என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக உதவியாளர் மாட்டு வண்டி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த பழவேலி, திம்மாவரம், மனப்பாக்கம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றில் மணல் கடத்தல் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

    போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தும் மணல் கடத்தும் சம்பவம் குறையவில்லை. மாட்டு வண்டிகள், வாகனங்கள் மூலம் பாலாற்றில் மணல் அள்ளும் சம்பவம் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பாலூரை அடுத்த உள்ளாளூர் பகுதியில் பாலாற்றில் மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக உதவியாளர் மணிக்கு தகவல் கிடைத்தது.

    அவர் வி.ஏ.ஓ. மற்றும் அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்துவிட்டு மணல் கடத்தலை கண்காணிக்க தனியாக சென்றார். அப்போது மாட்டு வண்டிகளில் சிலர் மணல் திருடி வந்தனர்.

    உடனே மணி அவர்களை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் மணல் கடத்தல்காரர்கள் மாட்டு வண்டியை நிறுத்தாமல் மணி மீது மோதி ஓட்டிச் சென்றனர். இதில் மாட்டு வண்டி சக்கரம் ஏறி இறங்கியது.

    இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மணி பலியானார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மணல் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    தகவல் அறிந்ததும் பாலூர் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் மணியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பாலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    திடீரென அவர்கள் காஞ்சீபுரம்- செங்கல்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக உதவியாளர் மாட்டு வண்டி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவான்மியூரில் விடுதலை சிறுத்தை பிரமுகரை மிரட்டி நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவான்மியூர்:

    திருவான்மியூர், லட்சுமி புரத்தை சேர்ந்தவர் அருண். விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர். அதே பகுதியில் ஜல்லி மணல் வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று மாலை அவர் கடை அலுவலகத்தில் தனியாக இருந்தார். மழை பெய்து கொண்டு இருந்ததால் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.

    இந்த நிலையில் முகமூடி அணிந்த 6 பேர் கும்பல் திடீரென கடை அலுவலகத்துக்குள் புகுந்தனர். அவர்கள் அருண்குமாரை கத்தி முனையில் மிரட்டி அவர் அணிந்து இருந்த 15 பவுன் நகை மற்றும் செல்போனை பறித்தனர்.

    மேலும் கடையில் இருந்த ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    அருண் தனியாக இருப்பதை நோட்டமிட்டு மர்ம கும்பல் இந்த துணிகர செயலில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நடா புயல் காரணமாக நேற்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இன்று அதிகாலை நடா புயல் வலுவிழந்து கரையை கடந்தது. அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 11 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
    காஞ்சீபுரம்:

    தென்மேற்கு வங்க கட லில் உருவான ‘நடா’ புயல் வலுவிழந்து இன்று அதிகாலை காரைக்காலுக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடந்தது.

    புயல் சின்னம் காரணமாக நேற்று அதிகாலை முதல் இரவு வரை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் நல்ல மழை கொட்டியது.

    அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 11 சென்டி மீட்டர் மழை கொட்டி உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    காஞ்சீபுரம் - 27.5
    செங்கல்பட்டு - 39.8
    ஸ்ரீபெரும்புதூர் - 23.5
    தாம்பரம் - 14.4
    திருக்கழுக்குன்றம் - 70.6
    கேளம்பாக்கம் - 31.6
    உத்திரமேரூர் - 40.2
    செய்யூர் - 30

    திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    சோழவரம் - 57
    செங்குன்றம் - 57
    கும்மிடிப்பூண்டி - 39
    தாமரைப்பாக்கம் - 33
    பொன்னேரி - 31
    செம்பரம்பாக்கம் - 27
    பூந்தமல்லி - 27
    பூண்டி - 26
    திருத்தணி - 25
    திருவள்ளூர் - 23
    அம்பத்தூர் - 21
    திருவல்லங்கோடு - 21
    ஊத்துக்கோட்டை - 17
    ஆர்.கே.பேட்டை - 13
    பள்ளிப்பட்டு - 3
    ரே‌ஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கு குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் வருவதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    மாமல்லபுரம்:

    ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு இருந்தும் பெரும்பாலான கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

    தற்போது குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முழுவதும் முடிவடைந்ததும் ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டு வழங்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக சிறிய எந்திரம் அனைத்து ரே‌ஷன் கடைகளுக்கும் வழங்கப்பட்டு உள்ளது.

