search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 43 சிறுவர்கள் தப்பிச் செல்ல முயற்சி
    X

    சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 43 சிறுவர்கள் தப்பிச் செல்ல முயற்சி

    செங்கல்பட்டு சீர்த்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மோதலில் ஈடுபட்டு தப்பிச் செல்ல திட்டமிட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இங்கு குற்றச் செயல்களில் ஈடுபட்ட திருநெல்வேலி, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 43 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு தினமும் பள்ளி வகுப்புகள், தொழிற் பயிற்சி உள்ளிட்டவை நடத்தப்படுகிறது. மாலையில் சீர்திருத்த பள்ளி வளாகத்தில் விளையாடுவது வழக்கம்.

    நேற்று மாலை விளையாட்டு நேரம் முடிந்ததும் சிறுவர்கள் அனைவரையும் அவர்களது அறைக்கு செல்லுமாறு ஆசிரியர் விஜயசாரதி, ஓவிய ஆசிரியர் சுரேஷ்குமார் ஆகியோர் கூறினர்.

    ஆனால் சிறுவர்கள் அறைக்கு செல்ல மறுத்து ஆசிரியர்களிடம் வாக்கு வாதம் செய்தனர். திடீரென அவர்கள் இரும்பு கம்பி, கிரிக்கெட் மட்டையால் ஆசிரியர்கள் சுரேஷ் குமார், விஜயசாரதியை சரமாரியாக தாக்கினர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி துளசி ராமன் உள்ளிட்ட காவலாளிகள் சிறுவர்களை தடுக்க முயன்றனர். அவர்களையும் தாக்கினர்.

    இதில் ஆசிரியர்கள் சுரேஷ்குமார், விஜயசாரதி, காவலாளி துளசி ராமன் ஆகியோரது மண்டை உடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் கண்காணிப்பாளர் ரத்தினம் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட சிறுவர்களை எச்சரித்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

    படுகாயம் அடைந்த சுரேஷ்குமார் உள்பட 3 பேருக்கும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சீர்த்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மோதலில் ஈடுபட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. உடனடியாக காவலாளிகள், அதிகாரிகள் பார்த்ததால் அவர்களது திட்டம் நிறைவேறவில்லை.

    இதே போல் கடந்த 3 மாதம் முன் ஆசிரியர், காவலாளிகள் மீது சிறுவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து தாக்குதல் சம்பவம் நடந்து வருவதால் சீர்திருத்தப் பள்ளியில் பணியில் இருக்கும் ஊழியர்கள் அச்சம் அடைந்து இருக்கிறார்கள்.

    இது குறித்து ஊழியர் ஒருவர் கூறும்போது, “கொடிய குற்றம் செய்த சிறுவர்களும், சாதாரண குற்றம் செய்த சிறுவர்களும் ஒரே இடத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் தப்பிப்பதற்காக ஊழியர்கள் மீது தாக்குதல் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

    Next Story
    ×