என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ‘வார்தா’ புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதை மூடப்பட்டது. திடீரென விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    ஆலந்தூர்:

    ‘வார்தா’ புயல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதிகளில் பலமான காற்று வீசியது. மேலும், பலத்த மழை பெய்ததால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியது.

    இதனால் மும்பை, டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 13 விமானங்களால் ஓடுபாதையில் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து அந்த விமானங்கள் ஐதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

    இதனை தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ஓடுபாதையை மூடவும், விமான போக்குவரத்தை ரத்து செய்யவும் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி ஓடுபாதையை மூடி, விமான போக்குவரத்தை ரத்து செய்ய உத்தரவிட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதன் பின்னர் மலேசியா உள்பட சில நாடுகளில் இருந்து வரவேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    மேலும், ‘வார்தா’ புயல் தாக்கம் குறைந்து நிலைமை சீரடைந்தால் ஓடுபாதை போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டு அதன்பிறகு விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    விமான போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் செய்வதறியாது திகைத்தனர்.

    சில பயணிகள் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அந்த பயணிகளிடம் நிலைமையை விவரமாக விளக்கி கூறினார்கள். தொடர்ந்து மழை பெய்ததால் பயணிகள் வீடுகளுக்கும் செல்ல முடியாமல் விமான நிலையத்திலேயே தஞ்சம் புகுந்து இருந்தனர்.
    கேளம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பைக் மோதிய விபத்தில் அதிமுக தொண்டர் பலியானர்.
    திருப்போரூர்:

    திருப்போரூர் அருகே உள்ள வளவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் மாரிமுத்து (வயது 37). அ.தி.மு.க. தொண்டர்.

    இவர் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்து வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கேளம்பாக்கம் அருகே வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், மாரி முத்து பைக் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி மாரிமுத்து விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்தார்.

    பலியான மாரிமுத்து குடும்பத்திற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.
    ஆதம்பாக்கத்தில் கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி பத்மாவதி. இவர்கள் இதே பகுதியில் புதியதாக வீடு கட்டி உள்ளனர். அதற்காக நிறைய பேரிடம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனம் உடைந்த பத்மாவதி நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் அருகே பஸ் மீது லாரி மோதலில் 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    வேலூர் மாவட்டம், அரக்கோணம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கோழி விற்பனை நிறுவனத்திற்கு சொந்தமான மினி லாரி ஒன்று கோழிகளை ஏற்றிக் கொண்டு சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. வண்டியில் பாஸ்கர், உசேன், ஆசிப் ஆகிய 3 பேர் இருந்தனர்.

    இந்நிலையில் நள்ளிரவு மினி லாரி காஞ்சீபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது முன்னே சென்ற மற்றொரு லாரியை கடக்க முயன்றது. இதில் நிலைதடுமாறி சாலையின் எதிர்புறம் வந்து கொண்டிருந்த தனியார் கம்பெனிக்கு சொந்தமான தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வந்திருந்த பேருந்து மீது மோதி கவிழ்ந்து உருக்குலைந்த அந்த மினி லாரியில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    தனியார் நிறுவன பஸ்சில் இருந்த 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணா துரை மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து காவல்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் அதிகாலை நேரங்களில் இது போன்ற சரக்குகள் மற்றும் காய்கறிகள் ஏற்றிச் செல்லும் மினி லாரி போன்றவை நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் செல்கின்றன.

    தற்போது பெரும் பனி மூட்டம் நிலவி வருவதால் எதிரே வரும் வாகனங்கள் முகப்பு விளக்கினை எரிய விட்டு வந்தாலும் அருகில் வரும்போது தான் எதிரே வரும் வாகனத்தினை காண முடியும். எனவே வேகமாக வரும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    மேலும் சாலையில் ஒரு பக்கத்தில் மிக குறைந்த நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டாலும் எதிரே வரும் வாகனங்கள் பொறுமைகாக்காமலும் வருவதால் விபத்து ஏற்பட காரணமாகிறது.

