என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    செங்கல்பட்டில் தி.மு.க. பிரமுகர் மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணைந நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த குன்னவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி திமு.க. பிரமுகர். இவரது மகன் சதீஷ் (வயது 28). லாரி வைத்து தொழில் நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    சதீஷ் நேற்று இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஒரு தள்ளு வண்டி கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு காரில் 5 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் காரில் இருந்து இறங்கி சதீசை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். பின்னர் அவரது தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாமேக் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். சதீஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

    சதீஷ் கொலை தொடர்பாக அவரது தந்தை நாராயணசாமி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:-

    கொலை செய்யப்பட்ட சதீஷ் கடந்த 2010-ம் ஆண்டு லாரியில் சவுடு மணல் ஏற்றி விற்கும் தொழில் நடத்தி வந்தார். அப்போது அவருக்கும் குன்னவாக்கம் அனுமந்தை கிராமத்தை சேர்ந்த தி.மு.க. முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சத்யாவுக்கும் தொழில் போட்டி ஏற்பட்டது. சதீசுக்கு சத்யா நெருக்கடி கொடுத்தார். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சதீசை சத்யா தாக்கினார்.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சத்யாவின் நண்பர் தினேஷ் என்பவரை சதீஷ் வெட்டி கொலை செய்ய முயன்றார். தினேஷ் வெட்டுக்காயங்களுடன் தப்பி ஓடி உயிர் பிழைத்தார்.

    இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு சதீசின் அண்ணன் கண்ணையன் என்பவரை சத்யா கூலிப்படை ஏவி கொலை செய்தார். சதீசின் வீட்டையும் அடித்து நொறுக்கினார்.

    இது தொடர்பாக சத்யா, அவரது நண்பர்கள் தினேஷ், அமுல்ராஜ் ஆகியோர் மீது வழக்கு உள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகு சதீஷ் ஊரை காலி செய்து விட்டு சென்று தஞ்சாவூரில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். அவரது தந்தை நாராணயசாமி, தாயார் ஆகியோர் சிங்கபெருமாள் கோவிலில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சதீஷ் செங்கல்பட்டு வந்திருந்தார். அவர் வந்திருப்பதை அறிந்த சத்யா கூலிப்படையை ஏவி சதீசை தீர்த்து கட்டியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த கொலை தொடர்பாக சத்யா, தினேஷ், அமுல்ராஜ் மற்றும் கூலிப் படையினர் 5 பேரை போலீசார் தேடிவரு கிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 நாளில் நிலைமை சீரடையும் என்று கண்காணிப்பு அலுவலர் முதன்மை செயலர் ராஜராமன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முதன்மை செயலர் ராஜராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வார்தா புயலினால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெரும்பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

    முக்கியமாக மின்சார சேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பினை சரிசெய்ய அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றன.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மின்வாரியம் மூலமாக அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரத்தினை விரைவாக வழங்கும் வகையில் 4700 மின் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    இன்று முதல் பிற மாவட்டங்கள் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து 1000 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் நாளை ஆந்திரா மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 1200 பேர் சீரமைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதால் அடுத்த இரு தினங்களில் சீரமைப்பு பணிகள் முற்றிலும் நிறைவடையும். மாவட்டம் முழுவதும் வார்தா புயலினால் 8300 மின் கம்பங்கள் சேதம் அடைந்த நிலையில் இதுவரை 4500 மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது.

    நேற்று மட்டும் மாவட்டத்தில் 36 கிராம பஞ்சாயத்துக்களுக்கும், 30 பேரூராட்சி வார்டு பகுதிகளுக்கும், 52 நகராட்சி வார்டு பகுதி களுக்கும் மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் 534 லாரிகள் மற்றும் 284 ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சோழிங்கநல்லூரில் 6-வது நாளாக மின்சப்ளை பாதிப்பால் பொது மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மின்சாரம் வழங்கக்கோரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    திருவான்மியூர்:

    காஞ்சீபுரம் மாவட்டத்திலேயே அதிக மழையும் இங்கு தான் பெய்தது. கடந்த 12-ந் தேதி முதல் இப்பகுதியில் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டது.

