search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிற்பகல் நேரங்களில் நெல்லையில் இருந்து ஆத்தூருக்கு வழக்கம் போல் அரசு பஸ்களை இயக்க வேண்டும்-பயணிகள் கோரிக்கை
    X

    பிற்பகல் நேரங்களில் நெல்லையில் இருந்து ஆத்தூருக்கு வழக்கம் போல் அரசு பஸ்களை இயக்க வேண்டும்-பயணிகள் கோரிக்கை

    • பிற்பகல் 12.30 மற்றும் 1.15 மணிக்கு மணிக்கு புறப்படும் பஸ்கள் கடந்த ஒரு மாதமாக சரியாக இயக்கப்படவில்லை
    • வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் பஸ்கள் வருவதே கிடையாது.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் நெல்லையின் புறநகர் பகுதிகளுக்கு மட்டுமின்றி தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் பஸ்கள் சென்று வருகிறது. இதனால் புதிய பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூருக்கு காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் பஸ்கள் சென்று வருகிறது. செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த பஸ்கள் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் பிற்பகல் 12.30 மற்றும் 1.15 மணிக்கு மணிக்கு புறப்படும் பஸ்கள் கடந்த ஒரு மாதமாக சரியாக இயக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். நேற்றும் பிற்பகலில் இந்த பஸ்கள் வரவில்லை. இதனால் அந்த பஸ்சுக்காக காத்திருந்த ஏராளமான பயணிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் புதிய பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    இது தொடர்பாக ஆத்தூர் பயணிகள் கூறியதாவது:-

    நாங்கள் ஆத்தூரில் இருந்து பல்வேறு காரணங்களுக்கு நெல்லைக்கு காலையில் வருவோம். பின்னர் எங்கள் பணிகள் முடிந்த பின்னர் மதியம் மீண்டும் பிற்பகல் 12.30 மணிக்கு செல்லும் பஸ்சில் புறப்பட்டு செல்வோம். அந்த பஸ்சை விட்டால் அதன்பின்னர் 1.15 மணிக்கு செல்லும் அரசு பஸ்சில் ஆத்தூர் செல்வோம். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்த 2 பஸ்களும் சரிவர இயக்கப்படவில்லை.

    குறிப்பாக வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பஸ்கள் வருவதே கிடையாது. இது குறித்து போக்குவரத்துதுறை அதிகாரிகளிடம் கேட்டால் சரியாக பதில் அளிப்பதில்லை. மதியம் 12 மணிக்கு புதிய பஸ் நிலையம் வந்தால் இந்த 2 பஸ்களும் வராததால் அங்கேயே கால்கடுக்க காத்திருந்து அடுத்து 2.30 மணிக்கு ஆத்தூர் செல்லும் பஸ்சில்தான் செல்ல வேண்டி உள்ளது.

    சில நேரங்களில் அந்த பஸ்சும் வராது. இதனால் மாலை 4 மணிக்கு செல்லும் பஸ்சில் ஊருக்கு புறப்பட்டு செல்வோம். இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பயணிகள் நலன் கருதி, முன்பு போல 12.30 மற்றும் 1.15 மணிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை சீரான முறையில் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×