search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் ஏ.டி.எம். செயல்படாததால் பொது மக்கள் அவதி
    X

    காஞ்சீபுரத்தில் ஏ.டி.எம். செயல்படாததால் பொது மக்கள் அவதி

    காஞ்சீபுரம் நகரில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம் மையங்கள் செயல்படாத நிலையில் திறந்திருக்கும் ஏடிஎம் மையங்களில் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்துள்ளனர்.

    காஞ்சீபுரம்:

    500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என கடந்த 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் பணத்தினை மாற்றவும், வங்கிகளில் டெபாசிட் செய்யவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

    இதையடுத்து பொது மக்கள் பணத்தினை எடுக்க வங்கி வாயில்கள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் கால் கடுக்க காத்திருக்கும் நிலை உள்ளது.

    காஞ்சீபுரம் மற்றும் சுற்றுப்புறங்களில் 70 வங்கிகள், 136 ஏடிஎம் மையங்கள் உள்ளது.ஆனால் பெரும்பாலான ஏ.டி.எம் மையங்களில் பணம் இல்லை, செயல்படாது என்ற அறிவிப்பு பலகை தொங்குவதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

    காஞ்சீபுரம் நகரில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம் மையங்கள் செயல்படாத நிலையில் திறந்திருக்கும் ஏடிஎம் மையங்களில் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்துள்ளனர்.

    ஏறத்தாழ 2 மணிநேரம் காத்திருந்தும் திடீரென பணம் காலி ஆகிவிட்டது என ஏ.டி.எம் மையங்கள் மூடப்படுவதால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சில ஏ.டி.எம் மையங்களில் பணம் டெபாசிட் மட்டுமே செய்ய முடியும், எடுக்க முடியாது என்ற அறிவிப்பு பலகை தொங்குகிறது. இந்நிலையில் காஞ்சீபுரம் இந்திரா காந்தி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி வாயிலில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இன்று அதிகாலை 6 மணி முதலே நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். காவல் துறையினர் அவர்களை வரிசையில் நிற்க வைத்து அதிகாலையிலேயே ஒழுங்குபடுத்தினர்.

    பணம் எடுக்க வந்த பெண் மணி காஞ்சனா என்பவர் கூறுகையில், “ஏடிஎம் மையங்களில் பெண்களுக்கு தனி கியூ இருக்கும் என நம்பி இன்று கூலி வேலைக்கு செல்லாமல் இங்கு வந்தால் ஏற்கனவே 100 பேருக்கு மேல் உள்ளனர்.

    பணம் எடுக்க முடியுமா முடியாதா என தெரியவில்லை” என வருத்தத்துடன் கூறினார். காஞ்சீபுரம் நகரில் பெரும்பாலும் ஒருவரை ஒருவர் சந்திப்பவர்கள் அனைவரும் எந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முடியும் என்ற தகவல்களையே மற்றவர்களை கேட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர் பகுதியில் உள்ள வங்கிகளில் இன்று கூட்டம் குறைவாக காணப்பட்டது. பெரும்பாலான ஏ.டி.எம்.கள் செயல்பட்டன. ஆனால் ஒரு மணி நேரத்திலேயே ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள பணம் காலியானது.

    இதையடுத்து பணம் எடுக்க அடுத்த ஏ.டி.எம். மையத்தை தேடி பொது மக்கள் அலைந்தனர். இதனால் ஏ.டி.எம். மையங்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து இருந்து பணம் எடுத்து சென்றனர்.

    Next Story
    ×