என் மலர்tooltip icon

    ஈரோடு

    அம்மாப்பேட்டை அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை காரில் கடத்தி சென்றதால் மீட்டு கொடுக்கும்படி கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    அம்மாபேட்டை:

    சேலம் மாவட்டம் கோனேரிபட்டி செட்டியார் தெருவை சேர்ந்தவர் வீரப்பன் மகன் சதீஷ் என்கிற பெரியண்ணன் (வயது 32). திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    ஈரோடு மாவட்டம் அம்மா பேட்டை அருகே உள்ள முரளி சித்த தாண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மகள் நவீனா. இவரும் பெரியண்ணன் வேலை செய்யும் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாகி மாறியது.

    இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஈரோடு திண்டல் மலை வேலாயுதசாமி கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    இதன்பிறகு அவர்கள் மேட்டூர் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். இருவரும் அம்மாபேட்டை அருகே உள்ள கல்பாரி தொட்டிபாளையம் என்ற பகுதியில் உள்ள பெரியண்ணனின் அக்கா சாந்தி வீட்டில் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று  வீட்டில்  பெரியண்ணனும் நவீனா மட்டும் இருந்தனர். நவீனா பழம் வேண்டும் என கணவர் பெரியண்ணனிடம் கூறினார். அவரும் பழம் வாங்க சித்தார் சென்று விட்டார்.

    அப்போது அங்கு வந்த சிலர் ஒரு காரில் வந்து வீட்டில் தனியாக இருந்த நவீனாவை கடத்தி சென்று விட்டனர்.

    வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்த பெரியண்ணன் நவீனா வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் விசாரித்ததில் ஒரு காரில் வந்த கும்பல் நவீனாவை கடத்தி சென்று விட்டதாக கூறினர்.

    இது குறித்து பெரியண்ணன் அம்மா பேட்டை போலீசில்புகார் செய்தார்.

    அதில் பூதப்பாடியை சேர்ந்த நவீனாவின் சித்தப்பா கார்த்தி மற்றும் அடையாளம் தெரியாத சிலர் தனது மனைவி நவீனாவை கடத்தி சென்று விட்டதாக கூறி உள்ளார்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்குபதிவு செய்து கடத்தப்பட்டதாக கூறப்படும் புதுப்பெண் நவீனாவை தேடி வருகிறார்.

    அந்தியூரில் 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் தீயணைப்பு நிலையம் அருகே குணசேகரன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது. மளிகை கடையின் பின்புறம் இவர் குடும்பத்துடன் வசித்த வருகிறார்.

    நேற்று இரவு வியாபாரம் முடிந்தவுடன் குணசேகரன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இவரது கடையின் அருகே ஒரு மருந்து கடை உள்ளது.

    நேற்று நள்ளிரவு இங்கு வந்த மர்ம ஆசாமிகள் மளிகை கடையின் பூட்டை உடைத்தனர். அந்த பூட்டை அருகே உள்ள சாக்கடையில் வீசிய கொள்ளையன் கடைக்கு உள்ளே சென்று அங்கிருந்த ரூ.8500-ஐ திருடினான். பிறகு அருகில் உள்ள மளிகை கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமி அங்கிருந்த ரூ. 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தான்.

    அப்போது கடையின் பின்னால் உள்ள வீட்டில் தூங்கி கொண்டு இருந்த குணசேகரன்சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தார்.

    அப்போது கடையின் ‌ஷட்டர் மேலே தூக்கப்பட்டு இருந்தது. இந்த நேரத்தில் ஒரு ஆசாமி அந்த வழியாக நடந்து சென்றான். இதனால் சந்தேகம் அடைந்த குணசேகரன் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தார். அப்போது அவர் மனம் நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

    இதனால் அவர் தனது கடைக்கு திரும்பி வந்தார். இந்த நேரத்தில் மேலே தூக்கி விடப்பட்டு இருந்த ‌ஷட்டர் கிழே இறக்கி விடப்பட்டு இருந்தது.

    அப்போது தான் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை பிடிக்க சென்றபோது தனது கடைக்குள் திருடன் இருந்து உள்ளதையும், பணத்தை திருடி விட்டு அவன் திறந்து இருந்த ‌ஷட்டர் வழியாக வெளியில் வந்து ‌ஷட்டரை கீழே இறக்கி விட்டு தப்பி ஓடியதும் தெரிய வந்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் 2 கடைகளிலும் பணத்தை திருடி சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சீரழிந்து கொண்டு இருக்கும் தமிழ் சமுதாயத்தை நூல்களால் தான் காப்பாற்ற முடியும் என்று ஈரோடு புத்தக திருவிழாவில் பழ.நெடுமாறன் பேசினார்.
    ஈரோடு:

    புத்தக திருவிழா ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. இதில் 230 அரங்குகள் உள்ளன.

