என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் நகை திருடிய சிகை அலங்கார நிபுணர் கைது
- திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலகுமார் 3 பவுன் நகைகளை திருடியுள்ளார்.
- தீபக் கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
சரவணம்பட்டி,
கோவை கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் தீபக் (32). ஷிப்பிங் கம்பெனி ஊழியர். இவருக்கும் அமிர்தா என்ற பெண்ணுக்கும் கடந்த 1-ந் தேதி கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.
பின்னர் கடந்த 2-ந் தேதி கோவை குரும்பபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மணமக்களுக்கு சிகை அலங்காரம் செய்வதற்காக தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த பாலகுமார் (32)என்பவர் வந்திருந்தார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் அனைவரும் வீட்டிற்கு சென்றனர். வீட்டிற்கு சென்ற தீபக் தான் வைத்திருந்த கைப்பையை பார்த்தார். அப்போது அதில் வைத்திருந்த கைச்செயின், மோதிரம் உள்ளிட்ட 3 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.
இதனால் அதிர்ச்சியான அவர் சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் மணமக்களுக்கு சிகை அலங்காரம் செய்ய வந்த பாலகுமார் என்பவர் தான் நகையை திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து வாலிபரை தேடினர். இந்த நிலையில் கோவையில் பதுங்கி இருந்த பாலகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 3 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.