    சென்னை விமான நிலையத்தில் மர்ம சூட்கேஸ் ஒன்று சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக யாரும் எடுக்காததால் பரபரப்பு நிலவியது.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதி 3-வது நுழைவு வாயிலில் இன்று காலையில் ஒரு சூட்கேஸ், ஒரு பை ஆகியவை அனாதையாக கிடந்தது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக அதை யாரும் எடுக்காததால் பரபரப்பு நிலவியது. இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். பின்னர் அதை திறந்து பார்த்தபோது துணி மணிகள், சாக்லெட், பிஸ்கட், ஊறுகாய் போன்றவை இருந்தது. இதனால் பரபரப்பு அடங்கியது.
    பெருங்களத்தூரில் இளம்பெண் கொலையில் கைதான என்ஜினீயர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதைப்பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம் கருமாரி அம்மன் கோவிலை சேர்ந் தவர் ஆதிமூலம். இவரது மகள் சோனியா (வயது 23). பிளஸ்-2 படித்துள்ள இவர் கிண்டியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை சோனியா வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பெருங்களத்தூர் பஸ்நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த நெடுங்குன்றத்தை சேர்ந்த என்ஜினீயர் பிரசாத் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    திடீரென பிரசாத் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் சோனியாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் துடித்த சோனியா பரிதாபமாக இறந்தார். பொது மக்கள் மத்தியில் பஸ்நிலையத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தப்பி ஓடிய என்ஜினீயர் பிரசாத் பீர்க்கன்கரணை போலீசில் சரண் அடைந்தார். அவர் போலீசில் அளித்ள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    நானும் சோனியாவும் ஒரே பகுதியில் வசித்து வருகிறோம். 6 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். கடந்த ஒரு மாதமாக சோனியா என்னிடம் பேச வில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அடிக்கடி பிசியாக இருந்தது.



    இதுபற்றி அவரிடம் கேட்க பின்தொடர்ந்து வந்தேன். பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் நான் காத்திருந்த போது பஸ்சில் வந்த சோனியா வேறு வாலிபருடன் பேசினார்.

    இதுபற்றி கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட் டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் சிறிய கத்தியால் சோனியாவின் கழுத்தை அறுத்தேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதுபற்றி கொலையுண்ட சோனியாவின் தம்பி கார்த்திக் கூறும் போது, சோனியாவும் பிரசாத்தும் பழகியது எங்களுக்கு தெரியும். இதனை நாங்கள் கண்டித்தோம். பிரசாத்தின் நடவடிக்கை சரியில்லை என்று தெரிந்ததும் அவரிடம் பேசுவதை சோனியா தவிர்த்தார்.

    ஆனாலும் வேலைக்கு சென்று வரும்போது தினமும் பிரசாத் பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத் தார். இதனை நாங்கள் கண்டித்தும் பிரசாத் கேட்கவில்லை.

    இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் எண்ணை சோனியா மாற்றினார். நேற்று மாலை மீண்டும் சோனியாவை பின்தொடர்ந்து வந்து பிரசாத் கொலை செய்து விட்டார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

    கொலையாளி பிரசாத் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமோ படித்துள்ளார். அவர் ஊரப்பாக்கத்தில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த பிரசாத்திடம் இன்று காலை வரை சோனியா இறந்தது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து இருந்தனர்.

    இன்று மதியத்திற்கு பிறகே சோனியா இறந்ததாக பிரசாத்திடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எந்தவித வருத்தமும் படவில்லை. அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இன்று மாலை பிரசாத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் போலீசார் அடைக்கிறார்கள்.

    கொலையுண்ட சோனியாவின் உடல் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    இன்று பிற்பகல் பிரேத பரிசோதனை முடிந்து சோனியாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

    தண்டலம் அ.தி.மு.க. கிளை கழக அவைத் தலைவர் கார்த்திக் இன்று காலை திருமணம் முடிந்தவுடன் தனது மனைவியுடன் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் அ.தி.மு.க. கிளை கழக அவைத் தலைவர் கார்த்திக்- ஸ்நேகா திருமணம் இன்று காலை பெசன்ட் நகரில் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் கார்த்திக் தனது மனைவியுடன் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