    12-வது ஆண்டாக மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடக்கும் இந்த புத்தக திருவிழா தொடக்க விழாவுக்கு பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி தலைவர் பால சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மக்கள் சிந்தனை பேரவை செயலாளர் பாலன் வரவேற்றார்.

    மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரை நிகழ்த்தினார்.

    சென்னை மற்றும் மதுரை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமி புத்தக அரங்கை திறந்து வைத்து பேசினார்.

    விழாவில் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு உலக தமிழர் படைப்பரங்கத்தை திறந்து வைத்து பேசினார்.

    என்னை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் கவிஞர் கண்ணதாசன் தான்.

    மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் நிலைத்து நிற்பதில்லை. பல மன்னர்கள் கட்டிய அரண்மனைகள் கூட இன்று அழிந்து விட்டன. நாகரீகம், இனங்கள் காலப்போக்கில் மறையும். ஆனால் புத்தகங்கள் படைப்பாக்கம் அழிவற்றது.

    செங்குட்டுவன் காலத்தில் அவன் இமயம் வரை சென்று கனக விஜயனை வென்று இமயத்தில் கல் எடுத்து வந்து கண்ணகி சிலை வைத்தான் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது. இன்று அவன் வாழ்ந்த மாளிகை இல்லை. ஆனால் சிவப்பதிகாரம் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இருக்கும்.

    இலக்கியங்களை படைத்தவர்கள் மறைந்தாலும் இலக்கியங்கள் சாகா வரம் பெற்று வாழுகின்றன.

    இளைஞர்கள் புத்தகங்களை அதிகமாக படிக்க வேண்டும். படித்தால் மட்டுமே தமிழர்களுக்கு எதிர்காலம் உள்ளது. சீரழிந்து கொண்டு இருக்கும் தமிழ் சமுதாயத்தை நூல்களால் தான் காப்பாற்ற முடியும். தமிழகத்தில் நூல்கள் நெருக்கடியான நிலையில் இருக்கின்றன.

    தமிழகத்தில் உள்ள நூல்களை செம்மைப்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தகம் வாசிப்பு பழக்கம் ஊர் ஊராக பரவ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    மாற்று திறனாளிகள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நகர செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் விமலா, தலைவர் நடராஜன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.40 சதவீதம் ஊனம் இருந்தாலே அரசின் அனைத்து உதவிகளையும் சலுகைகளையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    டீ குடிக்க சென்றவர் வாகனம் மோதி பலியானார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு சூரியம்பாளையம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 55) தொழிலாளி. சம்பவத்தன்று அதிகாலை 5 மணிக்கு இவர் வீட்டில் இருந்து டீ குடிப்பதற்காக கடைக்கு சென்றார்.

    அம்பேத்கார் நகரில் உள்ள ஒரு மெக்கானிக் கடை அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக சென்ற ஏதோ ஒரு வாகனம் பழனிச்சாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தலையில் பலத்த அடிபட்டு ரோட்டில் கிடந்த அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் ‘‘சமூக வலைதலங்களில் பெண்களை இழிவு படுத்தாதீர்கள்’’

    ஈரோடு:

    விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக வாட்ஸ் அப்- பேஸ் புக் போன்ற தொழில் நுட்பங்கள் வேகமாக வளர்ந்து உள்ளன.

    இவைகளை நல்ல செயல்களுக்கு பலர் பயன்படுத்தினாலும் சில வக்கிர குணம் கொண்டவர்கள் இவைகளை தங்களது கொடூர எண்ணங்களுக்கும் பயன்படுத்தி கொள்கிறார்கள்.

    தங்களை காதலிக்காத பெண்களை சில வாலிபர்கள் அவர்களை பழி வாங்குவதாக கருதி அந்த பெண்களை பற்றி ஆபாசமாகவும், இழிவாகவும் வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் வெளியிடுகிறார்கள்.

    இதனால் ஏராளமான பெண்கள் அவமானம் தாங்காமல் இன்று தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இது போல பெண்களை இழிவுபடுத்தும் ஆபாசமான படங்களை சித்தரித்து வாட்ஸ்அப்-பேஸ் புக்கில் வெளியிட வேண்டாம் என்று வலியுறுத்தியும்,இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஈரோட்டில் இன்று காலை பேரணி நடந்தது.

