என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீட்கப்பட்ட செல்போனை உரியவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ஒப்படைத்தார்.
தஞ்சையில், ரூ.8 லட்சம் மதிப்புள்ள 55 செல்போன்கள் மீட்பு
- ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் உறுதிப்படுத்திய பிறகு போலீசார் மீட்டனர்.
- சந்தேகப்படும் படி யாராவது செல்போனை விற்க வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும்.
தஞ்சாவூர்:
தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், பெரிய கோவில் உள்பட மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல், திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட நபர்கள் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் காணாமல் மற்றும் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மாயமான செல்போ ன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் தேடும் பணியை தொடங்கினர். மேலும் பல்வேறு நவீன தொழில்நு ட்பத்தை பயன்படுத்தியும் செல்போனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
அப்போது சம்பந்தப்பட்ட செல்போன்கள் தஞ்சை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் சிலர் ஏற்கனவே கடைகளில் வாங்கி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளுக்கு சென்று செல்போன்களை போலீசார் மீட்டனர். சந்தேகப்படும் படி யாராவது செல்போனை விற்க வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தினர்.
மேலும் சில செல்போன்கள் தஞ்சை மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள பகுதிகளை சேர்ந்த சிலர் பயன்படுத்தியதும் தெரியவந்தது. அதனை ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் உறுதிப்படுத்திய பிறகு போலீசார் மீட்டனர்.
சில செல்போன்களை கீழே கிடந்ததாக பொதுமக்கள் சிலர் போலீசிடம் ஒப்படைத்தனர். இவ்வாறாக பொதுமக்களால் தவறவிட்டு, புகார் பெற்று ரூ.8 லட்சம் மதிப்புள்ள 55 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.
இன்று அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரா முன்னிலையில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.
அப்போது அவர், கஷ்டப்பட்டு செல்போன்கள் வாங்குகிறீர்கள். அதனை சரியான முறையில் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள். கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் கவனமாக செல்போன் மட்டுமின்றி உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.






