என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு அழுகிய பயிர்களுடன் மனு கொடுக்க வந்த விவசாயிகள்
    X

    அழுகிய பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த விவசாயிகள்.

    நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு அழுகிய பயிர்களுடன் மனு கொடுக்க வந்த விவசாயிகள்

    • நெல்லை மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது
    • மானூர் சுற்றுவட்டார பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவித்து நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.

    அழுகிய நெற் பயிர்கள்

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மானூர் ஒன்றிய செயலாளர் ஆபிரகாம் தலைமையில் ஏராளமான விவசாயிகள் அழுகிய நெற் பயிர்களுடன் வந்து திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மானூர் சுற்றுவட்டார பகுதியில் உளுந்து நெற்பயிர்கள் ஏராளமான ஏக்கரில் பயிரிட்டுள்ளோம். இதற்கு பயிர் காப்பீடும் செய்துள்ளோம். இந்த பகுதியில் மழையை நம்பியே விவசாயிகள் காத்திருக்கிறார்கள். தற்போது வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் குளங்கள் நிரம்பவில்லை.

    இதனால் பயிர்கள் கருகி உள்ளது. எனவே மானூர் சுற்றுவட்டார பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவித்து நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையையும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்து மக்கள் கட்சி

    இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மாரியப்பன், தென்மண்டல தலைவர் ராஜா பாண்டியன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து ஒரு மனு கொடுத்தனர்.

    அதில் கூறியிருப்ப தாவது:-

    இந்து மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் குருமூர்த்தி மீது அம்பேத்கர் சிலைக்கு காவி பூசியதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை நாங்கள் கண்டிக்கிறோம்.

    இந்து அமைப்பு தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    ஓய்வூதியம்

    பேட்டை ரகுமான் பேட்டை ஆர்.பி. 1-வது தெருவை சேர்ந்த பல்கிஸ் பேகம் (வயது 63) என்பவர் கொடுத்த மனுவில், தமிழக அரசின் விதவை ஆதரவற்றோர் ஓய்வூதியம் பெறுவதற்காக நான் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் சில அதிகாரிகள் எனக்கு ஓய்வூதியம் பெற தகுதியில்லை என போன் மூலம் தெரிவித்தனர். பொதுவாக ஆதரவற்ற முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பித்தவர்களுக்கு வீடுகளுக்கு நேரில் வந்து அதிகாரிகள் ஆய்வு செய்து, வறுமை கோட்டிற்கு கீழ் இல்லாதவர்களை நிராகரிப்பார்கள். ஆனால் எனது வீட்டிற்கு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்யாமலேயே எனது மனுவை நிராகரித்துள்ளனர். இன்று மனு கொடுக்க வருவதை அறிந்த பின்னர் சில அதிகாரிகள் என்னிடம் சமாதானம் பேசி மீண்டும் விண்ணப்பித்தால் உதவித்தொகை பெற நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தனர்.

    எனவே விதவை ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    Next Story
    ×