என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    துரைப்பாக்கத்தை அடுத்த கந்தன்சாவடி அருகே மாநகர பஸ்சில் டேங்க் உடைந்து டீசல் கொட்டியது. டீசலை பொது மக்கள் பாத்திரத்தில் பிடித்து சென்றனர்.
    திருவான்மியூர்:

    திருவான்மியூரில் இருந்து கிழக்கு தாம்பரத்துக்கு இன்று காலை மாநகர பஸ் சென்றது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    துரைப்பாக்கத்தை அடுத்த கந்தன்சாவடி அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென டீசல் டேங்க் உடைந்து டீசல் கொட்டியது.

    இதனை அறியாமல் டிரைவர் பஸ்சை ஓட்டிச்சென்றார். சாலையில் கொட்டிய டீசலால் பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் 3 பேர் நிலைதடுமாறி அடுத்தடுத்து விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.

    பஸ்சில் இருந்து டீசல் கொட்டுவது குறித்து வாகன ஓட்டிகள் சிலர் பஸ் டிரைவருக்கு தெரிவித்தனர். உடனே பஸ்சை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கினார்.

    அதிர்ச்சி அடைந்த பயணிகள் பீதியில் முண்டியடித்து கீழே இறங்கினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

    பஸ்சில் இருந்து டீசல் கொட்டுவதை அறிந்த அப்பகுதி மக்கள் சிலர் பாத்திரத்தை கொண்டு வந்து பிடித்து சென்றனர். டீசல் வெளியேறுவதை தடுக்க முடியாமல் டிரைவரும் கண்டக்டரும் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர்.



    இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் விரைந்து வந்து பஸ்சை அங்கிருந்து எடுத்து சென்றனர். டீசல் டேங்கில் இருந்து அனைத்து டீசலும் வெளியேறிவிட்டது.

    டீசல் கொட்டியபோது தீப்பற்றாததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மாநகர பஸ்சை ஆய்வு செய்து பயன்பாட்டுக்கு எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
    செங்கல்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகரை வெட்டி கொல்ல முயன்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு டவுன் திருப்போரூர் கூட்டு ரோட்டில் வசித்து வருபவர் பலராமன். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. பொருளாளராக உள்ளார்.

    நேற்று இரவு அவர் குடும்பத்துடன் வீட்டில் இருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வீட்டு கதவை தட்டி பலராமனை அழைத்தனர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் திரண்டனர். பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சலிட்டனர். உடனே கொலை வெறி கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

    இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    கேளம்பாக்கம் அருகே காரில் சென்ற கொலை வெறி கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களில் 3 பேர் சிக்கினர். ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார்.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் வல்லத்தை சேர்ந்த பூபதி, பாம் குணா, மேடவாக்கம் சரவணன் என்பது தெரிந்தது. போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றபோது பாம் குணா, சரவணனுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

    அவர்கள் 2 பேருக்கும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முன் விரோதத்தில் பலராமனை தீர்த்துக்கட்ட முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

    இது குறித்து பிடிபட்ட 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்கல்பட்டு ரெயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக சென்னை வரும் ரெயில்கள் தாமதமானது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
    செங்கல்பட்டு:

    சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு இன்று காலை மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது. காலை 8.40 மணி அளவில் செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே சென்றபோது தண்டவாளத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டு இருந்தது.

    இதையடுத்து மின்சார ரெயிலை நடுவழியில் டிரைவர் நிறுத்தினார். மேலும் சிக்னல் கோளாறு குறித்து செங்கல்பட்டு ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து வந்த சோழன் எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வரும் வழியிலேயே அந்தந்த ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

    இதேபோல் சென்னை நோக்கி சென்ற அனந்தபுரி, திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. மின்சார ரெயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

    இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்ட மின்சார ரெயிலில் இருந்து பயணிகள் கீழே குதித்து சென்றனர். பெண்களும், முதியவர்களும் இறங்க முடியாமல் ரெயிலிலேயே அமர்ந்து இருந்தனர்.



