என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் விவசாய குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் ரூபாய் நோட்டை மாலையாக அணிந்து வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், இணை இயக்குனர் (விவசாயம்) விஸ்வநாதன் (பொறுப்பு) உள்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை குறித்து மனுக்கள் கொடுத்தனர்.

    இதில் விவசாயிகள் சங்க பிரதிநிதி பழனிச்சாமி பேசும்போது,

    கரும்பு நிலுவை தொகையை விரைவில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். சிறு குறு விவசாயிகளின் பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய அரசு கூறி உள்ளது.

    ஆனால் பணத்தை கட்ட வேண்டும் என்று வங்கிகளில் இருந்து நோட்டீஸ் வருகிறது. இதற்கு தீர்வு ஏற்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    மற்றொரு விவசாய சங்க பிரதிநிதி கணபதி கூறும்போது,

    அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக ஏலம் நடப்பதை போல, பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலும் மறைமுக ஏலம் நடக்க முயற்சி செய்ய வேண்டும். விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்க மரம் வெட்டப்படும் போது விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினார்.

    கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது மக்கள் மன்ற அமைப்பாளர் செல்லப்பன் கழுத்தில் ரூபாய் (ஜெராக்ஸ்) மாலை அணிந்து உள்ளே நுழைந்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பாதுகாவலர்கள் தடுத்து வெளியேற்றினர்.இதுபற்றி செல்லப்பன் கூறும்போது,

    ‘‘இந்திய கருப்பு பணம் வெளிநாடுகளில் 40 லட்சம் கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை மீட்டு விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்’’ என்று கூறினார்.

    கர்நாடகாவிலிருந்து சத்தியமங்கலம் பகுதியில் கஞ்சா கடத்தி விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியையொட்டி உள்ள டி.என்.பாளையம், பெரும்பள்ளம் அணை, கே.என்.பாளையம், டி.ஜி. புதூர், சிக்கரசம் பாளையம், ராஜன் நகர், பண்ணாரி ஆகிய பகுதிகளில் முன்பு மர்ம பேர் வழிகள் கஞ்சா கடத்தி விற்று வந்தனர்.

    இதனால் பலர் கஞ்சாவுக்கு அடிமையாகும் சூழ்நிலையும் உருவானது. இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கி கஞ்சா கடத்தல் பேர் வழிகளை பிடித்து சிறையில் தள்ளினர் மேலும் சிலரை விரட்டியடித்தனர்.

    போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் கஞ்சா விற்பது மிகவும் குறைந்தது. முக்கிய கஞ்சா புள்ளிகளை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து ஒரு ஆண்டு ஜெயிலிலும் அடைத்தனர்.

    இப்போது மீண்டும் கஞ்சா கடத்தல் கும்பல் தலை தூக்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி சத்தியமங்கலம் பகுதியில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி பங்களாபுதூர் போலீசார் சாட்டையை கையில் எடுத்தனர். பல்வேறு பகுதிகளில் அதிரடி விசாரணை நடத்தினர். கஞ்சா பேர் வழிகளை தேடி வந்தனர்.

    கே.என்.பாளையம் நரசாபாளையம மினியப்பன் கோவில் அருகில் உள்ள 2 பெண்கள் கஞ்சா சப்ளை செய்ததை கண்டனர்.

    இதை கண்டதும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதில் ஒரு பெண் 1½ கிலோ கஞ்சாவை தூக்கி வீசி விட்டு ஓட்டம் பிடித்தார். போலீசார் விடாமல் விரட்டினர். இதில் ஒரு பெண் மட்டும் சிக்கினார். அவர் பெயர் கருப்பாயாள் (65). நரசாபுரம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. போலீசார் கருப்பாயாளை கைது செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய இதே பகுதியை சேர்ந்த சரசாள் மற்றும் 2 பேர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கைது செய்யப்பட்ட கருப்பாயாள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    பெண்களே கஞ்சா கடத்தி விற்று வரும் சம்பவம் டி.என்.பாளையம், பங்களாபுதூர், சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பள்ளிபாளையத்தில் குடிசை வீட்டுக்குள் தனியார் பஸ் புகுந்ததால் தாயும்–மகனும் உயிர் தப்பினார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள பள்ளிபாளையத்தில் கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே ரோட்டையொட்டி குடிசை வீடுகள் உள்ளன.

