என் மலர்tooltip icon

    ஈரோடு

    பட்டா மாறுதல் முறையில் உள்ள முரண்பாடுகளை களைய உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–

    பட்டா மாறுதல் தொடர்பாக விண்ணப்பிக்கும் போது அதற்குரிய ஆவணங்களை சரிபார்த்து நிலம் விற்பவர் தனக்கு பாத்தியப்பட்ட குறிப்பட்ட சர்வே எண்ணில் முழுவதும் விற்று இருந்தால் அவரது பெயரை நீக்கி, வாங்குபவரின் பெயரை சேர்க்க வேண்டும்.

    அல்லது குறிப்பட்ட சர்வே எண்ணில் ஒரு பாகம் மட்டும் விற்பனைசெய்திருந்தால் பெயர் சேர்த்தலோ அல்லது உட்பிரிவோ செய்ய வேண்டும். இந்த முறையை நடைமுறைப்படுத்த அரசு உத்தரவும் உள்ளது.

    ஆனால் இந்த உத்தரவு நடை முறைப்படுத்தப்படுவது இல்லை.புதிய பட்டாவில் பெயர் சேர்த்தல் மட்டுமே செய்யப்படுகிறது விற்பவர் பெயரை நீக்குதலோ, உட்பிரிவோ செய்து வாங்குபவரின் பெயர் மட்டும் வர வேண்டும் என்றால் பலமாதங்கள் சிரமப்பட வேண்டி உள்ளது.

    இந்த இடத்தில் வீடு அல்லது தொழிற்சாலைக்கு அங்கீகாரம் பெறுவது, கடன் பெறுவது, பாகப்பிரிவினை விற்பனை, செய்வது போன்ற நடவடிக்கைகள் இதனால் பாதிக்கப்படுகிறது.

    எனவே பட்டா மாறுதல் முறையில் உள்ள முரண்பாடுகளை களைய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ஈரோடு அருகே வீட்டில் கியாஸ் கசிந்து தீ பிடித்து எறிந்தது. தீயணைப்பு படையினர் தீயை அணைத்து சிலிண்டரை அப்புறப்படுத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு 16 அடி ரோட்டில் உள்ள அசோகபுரத்தில் வசித்து வருபவர் பாலசுந்தர்.

    இவரது மனைவி நேற்று சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது கியாஸ் சிலிண்டரின் ரெகுலேட்டர் கழன்று அதில் இருந்து கியாஸ் கசிந்து உள்ளது.

    இதனால் குப் என்று தீப்பிடித்து எரிந்தது. உடனே வீட்டில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மள மள என்று பிடித்து எரிந்ததால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு தீயணைப்பு படையினர் அதிகாரி காளிதாஸ் தலைமையில் விரைந்து சென்று ரெகுலேட்டரில் எரிந்த தீயை அணைத்து சிலிண்டரை அப்புறப்படுத்தினர்.

    தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து இன்று காலை 10 மணிக்கு கோபி மொடச்சூர் ரோட்டில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்பாட்டம் நடத்தினர்.
    கோபி:

    தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளுக்கு கொடிவேரி அணையிலிருந்து ஏப்ரல் 15-ம் தேதி முதல் பிப்ரவரி 15-ம் தேதி வரை 10 மாதங்களுக்கு பாசனத்திற்காக நீர் திறந்து விடுவது, வழக்கமாக இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாகவே முறையான தேதியில் பவானிசாகர் அணையில் இருந்து நீரை திறக்காமல் காலதாமதமாக திறக்கப்பட்டு வந்தது. இதனால் பருவம் தவறி பயிர்செய்த காரணத்தினால் விளைச்சல் குறைவாகவும், அறுவடையின் போது மழையால் பாதிப்பு என விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

    இந்த ஆண்டும் வழக்கம் போல ஏப்ரல் 15ம் தேதி நீர் திறக்கவில்லை. பவானிசாகர் அணையில் நீர் இருப்பு 38 அடி குறைவாக தண்ணீர் இருப்பதாக பொதுப்பணித்துறையினர் கூறுகின்றனர். ஆனால் தற்பொழுது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 58 அடிக்கு மேல் உள்ளது. இந்த நிலையில் பாசனத்திற்கு தண்ணீரை திறக்காமல் உள்ளனர்.

