என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபியில் பொதுப்பணி துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
    X

    கோபியில் பொதுப்பணி துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

    தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து இன்று காலை 10 மணிக்கு கோபி மொடச்சூர் ரோட்டில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்பாட்டம் நடத்தினர்.
    கோபி:

    தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளுக்கு கொடிவேரி அணையிலிருந்து ஏப்ரல் 15-ம் தேதி முதல் பிப்ரவரி 15-ம் தேதி வரை 10 மாதங்களுக்கு பாசனத்திற்காக நீர் திறந்து விடுவது, வழக்கமாக இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாகவே முறையான தேதியில் பவானிசாகர் அணையில் இருந்து நீரை திறக்காமல் காலதாமதமாக திறக்கப்பட்டு வந்தது. இதனால் பருவம் தவறி பயிர்செய்த காரணத்தினால் விளைச்சல் குறைவாகவும், அறுவடையின் போது மழையால் பாதிப்பு என விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

    இந்த ஆண்டும் வழக்கம் போல ஏப்ரல் 15ம் தேதி நீர் திறக்கவில்லை. பவானிசாகர் அணையில் நீர் இருப்பு 38 அடி குறைவாக தண்ணீர் இருப்பதாக பொதுப்பணித்துறையினர் கூறுகின்றனர். ஆனால் தற்பொழுது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 58 அடிக்கு மேல் உள்ளது. இந்த நிலையில் பாசனத்திற்கு தண்ணீரை திறக்காமல் உள்ளனர்.

    இதைக் கண்டித்து 25-ம் தேதிக்குள் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதிக்கு நீர் திறக்கவில்லை என்றால் கோபி மொடச்சூர் ரோட்டில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்துவது என விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கோபி மொடச்சூர் ரோட்டில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்பாட்டம் நடத்தினர்.

    இதற்கு சங்கத் தலைவர் தளபதி தலைமை தாங்கினார். இந்த ஆர்பாட்டத்தில் கோபி, கூகலூர், புதுக்கரைபுதூர், கள்ளிப்பட்டி, டி.என்.பாளையம், பங்களாப்புதூர், கொடிவேரி மற்றும் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதியைச் சார்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட கோரி கோ‌ஷமிட்டனர்.
    Next Story
    ×