    இன்று காலை ராசிபுரத்தில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு தனியார் பஸ் வந்துகொண்டு இருந்தது. காலை 7.30 மணி அளவில் பள்ளி பாளையம் அரசு போக்குவரத்து கழக அலுவலகம் அருகே வந்த போது பஸ் திடீர் என்று டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி ரோட்டோரம் உள்ள ஒரு குடிசை வீட்டுக்குள் புகுந்தது.

    அந்த குடிசையில் வீரம்மாள் என்ற பெண் தனது மகன் சண்முகத்துடன் (வயது 35) வசித்து வருகிறார். இருவரும் கூலி தொழிலாளர்கள்.

    இவர்கள் இருவரும் காலையிலேயே வேலைக்கு சென்று விட்டதால் அதிர்ஷ்வசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

    பஸ்சை ஓட்டி வந்த தங்கராஜ் (வயது 30) என்பவர் கண்ணாடி உடைந்து காயம் அடைந்தார். மேலும் பஸ்சில் இருந்த பயணிகளும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    பஸ் திடீர் என்று குடிசை வீட்டுக்குள் புகுந்ததால் பஸ்சில் இருந்த 40 பயணிகள் அதிர்ச்சியடைந்து கூக்குரலிட்டனர்.

    அப்பகுதியில் இதேபோல அடிக்கடி விபத்து நடந்து வருகிறது என்றும் இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிபாளையம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பஸ் வீட்டுக்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு நகரில் கைவரிசை காட்டிய மோட்டார் சைக்கிள் திருடும் கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு நகரில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு நடந்து வந்தது. கடைக்கு போய்விட்டு திரும்பி வரும்போது வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மாயமானது.

    இதேபோல் பொது இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களும் திருட்டு போய் வந்தது.

    தொடரும் இந்த இருசக்கர வாகன திருட்டை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரூபேஷ்குமார் மீனா உத்தரவின் பேரில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் மேற்பார்வையில் 6 பேர் கொண்ட தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையில் ஏட்டுகள் ஆனந்த்குமார், ராமதாஸ், தேவராஜ், சின்னசாமி, முதுநிலை காவலர்கள் செந்தில்குமார், பொன்னுசாமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் நகரின் பல்வேறு இடங்களில் அதிரடி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று ஈரோடு சம்பத் நகர் உழவர்சந்தை அருகே ஒருவன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தான். தனிப்படை போலீசார் அவனை பிடித்து விசாரித்த போது ஈரோட்டில் பல இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடி வந்தவன் என தெரியவந்தது.

    போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவனது 2 கூட்டாளிகளும் பிடிபட்டனர். மொத்தம் 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 19 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் சூரம்பட்டியை சேர்ந்த பழனிசாமி (32), மணியழகன் (27) கோவை குனியமுத்தூரை சேர்ந்த மன்சூர் (23) ஆவர்கள்.

    மேலும் இவர்கள் பல இடங்களில் கைவரிசை காட்டி மோட்டார் சைக்கிள்களை திருடி உள்ளார்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிடிபட்டவர்கள் குறித்தும் அவர்கள் எங்கெல்லாம் கைவரிசை காட்டி உள்ளனர் என்று குறித்தும் துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் நிருபர்களிடம் கூறினார்.

    அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், கார்த்திகேயன், ஈஸ்வரன், ரவிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து அடைமழை பெய்து வருகின்றது.

    ஈரோடு,

    தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதையொட்டி பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் ஆதிக்கம் செலுத்தியது. மாலை 3 மணிக்கு மேல் திடீரென மேகக் கூட்டங்கள் சூழ்ந்தது.

    இதையொட்டி ஈரோடு, மொடக்குறிச்சி, பவானி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    தொடர்ந்து இரவிலும் மழை விட்டு விட்டு பெய்தது.

    ஈரோட்டில் நெற்று இரவு பெய்த மழை இன்று காலையும் பெய்தது. வானம் மேகக் கூட்டங்களால் சூழ்ந்து இருள் போல் காணப்பட்டது.

    அதிகாலையில் இருந்தே மழை தூறிக் கொண்டே இருந்தது. நகரின் ஒரு சில பகுதிகளில் மழை வலுத்து பெய்தது.