    இதைக் கண்டித்து 25-ம் தேதிக்குள் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதிக்கு நீர் திறக்கவில்லை என்றால் கோபி மொடச்சூர் ரோட்டில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்துவது என விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கோபி மொடச்சூர் ரோட்டில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்பாட்டம் நடத்தினர்.

    இதற்கு சங்கத் தலைவர் தளபதி தலைமை தாங்கினார். இந்த ஆர்பாட்டத்தில் கோபி, கூகலூர், புதுக்கரைபுதூர், கள்ளிப்பட்டி, டி.என்.பாளையம், பங்களாப்புதூர், கொடிவேரி மற்றும் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதியைச் சார்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட கோரி கோ‌ஷமிட்டனர்.
    நஞ்சை ஊத்துக்குளி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்ததில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோட்டை அடுத்த விளக்கேத்தி பழைய அண்ணாமலை பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது33). இவர் தனது மனைவி பூங்கொடி (27), தாயார் மணி (50) ஆகியோருடன் ஒரு வேனில் சென்று கொண்டு இருந்தனர். இந்த வேனை வடிவேல் என்பவர் ஓட்டி சென்றார். வேன் ஈரோட்டை அடுத்த நஞ்சை ஊத்துக்குளி அருகே சென்று கொண்டு இருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் தாறுமாறாக ஓடியது. பிறகு அந்த வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த மணி மற்றும் பூங்கொடி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    இவர்கள் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காதல் மனைவியை நடத்தையில் சந்தேகப்பட்டு உயிரோடு எரித்துக்கொன்ற கணவருக்கு இன்று ஈரோடு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அளுக்குளிபாசியூரை சேர்ந்தவர் தெய்வக்குமார் (வயது 35). இவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி ஈஸ்வரி (32) கடந்த 8 ஆண்டுக்கு முன் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் மனைவி நடத்தையில் தெய்வகுமார் சந்தேகப்பட்டார். கடந்த 24-10-15 அன்று ஈஸ்வரி ஒரு துக்க வீட்டுக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்தார்.

    அப்போது தெய்வகுமார் ஆத்திரத்தில் சந்தேகப்பட்டு திட்டினார். இதற்கு ஈஸ்வரியோ, ‘ஏன் இப்படி சந்தேகப்படுகிறீர்கள்? என்று கேட்டார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த தெய்வகுமார் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து மனைவி மீது ஊற்றி உயிரோடு தீ வைத்து எரித்தார்.

    இதில் உடல் முழுவதும் கருகி துடித்த ஈஸ்வரி கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    ஆனால் மறுநாள் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து தெய்வகுமாரை கைது செய்தனர்.

    இது குறித்த வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

    மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன் தெய்வகுமாருக்கு வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

    இந்த வழக்கில் அரசு வக்கீலாக சுமதி ஆஜர் ஆனார்.
    நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நீர்மட்டம் 60 அடியை தாண்டி இருந்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணை நீர்மட்டம் மோசமாக இருந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் உயர்ந்தது. இதனால் 30 அடியில் இருந்த நீர்மட்டம் படிப்படியாக கூடி 50 அடியை தாண்டி 59 அடியை எட்டியது. அதன் பிறகு நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்றுவிட்டதால் அணைக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் கடந்த 10 நாட்களாகவே நீர்மட்டம் 59.20 அடியாகவே இருந்தது.

    இந்த நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது.

    இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1426 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டமும் 60 அடியை தாண்டி 60.07 அடியாக இருந்தது. அணையிலிருந்து ஆற்றுக்கு வினாடிக்கு 105 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நீர்பிடிப்பு பகுதியில் மழைபெய்து அணைக்கு தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உளளனர்.
    அந்தியூர் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவர் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் குருநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50).

    இவரது மனைவி பெயர் பழனியம்மாள் (46). விவசாய கூலித்தொழிலாளி. இவர்களுக்கு மாலதி (25) என்ற ஒரு மகள் உள்ளார். திருமணமாகி விட்டது. தற்போது பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். மேலும் குருசாமி என்ற மகனும் உள்ளார். இவருக்கும் திருமணமாகி விட்டது.

    அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள்.

    ராமச்சந்திரனுக்கு மனைவி பழனியம்மாள் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதேபோல் நேற்று இரவு அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு ராமச்சந்திரன் வெளியே சென்று விட்டார்.

