என் மலர்tooltip icon

    ஈரோடு

    திம்பம் மலைப்பாதையில் நள்ளிரவில் ரோட்டில் சிறுத்தைகள் நடமாடுவதால் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் என அறிவுறுத்தி உள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் வனப்பகுதி திம்பம் மலைப்பாதையில் குரங்குகள் மற்றும் அவ்வப்போது மான்கள் நடமாட்டம் இருக்கும். இந்த நிலையில் தான் திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக நடமாட தொடங்கியது.

    திம்பம் வன சோதனைச்சாவடி ஊழியர் கிருஷ்ணன் உள்பட 3 பேரை சிறுத்தை கொன்றது. இதனால் ஏற்பட்ட உச்சகட்ட பீதியில் வனத் துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். மாலை 6 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதித்தனர்.

    நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் எக்காரணம் கொண்டும் இறங்க வேண்டாம் என வனத் துறையினர் எச்சரித்தனர். இந்த விழிப்புணர்வு மூலம் சிறுத்தைகளின் தாக்குதலில் இருந்து மக்கள் தப்பினர்.

    இந்த நிலையில் திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைகளின் நடமாட்டம் குறைந்திருந்தது. எனினும் தொடர்ந்து காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் திம்பம் மலை பாதையில் இரு சக்கர வாகனங்களுக்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திம்பம் மலைப் பாதையில் நள்ளிரவு சிறுத்தைகள் நடமாட்டத்தை வாகன ஓட்டிகள் பார்த்து உள்ளனர்.

    கடந்த 25-ந் தேதி கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு ஒரு குடும்பத்தினர் காரில் சென்று உள்ளனர். இவர்கள் நள்ளிரவு 11.30 மணிக்கு திம்பம் மலைப் பாதை 24-வது சுற்றில் சென்ற போது மலையின் மேற்புற பகுதியில் விருட்டென்று ஒரு சிறுத்தை ரோட்டில் பாய்ந்து மலையின் கீழ் பகுதிக்கு ஓடியதை கண்டு திடுக்கிட்டனர். இதனால் திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது மீண்டும் தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே வனத்துறையினர் ‘‘திம்பம் மலைப்பாதை தொடர்ந்து அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இரவு நேரத்தில் வாகனங்களை மலைப் பாதையில் நிறுத்த வேண்டாம். இயற்கை உபாதை கழிக்க கூட யாரும் வண்டியை விட்டு இறங்க வேண்டாம்’’ என அறிவுறுத்தி உள்ளனர்.
    ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டு மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இப்போது மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பலர் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை ஈரோடு நேதாஜி மார்க்கெட்டுக்கு உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அதிகாரி கருணாநிதி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் பூபாலன், சுகாதார ஆய்வாளர் நல்லசாமி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முருகன், முத்து கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் வந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    நேதாஜி மார்க்கெட்டில் உள்ள மொத்தம் 5 குடோன்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு எத்தனால் கெமிக்கல் மூலம் மாம்பழங்கள் தவறான முறையில் பழுக்க வைக்கப்பட்டது தெரிய வந்தது. இப்படி எத்தனால் கெமிக்கல் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழங்களை அதிகாரிக்ள பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம்.

    ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டு மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் கருணாநிதி கூறும்போது, ‘‘மாம்பழங்களை பழுக்க வைக்க சில வழிமுறைகள் உள்ளன. ஆனால் சிலர் ‘ஸ்பிரே’ அடித்து பழுக்க வைக்கிறார்கள். அப்படி செய்யக்கூடாது. ஸ்பிரே அடித்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிட்டால் வயிற்று வலி, அல்சர் போன்ற நோய்கள் வரும்’’ என்று கூறினார்.

    பறிமுதல் செய்யப்பட்ட 5 டன் மாம்பழங்களையும் அதிகாரிகள் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அழித்தனர்.

    மேலும் அவர் கூறும்போது, இதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை மாநகராட்சி அதிகாரிகள் அழித்து விடுவார்கள். இப்படி தவறான முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார்.

    ஆய்வு செய்த பிறகு வெளியே வந்தபோது, அங்கு 2 டீ கடைகளில் பலகாரங்களை திறந்த வெளியில் வைத்து விற்பனை செய்ததை கண்ட அலுவலர் கருணாநிதி அந்த கடைகாரர்களுக்கு அறிவுரை கூறினார்.

    இப்படி திறந்த வெளியில் பலகாரங்களை விற்க கூடாது. கண்ணாடி பேழைக்குள் பலகாரங்களை வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
    மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதலில் சாயப்பட்டறை தொழிலாளி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    ஈரோடு:

    சென்னிமலை அடுத்த உப்பிலிபாளையத்தை சேர்தவர் மோகனசாமி (வயது 46) இவர் சிப்காட் பகுதியில் உள்ள சாய ஆலையில் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு சிப்காட்யில் உள்ள கம்பெனிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார் அப்போது ஈங்கூர் கவுண்டனூர் காலனியினை சேர்ந்த இளைஞர் வடிவேல் என்பவர் பைக்கில் வந்து மோகனசாமி மீது மோதியதாக கூறப்படுகிறது.