    இதே போல் கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான பாரியூர், கொளப்பலூர், சிறுவலூர், நம்பியூர், கவுந்தப்பாடி ஆகிய பகுதிகளிலும் இன்று காலையில் இருந்தே மழை தூறிக் கொண்டே இருந்தது.

    இதே போல் சத்தியமங்கலம், பவானிசாகர், பு.புளியம்பட்டி, மற்றும் பண்ணாரி, ஆசனூர், தளவாடி ஆகிய வனப்பகுதிகளிலும் மழை அடைமழை போல் பெய்தது.

    மாவட்டத்தில் சென்னிமழை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் அதிகபட்சமாக 20 மி.மீட்டர் மழை கொட்டியது.

    சென்னிமலையில் இன்று காலையும் மழை தூறிக்கொண்டே இருந்தது.

    பெருந்துறை மற்றும் விஜயமங்கலம், ஈங்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் இன்று காலையில் பொதுமக்கள் வெளியே போக வைக்காத வகையில் அடைமழை சிறை வைத்தது.

    மேலும் கொடுமுடி, அந்தியூர், ஆப்பக்கூடல், டி.என்.பாளையம் உள்பட ஈரோடு மாவட்டம் முழுவதும் அடைமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    பவானி சாகர் அணை நிரம்ப வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக உள்ளது பவானி சாகர் அணை.

    கடந்த 2 மாதமாகவே பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இறங்கு முகமாகவே உள்ளது. கடந்த ஒரு வாரம் மட்டும் அணையின் நீர் மட்டம் 41 அடியாக உள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 41.20 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 313கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்கு ஆற்றில் வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இந்த நிலையில் பவானி சாகர் அணைக்கு அதிகப்படியாக தண்ணீர் வர வேண்டியும், அணை விரைவில் நிரம்ப வேண்டியும் பவானிசாகர் அணையில் மேல் பகுதியில் கலச விளக்கு வேள்வி பூஜை வழிபாடு நடந்தது. இந்த சிறப்பு யாக வழிபாட்டில் பவானி சாகர் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களும், ஏராளமான விவசாயிகளும் கலந்து கொண்டு வருண பகவானை மனமுருகி வேண்டி வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்ட ஆதிபராசக்தி இயக்க மாவட்ட தலைவர் கே.எஸ்.ஜெகதீசன் தலைமையில் இந்த யாக வழிபாடு நடந்தது.

    சென்னிமலையில் 1000 ரூபாய்க்கு பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டது உண்மைதானா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    கடலூரை சேர்ந்தவர் கடந்த 3 மாதமாக தனது 6 வயது மகள் காளீஸ்வரியுடன் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    இவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தனது மனைவி உடல்நலம் இல்லாமல் இறந்து விட்டதாகவும், தனது ஊரில் சரியான வேலை கிடைக்காததால் பிழைப்பு தேடி சென்னிமலைக்கு வந்ததாகவும் கூறி உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் சென்னிமலையில் கறிக்கடை நடத்தி வரும் அப்புக்குட்டியிடம் வந்து தனக்கு போதிய வேலை இல்லை. அதனால் சரியான சம்பளம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நான் அவசரமாக ஊருக்கு செல்ல வேண்டி உள்ளது.

    எனவே செலவுக்கு ரூ. 1000 கொடுங்கள். ஒரே நாளில் திரும்பி வந்து உங்களது பணத்தை கொடுத்து விடுகிறேன். அதுவரை எனது மகள் காளீஸ்வரியை பத்திரமாக பார்த்துகொள்ளுங்கள். பணத்தை கொடுத்து விட்டு எனது மகளை மீட்டு செல்கிறேன் என்று கூறினார்.

    இதை நம்பி பரிதாபப்பட்ட கறிக்கடைக்காரர் அப்புக்குட்டியும் ரூ. 1000 த்தை அவரிடம் கொடுத்து சீக்கிரம் வந்து உங்களது பெண் குழந்தையை வாங்கி செல்லுங்கள் என்று கூறினார்.

    பணத்தை பெற்று கொண்டு சென்ற அவர் 3 நாட்களாகியும் திரும்பி வரவில்லை.

    இது பற்றிய தகவல் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளருக்கு கிடைத்தது. அவர் உடனே சம்பவ இடத்துக்கு சென்று அப்புக்குட்டியிடம் இருந்த காளீஸ்வரியை மீட்டு ஈரோடு கொள்ளுக்காட்டு மேட்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைததார்.

