என் மலர்
செய்திகள்

பவானி சாகர் அணை நிரம்ப வேண்டி சிறப்பு யாகம்
பு.புளியம்பட்டி:
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக உள்ளது பவானி சாகர் அணை.
கடந்த 2 மாதமாகவே பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இறங்கு முகமாகவே உள்ளது. கடந்த ஒரு வாரம் மட்டும் அணையின் நீர் மட்டம் 41 அடியாக உள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 41.20 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 313கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்கு ஆற்றில் வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்த நிலையில் பவானி சாகர் அணைக்கு அதிகப்படியாக தண்ணீர் வர வேண்டியும், அணை விரைவில் நிரம்ப வேண்டியும் பவானிசாகர் அணையில் மேல் பகுதியில் கலச விளக்கு வேள்வி பூஜை வழிபாடு நடந்தது. இந்த சிறப்பு யாக வழிபாட்டில் பவானி சாகர் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களும், ஏராளமான விவசாயிகளும் கலந்து கொண்டு வருண பகவானை மனமுருகி வேண்டி வழிபட்டனர்.
ஈரோடு மாவட்ட ஆதிபராசக்தி இயக்க மாவட்ட தலைவர் கே.எஸ்.ஜெகதீசன் தலைமையில் இந்த யாக வழிபாடு நடந்தது.