    இதுபற்றி கார்த்திக் கூறுகையில், “நான் திருமணம் முடிந்தவுடன் முதல்-அமைச்சர் அம்மாவை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அம்மா திடீரென்று மறைந்ததால் மிகவும் கவலை அடைந்தேன். இன்று காலை திருமணம் முடிந்தவுடன் நேராக ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி அம்மாவிடம் ஆசி பெற்றோம் என்றார்.
    ஜெயலலிதா மரணம் பற்றி பெரியகட்சிகள் வதந்தி பரப்புவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    எல்லைதாண்டி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது கைபற்றப்படும் படகுகளுக்கு பெரும் தொகை அபராதம் விதிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதை கண்டித்து வரும் 16ம் தேதி இராமேஸ்வரம் கடற் கரையில் மதிமுக சார்பில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இந்த விசயத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா ராஜீய அழுத்தம் தர வேண்டும். தமிழக மீனவர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மருத்துவமனையில் முறைப்படி முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து மருத்துமனை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் பல்வேறு பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் தொடர்ந்து வெளியாகின. இந்நிலையில் அவரின் மரணம் குறித்து வதந்திகளை பரப்பி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    இந்த வதந்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை. ஆனால் பெரிய கட்சிகள் ஊர்ஊராக சென்று வி‌ஷமபிரச்சாரம் செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஜெயலலிதாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று மதுரை ஆதீனம் கூறினார்.
    வண்டலூர்:

    சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரிக்கு மதுரை ஆதீனம் நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஜெயலலிதாவின் கொள்கைகள், எண்ணங்கள், திட்டங்களை புதிதாக பொறுப்பேற்று உள்ள முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்தின் அரசு செயல்படுத்தும். பன்னீர்செல்வத்தின் ஆட்சி முழுமையாக நீடிக்கும். அ.தி.மு.க.வுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.

    யார் பொறுப்புக்கு வர வேண்டும் என்று ஜெயலலிதா நினைத்தாரோ?, யாரால் அ.தி.மு.க.வை வழிநடத்திட முடியும் என்று தீர்மானித்தாரோ அவர் கட்சி பொறுப்புக்கு வருவார். அ.தி.மு.க. உடையாது. காரணம் ஜெயலலிதாவின் பாசறையில் வளர்ந்தவர்கள், உடன் இருந்தவர்கள் அந்த பக்குவத்தை பெற்று உள்ளனர்.

    ஜெயலலிதாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் கோடியில் ஒருவர். அவருடைய இடத்தை நிரப்ப ஆயிரம் ஆண்டு காலம் ஆகலாம். என் உடலில் உயிர் இருக்கும்வரை அ.தி.மு.க.வில் யார் பொறுப்புக்கு வந்தாலும், அவர்களுக்கு என் முழு ஆதரவும், ஆசீர்வாதமும் உண்டு.

    ஜெயலலிதா, சாதி, மத, இன வேறுபாடு இன்றி பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தினார். அந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அ.தி.மு.க.வின் எதிர்காலம் நிச்சயமாக சிறப்பாக இருக்கும். முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் அனைவரையும் சமாளித்து ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்றுவார்.

    எதிர்க்கட்சியான தி.மு.க. நிச்சயமாக அ.தி.மு.க அரசுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கமாட்டார்கள். அ.தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகள் அ.தி.மு.க. வளர்ச்சிக்காக ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அவர் ஜெயலலிதாவின் மறைவை பற்றி பேச தொடங்கிய போது கண்ணீர் விட்டு அழுதார்.
    தமிழக ஆட்சியில் புறவாசல் வழியாக அதிகாரம் செலுத்த பா.ஜனதா முயற்சி செய்யவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தை பார்க்க வந்த மக்கள் இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் தமிழகத்துக்கு நன்மதிப்பை ஏற்படுத்தி தந்து இருக்கிறார்கள். இறுதி ஊர்வலம் எந்த விதமான குழப்பமும் இன்றி அமைதியாக நடைபெற ஏற்பாடு செய்த அதிகாரிகள், காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழகத்தில் எந்தவித குழப்பமும் இன்றி மக்கள் நலனில் அக்கறையுடன் அரசும், கட்சியும் செயல்பட வேண்டும். மற்ற கட்சிகளும் அதே எண்ணத்தில் இருக்க வேண்டும். புதிய முதல்-அமைச்சர் மக்கள் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஊழலற்ற ஆட்சியை கொண்டு வர கவனம் செலுத்த வேண்டும் என்பது எங்கள் கட்சியின் கோரிக்கை ஆகும்.

