என் மலர்
காஞ்சிபுரம்
மறைமலைநகரை அடுத்த கடம்பூர், படவட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிளியம்மாள் (வயது 55). அ.தி.மு.க. தொண்டர்.
நேற்று மாலை முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் அடக்க நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென கிளியம்மாளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார்.
உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே கிளியம்யம்மாள் பரிதாபமாக இறந்தார்.
அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இச்சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சூனாம்பேடு அடுத்த அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 70). நேற்று இரவு அவர் குடிசை வீட்டில் தூங்கினார்.
நள்ளிரவில் திடீரென குடிசை வீடு தீப்பிடித்தது. உடனடியாக முனியம்மாளால் வெளியேவர முடியவில்லை. தீயில் சிக்கிய அவர் உடல் கருகினார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டனர்.
படுகாயம் அடைந்த முனியம்மாளுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து சூனாம்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:
ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு மரண மடைந்தார். இதையடுத்து தமிழகம் முழு வதும் கடைகள் அடைக்கப்பட்டன. போக்கு வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை இயல்பு வாழ்க்கை திரும்பியது. காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பஸ்கள் வழக்கம் ஓடின.
காஞ்சீபுரம் காந்தி சாலை, காமராஜர் சாலை, செங்கழுநீரோடை வீதி, ராஜவீதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் கடைகள் திறந்து இருந்தன.
அதிகாலை முதலே தனியார் மற்றும் அரசு பஸ்கள் ஓடத் தொடங்கியது. ராஜாஜி மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் திறந்து வழக்கம் போல் இயங்கின.
காய்கறி வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் குறைந்த அளவு காய்கறிகளையே வாங்கிச் சென்றனர். இதனால் மார்க்கெட் பகுதியில் கூட்டம் குறைவாக இருந்தது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கைத்தை விட குறைந்த அளவு காய்கறிகள் விற்பனைக்கு வந்ததால் அங்கு விலை அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் பகுதிகளுக்கு வியாபாரிகள் காய்கறிகளை அதிக அளவு வாங்கிவரவில்லை.
தக்காளி, வெங்காயம் மட்டும் அவர்கள் வாங்கி வந்தனர். திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விளைந்த கீரை, வெண்டைக்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளை மட்டும் வியாபாரிகள் விற்றனர். இதனால் காய்கறி விலை அதிகமாக இருந்தது.மார்க்கெட்டுகளில் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெர்மனியில் நடைபெறும் ஆளும் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள தேசிய பா.ஜனதா கட்சி சார்பில் எனது தலைமையில் 5 பேர் குழு நாளை செல்கிறோம்.
சேலம் உருக்காலையை தனியார் மயம் ஆக்கக்கூடாது என்று தமிழக பா. ஜனதா சார்பில் கனரக அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
துறையூரில் நடந்த பட்டாசு ஆலை விபத்து துயரமானது. உயிர் இழந்தவர்களுக்கு சரியான நிவாரண உதவி வழங்கப்படவில்லை என்று போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
பட்டாசு ஆலைக்கு அனுமதி வழங்கும் போது அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும். பாதுகாப்பாற்ற பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்க கூடாது.
தஞ்சாவூர் அருகே வங்கியில் பணம் எடுக்க சென்ற முதியவர் உயிர் இழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. அவருக்கு வரிசையில் நின்றவர்கள் உதவவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இது மனிதாபிமானம் அற்ற செயல்.
பணத்தட்டுப்பாட்டை போக்க வங்கி அதிகாரிகள் நிர்வாக முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இதன் அருகே உள்ள பரனூர், செட்டிபுன்னியம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்ல சுங்கச்சாவடி அருகேயே தங்களது மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு பஸ்களில் ஏறுகின்றனர்.
சுங்கச்சாவடி அருகே நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடிச் செல்வதும், அதனை குற்றச்செயல்களுக்கு பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகனங்களை பயணிகள் நிறுத்த வேண்டாம் என்று செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். ஆனாலும் தொடர்ந்து அங்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சுங்கச்சாவடி அருகில் நிறுத்தப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட வாகனங்களை செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். அதன் உரிமையாளர்களை வரவழைத்து விசாரணை நடந்து வருகிறது.
சுங்கச்சாவடியில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
செங்கல்பட்டை அடுத்த வல்லம், மிஷின் தெருவில் வசித்து வந்தவர் கலையரசன் (வயது 51). வல்லம் ஊராட்சியின் முன்னாள் தலைவரும், தி.மு.க. ஒன்றிய துணை செயலாளராகவும் இருந்தார்.
நேற்று இரவு அவர் செங்கல்பட்டில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். வீட்டின் அருகே வந்த போது எதிரே மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கும்பல் திடீரென கலையரசன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினர்.
