என் மலர்
செய்திகள்

கேளம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் ‘செக்போஸ்ட்டில்’ கட்டிய கயிறு இறுக்கி வாலிபர் பலி
திருப்போரூர்:
கேளம்பாக்கத்தை அடுத்த படூரை சேர்ந்தவர் துரை பாபு. இவரது மகன் கவுரிசங்கர் (வயது 35). செய்தித்தாள் விற்பனை செய்து வந்தார்.
இன்று அதிகாலை அவர் படூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு செய்தித்தாள் கொடுக்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.
ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவு அருகே செக்போஸ்ட் சரிவர வேலை செய்யாமல் அதன் கம்பி மேல்நோக்கி உள்ளது. அவ்வழியே சென்ற கவுரி சங்கர் செய்திதாளை கொடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பினார்.
இதற்கிடையே அங்கு பணியில் இருந்த ஊழியர் ஒருவர் செக்போஸ்ட்டின் குறுக்கே கயிறு கட்டி வைத்தார். இதனை கவனிக்காமல் கவுரிசங்கர் மோட்டார் சைக்கிளில் அவ்வழியே வந்தார். அதில் அவரது கழுத்தில் கயிறு இறுக்கியது. இதில் நிலைதடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து பல அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்டார். கயிறு அறுத்ததில் கவுரிசங்கரின் கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் உயிருக்கு போராடிய கவுரிசங்கரை மீட்டு சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
கவுரி சங்கர் மோட்டார் சைக்கிளில் செக்போஸ்ட் வழியாக சென்ற போது கயிறு இல்லாததால் திரும்பி வரும்போதும் தடுப்பு இருக்காது என்று வந்துள்ளார்.
ஆனால் அதில் ஊழியர் ஒருவர் கட்டிய கயிறு அவரது உயிரை பறித்துவிட்டது. பலியான கவுரிசங்கருக்கு ஜீவிதா என்ற மனைவி உள்ளார். இச்சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