    இதில் மோகனசாமி பலத்த காயத்துடன் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலை இறந்து விட்டார்.

    இது குறித்து சென்னிமலை போலீஸார் விசாரனை நடத்தினர். இறந்த மோகனசாமிக்கு சுபாஷ் என்ற மகன் உள்ளார் இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். மனைவி ஜோதி மணி இவரிடம் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்.

    சித்தோடு அருகே வாகனத்தை நிறுத்தி பணம் பறிக்க முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோவை மாவட்டம், குனிய முத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சலீம் பாட்ஷா (வயது 33). கால்நடை வியாபாரியான இவர் கர்நாடக மாநிலம், மாண்டியாயில் 9 எருமைகளை வாங்கி ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கோவை திரும்பிக் கொண்டிருந்தார். வாகனத்தை இம்ரான் ஓட்டிச் சென்றார்.

    சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு புறவழிச்சாலை அருகே சென்ற போது, இவர்களின் வாகனத்தை ஜீப்பில் வந்த ஒரு கும்பல் வழி மறித்து நிறுத்திய தோடு, மாடுகளுடன் செல்ல வேண்டுமானால் பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளது.

    அப்போது அந்த வழியே ரோந்து சென்ற சித்தோடு போலீசார் சென்று விசாரித்த போது, பணம் கேட்டு மிரட்டிய அக்கும்பல் தப்பி ஓட முயன்றது.

    இதையடுத்து, போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். கடலூர் மாவட்டம், விருதாச்சலம் அடுத்த மங்கலம் பேட்டை கோவிலானூரை சேர்ந்த செந்தில் (38), ரமேஷ்குமார் (31), வினோத் வின்சென்ட் பவுல் (21), ராஜுலூ (28), உளுந்தூர் பேட்டை அஜிஸ் நகரைச் சேர்ந்த வின்னிக் குமார் (41) என்பது தெரிந்தது.

    இதையடுத்து, சலீம் பாட்ஷா கொடுத்த புகாரின் பேரில் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கொதிக்கும் ஆயில் கொட்டி 2 தொழிலாளிகள் பலியானர்கள். உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு நாராயண வலசில் உள்ள ஒரு ஆயில் மில்லில் கொதிகலனில் உள்ள கொதிக்கும் நீர் கொட்டி ஈஸ்வரமூர்த்தி மற்றும் ரவி ஆகிய 2 தொழிலாளர்களின் உடல் வெந்தது.

    இதில் 2 பேருமே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பலியான அந்தியூர் மைக்கேல்பாளையத்தை சேர்ந்த ரவியின் உறவினர்கள் 50 பேர் இன்று ஈரோடு- பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி முன் குவிந்தனர்.

    ‘‘இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது தான் கூடுதல் பணம் கேட்டனர். இதனால் தான் ரவியை கோவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தோம்’’ என்று கூறி ஆஸ்பத்திரி முன் பெருந்துறை ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்த பகுதியின் இருபுறமும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    சம்பவ இடத்துக்கு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு சம்பத், இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், ஈஸ்வரன் மற்றும் போக்குவரத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கொடிசெல்வன், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர்.

    அவர்கள் மறியல் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ‘‘ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் நடத்தக்கூடாது’’ என எச்சரித்தனர். பேச்சு வார்த்தைக்கு பிறகு மறியல் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். சுமார் 45 நிமிடத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    அம்மாபேட்டை 30-ந் தேதி மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    அம்மாபேட்டை மின் உபகோட்டம் சென்னம் பட்டி துணை மின் நிலையத்தில் வரும் 30-ந் தேதி (வியாழக்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    கண்ணாமூச்சி, கொமராயனூர், தொட்டிக்கிணறு, கிட்டம்பட்டி, முரளி புதூர், வெள்ளக்கரட்டூர், சனிச்சந்தை, விரலிக் காட்டூர், குருவரெட்டியூர், தொப்பபாளையம், பழையூர், கன்னப்பள்ளி, பொராவிபாளையம், குரும்பபாளையம், ஆழமரத் தோட்டம், தண்ணீர்பந்தல் பாளையம், ஜி.ஜி.நகர் மற்றும் சானாத்திக்கல் ஆகிய இடங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இத்தகவலை பவானி செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

    ஆப்பக்கூடல் அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அருகே உள்ள கீழ்வாணி நஞ்சுண்ட புரத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 35) விவசாய கூலி தொழிலாளி. இவரும் இவரது மனைவியும் ஒரு தோட்டத்து வேலைக்கு சென்று விட்டனர். மகள் பள்ளிக்கு சென்று விட்டார்.

    மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு மகள் வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    உடனே அவள் தன் பெற்றோரிடம் வி‌ஷயத்தை சொன்னாள். பெற்றோர் ஓடிவந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

    அப்போது வீட்டின் பீரோவும் திறந்து கிடந்தது. அதிலிருந்த 1½ பவுன் நகையை காணவில்லை.

    மர்ம ஆசாமிகள் யாரோ பட்டப்பகலில் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று நகையை திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காதல் திருமணம் செய்த ஜோடி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் தங்கராஜ் (வயது27). இவர் சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரின் மகள் சரண்யா (21). பி.எஸ்.சி. பட்டதாரி.

    சரண்யாவின் சகோதரர் சந்தோஷ் என்பவரும், தங்கராஜூம் நண்பர்கள் நண்பன் வீட்டுக்கு வந்த போது தங்கராஜிக்கும், சரண்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இது காதலாக மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு சரண்யா வீட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. எனினும் காதலை கைவிடாத காதல் ஜோடியினர் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு திண்டலுக்கு வந்தனர். அங்குள்ள விநாயகர் கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

    காதல் திருமணம் செய்த கையோடு காதல் தம்பதியினர் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு சத்தியமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    பவானி அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் தேடி வருகின்றனர்.

    பவானி:

    பவானி தேவபுரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார்.  இவரது மகள் ஹரிதா (வயது 21). இவர் பி. பி. எம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் உள்ள திண்ணையில் உட்கார்ந்து படித்து கொண்டு இருந்தார்.

    இதன்பிறகு வெளியில் சென்ற சரிதாவை காணவில்லை.  இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை. தோழிகள் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது பற்றி பவானி போலீசில் அவரது தந்தை ரவிகுமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஹரிதாவை தேடி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை கடந்த 10 நாட்களாக 40 அடியை தாண்டி 42 அடியாக உயர்ந்து இருந்தது.

    ஈரோடு:

    அணைக்கு சராசரியாக 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 41 அடியில் நீடித்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவிலிருந்து அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததையொட்டி அணைக்கு தண்ணீர் வரத்து லேசாக அதிகரித்து உள்ளது.

    இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 984 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 150 கனஅடி தண்ணீரும் வாய்க்காலில் 5 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

    41 அடியில் ஒருவார காலமாக இருந்த பவானி சாகர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 10 மணியளவில் 42 அடியை தொட்டது.

    மூடப்படும் மதுக்கடைகளுக்கு பதிலாக கள் கடைகளை திறக்க வேண்டும் என்று கள் இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

    அரச்சலூர்:

    தமிழ்நாடுகள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

    கள் போதை பொருளோ, தடை செய்யப்பட வேண்டிய பானமோ அல்ல. அது சத்தான உணவு. கள்ளுக்கான 29 ஆண்டு கால தடை அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உலகலாவிய நடைமுறைக்கு எதிரானவை.

    தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 500 டாஸ்மாக் மதுகடைகள் மூடப்பட்டுள்ளன. இதை கள் இயக்கம் வரவேற்கிறது. மூடப்பட்ட இந்த மது கடைகள்கள் விற்பனை நிலையங்களாக மாற்றப்பட வேண்டும்.

    இதை நாங்கள் அரசுக்கு கோரிக்கையாகவே வைக்கிறோம். இதனால் மது விற்பனையாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்படாது.

    கள்ளும் தடை செய்யப்பட வேண்டிய போதை பொருள் தான். இதுவும் மதுவே என கள்ளை எதிர்க்கும் எதிர் கட்சிகளின் கொட்டத்தை ஒடுக்கும் சக்தி கள் இயக்கத்துக்கு உண்டு.

    எனவே அரசு கேரளாவை பின் பற்றும் விதமாக கள் உற்பத்தியையும், நுகர்வையும் பெருக்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ஈரோடு ஆயில் மில்லில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். இது குறித்து மில் உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு நாராயண வலசு திருமால் நகரில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான ஆயில் மில் உள்ளது.

    இந்த மில்லில் பல நிறுவனங்களின் கழிவு ஆயில்களை வாங்கி அதை மறு சுழற்சி செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    கடந்த சில தினங்களுக்கு முன் இந்த மில்லில் திடீர் விபத்து ஏற்பட்டது. கொதிக்கும் ஆயில் திடீரென சிதறி கொப்பளித்தது.

    அப்போது அருகே வேலை செய்து கொண்டிருந்த ஈஸ்வர மூர்த்தி (வயது 22), ரவி (24) ஆகிய 2 தொழிலாளர்களும் உடல் வெந்து கருகினர். உடனடி யாக அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இதில் தட்சிணாமூர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரவி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இவரும் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் 2 தொழிலாளர்களும் உயிர் இழந்தனர்.

    பலியான ஈஸ்வர மூர்த்தி ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியை சேர்ந்தவர், மற்றொருவரான ரவி அந்தியூர் மைக்கேல்பாளையத்தை சேர்ந்தவர். இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விபத்து குறித்து ஆயில் மில் உரிமையாளர் முருசனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×