    முறைகேட்டை தடுக்க குடும்ப அட்டைதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ்.கள் வருகின்றன.

    இதனால் ரே‌ஷன் கடையில் அனைவருக்கும் பொருட்கள் கிடைக்கும் எனவும் பொருட்கள் இருப்பு விவரம் எந்திரத்தில் பதிவு செய்வதால் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் சில ரே‌ஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் வாங்காத பொருட்களுக்கு அவர்கள் வாங்கியதாக ஊழியர் ‘பில்’ போட்டு பொருட்களை கள்ள மார்க்கெட்டில் வெளியில் விற்பது தற்போது தெரியவந்துள்ளது.

    எந்திரத்தில் ‘பில்’ போடுவதால் இந்த விபரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். ஆக வந்து விடுகின்றன.

    இதுபற்றி குடும்ப அட்டைதாரர்கள் ரே‌ஷன் கடை ஊழியர்களிடம் கேட்கும் போது, எந்திரக்கோளாறு என்று கூறி சமாளித்து வருகின்றனர். கள்ள மார்க்கெட்டில் விற்கப்படும் பொருட்களின் அளவை சரிகெட்ட இப்படி போலி பில்கள் போடுவது தெரிய வந்துள்ளது.

    இவை எந்திரத்தில் பதிவு செய்யப்படுவதால் எஸ்.எம்.எஸ். மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

    மாமல்லபுரம் பகுதியில் உள்ள ஒரு ரே‌ஷன் கடையில் இதேபோல் பல குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ உளுத்தம் பருப்பு வாங்கப்பட்டதாக ஏராளமானோருக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரே‌ஷன் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதே நிலைமை பல ரே‌ஷன் கடைகளில் நடைபெற்று வருகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, முறைகேட்டை தடுக்க அரசு புதிய திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதிலும் சில ஊழியர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இப்போது வாங்கும் பொருட்கள் பற்றிய விபரம் குடும்ப அட்டைகளிலும் பதியப்படுவதால், எந்திரத்தில் பதிவான பொருட்களின் அளவுடன் ஒப்பிட்டு முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்களை கண்டு பிடிக்க வேண்டும்’. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பதில்லை என்று குற்றம் சாட்டினர்.
    கனிமொழியிடம் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தேன். அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுகிறேன் என்று வைகோ அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திருச்சியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலம் குன்றியதாக அறிந்ததும் அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தேன். மீண்டும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். உடனே கனிமொழியிடம் கருணாநிதி பற்றி நலம் விசாரித்தேன். அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர் கூறும்போது, “பொதுவுடைமை தலைவர் நல்லக்கண்ணு துணைவியார் மறைவுக்கும், கவிஞர் இன்குலாப் மறைவுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்”என்றார்.
    மாமல்லபுரம் கடலில் சுழல் காற்றின் வேகம் தென்புறமாக அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவில் இருந்தே பலத்த காற்று வீச துவங்கியது. இதனால் இன்று கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது.
    மாமல்லபுரம்:

    வங்ககடலில் உருவாகி உள்ள ‘நடா’ புயல் காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை முதல் மழை பெய்யத் தொடங்கியது.

    நேரம் செல்லச்செல்ல பலத்த மழையாக கொட்டியது. கனமழை காரணமாக மாமல்லபுரம் கடற்கரை கோவில், புலிக்குகை குட வரைக்கோவில் ஐந்து ரதம் பகுதியில் தண்ணீர் தேங்கியது. சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மழை காரணமாக சாலைகளில் வாகன நடமாட்டம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது

    மாமல்லபுரம் கடலில் சுழல் காற்றின் வேகம் தென்புறமாக அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவில் இருந்தே பலத்த காற்று வீச துவங்கியது. இதனால் இன்று கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது.

    மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. புயல் வேகம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டால் கடலோரத்தில் வசிக்கும் மீனவர்கள் உடனடியாக பாதுகாப்பு பகுதிகளுக்கு சென்று விடும் படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் மாமல்லபுரத்தில் கடலோரப் பாதுகாப்புபடை வீரர்கள், தீயணைப்புபடை வீரர்கள், மழைக்கால மீட்பு பணி குழுவினர், பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர கால பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புயல், சுனாமி நிலநடுக்கம் பற்றிய உலகளாவிய தகவல்களை ‘சென்டல் செல்’ கட்டுப்பாட்டு அறை மூலம் தீவிரமாக அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    இதே போல் பழவேற்காடு கடல் பகுதியிலும் அலைகள் சீற்றம் அதிகமாக கணப்பட்டது. அதிவேகத்தில் கடல் காற்று வீசுகிறது. பழவேற்காடை சுற்றியுள்ள 33 கிராமத்தை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து உள்ளனர்.
    மதுராந்தகம் அருகே நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது கன்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    மதுராந்தகம்:

    சென்னை புதுவண்ணாரபேட்டையை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32). கன்டெய்னர் லாரி டிரைவர். லாரி கிளீனராக காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேட்டை அடுத்த வில்லியம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் (45) இருந்தார். இவர் ராஜ்குமாரின் தாய்மாமன் ஆவார். இவர்கள் இருவரும் கன்டெய்னர் லாரியில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினர்.

    மதுராந்தகத்தை அடுத்த படாளம் கூட்டுசாலையில் வரும்போது சாலை ஓரம் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது கன்டெய்னர் லாரி மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமார், வெங்கடேசன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தகவல் அறிந்த படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ராஜ்குமாரின் சகோதரர் தங்கராஜ் படாளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    பிளவை உண்டாக்கி நடிகர் சங்க ஒற்றுமையை சீர்குலைத்து விட்டதாக சரத்குமார் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    சென்னை விமான நிலையத்தில் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    நடிகர் சங்கம் நன்றாக நடக்க வேண்டும். இதன் மூலம் நடிகர்-நடிகைகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன். முதலில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் லயோலா கல்லூரியில் நடக்கும் என்றார்கள். பின்னர் நடிகர் சங்க வளாகத்துக்கு மாற்றினார்கள். இந்த இடமாற்றம் காரணமாக பலர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்.

    எனக்கு இந்த பொதுக்குழுவில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் இல்லை. என்னைப் பற்றி ஊழல் புகார் கூறுகிறார்கள். முதலில் ஒரு தொகையை ஊழல் செய்துவிட்டதாக கூறினர். பின்னர் இன்னொரு தொகையை சொன்னார்கள். இப்போது ஒரு தொகையை சொல்கிறார்கள்.

    எல்லாவற்றுக்கும் கணக்கு இருக்கிறது. என் மீது குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே புதிது புதிதாக ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்னை நீக்கிவிட்டதாக தீர்மானம் போட்டு இருக்கிறார்கள். அதை சட்டப்படி சந்திப்பேன் என்று ஏற்கனவே சொல்லி விட்டேன். 50, 100 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் ஏதோ குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக இதை செய்கிறார்கள்.

    நடிகர் சங்கத்தில் மோதல், அடிதடி, தகராறு என்று கேள்விப்பட்டேன். எனது மனைவி மூலம் இந்த பிரச்சினைகளை தெரிந்து கொண்டேன். நடிகர் சங்கம் என்றால் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். நான் தலைவராக இருந்தபோது இது போன்ற பிரச்சினைகள் வந்ததே இல்லை. நல்லது நடப்பதற்காக இயங்க வேண்டிய நடிகர் சங்கத்தில் பிளவும், மோதலும் ஏற்படுவது வேதனை. நடிகர் சங்க ஒற்றுமை சீர்குலைந்து இருப்பது வருத்தம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்திருப்பதால் சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு முதல் கார் பார்க்கிங் கட்டணம் மீண்டும் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.
    ஆலந்தூர்:

    ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதையடுத்து சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டது. புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வர தாமதம் ஆனதால் இது மேலும் அதிகரித்தது.

