவாக காணப்பட்டது. பெரும்பாலான ஏ.டி.எம்.கள் செயல்பட்டன. ஆனால் ஒரு மணி நேரத்திலேயே ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள பணம் காலியானது.

    இதையடுத்து பணம் எடுக்க அடுத்த ஏ.டி.எம். மையத்தை தேடி பொது மக்கள் அலைந்தனர். இதனால் ஏ.டி.எம். மையங்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து இருந்து பணம் எடுத்து சென்றனர்.

    கல்பாக்கம் அருகே அணுமின் நிலைய ஓய்வுபெற்ற ஊழியர் நாற்காலியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
    கல்பாக்கம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஊராட்சி பாரத் நகர் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் பாபு ராவ் (வயது 62). ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அறிவியல் உதவியாளராக வேலை பார்த்து, கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஓய்வுபெற்றவர்.

    அந்த பகுதியில் புதிதாக 2 மாடி வீடு கட்டி அதில் தனது மனைவி ராஜலட்சுமி (60) உடன் வசித்து வந்தார். இவர்களுக்கு செவ்வந்தி (25) என்ற மகளும், விஸ்வசேத்தன்யா (22) என்ற மகனும் உள்ளனர்.

    மகளுக்கு திருமணமாகி சென்னையை அடுத்த காரப்பாக்கம் கிராமத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மகன் விஸ்வசேத்தன்யா, வெளி நாட்டில் உள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள உறவினர் இல்ல திருமணத்தில் கலந்துகொள்வதற்காக பாபு ராவின் மனைவி ராஜலட்சுமி, மகள் செவ்வந்தி இருவரும் ஆந்திராவுக்கு சென்று விட்டனர். வீட்டில் பாபு ராவ் மட்டும் தனியாக தங்கி இருந்தார்.

    அவரது வீட்டின் மாடியில் செடிகள் வளர்ப்பதற்காக கடந்த சில மாதங்களாக வெல்டிங் வேலை அவ்வப்போது நடந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் வெல்டிங் வேலை செய்வதற்காக 2 பேர் அதற்கான கருவிகளுடன் பாபு ராவ் வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அடித்தனர். ஆனால் வீட்டில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    இதனால் பாபு ராவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்தனர். பலமுறை அழைத்தும் பதில் இல்லாததால் வீட்டின் பக்கவாட்டு பகுதியில் உள்ள சமையல் அறை கதவை திறந்து பார்த்தனர்.

    அப்போது வீட்டின் உள்ளே தரையில் பாபு ராவ், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கல்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு சென்று தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் பாபு ராவ், மரத்தால் ஆன புதிய நாற்காலியால் பலமாக அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

    சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி வந்து பார்வையிட்டார். பின்னர் கல்பாக்கம் அணுசக்தி துறை ஊழியர் குடியிருப்பில் உள்ள விருந்தினர் மாளிகையில் போலீஸ் அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார்.

    சம்பவ இடத்துக்கு திருக்கழுக்கன்றம் தாசில்தார் சீதா, கிராம நிர்வாக அலுவலர் சித்ரா உள்பட வருவாய்த்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    காஞ்சீபுரத்தில் இருந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய், சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் கதவு மற்றும் அங்கு இருந்த பொருட்களில் பதிவான கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

    போலீசார் வீடு முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வீட்டில் இருந்த பீரோக்கள் மற்றும் பொருட்கள் எந்த சேதமும் இன்றி காணப்பட்டது. பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    வீட்டில் நகை, பணம் திருட்டு போகவில்லை. ஒரு சிலிண்டர் மட்டும் மாயமாகி உள்ளது. எனவே பாபு ராவ் நகை, பணத்துக்காக கொலை செய்யப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் பாபு ராவ் எதற்காக கொலை செய்யப்பட்டார்?, கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    கமிஷன் பெற்று கருப்பு பணம் மாற்றப்படுகிறதா என்பதற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.
    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய நாட்டை மேம்படுத்தி, ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து உள்ளார். மக்களின் வசதிக்காக நாடு முழுவதும் 18-ந் தேதி வரை சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து விட்டு வந்து உள்ளேன். செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் இந்த தொகுதிகளில் சர்வசாதாரணமாக புழக்கத்தில் உள்ளன. இதை தேர்தல் அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரவக்குறிச்சியில் சென்றமுறை தேர்தலை ரத்து செய்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

    கடந்த 1978-ம் ஆண்டும் பணம் செல்லாது என்ற நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். அந்த நடவடிக்கை தோற்று போயிருக்கிறது. அதுபோன்ற தோல்வி வரக்கூடாது என்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை மக்கள் வரவேற்கின்றனர்.

    சிறிது சிரமங்கள் இருப்பதாக மக்கள் உணர்கிறார்கள். இதற்காக வேதனைப்படுகிறோம். தற்காலிகமாக ஏற்படும் இந்த கஷ்டம் தங்கள் வாழ்நாளில் நிரந்தரமாக ஒளியேற்றும் என மக்கள் நம்புகிறார்கள். கமிஷன் பெற்று கருப்பு பணம் மாற்றப்படுகிறது என்பது பற்றிய தகவல் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.

