என் மலர்
செய்திகள்

மறைமலைநகர் அருகே 2 வாலிபர்கள் விபத்தில் பலி
செங்கல்பட்டு:
பல்லாவரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவரது மகன் யுவராஜ் (வயது 22). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்று பிறந்த நாள் ஆகும்.
இதையடுத்து அவர் இன்று காலைஅச்சரப்பாக்கத்தில் உள்ள மறைமலை மாதா ஆலயத்தில் நடக்கும் திருப்பலியில் கலந்து கொள்ள முடிவு செய்தார்.
இதற்காக யுவராஜ் நேற்று நள்ளிரவு பல்லாவரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நண்பர் லாசர் பிரகாஷ் (22) உள்பட 4 பேருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். யுவராஜும் லாசர் பிரகாசும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மற்ற இரண்டு பேரும் மற்றொரு பைக்கில் வந்தனர்.
மறைமலைநகரை அடுத்த மகேந்திரா சிட்டி அருகே சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் யுவராஜ்-லாசர் பிரகாஷ் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதனை பார்த்து பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நண்பர்கள் கதறி அழுதனர்.
இது குறித்து மறைமலை நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






