என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    தி.மு.க. போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பாரதீய ஜனதா கட்சியின் அனைத்து மாநில தலைவர்கள் கூட்டம் மற்றும் தீனதயாள் உபாதையா நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள டெல்லி செல்கிறேன்.

    கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் நாட்டு மக்கள் மோடியுடன் தான் உள்ளனர். இதற்கு எதிராக யார்? யார்? போராட்டம் அறிவித்தார்களோ அவர்கள் எல்லோரும் போராட்டத்தை விளக்கி கொள்ளக்கூடிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

    பெண்கள் மோடிக்கு எதிராக இருக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறி இருக்கிறார். ஆனால் கருப்பு பண ஒழிப்பு திட்டத்தை பெண்கள் தான் அதிகமாக வரவேற்று இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் வைகோ உள்பட பல தலைவர்கள் மற்றும் நிதீஷ்குமார், அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு ஆகியோர் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை முதலில் ஏற்றுக் கொள்ள சுணக்கம் காட்டினர். பின்னர் அவர்கள் மோடியுடன் துணையாக நிற்கும் காலத்தின் கட்டாயத்தில் உள்ளனர்.

    தி.மு.க.வினர் முதலில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதில் பலன் எதுவும் இல்லை. இன்று கூட போராட்டம் நடத்துகிறார்கள். அது எந்த விதத்திலும் பலன் தரப்போவது இல்லை. தி.மு.க. நடத்தும் போராட்டங்களுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை.

    ஒருசில இடங்களில் பொது மக்கள் ‘எங்கள் பெயரில் போராட்டம் நடத்தாதீர்கள்’ என்று சுவரொட்டி ஓட்டி இருப்பதை பார்த்தேன். இளைஞர்கள் கூட இணைய தளத்தில் எங்கள் பெயரில் போராட்டம் வேண்டாம், கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு என்று கூறி இருக்கிறார்கள்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பணத்தட்டுப்பாடு சீராக 7 மாதம் ஆகும் என்று கூறி இருக்கிறார். அது தவறு. பணத்தட்டுப்பாடு 50 நாட்களில் சரியாகிவிடும் என்று மோடி தெரிவித்து இருக்கிறார். தற்போது நாட்டில் சுமூக சூழ்நிலை திரும்புகிறது.

    பாரதீய ஜனதா கட்சி நிலம் வாங்கிவிட்டது. பணத்தை எல்லாம் அதில் முதலீடு செய்து உள்ளனர் என்று பொய்யான குற்றச்சாட்டை திருநாவுக்கரசர் கூறி இருக்கிறார்.

    கடந்த 2½ வருடங்களாக நாங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். மோடி கருப்பு பண ஒழிப்பு திட்டத்தை அறிவிக்கும் வரையாருக்கும் தெரியாது. மக்கள் இதை உணர்ந்து இருக்கிறார்கள்.

    முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், ‘கருப்பு பணம் ஒழிப்பு திட்டத்தை முன்பே நாங்கள் சிந்தித்தோம். இந்த திட்டத்தை அமல்படுத்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் என்னை கட்டாயப்படுத்தி இருந்தால் நான் நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பேன்’ என்று கூறி இருக்கிறார்.

    அப்படியானால் நீங்கள் கருப்பு பணம் முதலாளிகளுக்கு துணை நிற்க நிதி அமைச்சராக இருந்தீர்களா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரூ.500, ரூ.1000 நோட்டு பிரச்சனை எதிரொலியால் காஞ்சீபுரம்-திருவள்ளூரில் தி.மு.க.-காங்கிரஸ்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காஞ்சீபுரம்:

    ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பொது மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். வங்கிகள் முன்பும், ஏ.டி.எம். மையங்களிலும் பல மணி நேரம் காத்து கிடக்கும் நிலை உள்ளது.

    இதனை கண்டித்து நாடு முழுவதும் இன்று எதிர்க் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் தனித்தனியாக போராட்டம் நடத்தினர்.

