என் மலர்
காஞ்சிபுரம்
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து பப்பாளி பழங்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று சென்னை நோக்கி வந்தது. டிரைவர் சந்தோஷ் வண்டியை ஓட்டினார். உடன் நவீன். விமலநாதன் இருந்தனர்.
இதேபோல் பெங்களுரு கே.ஜி.எப். பகுதியில் இருந்து காய்கறிகளை ஏற்றிய லாரி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது முன்னால் சென்ற மற்றொரு கனரக லாரியின் இடது பக்க டயர் திடீரென வெடித்து தாறுமாறாக சென்றது.
இதனையடுத்து பின்னால் வந்து கொண்டிருந்த லாரி மற்றும் மினிலாரி தாறு மாறாக ஓடிய லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் நடுவில் சிக்கிய மினிலாரி தலைகீழாக கவிந்து உருக்குலைந்தது. அதில் இருந்த டிரைவர் சந்தோஷ், நவீன் மற்றும் விமலநாதன் ஆகியோர் கேபினில் சிக்கி வெளிவர முடியாமல் உயிருக்கு போராடினர்.
தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து உயிருக்கு போராடிய 3 பேரையும் இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்டனர். அவர்கள் அனைவருக்கும் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் தற்போது பனி மூட்டம் அதிகமாக நிலவுகிறது. மேலும் அதிகாலை வேளைகளில் காய்கறிகள் மற்றும் கோழிகளை ஏற்றிக்செல்லும் லாரிகள் மற்றும் மினி லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் கோழிலாரி ஒன்று விபத்தில் சிக்கி டிரைவர் இறந்தார். எனவே மினிலாரி மற்றும் லாரிகள் அதிவேகத்தில் செல்வதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த வெள்ளை கேட், பெரிய கரும்பூர் பகுதியில் வசித்து வந்தவர் முருகன் (வயது 38). ஸ்ரீபெரும்புதூரில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் பணிக்கு ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்றார்.
காஞ்சீபுரத்தை அடுத்த ராஜகுளம் அருகே சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
லாரியின் சக்கரத்தில் சிக்கிய போலீஸ்காரர் முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் அண்ணா துரை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பலியான முருகனுக்கு அனிதா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
தாம்பரத்தில் இருந்து வேலூர் நோக்கி நேற்று நள்ளிரவு அரசு பஸ் சென்றது. வேலூரை சேர்ந்த டிரைவர் உமாசங்கர் பஸ்சை ஓட்டினார். 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
காஞ்சீபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரகோட்டம் கோவில் அருகே பஸ் சென்ற போது திடீரென பின் பக்க டயர் பஞ்சர் ஆனது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலை தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது.

பஸ்சில் இருந்த தாம்பரத்தை சேர்ந்த கார்த்திகா, ரவிச்சந்திரன், செல்வி உள்பட 15 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பஸ் தாறுமாறாக ஓடிய போது எதிரே மற்ற வாகனங்கள் வராததாலும், நள்ளிரவு நேரம் என்பதாலும் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்:
கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி தடை விதித்தது.
இதன் பின்னர் நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வருவதற்கு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
500, 1000 ரூபாய் நோட்டுகளை கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருப்பவர்களையும், அதனை திருட்டுத்தனமான குறுக்கு வழியில் மாற்றுவதற்கு முயற்சி செய்பவர்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்து வருகிறார்கள்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கி அதிகாரிகள் துணையுடன் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டது அம்பலமானது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சிலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்து மாநிலங்களிலுமே முடுக்கி விடப்பட்டுள்ளன. இருப்பினும் புதிய ரூபாய் நோட்டுகளை மொத்தமாக கடத்திச் சென்று அதனை கொடுத்து அதற்கு பதிலாக கருப்பு பணமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை அதிகமாக வாங்கி மோசடியில் ஈடுபடும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
சென்னை விமான நிலையம் அருகே புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஒரு கும்பல் காரில் கடத்தி செல்வதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று காலை விமான நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஒரு கார் நிற்காமல் வேகமாக சென்றது.
இதனையடுத்து அதிகாரிகள் அந்த காரை விரட்டி சென்று துப்பாக்கி முனையில் மடக்கினர். இதனால் காரில் இருந்தவர்கள் வேறு வழியின்றி சிக்கி கொண்டனர்.
அந்த காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் கட்டுக்கட்டாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன.