    மின்சார ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் பஸ்களில் பயணம் செய்தனர். இதனால் மாநகர பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கேபிள் வயரில் ஏற்பட்ட பழுது காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. அதனை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் சிக்னல் கோளாறு சீரமைக்கப்பட்டது. காலை 10.30 மணிக்கு பின்னர் ரெயில் சேவை சீரானது.
    சென்னை விமான நிலையத்தில் இன்று காலை மும்பை செல்ல இருந்த விமான பயணியிடம் சோதனை செய்த அதிகாரிகள் ரூ. 6 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இன்று காலை மும்பை செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    சென்னையை சேர்ந்த மாணிக்கராஜ் என்பவரது கைப்பையை சோதனை செய்தபோது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது. மொத்தம் ரூ. 6 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் புதிய ரூபாய் நோட்டுகள் குறித்து மாணிக்கராஜிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல் வருமானமாக 22 லட்சத்து 44 ஆயிரத்து 838 ரூபாய் ரொக்கம் மற்றும் சில்லரையாகவும், 112 கிராம் தங்கமும், 1340 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன.
    திருப்போரூர்:

    திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி திருக்கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.

    கடந்த மாதம் 10-ந் தேதி உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இந்நிலையில் வேலூர் இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர் தனபால் உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் இந்துஅறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, கோயில் செயல் அலுவலர் நற்சோனை, கோயில் ஆய்வாளர் கோவிந்தராஜ், மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில் அனைத்து உண்டியல்களும் திறந்து கோயில் வளாகத்தில் எண்ணப்பட்டன.

    இதில் 22 லட்சத்து 44 ஆயிரத்து 838 ரூபாய் ரொக்கம் மற்றும் சில்லரையாகவும், 112 கிராம் தங்கமும், 1340 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன.

    மேலும், சிங்கப்பூர், சவூதி, ஓமன், அமெரிக்கா நாட்டு கரன்சிகள் 13 எண்ணிக்கை இருந்தன. இது கடந்த ஒன்றரை மாத உண்டியல் வருமானம் ஆகும்.

    உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், சென்னை கோபிகாரமணா அமைப்பு தன்னார்வலர்கள் மற்றும் திருப்போரூர் அரசு பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.

    இதையொட்டி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    ஊருக்கு செல்ல பணம் இல்லாததால் போலீஸ்போல் நடித்து வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த திருமண புரோக்கரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    தாம்பரம்:

    பம்மல், நல்லதம்பி சாலையில் டிப்-டாப் வாலிபர் ஒருவர் போலீஸ் என்று கூறி வாகன ஓட்டிகளை மடக்கி விசாரணை நடத்தினார். ஆவணங்கள் இல்லாத வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்தார்.

    சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் சங்கர் நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து டிப்-டாப் வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர் செங்குன்றத்தை சேர்ந்த திருமண புரோக்கர் இளங்கோவன் என்பது தெரிந்தது. திருமண வி‌ஷயம் சம்பந்தமாக அவர் பம்மலுக்கு ஒருவரை சந்திக்க வந்துள்ளார்.

    அங்கிருந்து ஊருக்கு செல்வதற்கு இளங்கோவனிடம் பணம் இல்லை. இதையடுத்து அவர் போலீஸ் போல் நடித்து வாகன ஓட்டிகளிடம் பணம் பெற்று ஊருக்கு செல்ல வசூல் வேட்டையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து இளங்கோவனை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை விமானத்தில் வந்த மும்பை தொழில் அதிபர்களிடம் 45 கிலோ தங்க நகைகள் இருந்தது மத்திய தொழில் படையினர் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை வருமான வரி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    மும்பையில் இருந்து சென்னைக்கு இன்று காலை 8.30 மணியளவில் ஒரு தனியார் நிறுவன விமானம் வந்தது.

    இதில் பயணம் செய்தவர்களின் கைப்பை மற்றும் சூட்கேஸ்களை மத்திய தொழில் படையினர் சோதனையிட்டனர். அவர்களில் 3 பேரிடம் 45 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.16.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர்கள் என தெரியவந்தது.