    பா.ஜனதா எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பேசுவதால் அவர் எங்கள் கட்சி நிலைப்பாட்டுக்கு மாறுகிறாரா? அல்லது காங்கிரஸ் தனது நிலையில் இருந்து கீழே இறங்கி செல்கிறதா? என காங்கிரஸ் தலைவர்களுக்கு குஷ்பு விளக்கமளித்தால் நன்றாக இருக்கும்.

    மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் வங்கி முன் நிற்கவில்லை என்பதற்காக மற்றவர்களை ஒப்பிடக்கூடாது. ஜல்லிக்கட்டு நடத்த மு.க.ஸ்டாலினை விட அதிகமான முயற்சியில் நான் ஈடுபட்டு கொண்டு இருக்கிறேன். அதேசமயம் அவர் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் இதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிகள் தமிழகம், பாண்டிச்சேரியில் நடக்கும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை அவர் மூலமாக வெளியே வந்ததா? அல்லது திரைமறைவில் இருந்து யாரோ கொடுத்து இருக்கிறார்களா? அவர்கள் கொடுத்து இருந்தால் மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று கூறியிருப்பார்.

    வங்கி வாசலில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து இருக்கிறார்கள். ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள், வணிக மக்கள் அல்லல்படுகிறார்கள். அதைப் பற்றி ஒரு அறிக்கை கூட இந்த அரசு வெளியிடவில்லை. நேற்று முதல்-அமைச்சர் உடல் நலம் பெற்றுவிட்டதாக சொல்லி இருக்கிறார். அதில் எங்களுக்கு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    ஆனால் வெளியிட்ட அறிக்கை தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெறுகின்ற தேர்தல் வாக்கு சேகரிப்பு நிலைதான் அந்த அறிக்கை. மக்கள் அவதிப்பற்றி கொஞ்சம் கூட அதில் இடம் பெறவில்லை. அதனால் அவர்தான் இந்த அறிக்கை வெளியிட்டாரா? அல்லது திரைமறைவில் இருந்து யாரும் வெளியிட்டார்களா? என சந்தேகம் எழுந்துள்ளது.

    கருப்பு பணம் மற்றும் கள்ள பணம் ஒழிப்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதியும், மற்ற கட்சி தலைவர்களும் பொதுவாக வரவேற்கிறோம். மக்கள் படும் அவதிக்கு உடனடியாக பரிகாரம் காண வேண்டும்.

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் என்று சொல்கிறார். ஆனால் ஜல்லிக்கட்டு நடக்கும் நிலையில் இல்லை என்று செய்திகள் வந்திருக்கிறது. இதற்கு அவர் தான் பதில் அளிக்க வேண்டும்.

    தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிகள் தமிழகம், பாண்டிச்சேரியில் நடக்கும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற போகிறது.

    வடகிழக்கு பருவமழை தாமதத்தால் விவசாயிகள் அச்சம் மட்டும் படவில்லை. தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். இதைபற்றி இந்த அரசு கவலைப்படவில்லை.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் முறையாக பொருட்களை வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் முறையாக பொருட்களை வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஒலிமுகம்மது பேட்டை, பல்லவர்மேடு, ஓரிக்கை ஆகிய இடங்களில் உள்ள ரே‌ஷன் கடைகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது வினியோக திட்ட மானியத்தை சுருக்க கூடாது, அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் உளுந்து, துவரம்பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்றவற்றை முறையாக வழங்க வேண்டும். பகுதி நேர ரே‌ஷன் கடைகளை முழுநேர கடைகளாக மாற்ற வேண்டும். தேவையற்ற பொருட்களை வாங்க சொல்லி மக்களை கட்டாயபடுத்த கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

    அச்சரப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கத்தை அடுத்த மின்னல் சித்தா மூரில் அரசு மதுபான கடை உள்ளது. சூப்பர் வைசராக முருகன் உள்ளார். நேற்று இரவு அவர் விற்பனை முடிந்து மதுக் கடையை பூட்டி சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை மதுக்கடை ‌ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. மதுபாட்டில்களும் கடைக்குள் சிதறிக் கிடந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஒரத்தி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 60 பெட்டி மதுபாட்டில்கள் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் இருக்கும். விற்பனை பணத்தை ஊழியர்கள் எடுத்துச் சென்றதால் அவை தப்பியது. மதுபாட்டில் பெட்டிகளை கொள்ளை கும்பல் எடுத்த போது பல பெட்டிகள் சரிந்துள்ளன. இதில் ஏராளமான மதுபாட்டில்கள் சேதம் அடைந்ததாக தெரிகிறது.

    இது குறித்து மதுக்கடை ஊழியர்கள் கூறும்போது, ரூ. 500, 1000 நோட்டுகளை நாங்கள் வாங்கவில்லை. இதனால் குடிமகன்கள் சிலர் எங்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இந்த முன்விரோதத்தில் அதே பகுதியை சேர்ந்தவர்கள் மதுபாட்டில்களை கொள்ளையடித்து இருக்கலாம் என்றனர்.

    கொள்ளை கும்பல் வாகனத்தில் வந்து மதுபாட்டில் பெட்டிகளை எடுத்து சென்று இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபற்றி தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.

    ×