என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு புத்தகத் திருவிழாவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை
    X

    ஈரோடு புத்தகத் திருவிழாவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை

    ஈரோடு புத்தகத் திருவிழாவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஒருவருக்கு “அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது” என்ற விருது வழங்கப்பட உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. மைதான திடலில் ஆண்டுதோறும் ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை சார்பில் புத்தகத் திருவிழா நடந்து வருகிறது. இந்தாண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி புத்தகத்திருவிழா தொடங்குகிறது.

    இதையொட்டி ஆண்டுதோறும் புதிய அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஒருவருக்கு “அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது” என்ற விருது வழங்கப்பட உள்ளது.

    விருது பெற விரும்புபவர் 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான ஆய்வு முயற்சியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.

    இந்த விருது பாராட்டு கேடயத்துடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் சேர்த்து உள்ளடக்கியதாகும். சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை வழங்குகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆய்வு கூடங்களிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு ஆய்வு கூடங்களிலோ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆய்வின் சுருக்கத்தையும் பெயர் பெற்ற அறிவியல் இதழ்களில் வெளியான தனது 10 மிக சிறந்த கட்டுரைகளின் சுருக்கத்தையும் பரிசீலனைக்கு ஆய்வாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

    புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான வரும் 16-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் நிறைவு நாள் விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்திகன் (இஸ்ரோ) இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை விருது தொகை வழங்குகிறார். ஆய்வு குறுப்புகளையும் தொடர்புள்ள அனைத்து அவசியப்படும் ஆவணங்களையும் வரும் 5-ந்தேதிக்குள் மக்கள் சிந்தனைப்பேரவை, “ஏ-38, சம்பத் நகர், ஈரோடு” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். என மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×