என் மலர்
காஞ்சிபுரம்
வார்தா புயலில் வண்டலூர் புங்காவில் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. முன் எச்சரிக்கையாக விலங்குகள், பறவைகள் அதன் இருப்பிடங்களில் அடைக்கப்பட்டதால் அவை தப்பவில்லை.
தற்போது சரிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மரங்களை வெட்டும் சத்தம் கேட்டு அடைக்கப்பட்டுள்ள விலங்குகள் மிரண்டுபோய் காணப்படுகிறது.
இந்த நிலையில் மரம் அறுக்கும் எந்திர சத்தம் கேட்டு அங்கிருந்த கருங்குரங்கு ஒன்று தப்பி வெளியில் சென்றுவிட்டது. அது வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கொளப்பாக்கம் கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
ஓடு, கூரை வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை வீசி எரிகிறது. மேலும் சிறுவர்களையும் அச்சுறுத்தி வருகிறது. அதனை பொது மக்கள் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிவிட்டது.
தொடர்ந்து அந்த கருங்குரங்கு வீடு வீடாக தாவி கிராம மக்களை பீதியில் ஆழ்த்து உள்ளது. அட்டகாசம் செய்யும் கருங்குரங்கை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வண்டலூர் பூங்கா ஊழியரிடம் கேட்ட போது, ‘பூங்காவில் சரிந்து விழுந்த மரங்களை அறுக்கும் சத்தத்தில் மிரண்ட நீலகிரி கருங்குரங்கு ஒன்று தப்பிவிட்டது. அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என்றார்.
ஆலந்தூர்:
தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டில் நலமாக இருக்கிறார். டாக்டர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளனர்.
கட்சியில் மு.க.ஸ்டாலின் செயல் தலைவர் ஆவாரா? என்று கேட்கிறீர்கள். இதற்கு பொறுத்திருங்கள் என்று அவரே பதில் அளித்து இருக்கிறார். எனவே பொதுக்குழு கூடிய பின்பு அதுபற்றி தெரியவரும்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி மதுரை அலங்காநல்லூரில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் 3-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் தலைமை செயலாளராக இருந்த ராமமோகனராவ் வீடு, தலைமை செயலகம் உள்பட பல இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
எனவே தொடர்ந்து வருமான வரி சோதனை நடந்து வருவதற்கு தமிழக அரசு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். அரசு அதற்கு கடமைப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம்:
உயர் மதிப்பு உள்ள ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
வங்கிகளில் பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால் வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் முன்பு பொது மக்கள் காத்து கிடக்கிறார்கள்.
சில்லரை தட்டுப்பாடு காரணமாக தற்போது ரூ. 10, ரூ, 20, ரூ. 50 நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருந்து வருகிறது. 10 ரூபாய் நாணயங்களும் புழக்கத்தில் உள்ளன.
இந்த நிலையில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று காஞ்சீபுரத்தில் வதந்தி பரவியது. இதையடுத்து பொது மக்கள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்க மறுத்தனர்.
இதனால் சில்லரை தட்டுப்பாட்டால் தவித்த பொது மக்கள் மேலும் அவதி அடைந்து உள்ளனர். சில கடைகளில் வியாபாரிகளுடன் வாக்குவாதமும் ஏற்பட்டது.
இது குறித்து பொது மக்கள் கூறும்போது, 10 ரூபாய் நாணயத்தினை கடைகளிலும், ஆட்டோ டிரைவர்களும், மார்க்கெட்டிலும் வாங்க மறுக்கின்றனர். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது போல 10 ரூபாய் நாணயமும் செல்லாது என்ற வதந்தி பரவி உள்ளது. இதனால் கையில் வைத்துள்ள 10 ரூபாய் நாணயங்களை என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று வேதனையுடன் கூறினர்.
இதுபற்றி வியாபாரி ஒருவர் தெரிவிக்கையில், ‘10 ரூபாய் நாணயங்களில் போலி நாணயங்கள் உலவுவதாக தகவல் வந்தது. அசலுக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரியாததால் எதற்கு வம்பு என 10 ரூபாய் நாணயங்களை பெறுவதில்லை’ என்று தெரிவித்தார்.இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று வதந்தி பரவி உள்ளது.