    சென்னை விமான நிலையத்தில் கார் பார்க்கிங் கட்டணத்திற்கு பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பயணிகள் கொடுத்ததால் ஊழியர்கள் சில்லரை கொடுக்க முடியாத நிலை உருவானது. இதையடுத்து கடந்த 13-ந் தேதி முதல் கார் பார்க்கிங் கட்டணம் கிடையாது என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

    தற்போது புதிய ரூ.2000, ரூ500 நோட்டுகள் புழக்கத்திற்கு வந்திருப்பதால் சில்லரை தட்டுப்பாடு ஓரளவு குறைந்துள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு முதல் கார் பார்க்கிங் கட்டணம் மீண்டும் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

    அதன்படி நள்ளிரவு 12 மணி முதல் கார் பார்க்கிங் கட்டணத்தை ஊழியர்கள் வசூலித்தனர். அவர்கள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்கவில்லை.
    கேளம்பாக்கத்தில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கத்தில் வசித்து வருபவர் லட்சுமி நாராயணன்(வயது 57) கடந்த 26-ந் தேதி திருவண்ணாமலைக்கு குடும்பத்துடன் சென்ற அவர் நேற்று வீட்டிற்கு வந்த போது வீட்டின்கதவு திறந்து கிடப்பதைகண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டில் இருந்த 100 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், 50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளை போயிருப்பதை கண்டு உடனடியாக கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விசாரணையில் வீட்டை பூட்டி சாவியை அங்கேயே மறைத்து வைத்துவிட்டு சென்றுள்ளார். இதையறிந்த மர்ம நபர்கள் சாவியை எடுத்து பூட்டைதிறந்து உள்ளே சென்று கொள்ளையடித்துள்ளனர்.

    லட்சுமி நாராயணனின் அந்த வில்லாக்களை சுற்றி மின்வேலி உள்ளதால் வெளியாட்கள் யாரும் உள்ளே நுழையமுடியாது என கூறப்படுகிறது. இதனால் தெரிந்தவர்களோ அங்கு பணியில் உள்ள காவலாளிகளுடன் தொடர்புடையவர்களோ இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மேலும் நுழைவு வாயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் கொள்ளையர்கள் 3 பேரின் உருவங்கள் பதிவாகி உள்ளதாக தெரிகிறது.

    அதை வைத்து தனிப்படை போலீசார் அங்குள்ள காவலாளிகளிடமும் பக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு சீர்த்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மோதலில் ஈடுபட்டு தப்பிச் செல்ல திட்டமிட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இங்கு குற்றச் செயல்களில் ஈடுபட்ட திருநெல்வேலி, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 43 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு தினமும் பள்ளி வகுப்புகள், தொழிற் பயிற்சி உள்ளிட்டவை நடத்தப்படுகிறது. மாலையில் சீர்திருத்த பள்ளி வளாகத்தில் விளையாடுவது வழக்கம்.

    நேற்று மாலை விளையாட்டு நேரம் முடிந்ததும் சிறுவர்கள் அனைவரையும் அவர்களது அறைக்கு செல்லுமாறு ஆசிரியர் விஜயசாரதி, ஓவிய ஆசிரியர் சுரேஷ்குமார் ஆகியோர் கூறினர்.

    ஆனால் சிறுவர்கள் அறைக்கு செல்ல மறுத்து ஆசிரியர்களிடம் வாக்கு வாதம் செய்தனர். திடீரென அவர்கள் இரும்பு கம்பி, கிரிக்கெட் மட்டையால் ஆசிரியர்கள் சுரேஷ் குமார், விஜயசாரதியை சரமாரியாக தாக்கினர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி துளசி ராமன் உள்ளிட்ட காவலாளிகள் சிறுவர்களை தடுக்க முயன்றனர். அவர்களையும் தாக்கினர்.

    இதில் ஆசிரியர்கள் சுரேஷ்குமார், விஜயசாரதி, காவலாளி துளசி ராமன் ஆகியோரது மண்டை உடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் கண்காணிப்பாளர் ரத்தினம் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட சிறுவர்களை எச்சரித்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

    படுகாயம் அடைந்த சுரேஷ்குமார் உள்பட 3 பேருக்கும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சீர்த்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மோதலில் ஈடுபட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. உடனடியாக காவலாளிகள், அதிகாரிகள் பார்த்ததால் அவர்களது திட்டம் நிறைவேறவில்லை.

