என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    கல்பாக்கம் அருகே பாலாற்றில் கிடந்த ஆண் பிணத்தை கைப்பற்றிய போலீசார், இதுதொடர்பாக கல்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    கல்பாக்கத்தை அடுத்த வயலூர் பாலாற்றில் ஆண் பிணம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூவத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

    பிணமாக கிடந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கும். மர்ம நபர்கள் அவரை அடித்து கொன்று வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக கல்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விவசாயிகள் தற்கொலை எண்ணத்தை கைவிடவேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று நாளை தி.மு.க. போராட்டம் நடத்துகிறது. எதிர்க்கட்சி என்ற முறையில் போராடுகிறார்கள்.

    போராட்டம் நடத்தித்தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியுமென்றால் நானும், பா.ஜனதாவும் முதலாவதாக இருப்போம். ஆனால் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காளையை காட்சி பொருள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அப்போதைய காங்கிரஸ் ஆட்சிதான் அதை செய்தது.

    தமிழகத்துக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தின் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை. தற்போதைய பா.ஜனதா அரசு ஜல்லிக்கட்டு நடத்த முயற்சித்து வருகிறது.

    செய்த தவறுக்காக காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை கைவிட வேண்டும். மோடி அரசு விவசாயிகளுக்கான நல்ல திட்டங்களை வகுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கல்பாக்கம் அருகே மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் பக்கிங் காம் கால்வாய் அருகே ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. வியாபாரம் முடிந்ததும் டாஸ்மாக்கடையை ஊழியர்கள் பூட்டி சென்றனர்.

    நேற்று காலை கடையை திறக்க வந்தனர். அப்போது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது கல்லாபெட்டியில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை போய் இருந்தது.

    இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து 30 வாலிபர்கள் படுகாயமடைந்தனர். காயம் அடைந்த இளைஞர்கள் முதலுதவிக்கு பின் வீடு திரும்பினர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை, கோவளம், மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புத்தாண்டையொட்டி போலீசார் பலத்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    காஞ்சீபுரத்தில் பிரதான சாலைகளான காந்திரோடு, காமராஜர் சாலை, ரயில்வே ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் அதிவேகத்தில் கூக்குரலிட்ட படியே சுற்றிவந்தனர்.

    அதிக வேகத்தின் காரணமாக பல இடங்களில் வாகனங்களில் இருந்து அவர்கள் கீழே விழுந்தனர். இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    நள்ளிரவில் அவர்கள் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு போதிய மருத்துவர்கள் இல்லாததால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டது.

    இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து சப்-கலெக்டர் அருண் தம்புராஜீக்கு தகவல் தெரிவித்தனர். அவரது நடவடிக்கையால் உடனடியாக சிகிச்சைஅளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே புத்தாண்டு கொண்டாட்டத்தில் காயம் ஏற்பட்டதை வெளியில் சொல்ல விரும்பாத காயம் அடைந்த இளைஞர்கள் முதலுதவிக்கு பின் உடனடி யாக அவசரமாக வீடு திரும்பினர். அதிக வேகம் மற்றும் குடிபோதை காரணமாக இந்த விபத்துகள் நடந்துள்ளது.

    புத்தாண்டையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    காஞ்சீபுரம் அருகே வீடுபுகுந்து கொள்ளையடித்த பெண்ணை பாலுசெட்டிசத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் மனைவியுடன் வயலுக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவர்களது மகள் காயத்ரி மட்டும் இருந்தார்.

    அவர் வீட்டின் மாடியில் துணியை காயப்போட்டு விட்டு கீழே வந்தார். அப்போது மர்மப்பெண் வீட்டிற்குள் புகுந்து பீரோவை திறந்து கொண்டிருந்தார்.

    சந்தேகம் அடைந்த காயத்ரி அவளிடம் விசாரித்த போது, உனது தாயின் தோழி என்று கூறி சமாளித்தார். மேலும் தண்ணீர் கொண்டுவரும்படி மர்மப்பெண் கூறினார்.