    6 நாட்களாகியும் இதுவரை மின்சாரம் வரவில்லை. இந்நிலையில் சோழிங்கநல்லூர் பகுதியைச்சேர்ந்த பொது மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மின்சாரம் வழங்கக்கோரி சோழிங்கநல்லூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் பழைய மாமல்லபுரம் சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழிங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் முகமதுநாசர் மற்றும் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினர்.

    சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கடந்த இப்பகுதியில் இதுவரை மின்சாரம், குடிநீர் இல்லை. உடனடியாக மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பழையமாமல்லபுரம் சாலை சோழிங்கநல்லூரில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இரவு சோழிங்கநல்லூர் பகுதியில் ஒரு பகுதியில் மின்சாரம் வழங்கப்பட்டது.

    தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் அருகேயுள்ள சதானந்தபுரம், ஆலப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 6-வது நாளாக இன்றும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

    மேலும் தண்ணீர் சப்ளையும் அங்கு இல்லை. எனவே குழந்தைகள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்சாரம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    காஞ்சீபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதலில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சீபுரம்:

    வேலூர் மாவட்டம் ஓச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஷெரீப் (40). காஞ்சீபுரம் கம்மாளத் தெருவில் பிரியாணி கடை நடத்தி வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் ஓச்சேரியில் இருந்து காஞ்சிபுரம் வந்து செல்வார்.

    நேற்று இரவு வியாபாரம் முடிந்து இரவு 10 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கீழம்பி பகுதியில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது ஷெரீப் மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஷெரீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒருவர் அங்கேயே இறந்தார். மற்றொருவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இரும்புலியூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் பி.எஸ்.என்.எஸ். ஊழியர், வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    தாம்பரம்:

    சிவகாசியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 42). பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சென்னை வந்த அவர் பெருங்களத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த உறவினர் பாண்டியராஜனுடன் (25) அறையில் தங்கி இருந்தார்.

    இன்று காலை முத்துராமலிங்கம் சிவகாசி செல்ல முடிவு செய்தார். அவரை தாம்பரத்தில் ரெயில் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் பாண்டியராஜன் அழைத்து சென்றார்.

    இரும்புலியூர் அருகே சென்ற போது பின்னால் வந்த தனியார் கொரியர் வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் முன்னாள் சென்ற கல்லூரி பஸ் மீது பயங்கரமாக மோதியது. பஸ்-வேனின் இடையில் சிக்கிய முத்து ராமலிங்கமும், பாண்டியராஜனும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வார்தா புயலால் மறைமலைநகரில் 5-வது நாளாக மின் தடை நீடிக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
    செங்கல்பட்டு:

    மறைமலைநகரை அடுத்து உள்ள கலிவந்தப்பட்டு, கடம்பூர், திருக்கச்சூர், மற்றும் மறைமலைநகர் தொழிற்பேட்டை பகுதியில் வார்தா புயலின் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்ததில் மின்சார கம்பங்கள் உடைந்து பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

    இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மறைமலைநகரில் மொத்தம் 220 மின் கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளது. பல இடங்களில் மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகம் தடைப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் லாரியின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

    தொடர்ந்து மின் ஊழியர்கள் பணி செய்து வந்தாலும் நிலைமை சீர் அடைய இன்னும் ஒரு சில நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

    காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் புயல் பாதித்த இடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
    காஞ்சீபுரம்:

    வார்தா புயலில் காஞ்சீபுரம் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. நிவாரண பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் புயல் பாதித்த இடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

    திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் பகுதிகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு மேற்கொண்டார். தாம்பரம் மற்றும் பல்லாவரம் பகுதிகளில் சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜாவும், காஞ்சீபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜாபாத் பகுதியில் கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனும், செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக் கண்ணுவும், செய்யூர் பகுதிகளில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியும் நேரடியாக சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது மின்சார வாரியம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, பொதுப் பணித்துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலைகள் துறை, சுகாதாரத்துறை உள்பட அனைத்து அலுவலர்களுடன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.

    மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும், சாலைகளில் உள்ள மரங்களை உடனடியாக அகற்றவும், மின்சார கம்பங்களை சரி செய்து உடனடியாக மின்வசதியை கொடுக்கவும், சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டனர்.
    வண்டலூர் உயிரியல் பூங்காவில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் 500 ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மரங்கள் விழுந்ததில் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது இனி தான் தெரியவரும்.
    வண்டலூர்:

    சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வார்தா புயல் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பூங்காவிற்கு சென்று ஆய்வு செய்தார். மரங்களை விரைவாக அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டார்.

    விழுந்த மரங்களை வெட்டுவதற்கு 10 நவீன எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. மரங்களை வெட்டும் பணியில் பூங்காவில் உள்ள நிரந்தர, ஒப்பந்த பணியாளர்கள் 375 பேர் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் உள்பட 500 பேர் ஈடுபட்டு வருகின்றனர். ஜே.சி.பி. எந்திரம் மூலமும் சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றி வருகின்றனர்.

    இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பூங்கா தொடங்கப்பட்ட நாளில் இருந்து 31 ஆண்டுகளில் முதல் முறையாக புயலில் சிக்கி நாசமாகி உள்ளது. இதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதுபோன்ற மரங்களை மீண்டும் வளர்க்க பல வருடங்கள் ஆகும். 21-ந் தேதி வரை பூங்காவுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்குள் மரங்களை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

    தற்போது முதற்கட்டமாக பூங்காவில் உள்ள சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணி நடைபெறுகிறது. இதனால் வாகனங்கள் மூலம் விலங்குகளுக்கு உணவு எடுத்துச் செல்லப்படுகிறது. மரங்கள் அகற்றப்படாத சாலைகளில் ஊழியர்கள் விலங்குகளுக்கு உணவுகளை தலையில் சுமந்து செல்கின்றனர்.

    அடுத்தகட்டமாக சிங்கம், சிறுத்தை, வெள்ளை புலி, காட்டுமாடு, பறவைகள் கூண்டு, சிங்கம் உலாவிடம், மான்கள் உலாவிடம், யானை, நீர்யானை, பாம்பு இல்லம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, உட்சென்று காணும் பறவைகள் கூண்டு, கரடி உள்பட பல்வேறு விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள இருப்பிடங்கள் மீது விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணி தொடங்கும்.

    அப்போது தான் எந்த அளவிற்கு கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன என்பதும், விலங்குகளுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பதும் தெரியவரும். இதேபோல பறவைகள் கூண்டின் மேல் விழுந்துள்ள மரங்களை முழுமையாக அகற்றிய பிறகுதான் எத்தனை பறவைகள் இறந்துள்ளது என்பதும் தெரியவரும்.

    இதுவரை ஒரு முதலைக்கு மட்டும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது தெரிந்துள்ளது. இதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதேபோல வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள விலங்குகள் மறுவாழ்வு இல்லத்தில் உள்ள விலங்குகள் இருப்பிடங்கள் மீதும் மரங்கள் விழுந்துள்ளது. இந்த மரங்களை அகற்றிய பிறகு தான் மறுவாழ்வு இல்லத்தில் உள்ள விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதும் தெரியவரும்.

    வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் புதுப்பொலிவு பெறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். பார்வையாளர்கள் முழுமையாக விலங்குகளை பார்க்க இன்னும் 2 மாதங்கள் ஆகலாம்.இவ்வாறு பூங்கா அதிகாரி தெரிவித்தார்.