இதில் நிலை தடுமாறிய கலையரசன் கீழே விழுந்தார். உடனே மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் கலையரசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
போலீசார் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தே.மு.தி.க. மாவட்ட பிரதிநிதி கண்ணதாசன் கொலைக்கு பழிக்குப்பழியாக கலையரசன் தீர்த்து கட்டப்பட்டு இருப்பது தெரிந்தது.
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது வல்லம் ஊராட்சி தலைவர் பதவிக்கு கலையரசன் தனது தாயை நிறுத்தி இருந்தார். இதேபோல் அதே பதவிக்கு கண்ணதாசன் தனது அக்காளை போட்டியிட வைத்தார்.
இதில் கண்ணதாசனின் அக்காள் வெற்றி பெற்றார். இதனால் கண்ணதாசன் - கலையரசன் இடையே மோதல் முற்றியது. இந்த தகராறில் கடந்த 2012-ம் ஆண்டு கண்ணதாசன் மற்றும் அவரது நண்பர் சவுந்தர் கொலை செய்யப்பட்டனர். கண்ணதாசன் கொலை வழக்கில் 6-வது குற்றவாளியாக கலையரசன் சேர்க்கப்பட்டு இருந்தார். இதையடுத்து கண்ணதாசன் கொலைக்கு பழி தீர்க்க அவரது ஆதரவாளர்கள் கலையரசனை திட்டமிட்டு தீர்த்து கட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய வல்லம், மேலமையூர் பகுதியை சேர்ந்த 6 பேர் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம், கொலைக்கு வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா? என்று விசாரணை நடந்து வருகிறது.
இச்சம்பவத்தால் வல்லம் பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. கடைகள் அடைக்கப்பட்டு உள்ளனர். ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கலையரசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத் திரியில் வைக்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் இன்று பிற்பகல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
கொலையுண்ட கலையரசனுக்கு ரூபி என்ற மனைவியும், 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.
அனகாபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சக்திநகர், தேவிமூகாம்பிகை நகர், டோபிகானா பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ளன.
அடையாறு ஆற்றை அகலப்படுத்துவதால் கரையோரம் இருந்த வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு மாற்று இடமும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களது வீடுகளை காலி செய்ய மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று அனகாபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வீடுகளை அகற்றுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்துக்கு சுற்றுலா செல்லும் பயணிகளும் உள்ளூர் மக்களும் பணம் எடுப்பதற்கு வசதியாக 5 இடங்களில் ஏ.டி.எம். சென்டர் இயங்கி வருகிறது.
ரூ.500, 1000 செல்லாதது என்ற அறிவிப்பை அடுத்து 4 இடங்களில் உள்ள ஏ.டி.எம். மிஷின்கள் இயங்கவில்லை.
மாமல்லபுரம் பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மட்டும் காலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறது. இது சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்தாலும் கடந்த 2 வாரங்களாக ஏ.டி.எம். அறையில் எந்த மின் விளக்கும் இல்லாமல் இருட்டாக உள்ளது.
பணத்தை எண்ணி சரிபார்க்க முடியாமல் திருட்டு பயத்துடன் சுற்றுலா பயணிகள் வெளியே வந்து மோட்டார் சைக்கிள் வெளிச்சத்தில் சரிபார்த்து செல்கிறார்கள். இருட்டாக இருப்பதால் வெளியூர் பயணிகளுக்கு ஏ.டி.எம். இருப்பதும் தெரியவில்லை. மற்ற ஏடிஎம்களும் இயங்காததால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் பணம் எடுத்து செலவு செய்ய முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி இருக்கும் வியாபாரிகளும் வியாபாரம் இன்றி சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
செங்கல்பட்டை அடுத்த பழவேலி, திம்மாவரம், மனப்பாக்கம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றில் மணல் கடத்தல் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தும் மணல் கடத்தும் சம்பவம் குறையவில்லை. மாட்டு வண்டிகள், வாகனங்கள் மூலம் பாலாற்றில் மணல் அள்ளும் சம்பவம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை பாலூரை அடுத்த உள்ளாளூர் பகுதியில் பாலாற்றில் மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக உதவியாளர் மணிக்கு தகவல் கிடைத்தது.
அவர் வி.ஏ.ஓ. மற்றும் அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்துவிட்டு மணல் கடத்தலை கண்காணிக்க தனியாக சென்றார். அப்போது மாட்டு வண்டிகளில் சிலர் மணல் திருடி வந்தனர்.