    காயத்ரி தண்ணீர் கொண்டு வந்த போது அவர் தப்பி ஓட்டம் பிடித்தாள். அதிர்ச்சி அடைந்த காயதிரி கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவள் காஞ்சீபுரத்தை சேர்ந்த சித்ரா(26) என்பதும் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

    அவளை பாலுசெட்டிசத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்போரூர்:

    மாமல்லபுரத்தை அடுத்த கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் நவீன்குமார் (25), சதாசிவம் (25), அமல்ராஜ்(26), இவர்கள் 3 பேரும் நேற்று இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மாமல்லபுரத்திற்கு வந்தனர்.

    பூஞ்சேரியை அடுத்த மாமல்லபுரம் டவுன் நுழைவு வாயில் அருகே சென்ற போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற மினி லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நவீன் குமார், சதாசிவம் ஆகியோர் பலியானார்கள். படுகாயம் அடைந்த அமல்ராஜிக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது நிலைமை மோசமாக உள்ளது.

    கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள டிராக்டர் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தவர் வெங்கடேஷ் (வயது 18). இவரது சொந்த ஊர் ஆந்திரமாநிலம் ஏலூர் கிராமம் ஆகும். நேற்று மாலை அவர் பயிற்சிக்காக வந்த நண்பர்கள் 6 பேருடன் கோவளத்திற்கு சுற்றுலா வந்தார். அனைவரும் கடலில் இறங்கி குளித்தனர்.

    அப்போது ராட்சத அலை வெங்கடேசனை கடலுக்குள் இழுத்து சென்றது. அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தண்ணீரில் மூழ்கிய வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக நல்ல தீர்ப்பு கிடைக்கும் என சுப்பிரமணிய சாமி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த ஆண்டிலாவது நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

    இந்த நிலையில் கோவையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்த பா.ஜனதா முத்த தலைவர் சுப்பிரமணிய சாமியிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சட்டத்தில் எந்த வித தடையும் இல்லை. கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், பாதுகாக்கப்பட்ட விலங்குகள் தொடர்பாக ஒரு அறிவிக்கையை வெளியிட்டனர். அந்த பட்டியலில் மாடுகளை சேர்த்துவிட்டனர். இதனால்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டு உள்ளது.

    இந்த பட்டியலில் இருந்து மாடுகளை நீக்க வேண்டும் என்று மத்திய மந்திரியை சந்தித்து கோரிக்கை வைத்து உள்ளேன். அதன்படி மாடுகளை நீக்கி புதிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

    இதைப்போல ஜல்லிக்கட்டில் மாடுகளை கொடுமைப்படுத்தவில்லை, எந்த மாடும் சாகவில்லை என நீதிமன்றத்திலும் வாதம் செய்துள்ளேன். ஜல்லிக்கட்டு எப்படி நடக்கிறது? என்பதை பார்க்க ஒரு குழுவை நீதிமன்றம் ஏற்படுத்தலாம் என்றும் கோரியுள்ளேன். இந்த வழக்கில் 14-ந் தேதிக்கு முன் தீர்ப்பு வந்துவிடும். அந்த தீர்ப்பு சாதகமாக இருக்கும் என நம்புகிறேன்.

    பணமதிப்பு இழப்பு விவகாரம் நல்ல திட்டம் தான். ஆனால் இந்த திட்டம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை. இந்த திட்டம் குறித்து பிரதமர் தான் விளக்க வேண்டும். ஆனால் பணமதிப்பு இழப்பு பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு தார்மீக உரிமை கிடையாது. பணப்பிரச்சினை விரைவில் சரியாகிவிடும்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவு குறித்து ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி கேட்டு இருக்கக்கூடாது. மாறாக மத்திய-மாநில அரசுகளுக்கும், அப்பல்லோ மருத்துவமனைக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கவேண்டும். இந்த வழக்கு 9-ந் தேதி விசாரணைக்கு வரும் போது நோட்டீஸ் வழங்க உத்தரவிடுவார்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு சுப்பிரமணிய சாமி கூறினார். 
    புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொது மக்களுக்கு அத்துமீறி தொல்லை கொடுப்பவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொது மக்களுக்கு அத்துமீறி தொல்லை கொடுப்பவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 3451 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 1032 பேர் உயிர் இழந்துள்ளனர். 3545 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்துக்களுக்கு காரணம் சாலை விதிகளை பின்பற்றாததே ஆகும். எதிர்வரும் புத்தாண்டு விபத்தில்லா புத்தாண்டாக இருக்க காவல்துறை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

    காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் புத்தாண்டையொட்டி காவல்துறையினரின் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இ.சி.ஆர்., ஓ.எம்.ஆர். சாலைகள் காவல்துறையினரின் முழு பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளில் வாகனங்களின் வேகங்களை கட்டுப்படுத்த 295 பேரி கார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிக அளவில் கூடும் 120 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு காவல்துறையினர் முழு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

    இவை தவிர புத்தாண்டின் பெயரால் யாரும் வரம்பு மீறாமல் இருக்க 50 ரோந்து வாகனங்கள் விடிய விடிய கண்காணிப்பில் ஈடுபடுவர்.

    குடித்து விட்டு வாகனம் ஓட்டினாலோ பொது மக்களிடம் அத்துமீறி நடந்து கொண்டாலோ யாருக்கேனும் இடையூறு செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாதாரண உடைகளில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

    பாதுகாப்பான முறையில் புத்தாண்டை கொண்டாட காஞ்சீபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இன்று நள்ளிரவில் வாகன வேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்று கொண்டாட தயாராகி வரும் நிலையில் மாமல்லபுரம் கடலில் குளிக்க கூடாது என போலீசார் தடை விதித்துள்ளனர்.
    மாமல்லபுரம்:

    புத்தாண்டை முன்னிட்டு சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியினர் மாமல்லபுரம் வந்து கடற்கரை ரிசார்ட், ஓட்டல்களில் தங்கி வருகிறார்கள் இன்று நள்ளிரவில் வாகன வேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்று கொண்டாட தயாராகி வரும் நிலையில் மாமல்லபுரம் கடலில் குளிக்க கூடாது என போலீசார் தடை விதித்துள்ளனர்.

    ஓட்டல்களில் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களின் விபரங்களை கட்டாயம் காவல்துறைக்கு தெரியபடுத்துவதுடன் அவர்களின் பாதுகாப்புக்கருதி இன்றும் நாளையும் கடற்கரையில் அரைகுறை ஆடையுடன் சூரிய குளியலுக்கு அனுமதிக்ககூடாது என ஓட்டல் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விடுதி, பண்ணைவீடு, ரிசார்ட்களில் அழகிகளை வைத்து ஆபாச நடணம் நடத்தக் கூடாது, அனுமதி இல்லாத வெளிமாநில, வெளிநாட்டு மது வகைகளை பதுக்கி வைத்து புத்தாண்டு ஸ்பெ‘ல் என அதிக விலைக்கு விற்பணை செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாமல்லபுரம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    பணமில்லா பரிவர்த்தனை என்பதை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆதார் எண்மூலம் காணிக்கை செலுத்தும் வசதி தாம்பரத்தில் அறிமுகம் ஆகி உள்ளது.
    சென்னை:

    தாம்பரத்தை அடுத்த சானடோரியத்தில் லட்சுமி விநாயகர் ஆலயம் உள்ளது. எல்லா கோவில்களைப் போலவே இந்த கோவிலிலும் பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. அனுமன் ஜெயந்தியான நேற்று பிரதமர் மோடி பெயரில் விசே‌ஷஅர்ச்சனை செய்யப்பட்டது. உயர் மதிப்பு ரூபாய் நோட்டு ஒழிக்கப்பட்டதால் தனது உயிருக்கு ஆபத்து என்று மோடி கூறியதால் அவருக்கு தீங்கு நேராமல் இருக்க கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர்.

