என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூலூர் அருகே மூதாட்டி கொலைக்கு சொத்து பிரச்சினை காரணமா?
- பாப்பம்மாளுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியான நிலையில் மூதாட்டி படுகொலை
- எதிர்தரப்பை சேர்ந்த சிலரிடம் போலீசார் தீவிர விசாரணை
கோவை,
கோவை கணியூர் கங்கா லட்சுமி தோட்டம் பகுதியை சேர்ந்த கணபதியப்பன் மனைவி பாப்பம்மாள் (வயது 72). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி க்கொன்றது.
இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட போது அவரது கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலி எதுவும் பறிக்கப்படவில்லை. பீரோவில் இருந்த தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் ஆகியவையும் கொள்ளை போகவில்லை. எனவே கொள்ளையர்கள் பணத்துக்காக மூதாட்டியை படுகொலை செய்யவில்லை என்பது தெரியவந்து உள்ளது.
தொடர்ந்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்களை கைப்பற்றி, அவற்றில் இடம் பெற்று உள்ள காட்சிப்ப திவுகளை ஆய்வுசெய்து பார்த்தனர். இதில் மூதாட்டியை கொன்றவர்கள் பற்றிய விவரம் கிடைக்கவில்லை.
எனவே சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன்பு மூதாட்டி வீட்டுக்கு வந்து சென்ற பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மூதாட்டி குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரித்தனர்.
பழனியப்பன் குடும்பத்தினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி பெயரில் சொத்து ஒன்றை வாங்கி உள்ளனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே மேற்கண்ட விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில் அந்த வழக்கில் பாப்பம்மாளுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தான் மூதாட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார். எனவே சொத்து விவகாரம் காரணமாக பாப்பம்மாள் கொல்லப்பட்டாரா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதனால் எதிர்தரப்பை சேர்ந்த சிலரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு வரவழைத்து, அவர்களிடமும் பாப்பம்மாள் கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