அந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை எண்ணிப் பார்த்தனர். அப்போது ரூ.1 கோடியே 34 லட்சம் இருந்தது. அதனை வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக காரில் இருந்த ரிஷ்வான், முக்தர், சமிஅகமது உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் புதிய ரூபாய் நோட்டுகள் பற்றி அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டது.
புதிய ரூபாய் நோட்டுகளை தாம்பரத்தில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரை சந்தித்து கொடுப்பதற்காக 5 பேரும் அதனை காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது. இந்த ரூபாய் நோட்டுகளை வாங்கி கொண்டு அதற்கு பதிலாக ரூ.2 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை தருவதாக அந்த பிரமுகர் கூறி இருந்ததும் தெரிய வந்தது.
இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? என்பது பற்றிய தகவல்கள் உடனடியாக தெரியவில்லை. அதுதொடர்பாக வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
தாம்பரம்:
சென்னையில் கடந்த 12-ந்தேதி ‘வார்தா’ புயல் தாக்கியது. இதனால் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தீவிர சீரமைப்பு பணிகளும், மீட்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் சென்னையில் மின் விநியோகம் சீரடைந்தது. புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் புயல் தாக்கிய 10 நாட்களுக்கு பிறகு பெருங்களத்தூர் பகுதியில் இன்னும் மின்சார விநியோகம் சீரடையவில்லை. பெருங்களத்தூரை அடுத்த நெடுங்குன்றம், சதானந்தபுரம், ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 10 நாட்களாக மின்சாரம் இல்லை.
இப்பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகமும், அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரும் இன்றி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இரவு நேரங்களில் கொசுத் தொல்லை அதிகம் உள்ளது. இதனால் நிம்மதியாக தூங்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். அரையாண்டு தேர்வு நடைபெறும் நேரத்தில் படிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் தவிக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று நெடுங்குன்றம், சதானந்தபுரம், மற்றும் ஆலப்பாக்கம் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சதானந்தபுரம் மெயின் ரோட்டில் இப்போராட்டம் நடைபெற்றது.
இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இன்று மாலைக்குள் மின் விநியோகம் வழங்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
மாமல்லபுரம் பேரூராட்சி கூட்ட அரங்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் வார்தா புயல் நிவாரண பணிகள் ஆய்வுக்கூட்டம் நடந்தது
இதில் கலந்து கொள்வதற்காக திருக்கழுக்குன்றம் தாசில்தார் சீதா வந்தபோது அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் எதிரே போலீசாரும் பொதுமக்களும் கூட்டமாக நிற்பதை கண்டு அங்கு சென்று விசாரித்தார்.
வங்கியில் கம்ப்யூட்டர் பழுதானதால் பணம் பரிவர்த்தனை நடக்கவில்லை. இதனால் அவதிக்குள்ளான பொதுமக்கள் சாலை மறியலுக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அப்போது பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு வங்கி குறைபாடுகளை கூறி மீண்டும் சாலையில் அமர முயற்சித்தனர்.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வங்கி அதிகாரிகளை அழைத்து பேசி பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அங்கு இதுவரை 15 முறை மேற்கூரைகளும், 24 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 24 முறை தடுப்பு கண்ணாடிகளும், 6 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும், ஒரு முறை விளக்கு கண்ணாடி, ஒரு முறை அறிவிப்பு பலகை டி.வி.கள் என 71 முறை உடைந்து விழுந்து உள்ளன. இந்த தொடர் சம்பவங்களில் 13 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் 72-வது முறையாக மீனம்பாக்கம் பன்னாட்டு முனையம் புறப்பாடு பகுதி விமானங்கள் நிறுத்தப்படும் இடங்களில் 4 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட 2 தடுப்பு சுவர் கண்ணாடி திடீரென உடைந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். ‘வார்தா’ புயலின் போது பாதிக்கப்பட்ட கண்ணாடிகள் உடைந்து விழுந்து விட்டதாகவும், அதனை சீரமைக்கும் பணிகளும் நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குரோம்பேட்டை சி.எல்.சி. சாலையை சேர்ந்தவர் கந்தன் (24) கால் டாக்கி டிரைவர். இவரது நண்பர் தேவராஜன்.
நேற்று இரவு இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பெருங்களத்தூரில் உள்ள நண்பரை பார்க்க சென்றனர். ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரம் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கந்தன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். தேவராஜன் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று தேவராஜனை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் பார்த்திபனை கைது செய்தனர்.