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே தொடங்கிய இந்த பேரணி கலெக்டர் அலுவலகம் வரை நடந்தது. இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சென்றனர்.

    இந்த பேரணியை ஈரோடு ஆர்.டி.ஓ நர்மதா தேவி தொடங்கி வைத்து சிறிது தூரம் மாணவ-மாணவிகளுடன் அவரும் நடந்து சென்றார்.

    ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகே ஆம்புலன்சு வேன் மோதி கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு பகுதியை சேர்ந்தவர் லலித் குமார் . இவர் திண்டலில் உள்ள ஒரு என்ஜியரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

    இன்று காலை இவர் ஈரோடு - பெருந்துறை ரோடு வழியாக மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஒரு மூதாட்டியை ஏற்றி கொண்டு ஆம்புலன்ஸ் வேன்சைரன் ஒலித்து கொண்டு வந்து கொண்டு இருந்தது.

    கண் இமைக்கும் நேரத்தில் இந்த ஆம்புலன்ஸ் வேனும், மாணவர் லலித் குமார் வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் தூக்கி எறியப்பட்ட லலித் குமார் பலத்த காயம் அடைந்தார்.

    இதனால் மயக்க நிலையில் இருந்த அவர் ஈரோட்டடில் உள்ள ஒரு தனியார் ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மாணவர் லலித் குமார் மீது மோதிய ஆம்புலன்ஸ் வேனை முற்றுகையிட்டனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி ஆம்பு லன்ஸ் வேனை அங்கிருந்து செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

    இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை அருகே விபத்தில் கார் மெக்கானிக் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மெக்கானிக் உடலை கண்டு அவரது உறவினர்கள் கதறியழுதது மிகவும் உருக்கமாக இருந்தது.

    ஈரோடு:

    பெருந்துறை, ஈரோடு ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், பெருந்துறையில் உள்ள தனியார் பேங்கில் செக்யூரிட்டியாக பணி புரிந்து வரும் இவருக்கு தினேஷ்(25, கவுதம்(23) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

    கவுதம் கோபி அருகேயுள்ள அத்தாணியில் கார் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். பெருந்துறை வந்த இவர் பெருந்துறையை சேர்ந்த சாந்தகுமார் என்பவரது மகன் சித்தார்த் அரவிந்த்(22) என்பவருடன் பைக்கில் சென்றுள்ளார். பைக்கை சித்தார்த் ஓட்டி வர கவுதம் பின்னால் அமர்ந்து சென்றார்.

    இவர்கள் கோவை மெயின் ரோட்டில் உள்ள ராஜவீதிக்கு செல்வதற்காக பெருந்துறை பஸ் நிலைய பகுதியில் வந்த போது முன்னால் சென்ற தனியார் பஸ்ஸின் பக்கவாட்டில் பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த கவுதம் பஸ்ஸின் பின்சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். சித்தார்த் வெளியே தூக்கி வீசப்பட்டு காயம் பட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து தகவலறிந்த பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவுதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். கவுதமின் உடலை கண்டு அவரது உறவினர்கள் கதறியழுதது மிகவும் உருக்கமாக இருந்தது.

    கோபி அருகே கார் கதவை திடீரென திறந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த தந்தை-மகன் கதவில் மோதி படுகாயமடைந்தனர்.

    கோபி:

    சத்தியமங்கலம் அருகே உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவரும் இவரது தந்தை ராமசாமி (75)யும் மோட்டார் சைக்கிளில் ஒரு வேலை விசயமாக சென்றனர்.

    தந்தையை பின்னால் உட்கார வைத்துவிட்டு சக்திவேல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

    இவர்கள் கோபி-கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். போக்குவரத்து நகர் பிரிவு என்ற பகுதியில் சென்றபோது ரோட்டோரம் நின்ற ஒரு காரின் பின்புற கதவை காரில் இருந்த கோபி அடுத்த மூலகாரணம் பாளையத்தைச் சேர்ந்த மோகனசுந்தரி (45) என்பவர் திடீரென திறந்தார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தந்தையும், மகனும் கார் கதவில் எதிர்பாராத விதமாக மோதி ரோட்டில் விழுந்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த இருவரும் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டெருமையை இரண்டு புலிகள் தாக்கி கொன்றது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது எடுத்த வன விலங்குகள் கணக்கெடுப்பின்படி சத்தி புலிகள் காப்பகத்தில் 60 புலிகள் இருப்பதாக வன அதிகாரி தெரிவித்தார்.

