என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல் கைது
    X

    ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல் கைது

    ஈரோடு நகரில் கைவரிசை காட்டிய மோட்டார் சைக்கிள் திருடும் கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு நகரில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு நடந்து வந்தது. கடைக்கு போய்விட்டு திரும்பி வரும்போது வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மாயமானது.

    இதேபோல் பொது இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களும் திருட்டு போய் வந்தது.

    தொடரும் இந்த இருசக்கர வாகன திருட்டை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரூபேஷ்குமார் மீனா உத்தரவின் பேரில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் மேற்பார்வையில் 6 பேர் கொண்ட தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையில் ஏட்டுகள் ஆனந்த்குமார், ராமதாஸ், தேவராஜ், சின்னசாமி, முதுநிலை காவலர்கள் செந்தில்குமார், பொன்னுசாமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் நகரின் பல்வேறு இடங்களில் அதிரடி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று ஈரோடு சம்பத் நகர் உழவர்சந்தை அருகே ஒருவன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தான். தனிப்படை போலீசார் அவனை பிடித்து விசாரித்த போது ஈரோட்டில் பல இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடி வந்தவன் என தெரியவந்தது.

    போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவனது 2 கூட்டாளிகளும் பிடிபட்டனர். மொத்தம் 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 19 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் சூரம்பட்டியை சேர்ந்த பழனிசாமி (32), மணியழகன் (27) கோவை குனியமுத்தூரை சேர்ந்த மன்சூர் (23) ஆவர்கள்.

    மேலும் இவர்கள் பல இடங்களில் கைவரிசை காட்டி மோட்டார் சைக்கிள்களை திருடி உள்ளார்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிடிபட்டவர்கள் குறித்தும் அவர்கள் எங்கெல்லாம் கைவரிசை காட்டி உள்ளனர் என்று குறித்தும் துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் நிருபர்களிடம் கூறினார்.

    அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், கார்த்திகேயன், ஈஸ்வரன், ரவிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×