உடனே மணி அவர்களை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் மணல் கடத்தல்காரர்கள் மாட்டு வண்டியை நிறுத்தாமல் மணி மீது மோதி ஓட்டிச் சென்றனர். இதில் மாட்டு வண்டி சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மணி பலியானார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மணல் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
தகவல் அறிந்ததும் பாலூர் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி அறிந்ததும் மணியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பாலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திடீரென அவர்கள் காஞ்சீபுரம்- செங்கல்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக உதவியாளர் மாட்டு வண்டி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவான்மியூர், லட்சுமி புரத்தை சேர்ந்தவர் அருண். விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர். அதே பகுதியில் ஜல்லி மணல் வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று மாலை அவர் கடை அலுவலகத்தில் தனியாக இருந்தார். மழை பெய்து கொண்டு இருந்ததால் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.
இந்த நிலையில் முகமூடி அணிந்த 6 பேர் கும்பல் திடீரென கடை அலுவலகத்துக்குள் புகுந்தனர். அவர்கள் அருண்குமாரை கத்தி முனையில் மிரட்டி அவர் அணிந்து இருந்த 15 பவுன் நகை மற்றும் செல்போனை பறித்தனர்.
மேலும் கடையில் இருந்த ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
அருண் தனியாக இருப்பதை நோட்டமிட்டு மர்ம கும்பல் இந்த துணிகர செயலில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்மேற்கு வங்க கட லில் உருவான ‘நடா’ புயல் வலுவிழந்து இன்று அதிகாலை காரைக்காலுக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடந்தது.
புயல் சின்னம் காரணமாக நேற்று அதிகாலை முதல் இரவு வரை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் நல்ல மழை கொட்டியது.
அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 11 சென்டி மீட்டர் மழை கொட்டி உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
காஞ்சீபுரம் - 27.5
செங்கல்பட்டு - 39.8
ஸ்ரீபெரும்புதூர் - 23.5
தாம்பரம் - 14.4
திருக்கழுக்குன்றம் - 70.6
கேளம்பாக்கம் - 31.6
உத்திரமேரூர் - 40.2
செய்யூர் - 30
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
சோழவரம் - 57
செங்குன்றம் - 57
கும்மிடிப்பூண்டி - 39
தாமரைப்பாக்கம் - 33
பொன்னேரி - 31
செம்பரம்பாக்கம் - 27
பூந்தமல்லி - 27
பூண்டி - 26
திருத்தணி - 25
திருவள்ளூர் - 23
அம்பத்தூர் - 21
திருவல்லங்கோடு - 21
ஊத்துக்கோட்டை - 17
ஆர்.கே.பேட்டை - 13
பள்ளிப்பட்டு - 3
ரேஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு இருந்தும் பெரும்பாலான கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
தற்போது குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முழுவதும் முடிவடைந்ததும் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக சிறிய எந்திரம் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வழங்கப்பட்டு உள்ளது.
முறைகேட்டை தடுக்க குடும்ப அட்டைதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ்.கள் வருகின்றன.
இதனால் ரேஷன் கடையில் அனைவருக்கும் பொருட்கள் கிடைக்கும் எனவும் பொருட்கள் இருப்பு விவரம் எந்திரத்தில் பதிவு செய்வதால் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் சில ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் வாங்காத பொருட்களுக்கு அவர்கள் வாங்கியதாக ஊழியர் ‘பில்’ போட்டு பொருட்களை கள்ள மார்க்கெட்டில் வெளியில் விற்பது தற்போது தெரியவந்துள்ளது.
எந்திரத்தில் ‘பில்’ போடுவதால் இந்த விபரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். ஆக வந்து விடுகின்றன.
இதுபற்றி குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்கும் போது, எந்திரக்கோளாறு என்று கூறி சமாளித்து வருகின்றனர். கள்ள மார்க்கெட்டில் விற்கப்படும் பொருட்களின் அளவை சரிகெட்ட இப்படி போலி பில்கள் போடுவது தெரிய வந்துள்ளது.
இவை எந்திரத்தில் பதிவு செய்யப்படுவதால் எஸ்.எம்.எஸ். மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
மாமல்லபுரம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் இதேபோல் பல குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ உளுத்தம் பருப்பு வாங்கப்பட்டதாக ஏராளமானோருக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரேஷன் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதே நிலைமை பல ரேஷன் கடைகளில் நடைபெற்று வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, முறைகேட்டை தடுக்க அரசு புதிய திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதிலும் சில ஊழியர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்போது வாங்கும் பொருட்கள் பற்றிய விபரம் குடும்ப அட்டைகளிலும் பதியப்படுவதால், எந்திரத்தில் பதிவான பொருட்களின் அளவுடன் ஒப்பிட்டு முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்களை கண்டு பிடிக்க வேண்டும்’. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பதில்லை என்று குற்றம் சாட்டினர்.