    குழந்தையை விட்டு சென்ற அவரை பற்றி எந்த தகவலும் இல்லை. அவர் எந்த ஊரைசேர்ந்தவர் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    மேலும் குழந்தை காளீஸ்வரி அவரது குழந்தைதானா? அலலது வேறு எங்காவது குழந்தையை திருடி வந்து ரூ. 1000 க்கு குழந்தையை விற்று சென்றாரா? என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

    குழந்தை காளீஸ்வரி பற்றி தகவல் தெரிந்தவர்கள் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் சொல்லலாம் என்று சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஜெகன்ராஜ் கூறி உள்ளார்.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏறியவர் தவறி விழுந்து பலியானார். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் திருவேடத்தூர் ஜம்முடாண்டி நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 45).

    ஈரோடு வந்த இவர் சேலம் செல்வதற்காக ஈரோடு ரெயில் நிலையம் வந்தார். 3-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது சேலம் செல்லும் ரெயில் 3-வது பிளாட் பாரத்தில் வந்து நின்றது. அந்த ரெயில் புறப்பட்டது.

    இதை கண்ட ராஜேஷ் ஓடி சென்று ஓடும் ரெயிலில் ஏற முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக இடறி கீழே விழுந்து விட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் அருகே சத்தி-அத்தாணி ரோட்டில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர், கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    சத்தியமங்கலம்:

    நாமக்கல்லிலிருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

    இந்த லாரி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சத்தி-அத்தாணி ரோட்டில் அதிகாலை வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    லாரி கவிழ்ந்த இடம் அருகே தனியார் கல்லூரி உள்ளது. அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்தால் நல்ல வேளையாக அந்த வழியாக யாரும் நடந்து செல்லவில்லை.

    இந்த திடீர் விபத்தில் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு போக்குவரத்து போலீசார் விரைந்தனர். அவர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சத்தியிலிருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த லாரி மீட்கப்பட்டது.

    இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
    கோபி அருகே பள்ளி கட்டிடம் பழுதானதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள புதுவள்ளியாம் பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்து இருப்பதாகவும் புதிய கட்டிடம் கட்டக்கோரியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

    இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) குழந்தைகளுடன் பள்ளிக்கு வந்த பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது

    இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை அடுத்து பெற்றோர் தங்களது முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். மாணவ-மாணவிகள் இதையடுத்து பள்ளிக்கு சென்றனர்.
    நசியனூர் அருகே கரும்பு காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு ஏக்கர் கரும்பு காடு தீயில் எரிந்து நாசமனது.
    பெருந்துறை:

    நசியனூர் அருகே உள்ள தொட்டிபாளையம் மனக்காட்டில் ஜெகநாதன் (வயது 40) என்பவருக்கு சொந்தமான கரும்புக்காடு உள்ளது. இவரது கரும்புக்காட்டுக்கு அருகில் உள்ள கரும்பு காட்டில் உள்ள கரும்பு சோகைக்கு தீ வைக்கப்பட்டது.

    அப்போது வீசிய பலத்த காற்று காரணமாக இதில் இருந்த பறந்த தீப்பொறி ஜெகநாதன் கரும்பு காட்டுக்குள் விழுந்தது. இதனால் அவரது கரும்பு காட்டில் தீ விபத்து ஏற்பட்டது. பலத்த காற்று காரணமாக தீ மளமள என்று பிடித்து எரிந்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் பெருந்துறை தீயணைப்பு வீரர்கள் அதிகாரி பாஸ்கரன் தலைமையில் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இருப்பினும் ஒரு ஏக்கர் கரும்பு காடு தீயில் எரிந்து நாசமனது.
    ஈரோட்டில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 24–ந்தேதி நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மாதம் தோறும் வேளாண் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

    இதில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து விவசாயிகள் தங்கள் குறைகளை கூறுவார்கள். மனுக்களும் கொடுப்பார்கள்.

    அதே போல் ஜுன் மாதத்துக்கான வேளாண் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    11மணி முதல் 11..30 மணி வரை மனுக்கள் கொடுக்கலாம். 11.30மணி முதல் 12.30 வரை விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்கள் பகுதி பிரச்சனைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

    பிற்பகல் 12.30மணி முதல் 1.30மணி வரை அலுவலர்களின் விளக்கங்கள் தெரிவிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறி உள்ளார்.
    ×