    ஏராளமான மரங்கள் விழுந்துவிட்டதால், இனிவரும் காலங்களில் பூங்காவில் உள்ள விலங்குகளை அதிக அளவு வெப்பம் தாக்கும் அபாயம் உள்ளது. மரங்கள் நிறைந்த சூழலில் வாழ்ந்த பல விலங்குகள் இனிமேல் இங்கு வாழ்வதற்கு ஏற்ற சூழல் குறைவாக உள்ளது. மேலும் பூங்காவிற்கு கோடை காலத்தில் வரும் பார்வையாளர்களும் வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவார்கள். இனி மரங்கள் நிறைந்த பூங்காவாக பார்வையாளர்கள் பார்ப்பதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என தெரிகிறது.

    வார்தா புயல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி விட்டது. அங்கு ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதனால் பார்வையாளர்களுக்கு 21-ந்தேதி வரை அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    வண்டலூர்:

    வார்தா புயல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி விட்டது. அங்கு ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதனால் பார்வையாளர்களுக்கு 21-ந்தேதி வரை அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் முதல் உயிரியல் பூங்கா 1855-ம் ஆண்டு சென்னை மூர்மார்க்கெட்டில் தொடங்கப்பட்டது.

    சிறிய அளவிலான இந்த உயிரியல் பூங்கா வண்டலூர் காப்புக் காட்டிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு 1979-ம் ஆண்டு நவீன உயிரியல் பூங்காவாக உருவெடுத்தது.

    இந்த உயிரியல் பூங்காவை 1985-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். இந்த பூங்கா 1,486 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இயற்கை வனத்தால் சூழப்பட்ட இந்த உயிரியல் பூங்காவில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் இருந்தன. இங்கு பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன என மொத்தம் 2,500 விலங்குகள் உள்ளன.

    சிங்கம் சுதந்திரமாக நடமாடும் பகுதி, பாம்பு பண்ணை, வண்ணத்துப்பூச்சி பூங்கா போன்ற சிறப்பு அம்சங்களும் இந்த உயிரியல் பூங்காவில் உள்ளன. இங்கு ஒரு நாளில் சுமார் 10 ஆயிரம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் அதை விட கூடுதலாக கூட்டம் இருக்கும்.

    கடந்த 12-ந்தேதி தாக்கிய ‘வார்தா’ வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் செல்ல கூடிய சுற்றுப்பாதையில் சாலையின் இருபுறங்களிலும் நின்றிருந்த மரங்கள், விலங்குகளின் கூண்டுகளை சுற்றியும், கூண்டுகளுக்கு உள்ளேயும் நின்றிருந்த மரங்கள் என பூங்காவின் அனைத்து பகுதிகளிலும் இருந்த ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. தைலம் மரம், தூங்கு மூஞ்சு மரம் உள்ளிட்ட அரியவகை மரங்களும் புயல் காற்றில் அழிந்தன.



    பூங்காவுக்குள் நுழைய முடியாத வகையில் பூங்கா மொத்தமும் குப்பை மேடாகி போனது. நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) பூங்காவுக்கு வழக்கமான விடுமுறை நாள், இருப்பினும் பூங்கா ஊழியர்கள் நிலைமையை அறிய உள்ளே செல்ல முற்பட்டனர். ஆனால் அவர்களால் செல்ல முடியவில்லை.

    இதையடுத்து நேற்று பூங்கா அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 375 பேர் பூங்காவை சீர்செய்யும் பணியில் இறங்கினர். மேலும் வெளிமாநிலத்தில் இருந்து மரம் வெட்டுவதில் திறமை வாய்ந்த 150 பேர் வரவழைக்கப்பட்டனர்.

    முதல் கட்டமாக பார்வையாளர்கள் செல்லக்கூடிய சுற்றுப்பாதை சாலையில் சரிந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன.