    இவர்கள் தங்கநகை வியாபாரம் செய்வதாகவும், சென்னை நகை கடைகளில் புதிதாக செய்யப்பட்ட நகைகளை வாங்க வந்ததாகவும் கூறினர். மேலும் அதற்கான ஆவணங்களையும் அதிகாரிகளிடம் காட்டினர்.

    இருந்தாலும் அவர்கள் 3 பேரும் சென்னை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் வருமான வரி செலுத்தியுள்ளனரா? என அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    மீனம்பாக்கத்தில் டேங்கர் லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    திருவண்ணாமலை அருகேயுள்ள பெருமணம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (50). மீனம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே நெடுஞ்சாலை துறை வேலை நடக்கிறது. அதில் இவர் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது தாம்பரத்தில் இருந்து கிண்டி நோக்கி வந்த டேங்கர்லாரி தடுப்பை உடைத்துக் கொண்டு இவர் மீது பயங்கரமாக மோதியது. இதனால் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். லாரி டிரைவர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்தவர்.

    சோழிங்கநல்லூரில் 2 வாலிபர்களிடம் கத்தி முனையில் பணம் மற்றும் செல்போன் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவான்மியூர்:

    சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி ஜவகர் நகர் எழில்முகநகரை சேர்ந்தவர்கள் ரஞ்சித் குமார், நித்தீஸ் குமார். இருவரும் அந்த பகுதியில் அருகில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேஸ்திரி வேலை செய்து வருகின்றனர்.

    நேற்று மாலை வழக்கம் போல் பணி முடிந்து, வீட்டிற்கு நடந்து சென்றனர்.

    அப்பொழுது ஐந்து பேர் கொண்ட மர்மகும்பல், மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் நடந்து சென்றவர்களிடம் விலாசம் கேட்பது போல், அருகில் வந்து திடீரென கத்தியை காட்டி மிரட்டினர்.

    பின்னர் அவர்களிடம் இருந்து 4,000 ரூபாய் பணம், மற்றும் விலையுயர்ந்த இரண்டு செல்போன்களை மர்மகும்பல் பறித்து சென்றனர். இது குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றறவாளிகளை தேடி வருகின்றனர்.

    கடந்த 12ம் தேதி வார்தா புயல் வீசியதால் இந்தப் பகுதியில் மழைநீர் தேங்கி, மின் கம்பங்கள் பழுதடைந்தன.இதனால், மின்சாரம் இல்லாமல் இருளடைந்து காணப்பட்டது. இதனால், பணிக்கு சென்று வீடு திரும்பும் பொதுமக்களிடம் மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டால், குற்றங்கள் குறையும். என்று தெரிவித்தனர்.

    திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சிக்கு தலைவரா? அல்லது அ.தி.மு.க. தலைவரா? என்று சில நேரங்களில் சந்தேகம் எழுகிறது என தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இது தொடர்பாக வழக்காடு மன்றத்தில் தனது வாதத்தை எடுத்துரைத்து வருகிறது.

    தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஜல்லிக்கட்டு நடப்பதற்கான நிரந்தர தீர்வு கொண்டு வரவில்லை. இப்போது தி.மு.க. போராட்டம் என்று சொன்ன உடனேயே காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நாங்களும் சேர்ந்து போராடுவோம் என்று கூறுகிறார். ஊழலில் சேர்ந்தவர்கள் இதிலும் சேர்வார்கள.

    காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழத்தில் பா.ஜனதா புழக்கத்தில் இல்லாத கட்சி என்று கூறி இருக்கிறார். அவரைப் போல் மற்ற கட்சிக்கு மாறுகிற புழக்கம் இல்லாத கட்சி தான் எங்களுடையது. அவருடைய கட்சியை அவர் பார்க்கட்டும்.

    காங்கிரஸ் கட்சிக்கு திருநாவுக்கரசர் தலைவராக இருப்பது துரதிருஷ்டவசமானது. அவர் சில நேரங்களில் காங்கிரஸ் தலைவரா? அல்லது அ.தி.மு.க. தலைவரா? என்ற சந்தேகம் எழுகிறது.