    தமிழக அரசுக்கு மத்திய அரசு நேர்மையாக தேவையான உதவிகளை செய்யும் என பிரதமர் கூறி உள்ளார். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பா.ஜனதா தலையிடுகிறது. புறவாசல் வழியாக அதிகாரம் செலுத்த வாய்ப்பு இருக்கிறது. அதற்கு பா.ஜனதா முயற்சிக்கிறது என்ற யூகங்கள் உலா வருகின்றன. அப்படி எதுவும் கிடையாது.

    தேர்ந்து எடுக்கப்பட்ட அரசை மதிக்கக்கூடிய அரசாக மத்திய பா.ஜனதா அரசு உள்ளது. தமிழகத்தில் பா.ஜனதா கட்சியை பலப்படுத்த நேரடியாக திட்டங்களை வகுத்து வருகிறோம். புறவாசல் வழியாக எந்த அதிகாரத்தையும் பயன்படுத்தும் எண்ணம் கிடையாது. தமிழகத்தில் பா.ஜனதா கட்சி தலைமை வலுவாக இருக்கிறது. இடைத்தேர்தலில் 3-வது சக்தியாக உருவெடுத்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் என்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்டதுபோல, பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு சுவாதி என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரை ஒருதலையாக காதலித்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

    சுவாதி கொலை செய்யப்பட்டதுபோல சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

    சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள நெடுங்குன்றம், கருமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். 2-வது மகள் சோனியா (வயது23), பிளஸ்-2 படித்துவிட்டு தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.

    அவர் நேற்று வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு, மாலை 6.30 மணிக்கு வீடு திரும்புவதற்காக பஸ்சில் தாம்பரத்தில் இருந்து பெருங்களத்தூர் பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ்சில் இருந்து அவர் இறங்கியபோது மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் அவரை அழைத்தார்.

    சோனியா அவருடன் செல்ல மறுத்ததால் அந்த வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதும் அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சோனியாவின் கழுத்தை அறுத்தார். இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சோனியா கழுத்தில் ரத்தம் வழிய மயங்கி விழுந்தார். அந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சோனியாவை சிகிச்சைக்காக தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சோனியா பரிதாபமாக இறந்தார்.

    சோனியாவை கொலை செய்த வாலிபர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்றார். அவர் அருகில் உள்ள பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    சோனியா வசித்து வந்த அதே தெருவில் சிகாமணி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் பிரசாந்த் (24) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமோ படித்துவிட்டு ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஒரே தெருவில் இருந்ததால் பிரசாந்தும் சோனியாவும் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது.

    இடையில் இவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக சோனியா பிரசாந்துடன் பேசுவதை தவிர்த்து வந்தார். பலமுறை பிரசாந்த் சோனியாவை பின்தொடர்ந்து வந்து தன்னிடம் பேசுமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் சோனியா பிரசாந்துடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

    6 ஆண்டுகளாக சோனியாவை தான் காதலித்து வந்ததாகவும், ஆனால் தன்னை தவிர்த்துவிட்டு வேறு ஒரு வாலிபருடன் சோனியா பேசி வந்தார். இதுபற்றி நான் அவரிடம் கேட்டபோது, என்னை அவமானப்படுத்தியதால் ஆத்திரத்தில் சோனியாவை கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று பிரசாந்த் போலீசில் தெரிவித்தார்.

    பிரசாந்த் தன்னுடைய முகநூலில் பிரசாந்த் சோனியா என்ற பெயரை சுருக்கி ‘பிரா சோனு’ என பதிவு செய்துள்ளார். சோனியாவை உயிருக்குயிராக காதலித்ததாகவும், தன் காதலுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் நண்பர்களிடம் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக பீர்க்கன் காரணை போலீசார் அவரிடம் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோனியா கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் திரண்டு வந்து கதறி அழுதது நெஞ்சை உலுக்கியது.

    நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டது போல, அதே பாணியில் பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே சோனியா கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெண்களை காதலிப்பதும், ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அவர்கள் பிரிந்து சென்றால் எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற வெறியில் இளம்பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருவது துரதிர்ஷ்டவசமானது என இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் வேதனையுடன் கூறினர்.
    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவ படத்துக்கு மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவ படத்துக்கு மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பர்கத்பேகம் மற்றும் அரசு அலுவலர்கள் ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    ஜெயலலிதா மறைவையொட்டி 7 நாட்கள் அரசுமுறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவற்றில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு இருந்தது.
    ×