    அதை தொடர்ந்து ஆதார் எண் மூலம் காணிக்கை செலுத்தும் வசதியை பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் ரேகை பதிவு எந்திரத்தில் கைவிரல் ரேகை வைத்ததும் கோவிலில் உள்ள மொபைல் போனில் வங்கி கணக்கு விபரங்கள் வரும். பக்தர் கொடுக்க வேண்டிய காணிக்கையை தெரிவித்தால் போதும். உடனே கோவில் கணக்கில் சேர்ந்து விடும்.

    இதன் மூலம் ரசீது போடும் வேலை, வங்கிக்கு செல்லும் வேலை இல்லை. உண்டியலையும் அகற்றி விட்டனர். உண்டியல் பாதுகாப்பு பற்றிய பயமும் தேவையில்லை.

    இந்த வசதியை மற்ற கோவில்களிலும் பின்பற்ற வழிப்புணர்வு ஏற்படுத்தப் போவதாக செம்பாக்கம் வேத சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் கோவில் தலைவர் சுப்பராயன், நிர்வாகி பாபுராஜ், பா.ஜனதா நிர்வாகிகள் சுரேஷ்குமார், மகேஷ்குமார், டாக்டர் கோபி அய்யாசாமி, நமோபிரேம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கேளம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் செக்போஸ்ட்டில் கட்டிய கயிறு இறுக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை அடுத்த படூரை சேர்ந்தவர் துரை பாபு. இவரது மகன் கவுரிசங்கர் (வயது 35). செய்தித்தாள் விற்பனை செய்து வந்தார்.

    இன்று அதிகாலை அவர் படூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு செய்தித்தாள் கொடுக்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவு அருகே செக்போஸ்ட் சரிவர வேலை செய்யாமல் அதன் கம்பி மேல்நோக்கி உள்ளது. அவ்வழியே சென்ற கவுரி சங்கர் செய்திதாளை கொடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பினார்.

    இதற்கிடையே அங்கு பணியில் இருந்த ஊழியர் ஒருவர் செக்போஸ்ட்டின் குறுக்கே கயிறு கட்டி வைத்தார். இதனை கவனிக்காமல் கவுரிசங்கர் மோட்டார் சைக்கிளில் அவ்வழியே வந்தார். அதில் அவரது கழுத்தில் கயிறு இறுக்கியது. இதில் நிலைதடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து பல அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்டார். கயிறு அறுத்ததில் கவுரிசங்கரின் கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் உயிருக்கு போராடிய கவுரிசங்கரை மீட்டு சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    கவுரி சங்கர் மோட்டார் சைக்கிளில் செக்போஸ்ட் வழியாக சென்ற போது கயிறு இல்லாததால் திரும்பி வரும்போதும் தடுப்பு இருக்காது என்று வந்துள்ளார்.

    ஆனால் அதில் ஊழியர் ஒருவர் கட்டிய கயிறு அவரது உயிரை பறித்துவிட்டது. பலியான கவுரிசங்கருக்கு ஜீவிதா என்ற மனைவி உள்ளார். இச்சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மத்திய உளவுத்துறை எச்சரிக்கையால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு நலன் கருதி ஒரு மாதம் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
    ஆலந்தூர்:

    புத்தாண்டு, பொங்கல் விழா மற்றும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை தீவிரவாதிகள் சீர்குலைக்க திட்டமிட்டு உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இதையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

    அதன்படி சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விமான நிலைய போலீசார், மத்திய தொழிற்படையினர், பாதுகாப்பு படையினர் கொண்ட கூட்டு பாதுகாப்பு பணி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    விமான நிலையத்தின் உள் பகுதிகளில் மத்திய தொழிற்படையினர் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் நுழைவு பகுதியில் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

    விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் போலீசார் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து அனுமதிக்கின்றனர். பாதுகாப்பு நலன் கருதி விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி வழங்குவதற்கு நேற்று முதல் ஜனவரி மாத இறுதி வரை ஒரு மாதத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இதுபோன்ற முக்கியமான தினங்களில் பாதுகாப்பு நலன் கருதி சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு இரு வாரங்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒரு மாதத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×