    இதுகுறித்து உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் கூறியதாவது:-

    வார்தா புயல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி விட்டது. இதற்கு முன் 1994-ம் ஆண்டு தாக்கிய புயல் உயிரியல் பூங்காவில் லேசான சேதத்தையே ஏற்படுத்தியது. ஆனால் தற்போதைய புயல் இங்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. புயலில் சரிந்த மரங்கள் அனைத்தும் 40 ஆண்டுகள் பழமையானவை. இந்த உயிரியல் பூங்கா மீண்டும் இயற்கை சூழப்பட்ட வனப்பகுதியாக உருவெடுக்க ஓராண்டுக்கும் மேலாக ஆகலாம்.

    புயல் எச்சரிக்கையை தொடர்ந்து விலங்குகள் அனைத்தும் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டன. இதனால் விலங்குகளுக்கு உயிர் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் அதனை உறுதியாக கூறிவிட முடியாது. ஏனெனில் விலங்குகள் அடைக்கப்பட்டு உள்ள கூண்டுகளின் மீதும் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்திய பிறகே பாதிப்பு குறித்து தெரியவரும். ஒரு முதலைக்கு மட்டும் தலையில் காயம் ஏற்பட்டிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் அன்றைய தினம் பார்வையாளர்கள் யாரும் வரவில்லை. எனவே அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டு இருக்கிறது.

    நவீன எந்திரங்களை கொண்டு மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. 21-ந்தேதி வரை பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. இது மேலும் நீட்டிக்கப்படலாம். பார்வையாளர்கள் சகஜமாக வந்து பார்வையிடும் வகையில் பூங்கா தயாராக 90-க்கும் நாட்களுக்கும் மேல் ஆகும்.

    மரங்கள் சாய்ந்து பாதை தடைப்பட்டதால் நேற்று முன்தினம் முழுவதும் விலங்குகளுக்கு உணவு வழங்கமுடியாமல் போய்விட்டது. இன்று(நேற்று) முதல் கட்டமாக பாதையில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு விலங்குகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

    10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்திருக்கலாம் என தெரிகிறது. மரங்கள் சாய்ந்ததில் விலங்குகளின் கூண்டுகளை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகள், விலங்குகளுக்கான உணவு தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள், விலங்குகள் இளைப்பாறும் நிழற்குடைகள், மற்றும் பார்வையாளர்களுக்கான நிழற்குடைகள், இருக்கைகள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவை சேதமடைந்து உள்ளன.

    வன அதிகாரியின் அலுவலகம், தமிழ்நாடு அரசு உணவுவிடுதியின் கட்டிடம் உள்ளிட்டவற்றின் மீதும் மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதன் அடிப்படையில் சுமார் ரூ.10 கோடிக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    இந்த நிலையில், நேற்று மதியம் தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.

    பூங்காவிற்குள் வாகனத்தில் சென்று பாதிப்புகளை ஆய்வு செய்த ஓ.பன்னீர்செல்வம் சேத விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் மீட்புப் பணிகளை வேகமாக செய்து முடிக்கும்படி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு எதிரே சர்க்கசில் இருந்து மீட்டுவரப்பட்ட விலங்குகள் அடைந்து வைக்கப்பட்டிருக்கும் மீட்பு மையம் உள்ளது. வார்தா புயலின் போது இங்கும் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கை துரிதமாக நடந்து வருகிறது.
    புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைச்சர்கள் கே.வி.வீரமணி, செல்லூர் ராஜு, சரோஜா, ராஜேந்திர பாலாஜி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் முகாமிட்டு உள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    வார்தா புயலால் காஞ்சீபுரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின் சப்ளை, மற்றும் போக்குவரத்து இன்னும் முழுமையாக சரி செய்யப்படவில்லை.

    மின்தடை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைச்சர்கள் கே.வி.வீரமணி, செல்லூர் ராஜு, சரோஜா, ராஜேந்திர பாலாஜி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் முகாமிட்டு உள்ளனர்.

    மீட்பு பணிகள் குறித்து மாமல்லபுரம் பேரூராட்சியில் 5 அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அமைச்சர்கள் ஒவ்வொரு வரும் தனித்தனி இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். அமைச்சர் செல்லூர் ராஜு, கானத்தூர், ரெட்டிக்குப்பம், கரிக்காட்டுகுப்பம், குன்றக்காடு ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ளார்.