மாமல்லபுரம்:
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ரேஸ் அடிக்கடி நடந்து வருகிறது. இதில் லட்ச கணக்கில் பணம் புரளுவதாக கூறப்படுகிறது.
பைக்ரேசை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் போலீசாரின் எச்சரிக்கையை மீறி வீக்என்ட்ரேஸ், இ.சி.ஆர். பாய்ஸ், திருல்லர்ரோடு, ப்ளுசீ, கிங்ஆப் இ.சி.ஆர். என்ற பெயர்களில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பணம் வைத்து சூதாட்ட பைக்ரேஸ் நடந்து வருகிறது.
இன்று கிறிஸ்துமஸ் விடுமுறை நாள் என்பதால் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து அதிகாலையிலேயே ஏராளமானோர் பைக் ரேசுக்காக மாமல்லபுரம், இ.சி.ஆர். சாலைக்கு வந்தனர்.
அவர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தனர். பைக்கின் சத்தம் மாமல்லபுரம் காவல் நிலையம் வரை கேட்டது. இதையடுத்து போலீசார் சாதாரண உடையில் சென்று பைக் ரேசில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றனர்.
இதனை அறிந்த பைக்ரேஸ் குழுவினர் சுற்றுலா பயணிகள் போல் நடித்து தப்பி சென்று விட்டனர். அவர்களை பிடிக்க தீவிர விசாரணை நடந்து வருகிறது.
கடந்த நவம்பர் 6-ந்தேதி கல்பாக்கத்தை அடுத்த குண்ணத்தூரில் நடந்த பைக்ரேஸ் விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
இதே போல் கடந்த ஆண்டு மாமல்லபுரம் அம்பாள் நகரை சேர்ந்த விவசாயி காமராஜ், பூஞ்சேரி கூட்ரோட்டை கடந்த போது ரேஸ் பைக் மோதி காயம் அடைந்தார். முதுகெலும்பு உடைந்த அவர் இன்னும் படுத்த படுக்கையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில் நடந்த புத்தகத் திருவிழாவில் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி சந்துரு கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி தற்போது மோடி செய்துள்ள சாதனை புத்தகம் வாங்க கூட பணம் இல்லாமல் செய்ததுதான்.
பணத்தின் மதிப்பை இழக்கச் செய்து பலசிறு தொழில்களை நசுக்கியது போல் புத்தக விற்பனையையும் மோடி நசுக்கி விட்டார். கடந்த வாரம் மும்பை விமான நிலையத்தில் ஒரு புத்தகம் வாங்க என்னிடம் பணம் இல்லை. கிரடிட் கார்டு இருந்தும் அங்கு பயன் படவில்லை.
நம்மிடம் பணம் இல்லாமல் ஆக்கிவிட்டு சிலர் வீட்டில் தங்கம், வெள்ளி மற்றும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுக்கின்றனர். பணம் இல்லாத பொருளாதாரம் என்று யாரைப்பார்த்து சொல்கின்றனர் என தெரியவில்லை.
கோர்ட்டூர்புரம் அண்ணா நூலக கட்டிடம் ஆசியாவிலேயே பெரிய கட்டிடம். இதை கட்டி எழுப்ப ரூ.120 கோடிக்கு மேல் செலவானது. ஆனால் அந்த கட்டிடத்தை சிலர் இடிக்க முயற்சிக்கின்றனர்.
நூலகத்தை இடிக்க வேண்டும் என்ற உணர்வு எங்கிருந்து வருகிறது? மக்கள் வாங்கமுடியாத கருத்து பெட்டகத்தை நூலகத்தில் இருந்துதான் பெறமுடியும்.
நான்கு வருடங்களாக நூலக இயக்குனர் பதவி காலியாகவே உள்ளது. இதை நிரப்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் யாரும் நியமிக்கப் படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
காஞ்சீபுரம்:
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து காஞ்சீபுரம் அருகேயுள்ள திருமால்பூருக்கு நேற்று இரவு மின்சார ரெயில் புறபபட்டு சென்றது. இரவு 10.40 மணிக்கு அந்த ரெயில் திருமால்பூர் ரெயில் நிலையத்தை அடைந்தது.