    இரவு வீட்டில் பழனியம்மாளும் மகள் மாலதியும் தூங்கி கொண்டிருந்தனர். மகன் குருசாமி மாமனார் வீட்டுக்கு போய் விட்டார்.

    நள்ளிரவில் ஆத்திரத்துடன் அங்கு வந்த ராஜேந்திரன் அரிவாளால் தூங்கி கொண்டிருந்த மனைவியை வெட்டினார். இதில் கழுத்தில் பலமான வெட்டுகள் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் அலறி துடித்தார்.

    அருகே படுத்திருந்த மகள் மாலதி எழுந்து பயத்துடன் வெளியே ஓடி சென்று சத்தம் போட்டார். அவரது சத்தத்தைக் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    வெட்டப்பட்ட பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வெள்ளி திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட பழனியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மாயமான கணவர் ராமச்சந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த கொலை சம்பவம் அந்தியூர் மற்றும் வெள்ளி திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு புத்தகத் திருவிழாவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஒருவருக்கு “அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது” என்ற விருது வழங்கப்பட உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. மைதான திடலில் ஆண்டுதோறும் ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை சார்பில் புத்தகத் திருவிழா நடந்து வருகிறது. இந்தாண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி புத்தகத்திருவிழா தொடங்குகிறது.

    இதையொட்டி ஆண்டுதோறும் புதிய அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஒருவருக்கு “அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது” என்ற விருது வழங்கப்பட உள்ளது.

    விருது பெற விரும்புபவர் 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான ஆய்வு முயற்சியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.

    இந்த விருது பாராட்டு கேடயத்துடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் சேர்த்து உள்ளடக்கியதாகும். சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை வழங்குகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆய்வு கூடங்களிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு ஆய்வு கூடங்களிலோ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆய்வின் சுருக்கத்தையும் பெயர் பெற்ற அறிவியல் இதழ்களில் வெளியான தனது 10 மிக சிறந்த கட்டுரைகளின் சுருக்கத்தையும் பரிசீலனைக்கு ஆய்வாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

    புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான வரும் 16-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் நிறைவு நாள் விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்திகன் (இஸ்ரோ) இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை விருது தொகை வழங்குகிறார். ஆய்வு குறுப்புகளையும் தொடர்புள்ள அனைத்து அவசியப்படும் ஆவணங்களையும் வரும் 5-ந்தேதிக்குள் மக்கள் சிந்தனைப்பேரவை, “ஏ-38, சம்பத் நகர், ஈரோடு” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். என மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
    அப்துல் கலாம் நினைவுநாளின் போது மாற்று திறனாளி வாலிபர் ஒருவர் தனது இரு கண்களையும் தானம் செய்துள்ளார்
    கோபி:

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது,

    இதை யொட்டி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஏராளமானோர் அப்துல் கலாம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆனால் மாற்று திறனாளி வாலிபர் ஒருவர் அப்துல்கலாம் நினைவு நாளில் தனது கண்களையே தானம் செய்து உள்ளார்.

    கோபி அருகே உள்ள புதுக்கரை புதூரை சேர்ந்த வெங்கடேசன் (வயது24) என்ற இவர் மாற்று திறனாளி ஆவார். மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் நேற்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தனது கண்களை தானம் செய்தார்.

    இது பற்றி வெங்கடேசன் கூறும் போது, ‘‘மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இந்திய நாட்டுக்கு செய்த தியாகம் மிகப்பெரியது. அவரது நினைவை போற்றும் வகையில் இன்று எனது 2 கண்களையும் தானம் செய்து உள்ளேன்’’ என்று கூறினார்.

    அந்தியூர் குருநாதசாமி கோவிலில் வரும் 3–ந்தேதி முதல் வனபூஜை நடக்கிறது
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று அந்தியூர் புதுபாளையத்தில் உள்ள புகழ்மிக்க குருநாதசாமி கோவில் ஆகும்.

    காக்கும் காவல் தெய்வமாக விளங்கும் குருநாதசாமி கோவில் ஆடி தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடக்கும்.