    காஞ்சீபுரம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், ஆர்.டி.அரசு, புகழேந்தி, நகரச் செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், நிர்வாகிகள் பொன்மொழி, சி.வி.எம்.அ.சேகரன்,சுகுமார், பி.எம்.குமார், சிறுவேடல் செல்வம், வி.எஸ்.ராம கிருஷ்ணன், குமணன், அப்துல் மாலிக், அபுசாலி, வழக்கறிஞர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், மோடியை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இதேபோல் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காஞ்சீபுரம் காந்தி சாலையில் உள்ள பெரியார் நினைவு தூண் அருகே மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காஞ்சீபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.வி.குப்பன், முன்னாள் எம்.பி. பெ.விஸ்வநாதன், நிர்வாகிகள் அளவூர் நாகராஜன், வழக்கறிஞர் ஜீவி. மதியழகன், எஸ்.எல்.என்.எஸ். விஜயகுமார், அவளூர் சீனிவாசன், தனசேகரன், லோகநாதன், பத்மநாபன், குமார், தணிகாசலம் மற்றும் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், உத்திரமேரூர் பகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நாசர், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அவர் கள் மத்திய அரசை கண் டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதில் கலந்து கொண்ட கட்சியினர் பலர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளையும் கையில் வைத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி டி.எஸ்.பி. ஈஸ்வரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ரூபாய் நோட்டு பிரச்சினையில் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பது ஏன்? என்பது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்து உள்ளார்.
    ஆலந்தூர்:

    கோவையில் இருந்து விமானத்தில் வந்த வைகோ, சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இரவு நேரத்தில் பிரதமர் மோடி அறிவித்தவுடன் தமிழகத்தில் முதல் நபராக முழுமையாக வரவேற்றேன். அதன் பின்னர் மற்ற தலைவர்கள் வரவேற்று அறிக்கை விட்டனர். வரவேற்றவர்கள் தற்போது இதை முழுக்கமுழுக்க எதிர்க்கின்றனர்.

    நடைமுறையில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்பட்டு இருப்பது உண்மை தான். முன்கூட்டியே 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து இருந்தால் கருப்பு பண பேர்வழிகளுக்கு உடனடியாக தகவல் கசிந்து இருக்கும் என்பதால் அமைச்சரவைக்கு கூட தகவல் தெரிவிக்காமல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதை எதிர்த்து போராட்டம் நடத்துவது அவர்களது உரிமை. மற்ற கட்சிகளை விமர்சிக்க விரும்பவில்லை. பொருளாதார மாணவன் என்ற முறையில் இந்தியாவிற்கு இந்த திட்டம் தேவையானதால் வரவேற்று உள்ளேன்.

    கடந்த 1967-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தபடி பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறுவது ஆபத்தானது. விபரீத விளைவுகளை ஏற்படுத்த கூடியது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காட்டாங்கொளத்தூரில் கல்லூரி முன்பு மருத்துவ மாணவருக்கு சரமாரி அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள‌து.


    நெல்லை களக்காடு அடுத்த மாவடியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று ராஜேஷ் கல்லூரி முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு கார், மோட்டார் சைக்கிளில் 7 பேர் வந்தனர். அவர்கள் அரிவாள், கத்தி, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களை வைத்து இருந்தனர்.

    அக்கும்பல் மாணவர் ராஜேஷை சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டியது. இதனால் அவர் அலறி துடித்தபடிஓடினார். ஆனால் அக்கும்பல் விரட்டி சென்று அவரை இரும்பு கம்பியால் தாக்கினார்கள்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள், மாணவர்கள் ஓடிவந்தனர். உடனே 7 பேர் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    படுகாயம் அடைந்த ராஜேஷை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்ரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் ராஜேசுக்கும் சக மாணவர் ஒருவருக்கும் ஏற்பட்ட முன் விரோதத்தில் இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ராஜேசின் பெற்றோர், உறவினர்கள் கூறும் போது ராஜேஷ் படுகாயம் அடைந்துள்ளார். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 10-ம் வகுப்பு மாணவன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே உள்ள திருத்தேரியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் கோகுல்ராஜ் (வயது 15). செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை அவர் செங்கல்பட்டில் டியூசன் முடித்து விட்டு தாம்பரம் நோக்கி செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் கோகுல்ராஜ் படிக்கட்டில் நின்றார்.