வார்தா புயலால் வண்டலூர் பூங்காவில் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்தன. முன் எச்சரிக்கையாக விலங்குகள், பறவைகள் அதன் இருப்பிடத்தில் அடைக்கப்பட்டு இருந்ததால் அவை தப்பிக்கவில்லை.
பூங்காவில் சேதம் அடைந்த 950 மீட்டர் சுற்றுச்சுவர் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு உள்ளது. விலங்குகள் இருப்பிடம், பறவை கூண்டுகள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடக்கும் இடங்களில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து பூங்கா அதிகாரி கூறும் போது சேதம் அடைந்த விலங்குகள் கூண்டு, பறவைகள் இருப்பிடத்தை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. சரிந்த மரங்களை இன்னும் முழுமையாக அப்புறப்படுத்த முடியவில்லை. சீரமைக்கும் பணி முடிய 10 நாட்களுக்கு மேல் ஆகும் என்றார்.
நீலாங்கரை அடுத்த உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் சங்கர். இவர் 199 அ.தி.மு.க வட்ட கழக செயலாளராக உள்ளார். இவரது மனைவி மேனகா இவருக்கு அ.தி.மு.க சார்பில் கவுன்சிலர் சீட் வழங்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து இவர்க்களுக்கு அடிக்கடி போன் மூலம் கொலை மிரட்டல் வந்தது.
நேற்று சங்கர் வெளியே சென்றுவிட்டார். வீட்டில் மேனகா மட்டும் தனியாக இருந்தார். அப்போது 2 மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்களிடம் மேனகா நீங்கள் யார்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் நாங்கள் டெலிபோன் ஒயரை சரி செய்ய வந்துஉள்ளோம் என்று கூறினர். பின்னர் மேனகா வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார்.
உடனே 2 மர்ம நபர்கள் ஜன்னல் வழியாக பெட்ரோல் வெடிகுண்டை சங்கர் வீட்டிற்குள் வீசினர் அது வெடித்து தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் இருந்த கட்டில், மெத்தை, பிரோ, மற்றும் பல பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. தீப்பிடித்து எரிந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் அனைவரும் தீயை அனைத்தனர். தகவல் அறிந்ததும் கானத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.
இது குறித்து கானாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு கருகல்பாளையத்தைச் சேர்ந்தவர் சித்திக். இவரது மகன் அப்பாஸ் மந்திரி (வயது25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் அடுத்த மாதம் 18-ந்தேதி திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்திருந்தனர். திருமண ஏற்பாடுகளை அவர்கள் செய்து வந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க அப்பாஸ் மந்திரி வந்தார். அவர் கிண்டியை அடுத்த மடுவன்கரை சக்கரபாணி தெருவில் உள்ள வீட்டில் நண்பர்களுடன் தங்கினார்.
நேற்று இரவு அப்பாஸ் மந்திரி நண்பர்களுக்கு மது விருந்து வைத்தார். அப்போது அவரும் மது குடித்து இருக்கிறார். போதையில் அனைவரும் தூங்கி விட்டனர்.
இன்று காலை அப்பாஸ் மந்திரி ஈரோடு செல்ல இருந்தார். ஆனால் அவர் படுக்கையில் இருந்து எழவில்லை.
சந்தேகம் அடைந்த நண்பர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அப்பாஸ் மந்திரி ஏற்கனவே மாரடைப்பில் இறந்து இருப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பாஸ் மந்திரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் சென்னைக்கு வந்துக்கொண்டு இருக்கிறார்கள். நிச்சயித்த மாப்பிள்ளை இறந்ததால் மணமகள் வீட்டாரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சந்தேகத்திற்கிடமாக இருந்த 2 வாலிபர்களின் கைப்பையை சோதனை செய்த போது 1 கிலோ 100 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தங்கம் கடத்தி வந்தவர்கள் பற்றிய விபத்தை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். பிடிபட்ட 2 வாலிபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதே போல் தாய்லாந்தில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது. பயணிகளின் உடமைகள் வரும் கன்வேயர்பெல்ட் அருகே கேட்பாரற்று சூட்கேஸ் கிடந்தது. சந்தேகம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள் அதனை திறந்து பார்த்தனர்.
அதில் 1 கிலோ 300 கிராம் தங்கம் இருந்தது. அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து கடத்தல்காரர்கள தங்கம் இருந்த சூட்கேசை விட்டு சென்றிருப்பது தெரிந்தது. அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
ஒரே நாள் இரவில் 2½ கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.72 லட்சம் ஆகும்.






