என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னிமலையில் 1000 ரூபாய்க்கு பெண் குழந்தை விற்பனையா?
    X

    சென்னிமலையில் 1000 ரூபாய்க்கு பெண் குழந்தை விற்பனையா?

    சென்னிமலையில் 1000 ரூபாய்க்கு பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டது உண்மைதானா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    கடலூரை சேர்ந்தவர் கடந்த 3 மாதமாக தனது 6 வயது மகள் காளீஸ்வரியுடன் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    இவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தனது மனைவி உடல்நலம் இல்லாமல் இறந்து விட்டதாகவும், தனது ஊரில் சரியான வேலை கிடைக்காததால் பிழைப்பு தேடி சென்னிமலைக்கு வந்ததாகவும் கூறி உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் சென்னிமலையில் கறிக்கடை நடத்தி வரும் அப்புக்குட்டியிடம் வந்து தனக்கு போதிய வேலை இல்லை. அதனால் சரியான சம்பளம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நான் அவசரமாக ஊருக்கு செல்ல வேண்டி உள்ளது.

    எனவே செலவுக்கு ரூ. 1000 கொடுங்கள். ஒரே நாளில் திரும்பி வந்து உங்களது பணத்தை கொடுத்து விடுகிறேன். அதுவரை எனது மகள் காளீஸ்வரியை பத்திரமாக பார்த்துகொள்ளுங்கள். பணத்தை கொடுத்து விட்டு எனது மகளை மீட்டு செல்கிறேன் என்று கூறினார்.

    இதை நம்பி பரிதாபப்பட்ட கறிக்கடைக்காரர் அப்புக்குட்டியும் ரூ. 1000 த்தை அவரிடம் கொடுத்து சீக்கிரம் வந்து உங்களது பெண் குழந்தையை வாங்கி செல்லுங்கள் என்று கூறினார்.

    பணத்தை பெற்று கொண்டு சென்ற அவர் 3 நாட்களாகியும் திரும்பி வரவில்லை.

    இது பற்றிய தகவல் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளருக்கு கிடைத்தது. அவர் உடனே சம்பவ இடத்துக்கு சென்று அப்புக்குட்டியிடம் இருந்த காளீஸ்வரியை மீட்டு ஈரோடு கொள்ளுக்காட்டு மேட்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைததார்.

    குழந்தையை விட்டு சென்ற அவரை பற்றி எந்த தகவலும் இல்லை. அவர் எந்த ஊரைசேர்ந்தவர் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    மேலும் குழந்தை காளீஸ்வரி அவரது குழந்தைதானா? அலலது வேறு எங்காவது குழந்தையை திருடி வந்து ரூ. 1000 க்கு குழந்தையை விற்று சென்றாரா? என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

    குழந்தை காளீஸ்வரி பற்றி தகவல் தெரிந்தவர்கள் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் சொல்லலாம் என்று சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஜெகன்ராஜ் கூறி உள்ளார்.

    Next Story
    ×