    அதேபோல் இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா 20–ந்தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி விழாகளைகட்ட தொடங்கியது. விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) கோவிலில் முறைப்படி சிறப்பு பூஜை நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருநாதசாமியை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் குருநாதசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவையொட்டி முக்கியமான நிகழ்ச்சிகளாக வன பூஜை நடத்தப்படும். இதில் முதல் வன பூஜை வரும் 3–ந் தேதி நடக்கிறது. அன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு குருநாதசாமி மற்றும் காமாட்சி அம்மன் பெருமாள் சாமி தேர்களை பக்தர்கள் தங்கள் தோளில் சுமந்து வனக்கோவிலுக்கு கொண்டு செல்வார்கள்.

    சாமிகள் எடுத்து செல்லும் வழியில் பக்தர்கள் நெடுஞ்சாணாக கீழே உருண்டு விழுந்து வழிபடுவார்கள்.

    வனப்பகுதியை அடைந்ததும் அங்கு சிறப்பு அலங்காரத்துடன் சாமிகளுக்கு விசேச பூஜைகளும் நடைபெறும்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். வரும் 10–ந் தேதி தேர்த்திருவிழா நடைபெறும்.

    அன்று புகழ் பெற்ற குதிரை மாட்டுச்சந்தை நடைபெறும். 10–ந் தேதி இந்த குதிரை சந்தை தொடங்கி 13–ந்தேதி வரை நடைபெறும்.

    குதிரை சந்தைக்கு இந்தியா முழுவதிலிமிருந்தும் பல இனரக குதிரைகள் அந்தியூர் வரும். ரூ.10 ஆயிரத்திலிருந்து 5 லட்ச ரூபாய் வரைக்கும் குதிரைகள் விற்பனை அமோகமாக நடக்கும்.

    வரும் 17–ந் தேதி பால் பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.
    ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் பறித்த ஆசாமியை பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    ஈரோடு:

    திருச்செங்கோடு ஆயித்தா பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் சின்னுசாமி (வயது 46).

    ஈரோடு வந்த இவர் தனது நண்பர் சுப்புராஜ் என்பவருடன் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பன்னீர் செல்வம் பார்க்குக்கு டவுன் பஸ்சில் சென்றார்.

    இந்த பஸ் சவீதா பஸ் நிறுத்தம் அருகே மெதுவாக சென்று கொண்டு இருந்தது. அப்போது பஸ்சில் பயணம் செய்த ஒரு ஆசாமி சின்னுசாமியின் சட்டைப்பையில் இருந்த ரூ. 200–ஐ நைசாக ஜேப்படி செய்தார். இதை பார்த்து விட்ட சின்னசாமி அந்த ஆசாமியை பிடிக்க முயன்றார். அப்போது அவர் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார்.

    உடனே சின்னுசாமி அவரது நணபர் சுப்புராஜ் மற்றும் பொதுமக்கள் அந்த ஆசாமியை விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    ஈரோடு டவுன் போலீசார் அந்த ஆசாமியிடம் விசாரித்த போது அவர் ஈரோடு சூரம்பட்டி பாரதி புரத்தை சேர்ந்த முருகேசன் (வயது 48) என்பது தெரிய வந்தது.

    இதையொட்டி அவரை போலீசார் கைது செய்து அவர் ஜேப்படி செய்த ரூ. 200 ஐ கைப்பற்றினர்.

    கொடுமுடி அருகே மனைவியிடம் கோபித்து கொண்டு சென்ற கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு திடீரென இறந்து போனார்.

    ஈரோடு:

    கரூர் அருகே உள்ள துக்காச்சி சிறிஸ்டியன் தெருவை சேர்ந்தவா ஜோசப் (வயது 65). இவரது மனைவி அருள்மணி (60).

    கணவன் –மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஜோசப் தனது மனைவியிடம் கோபித்துகொண்டு வெளியூர் சென்று விடுவார்.

    வழக்கம் போல கடந்த 3 மாதத்துக்கு முன்பு தனது மனைவியிடம் கோபித்து கொண்டு ஜோசப் சென்று விட்டார்.

    இதனால் அருள்மணி தனது கணவரை தேடினார். அப்போது அவர் சாலைப்புதூரில் உள்ள சந்தைப்பேட்டை என்ற இடத்தில் தங்கி இருந்தது தெரியவந்தது.

    எனவே அருள் மணி அங்கு சென்று தனது கணவரை பார்த்து விட்டு வந்தார். இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜோசப் அங்கு சுருண்டு விழுந்து இறந்து விட்டார்.

    இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜோசப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×