    இந்த நிலையில் சத்தி புலிகள் காப்பகம் கரளையம் காப்புக்காடு படிகரை என்ற இடத்தில் ஒரு காட்டெருமை மேய்ந்து கொண்டிருந்தது.

    அப்போது புதர் பகுதியில் மறைந்திருந்த 2-க்கும் மேற்பட்ட புலிகள் அந்த காட்டெருமை மீது பாய்ந்தது.

    புலிகளிடமிருந்து தப்பிக்க அந்த காட்டெருமை போராடிய போது புலிகளின் ஆவேசப்பிடியிலிருந்து தப்ப முடியவில்லை.

    பிறகு அந்த புலிகள் காட்டெருமையை கொன்று அதன் உடலை தின்று மீதியை போட்டு விட்டு சென்று விட்டது.

    இதுபற்றி வனப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்படி வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று காட்டெருமையை பார்வையிட்டனர்.

    காட்டெருமையை ஆய்வு செய்த போது அது புலிகள் தாக்கி இறந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அருகே புலிகளின் கால் தடமும் பதிவாகி இருந்தது.

    தொடர்ந்து கால்நடை மருத்துவர் மனோகரனும் வரவழைக்கப்பட்டார். காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

    பிறகு காட்டெருமையின் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

    பவானியில் குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    பவானியில் உள்ள பழனியாண்டவா கோவில் வீதி சந்து பகுதியை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 40).

    மாரியம்மாள் தனது மகன்களுடன் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை போடுவாராம். இதன்பிறகு தனது வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டு இருப்பார். கோபம் தணிந்த பிறகு அவர் கதவை திறந்து கொண்டு வெளியே வருவது வழக்கமாக இருந்தது.

    சம்பவத்தன்றும் அவர் தனது மகனுடன் சைக்கிள் ரிப்பேர் செய்வதற்கு பணம் கொடுப்பது சம்பந்தமாக தகராறு செய்தார். பிறகு அவர் கோபித்து கொண்டு தனது வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டார்

    இதன்பிறகு வெகுநேரம் ஆகியும் மாரியம்மாள் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மகன் விக்னேஷ் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது தனது தாயார் மாரியம்மாள் ஓட்டு வீட்டு சட்டத்தில் தனது சேலையால் தூக்கில் தொங்கியபடி இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விக்னேஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது தாயாரை சேலையை அறுத்து தூக்கில் இருந்து கீழே இறக்கினார்.

    இதன்பிறகு மயக்க நிலையில் இருந்த அவரை பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓடாநிலையில் தீரன் சின்னமலைக்கு மணி மண்டபம் கட்டி அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என முதன் முதலில் குரல் கொடுத்தவர் டாக்டர் ராமதாஸ் என்று ஜி.கே.மணி கூறியுள்ளார்.
    ஈரோடு:

    பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி ஈரோடு அருகே உள்ள ஓடாநிலைக்கு வந்தார். அங்கு தீரன்சின்னமலை நினைவுநாளையொட்டி அவரது மணிமண்டபத்தில் உள்ள தீரன்சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொங்கு மண்டலத்தில் நடந்து வரும் தொழில்கள் மூலம் இந்தியாவிலேயே அதிகமான அன்னிய செலவாணியை ஈட்டிகொடுக்கிறது. கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாளர் சமுதாய மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். எனவே அதிகமான மக்கள் தொகை கொண்ட கொங்கு வேளாளர் சமுதாயத்துக்கு தனிஇட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    கடந்த 20ஆண்டுக்கு முன் இதே ஓடாநிலையில் தீரன் சின்னமலைக்கு மணி மண்டபம் கட்டி அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என முதன் முதலில் குரல் கொடுத்தவர் டாக்டர் ராமதாஸ். அதன்படி தற்போது மணிமண்டபம் கட்டப்பட்டு அரசு விழா கொண்டாடப்பட்டு வருகிறது மகிழ்ச்சி.

    தமிழ்நாட்டில் உள்ள பல ஆறுகளில் இருந்து குறிப்பாக தாமிரபரணி போன்ற ஆறுகளிலிருந்து தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு அந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

    அத்திக்கடவு-அவினாசி, பாண்டியாறு-புன்னம்புழா போன்ற திட்டங்களை அரசு நிறைவேற்ற வேண்டும்.

    நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் ஆறுமுகம், மாநில துணை தலைவர் வடிவேல் மற்றும் பா.ம.க.நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    ×