பயணிகள் இறங்கிச் செல்லும் போது ரெயில் பெட்டியில் உள்ள இருக்கையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை அனாதையாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் அளித்தனர். ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மோகன்தாஸ், விமல்குமார்ராய் ஆகியோர் அங்கு வந்தனர். அந்த குழந்தைக்கு யாரும் சொந்தம் கொண்டாடாததால் ரெயில்வேக்கு சொந்தமான ஆம்புலன்சை வரவழைத்து குழுந்தையை பத்திரமாக காஞ்சீபுரம் அரசு மருத்து வமனையில் ஒப்படைத்தனர்.
பிறந்து 3 நாட்களே ஆன அந்த பெண் குழந்தையை விட்டு சென்றது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த நாட்டின் முன்னேற்றம் சீராக அமைய வேண்டும் என்று சொன்னால் தவறு செய்பவர்கள் எந்த உயர்நிலையில் இருந்தாலும் அவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள். தண்டிக்கப்படுவார்கள் என்ற சூழ்நிலை வந்தாக வேண்டும்.
தற்போது நடக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைகள் மக்களால் வரவேற்கப்படுகின்றது. இதில் எந்த வகையிலும் மத்திய அரசு தலையிடவில்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
மதுரையில் ஜல்லிக்கட்டு அமைப்பு நிர்வாகிகளுடன் பேசிவிட்டு வந்து உள்ளேன். ஜல்லிக்கட்டு நடத்த எல்லா வகையிலும் முயற்சித்து வருகிறோம். எனக்கு நம்பிக்கை உள்ளது. புதிது புதிதாக போராட்டம் நடத்த பலர் வருகின்றனர். போராட வேண்டிய நிலைமையில் நான் இல்லை. ஜல்லிக்கட்டு நடத்த எல்லாவிதமான பணிகளையும் செய்வது தான் எனது கடமை.
போராட்டம் நடத்துபவர்கள் கடந்த 3 மாதங்களாக எங்கு சென்றார்கள்? என தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என ஆர்வமாக உள்ளனர்.
அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துடன் சிலர் செயல்படுகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என ஆத்மார்த்தமாக சொன்னால் அது வரவேற்கப்பட வேண்டும். இந்த கட்சிக்குத்தான் பங்கு, அந்த கட்சிக்கு தான் பங்கு என்று சொல்லக்கூடாது. எல்லாரும் வரவேற்கிறோம். அரசியல் ஆதாயம் தேட யார் முயன்றாலும் அதை ஏற்க முடியாது.
இந்த பிரச்சினையில் எந்த கட்சியும் ஒரு துரும்பை கூட எடுத்து போடவில்லை. இப்போது போராட்டம் என வருவதை ஏற்க முடியாது. நாங்கள் நம்பிக்கையுடன் முழு முயற்சிகளை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
குரோம்பேட்டை பகுதியில் தனியாக செல்போனில் பேசியபடி நடந்து செல்லும் பெண்களிடமும், ஆண்களிடமும் மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் செல்போன்களை பறித்து சென்று விடுவதாக அடிக்கடி குரோம்பேட்டை போலீசுக்கு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து குரோம்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 சிறுவர்கள் வந்தனர்.
அவர்களை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் குரோம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் குரோம்பேட்டையை சேர்ந்த அவர்கள் 2 பேரும் 4 செல்போன்களை கொள்ளையடித்திருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்களது கூட்டாளிகளான அதே பகுதியை சேர்ந்த 8 சிறுவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேரும் மாணவர்கள். இவர்களிடம் இருந்து 13 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் புத்தேரி தெரு, பிள்ளையார் பாளையம், கைலாசநாதர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் சிவகாஞ்சி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பாலாற்று படுகையில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்ட கீழம்பி பகுதியைச் சேர்ந்த சேட்டு, துரை, சிதம்பரம், வரதன், தாமோதரன், பார்த்திபன், அருள் தாஸ், சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
மலேசியாவில் இருந்து இன்று காலை சென்னைக்கு ஒரு விமானம் வந்தது. அதில் மலேசியாவை சேர்ந்த ஜெகன்நாதன் அவரது மகள் யுவனா (37). பயணம் செய்தனர். யுவனா சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தார்.
நடுவானில் விமானம் பறந்த போது யுவனாவுக்கு திடீர் என உடல் நிலை மோசமானது. இதுகுறித்து விமானம் மூலம் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவ குழுவினர் தயாராக இருந்தனர். விமானம் தரை இறங்கியதும் மருத்துவ குழுவினர் விரைந்து சென்று யுவனாவை பரிசோனை செய்தனர். அப்போது அவர் இறந்தது தெரிய வந்தது.
தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோயம்புத்தூர் செல்லும் போது சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வார்தா புயலால் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்ய அடுத்த வாரம் மத்திய குழு சென்னைக்கு வர இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே சொன்னபடி தமிழகத்திற்கு வேண்டிய அத்தனை ஒத்துழைப்பையும் தருவார். முதல் அமைச்சர் இழப்பிற்கு பின் தமிழகம் எந்த விதத்திலும் பாதிப்படைய கூடாது என்று முழு கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழக மக்களுக்கு எந்தவித பின்னடைவும் இருக்கக் கூடாது என்று வேண்டிய உதவிகளை செய்வார்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு அத்தனை முயற்சியும் எடுத்து வருகிறது. வழக்காடு மன்றத்திலும் மத்திய அரசு தன்னுடைய வாதத்தை வலிமையாக எடுத்து கூறி உள்ளது. விலங்கியல் ஆர்வலர்கள் கூட மத்திய அரசை இதற்காக விமர்சித்து உள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராட்டங்களை நடத்துவதை விட சட்டரீதியான நிரந்தர தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டை நடத்த பாரதிய ஜனதா கட்சி ஆர்வமாக உள்ளது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க வருகிறது என்ற வாதத்தை நான் கடுமையாக மறுக்கிறேன். பின்வாசல் வழியாக வர வேண்டும் என்றால் ஏன் முன் வாசல் வழியாக வருமான வரித்துறையை அனுப்ப வேண்டும்.
இப்போது தான் மக்களுக்கு நேரடியாக நம்பிக்கை வந்து உள்ளது. நாம் பணத்தை வைத்து இருப்பவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்ற நம்பிக்கை மத்திய அரசு மற்றும் வருமான வரித்துறை மீது ஏற்பட்டு உள்ளது.
என் பணத்தை எடுக்க நான் வரிசையில் நிற்க வேண்டுமா என மக்களை எதிர்கட்சியினர் ஆவேசபடுத்துகின்றனர்.
இனி எதிர்க்கட்சியினர் யாரும் அரசியல் செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை குறித்து சில குற்றசாட்டுகளை வைத்தார். அதற்கு பிரதமர் ராகுல் காந்தியை விமர்சனம் செய்தாரே தவிர குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லவில்லை. பாரதிய ஜனதா கட்சியும் பதில் சொல்லவில்லை.
ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. ஏற்கனவே இது குறித்து 2 முறை தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி மதுக்கடைகளை மூடினால் குற்ற சம்பவங்கள் குறையும் என கூறி உள்ளார். ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு உள்ளது. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுக் கடைகளை மூடவேண்டும். 500 மீட்டர் தள்ளி மதுக்கடை இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இது சம்பந்தமாக நாங்கள் பேசி முடிவு எடுப்போம். கவர்னர் கிரண்பேடி சொல்லிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து.
கருப்பு பணம் மீட்பதற்கு நாங்கள் முழு ஆதரவு தருகிறோம். வருமான வரித் துறை வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நியாயம் தான். ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு நாட்டு மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக மத்திய மந்திரி அருண் ஜெட்டிலியை நான் நேரடியாக சந்தித்து சொல்லி இருக்கிறேன். மத்திய அரசு 86 சதவீதம் புழக்கத்தில் இருந்த பணத்தை எடுத்து விட்டு அதற்கு தேவையான பணத்தை வங்கிகளுக்கு அனுப்பவில்லை.
இதனால் விவசாயிகள் நெல்லுக்கு தேவையான விதை, உரம் வாங்க பணம் இல்லாமல் கஷ்டபடுகிறார்கள். சிறு வணிகர்கள், கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. பீகாரில் இருந்து வந்த தொழிலாளர்கள் பணம் இல்லாததால் திரும்பி சென்றுவிட்டனர். மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டை தருகிறது. அதை சில்லரையாக மாற்ற பொதுமக்கள் கஷ்டப்படுகிறார்கள். இதனால் நம் நாடு பொருளாதாரத்தில் சரிவை சந்தித்து உள்ளது.
இந்த திட்டம் குறித்து மத்திய அரசுக்கு முன் யோசனை இல்லை. முன்திட்டம் எதுவும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசு மாற்று ஏற்பாடு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