    இதே போல் கடந்த 3 மாதம் முன் ஆசிரியர், காவலாளிகள் மீது சிறுவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து தாக்குதல் சம்பவம் நடந்து வருவதால் சீர்திருத்தப் பள்ளியில் பணியில் இருக்கும் ஊழியர்கள் அச்சம் அடைந்து இருக்கிறார்கள்.

    இது குறித்து ஊழியர் ஒருவர் கூறும்போது, “கொடிய குற்றம் செய்த சிறுவர்களும், சாதாரண குற்றம் செய்த சிறுவர்களும் ஒரே இடத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் தப்பிப்பதற்காக ஊழியர்கள் மீது தாக்குதல் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

    தி.மு.க. போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பாரதீய ஜனதா கட்சியின் அனைத்து மாநில தலைவர்கள் கூட்டம் மற்றும் தீனதயாள் உபாதையா நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள டெல்லி செல்கிறேன்.

    கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் நாட்டு மக்கள் மோடியுடன் தான் உள்ளனர். இதற்கு எதிராக யார்? யார்? போராட்டம் அறிவித்தார்களோ அவர்கள் எல்லோரும் போராட்டத்தை விளக்கி கொள்ளக்கூடிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

    பெண்கள் மோடிக்கு எதிராக இருக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறி இருக்கிறார். ஆனால் கருப்பு பண ஒழிப்பு திட்டத்தை பெண்கள் தான் அதிகமாக வரவேற்று இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் வைகோ உள்பட பல தலைவர்கள் மற்றும் நிதீஷ்குமார், அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு ஆகியோர் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை முதலில் ஏற்றுக் கொள்ள சுணக்கம் காட்டினர். பின்னர் அவர்கள் மோடியுடன் துணையாக நிற்கும் காலத்தின் கட்டாயத்தில் உள்ளனர்.

    தி.மு.க.வினர் முதலில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதில் பலன் எதுவும் இல்லை. இன்று கூட போராட்டம் நடத்துகிறார்கள். அது எந்த விதத்திலும் பலன் தரப்போவது இல்லை. தி.மு.க. நடத்தும் போராட்டங்களுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை.

    ஒருசில இடங்களில் பொது மக்கள் ‘எங்கள் பெயரில் போராட்டம் நடத்தாதீர்கள்’ என்று சுவரொட்டி ஓட்டி இருப்பதை பார்த்தேன். இளைஞர்கள் கூட இணைய தளத்தில் எங்கள் பெயரில் போராட்டம் வேண்டாம், கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு என்று கூறி இருக்கிறார்கள்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பணத்தட்டுப்பாடு சீராக 7 மாதம் ஆகும் என்று கூறி இருக்கிறார். அது தவறு. பணத்தட்டுப்பாடு 50 நாட்களில் சரியாகிவிடும் என்று மோடி தெரிவித்து இருக்கிறார். தற்போது நாட்டில் சுமூக சூழ்நிலை திரும்புகிறது.

    பாரதீய ஜனதா கட்சி நிலம் வாங்கிவிட்டது. பணத்தை எல்லாம் அதில் முதலீடு செய்து உள்ளனர் என்று பொய்யான குற்றச்சாட்டை திருநாவுக்கரசர் கூறி இருக்கிறார்.

    கடந்த 2½ வருடங்களாக நாங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். மோடி கருப்பு பண ஒழிப்பு திட்டத்தை அறிவிக்கும் வரையாருக்கும் தெரியாது. மக்கள் இதை உணர்ந்து இருக்கிறார்கள்.

    முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், ‘கருப்பு பணம் ஒழிப்பு திட்டத்தை முன்பே நாங்கள் சிந்தித்தோம். இந்த திட்டத்தை அமல்படுத்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் என்னை கட்டாயப்படுத்தி இருந்தால் நான் நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பேன்’ என்று கூறி இருக்கிறார்.

    அப்படியானால் நீங்கள் கருப்பு பணம் முதலாளிகளுக்கு துணை நிற்க நிதி அமைச்சராக இருந்தீர்களா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×