    வார்தா புயல் சேதங்களை மத்திய அரசு செயற்கைகோள் புகைப்படத்தை வைத்து ஆராய்ந்து வருகிறது.

    முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்தை மாற்ற வேண்டும் என்று சில அமைச்சர்கள் கூறி இருப்பது அவர்களது உட்கட்சி பிரச்சினை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்தை மாற்ற வேண்டும் என்று பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்தது நல்லதல்ல என்று திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்தியில் காங்கிரஸ் அரசு இருக்கும் போது ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் நடைபெற்றது. பா.ஜனதா அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 3 வருடங்களாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

    இதுபற்றி பா.ஜனதா அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து தெரிவிக்கிறார்கள். தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்த வேண்டும்.

    உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடைபெற வழி வகை செய்ய வேண்டும்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் இன்னும் மீட்கப்படவில்லை. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். படகுகள் விடுவிக்கப்படாததால் பழுதாகி நிற்கின்றன. அதற்கு இலங்கை அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். இதற்கு மத்திய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள் கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடக்கிறது. இதில் மத்திய அரசு பணம் மதிப்பு குறைத்தது பற்றி விவாதிக்க உள்ளோம்.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மாற்றம் குறித்தும் விவாதிப்பேன். தேவையான நிர்வாகிகள் மாற்றம் விரைவில் அறிவிக்கப்படும்.

    வார்தா புயல் பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவோ, அமைச்சர் குழுவோ இன்னும் வரவில்லை. இனி அவர்கள் வந்து எந்த சேதத்தை பார்ப்பார்கள். வேண்டுமானால் புயல் பாதிப்பு வீடியோவையும் புகைப்படத்தையும் பார்க்கலாம்.

    தமிழகத்தை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. புயல் நிவாரண நிதியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. முன் பணமாக 5 ஆயிரம் கோடியில் இருந்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை உடனடியாக வழங்க வேண்டும்.

    ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஊழல் செய்தவர்ககளிடம் சோதனை செய்வது சரியானதுதான். அது வரவேற்கத்தக்கது.

    பழைய ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.

    தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சசிகலாவை சந்தித்தது கண்டனத்திற்குரியது. அவர்கள் அ.தி.மு.க.வினர் போல செயல்பட்டு உள்ளனர்.

    முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்தை மாற்ற வேண்டும் என்று பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்தது நல்லதல்ல. முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்றால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடி முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சீபுரம் அருகே ஆட்டோ மீது பஸ் மோதலில் 6 வயது சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    தாம்பரத்தை அடுத்த சேலையூர் அருகே உள்ள மாடம் பாக்கத்தை சேர்ந்தவர் விஜய். ஆட்டோ டிரைவர். இவரது மகன் தமிழ்செல்வன், 6 வயது மகள் காவியா. அருகில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் சபரிமலை கோவிலுக்கு சென்றார். கோவில் பிரசாதங்களை செய்யாறு அருகே உள்ள செங்கம் பூண்டி கிராமத்தில் வசிக்கும் பெற்றோரிடம் கொடுப்பதற்காக உறவினர் சக்திவேலுடன் ஆட்டோவில் சென்றார்.

    அவர்களுடன் விஜயின் மகன் தமிழ்செல்வன், மகள் காவியா மற்றும் உறவினர்கள் மணி, பழனி, விஷ்வா ஆகியோரும் சென்றனர்.

    காஞ்சீபுரம் அருகே செவிலிமேடு பாலாற்று பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே திருவண்ணாமலையில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி வந்த அரசு பஸ் திடீரென ஆட்டோ மீது மோதியது.

    பஸ்சின் கீழ் பகுதியில் சிக்கிய ஆட்டோ நசுங்கி உருக்குலைந்தது. இடிபாடுகளில் சிக்கிய சிறுமி காவியா சம்பவ இடத்திலேயே பலியானார்.

    ஆட்டோவில் இருந்த சக்திவேல், மணி, பழனி உள்பட 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×