    அமைச்சர் கே.சி.வீரமணி, பரமன்கேணிகுப்பம், பனையூர், சின்னகுப்பம், கடப்பாக்கம் பகுதியிலும், அமைச்சர் சரோஜா புதுகல் பாக்கம், நெம்மேலி, பகுதியிலும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடலூர் சின்னகுப்பம், பெரியகுப்பம், ஆலக்குப்பம் பகுதியலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மாமல்லபுரம், கொக்கிலமேடு, சதுரங்கபட்டினம் பகுதியிலும் முகாமிட்டு மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இயல்புநிலை விரைவில் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    செங்கல்பட்டு, மகாலட்சுமி நகரில் 100 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. பொது மக்களை மீட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு பகுதியில் பெய்த கனமழை காரணமாக நீஞ்சல்மடு கால்வாயில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கால்வாய் நிரம்பியதால் மழை வெள்ளம் அருகில் உள்ள மகாலட்சுமி நகருக்குள் புகுந்தது. 100-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.

    கால்வாயை ஒட்டி உள்ள வீடுகள் முதல் தளம் வரை தண்ணீரில் மூழ்கி உள்ளன. அப்பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவரும் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு திம்மாவரத்தில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதி செய்யப்பட்டு உள்ளது.

    மகாலட்சுமி நகரை சூழ்ந்த மழை வெள்ளம் இன்னும் வடியவில்லை. தொடர்ந்து தண்ணீர் தேங்கிநிற்கிறது. தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    மகாலட்சுமி நகரில் பொது மக்கள் அனைவரும் வெளியேறி உள்ளதால் வீடுகளில் கொள்ளையை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    செங்கல்பட்டில் மின் தடை நீடித்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    உடைந்த மின்கம்பங்களை சரி செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

    ஆதம்பாக்கத்தில் ஒரு வீட்டின் மாடியில் இருந்த செல்போன் கோபுரம் எதிர் வீட்டின் மீது விழுந்தது. ஆலந்தூர் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் சேதம் அடைந்தன.
    ஆலந்தூர்:

    ‘வார்தா’ புயல் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், நங்கநல்லூர், பள்ளிக்கரணை, நீலாங்கரை, வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டியது.

    ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஆலந்தூர், மணப்பாக்கம், முகலிவாக்கம், நந்தம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லூர், ஆதம்பாக்கம் பகுதிகளில் உள்ள சுமார் 300்்-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    மேலும் 60-க்கும் மேற்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்தன.

    சாலைகளில் விழுந்த 120-க்கும் மேற்பட்ட மரங்களை மண்டல ஊழியர்கள் அகற்றினார்கள். மரங்களை அகற்றும் பணிகளை ஆலந்தூர் மண்டல மாநகராட்சி கண்காணிப்பு அதிகாரி பூஜா குல்கர்னி, மண்டல உதவி கமிஷனர் செங்கோட்டையன் உள்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    பின்னர் மின்சார டிரான்ஸ்பார்மர்களில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்து உள்ளதால் அதனை சரி செய்து மீண்டும் மின்சாரம் வழங்க 2 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆதம்பாக்கம், ஜீவன் நகரில் ஒரு வீட்டின் மாடியில் இருந்த செல்போன் கோபுரம் சூறாவளி காற்றில் சரிந்து எதிரில் உள்ள மற்றொரு வீட்டின் மீது விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

    மடிப்பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள அம்மா உணவகத்தின் சிமெண்டு ஓடுகள் தூக்கி வீசப்பட்டதால் அங்கு இருந்த உணவுப் பொருட்கள் சேதமடைந்தன.

    பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட மரங்களும், சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட இடங்களில் 200-க்கும் மேற்பட்ட மரங்களும் விழுந்துவிட்டதாகவும், அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 
    ×