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தை தாண்டி சென்றபோது பஸ் பள்ளத்தில் ஏறி இறங்கியது. நிலை தடுமாறிய கோகுல்ராஜ் தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இன்று காலை சிகிச்சை பலனின்றி கோகுல்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

    திருப்போரூர் அருகே இருதரப்பினர் கோஷ்டிகளாக தகராறில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை அறிந்ததும் அங்கிருந்து ஓடி விட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த தண்டலம் கிராமத்திற்குட்பட்ட மேட்டுத்தண்டலம், பாரதி நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருதரப்பினர் கோஷ்டிகளாக தகராறில் ஈடுபட்டனர்.  போலீசார் வருவதை அறிந்ததும் அங்கிருந்து ஓடி விட்டனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தட்சிணாமூர்த்தி, மதன்குமார், கவுதம் ஆகியோர் 4 பேரை கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

    சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
              
    நாசிக்கில் இருந்து இன்று காலை மேலும் 14 டன் 500 ரூபாய் நோட்டுகள் விமானத்தில் சென்னை வந்தது. பணம் தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆலந்தூர்:

    ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் அதனை மாற்ற வங்கிகள் முன்பு பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். ஏ.டி.எம். மையங்களிலும் பணத்தை எடுக்க நீண்ட வரிசை காணப்படுகிறது.

    புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வினியோகம் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து 15-ந்தேதி புதிய 500 ரூபாய் நோட்டு டெல்லியில் புழக்கத்துக்கு வந்தது. பின்னர் ஒவ்வொரு மாநிலமாக 500 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு விடப்பட்டது.

    தமிழகத்தில் 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வர தாமதம் ஆனதால் பொதுமக்கள் தாங்கள் வாங்கிய ரூ.2 ஆயிரம் நோட்டுக்கு சில்லரை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

    வங்கியிலும் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு பணம் பரிமாற்றம் முடங்கியது. இதனால் சில இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் சேலம் மாவட்டத் தில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கரூர் வைசியா வங்கியில் வினியோகிக்கப்பட்டது.

    சென்னையில் நேற்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஏ.டி.எம். மையங்களில் மட்டும் புதிய 500 ரூபாய் பொதுமக்களுக்கு கிடைத்தது.

    சில்லரை தட்டுப்பாடு கடுமையாக இருந்து வந்த நிலையில் தமிழகத்தில் புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு வந்தது பொதுமக்கள், வியாபாரிகளுக்கு ஓரளவு ஆறுதல் தந்தது.

    எனினும் அனைத்து வங்கிகள், ஏ.டி.எம். மையங்களிலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் எப்போது சர்வ சாதாரணமாக கிடைக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

    இந்த நிலையில் மராட்டிய மாநிலம் நாசிக்கில் அச்சடிக்கப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகள் விமானப்படை விமானம் மூலம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    விமான நிலையத்தின் சரக்கு பிரிவு முனையத்தில் பலத்த பாதுகாப்புடன் ரூபாய் நோட்டு பெட்டிகள் இறக்கி வைக்கப்பட்டன. மொத்தம் 14 டன் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது.

    மத்திய தொழில் பாது காப்பு படையினர் பலத்த பாதுகாப்புடன் ரூபாய் நோட்டு பெட்டிகளை 2 கண்டெய்னர் லாரிகளில் ஏற்றி சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்த னர்.

    புதிய 500 ரூபாய் நோட்டு கள் கொண்டு வரப்பட் டதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ரிசர்வ் வங்கியில் இருந்து புதிய 500 ரூபாய் நோட்டுகள் 2 நாட்களுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பிரித்து அனுப்பப்படும் என்று தெரிகிறது.

    எனவே வங்கி, ஏ.டி.எம். மையங்களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் அதிக அளவில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னையில் புதிய ரூ.500 நோட்டு இன்று எந்த வங்கியிலும் வினியோகம் செய்யப்படவில்லை. புதிய ரூபாய் நோட்டு கிடைக்கும் என்று வாடிக்கையாளர்கள் காத்து நின்றனர். ஆனால் வங்கிகளிலோ, ஏ.டி.எம். மையங்களிலோ வழங்கப்படவில்லை.

    புதிய ரூ.500 நோட்டுகள் வங்கிகளில் திங்கட்கிழமை வினியோகிக்கப்படும் என்று தெரிகிறது. நாளை (சனிக்கிழமை) வங்கிகள் செயல்பட்டாலும் பொது மக்களுக்கு பணம் கிடைக்காது.

    பணம் தட்டுப்பாடு படிப்படியாகதான் குறையும். ஒரே நாளில் குறையாது என்றும் புதிய ரூ.500 நோட்டுகளும் குறைந்த அளவில்தான் வந்துள்ளன என்பதால் பணம் புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஒருசில நாட்கள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    100 நாள் திட்டத்தில் வேலை வழங்க கோரி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த புத்தேரி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்குவது இல்லை என்று தெரிகிறது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டும் உரிய பதில் கிடைக்க வில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, 100 நாள் வேலை எங்களுக்கு வழங்குவது இல்லை. எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கு 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்கியுள்ளனர். அதற்கான கூலியும் வழங்கவில்லை.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்றனர்.

    சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு வருகை பகுதியில் பணத்தை மாற்றுவதற்காக வங்கிகள் சார்பில் 6 புதிய கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் சிரமப்பட்டனர்.

    இதனால் அவர்கள் அத்தியாவசிய செலவுகளுக்கு திண்டாடினார்கள்.

    இந்த நிலையில் பன்னாட்டு விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு வருகை பகுதியில் பணத்தை மாற்றுவதற்காக 6 புதிய கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தேனா வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, சிட்டி யூனியன் வங்கி சார்பில் இந்த கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து ரூ.2000 நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

    பணம் பரிமாற்றம் செய்யும் பயணிகளுக்கு கையில் மை வைக்கப்படுகிறது.

    மறைமலைநகர் அருகே பிறந்த நாள் விழாவுக்கு சென்றபோது நண்பர்கள் 2 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    செங்கல்பட்டு:

    பல்லாவரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவரது மகன் யுவராஜ் (வயது 22). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்று பிறந்த நாள் ஆகும்.

    இதையடுத்து அவர் இன்று காலைஅச்சரப்பாக்கத்தில் உள்ள மறைமலை மாதா ஆலயத்தில் நடக்கும் திருப்பலியில் கலந்து கொள்ள முடிவு செய்தார்.

    இதற்காக யுவராஜ் நேற்று நள்ளிரவு பல்லாவரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நண்பர் லாசர் பிரகாஷ் (22) உள்பட 4 பேருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். யுவராஜும் லாசர் பிரகாசும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மற்ற இரண்டு பேரும் மற்றொரு பைக்கில் வந்தனர்.

    மறைமலைநகரை அடுத்த மகேந்திரா சிட்டி அருகே சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் யுவராஜ்-லாசர் பிரகாஷ் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இதனை பார்த்து பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நண்பர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து மறைமலை நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திடீர் பிரேக் போட்டதால் வேன் கம்பியில் மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவத்தில் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    திருவான்மியூர்:

    மேடவாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் நித்தியானந்தம், இவரது மகன் கேசவராஜ் (7), அங்குள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் பாரதிதாசன். இவர் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். இன்று காலையில் கேசவராஜை பள்ளியில் விடுவதற்காக பாரதிதாசன் வேனில் ஏற்றி சென்றார். சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே சென்ற போது பாரதிதாசன் திடீர் பிரேக் போட்டார்.

    இதனால் கேசவன் முன்னால் இருந்த சீட்டின் கம்பி மீது பலமாக மோதினான். இதில் அவனது தலையில் பலத்த அடிபட்டது. உடனே அவனை சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கேசவராஜ் இறந்தான்.

    இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் பாரதிதாசனை கைது செய்தனர்.

    வங்கிக்கு பொதுமக்கள் அலைச்சலை தவிர்க்க காஞ்சீபுரத்தில் நடமாடும் ஏ.டி.எம்.சேவை மையத்தை கலெக்டர் கஜலட்சுமி தொடங்கி வைத்தார்.

    காஞ்சீபுரம்:

    500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் அவற்றை மாற்ற தினமும் வங்கிகளில் கூட்டம் அலை மோதுகிறது. பணத்தை எடுக்க ஏ.டி.எம். மையங்கள் முன்பும் நீண்ட வரிசை காணப்படுகிறது.

    காஞ்சீபுரம் பகுதியில் உள்ள வங்கிகள் முன்பு தினமும் அதிகாலையிலேயே பொதுமக்கள் காத்து நிற்கிறார்கள். பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடி கிடப்பதால் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் நகரம் மற்றும் புறநகர் பகுதி, மக்கள் கூடும் இடங்களில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடமாடும் ஏ.டி.எம். சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி தொடங்கி வைத்தார். இதில் சப்-கலெக்டர் அருண்தம்புராஜ், வங்கியின் மண்டல துணை பொது மேலாளர் குருபிரசாத், முதன்மை மேலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நடமாடும் வாகனம் மூலம் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் ஊழியர்கள் கையடக்க கருவி மூலம் பொதுமக்கள் கொடுக்கும் டெபிட் கார்டை பயன்படுத்தி ரூ.2 ஆயிரம் வழங்கினர்.

    நடமாடும் ஏ.டி.எம். சேவையால் பணம் எடுப்பதற்காக வங்கி ஏ.டி.எம். மையங்கள் முன்பு மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இல்லாததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    ×