என் மலர்
ஈரோடு
சத்தியமங்கலம்:
கடம்பூர் அருகே உள்ள கூட்டாதொட்டி என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 48). இவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி பங்களா புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அவர்கள் ராஜனின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை போட்டனர்.
அப்போது அங்கு பெரிய அளவிலான வெள்ளை நிற பாலிதீன் சாக்கு பை இருந்தது. இந்த பையை பிரித்து போலீசார் சோதனை போட்டனர்.
அப்போது அந்த பையில் ஏராளமான கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதில் இருந்த 15 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையொட்டி வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தாக ராஜனை போலீசார் கைது செய்தனர்.
இந்த கஞ்சா அவருக்கு எப்படி கிடைத்தது? இதை அவர் யாருக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தார். இதற்கு முன் ராஜன் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தாரா? என்பது பற்றி அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதன்பிறகு கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜன் பிறகு 15 நாள் காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் புத்தகத் திருவிழா நடந்து வருகிறது. நேற்று இரவு நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் நடிகரும் டைரக்டருமான பாக்யராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அவர் ‘‘சுத்தி வரப்பாரு கத்துக்கலாம் நூறு’’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்போது பாக்யராஜ் கூறியதாவது:-
இங்கே வலது புறம் அமர்ந்துள்ள கவர்ச்சி புயல் ஷகிலா அவர்களே.. இடது புறம் அமர்ந்துள்ள கவர்ச்சி தென்றல் நமீதா அவர்களே.. இந்த வார்த்தையை வேறு எந்த விழாவில் நான் கூறினாலும் ‘‘எங்கே ஷகிலா.. நமீதா..’’ என்று கூட்டத்தில் இருப்பவர்கள் எட்டி பார்ப்பார்கள். எழுந்து பார்ப்பார்கள்.
ஆனால் இங்க கூடி இருக்கும் கூட்டம் எட்டிக் கூட பார்க்காமல் எவ்வித சலனமும் இல்லாமல் அப்படியே இருக்கிறீர்கள். ஏனெனில் ஒரு கவர்ச்சி நடிகையை கூட்டிக்கிட்டு வந்தால்தான் அங்கு கூட்டம் கூடும் என்பார்கள்.
ஆனால் ஒரு புத்தக விழாவுக்கு இவ்வளவு கூட்டமா...? என்று பார்க்கும் போது வெள்ளாங் கோவிலை சேர்ந்த எனக்கு பெருமையாக இருக்கிறது. அந்த வெள்ளாங்கோவில் உள்ள ஈரோடு மாவட்டத்துக்கும் பெருமையாக இருக்கிறது.
ரசிகர்களின் மத்தியில் ‘கபாலி’ படத்தின் தாக்கத்தை பற்றி எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எனக்கு முன் பேசினார். அதிகாலை 6 மணிக்கெல்லாம் ஷோ நடத்தி கபாலி பார்க்கிறார்கள் என்று கூறினார். நள்ளிரவிலும் ஷோ நடந்தது அவருக்கு தெரியாது. இப்படி கபாலி படத்தின் தாக்கத்தை பற்றி கூறி கொஞ்சம் வருத்தத்துடன் ‘‘மகிழ்ச்சி’’ என்று முடித்தார்.
நான் கூட சில நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது ‘‘மகிழ்ச்சி’’ என்று ஆரம்பித்தேன். அப்போது பலத்த கரவொலி எழுந்தது. தமிழ்நாட்டில் பரவாயில்லை ஆந்திராவில் நடிகரை கடவுளாக பார்க்கிறார்கள். கர்நாடகாவில் இதை விட நடிகர்கள் மீது மூர்க்கத்தனமான மோகம். ஆனால் தமிழ் நாட்டில் ரசிகர்களாக இருந்து ரசிக்கத்தான் செய்கிறார்கள்.
இன்னைக்கு அந்த மனுஷன் (ரஜினிகாந்த்) படத்தை பார்க்க மலேசியா, ஜப்பான், அமெரிக்காவிலிருந்து கூட பிளைட்டில் பறந்து வருகிறார்கள். ரஜினிகாந்த் தமிழ் படத்தில் நடிப்பதால் அவரால் தமிழ் படங்களுக்கு பெருமை.
சினிமா என்பதை நிஜமாக இங்கே பேசிய நாஞ்சில் நாடன் கூறி உள்ளார். அவர் நிஜம் என கருதி விட்டார். அது நிஜம் அல்ல ‘நிழல்’ என்பதை உணர வேண்டும்.
நான் சிறுவனாக இருந்த போது வெள்ளாங்கோவில் பள்ளியில் படித்தேன். அப்போது என் அமமா எனக்கு தினமும் காலணா கொடுப்பார். அப்போது வெள்ளாங்கோவிலில் கோபால் கடையும், கோனார் கடையும் இருந்தது. நான் அந்த கோனார் கடையில் சீரக மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன். ஒரு நாள் அம்மா வெளியே சென்று விட்டார். நான் வீட்டில் இருந்த துட்டை எடுத்து கோனார் கடையில் கொடுத்து சீரகம் மிட்டாய் வாங்கி சாப்பிட்டேன். அன்று சாய்ந்தரம் கோனார் எங்க வீட்டுக்கு வந்தார். அம்மாவுக்கு தெரியாமல் காலணா எடுத்து வந்ததை அம்மாவிடம் போட்டு கொடுத்திருப்பாரோ என்று எண்ணினேன்.
ஆனால் நான் எடுத்து கொடுத்தது காலணா காசு அல்ல அது தங்க காசு என அப்புறம் எனக்கு தெரிந்தது. அதை அம்மாவிடம் கொடுக்கத்தான் அவர் வந்துள்ளார். அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத அந்த கோனாரின் பெருமை எனக்கு அப்போது தெரிய வில்லை. பெரியவன் ஆன பிறகு அவரது பெருமையை தெரிந்து ஆச்சரியப் பட்டேன்.
பள்ளிக்கூடத்தில் நான் அவ்வளவாக படிக்க மாட்டேன். ஆனால் நான் சினிமாவில் நுழைந்து சாதித்தது ஆசிரியர்கள்தான் காரணம். எனவேதான் நான் நடித்த பல படங்களில் ஆசிரியர்களின் பெயர்களை வைத்தேன். சினிமா துறைக்கு வந்த பிறகுதான் புத்தகங்களின் அருமையை உணர்ந்தேன். இப்பமெல்லாம் நிறைய படிக்கிறேன். நம் வாழ்வை உயர்த்துவது புத்தகங்கள்தான்.
இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.
முன்னதாக ‘‘சொல் எனும் சொல்’’ என்ற தலைப்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசினார். நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று நன்றி கூறினார்.
பெருந்துறை அருகே உள்ள வல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 25). இவரது நண்பர் கோவிந்த ராஜ் (24). நண்பர்களான இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்கள்.
இந்த நிலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஈரோடு வந்து விட்டு திரும்ப சென்று கொண்டிருந்தனர். திண்டல் அருகே உள்ள பவளத்தாம்பாளையம் அருகே சென்றபோது முன்னால் ஒரு வேன் சென்று கொண்டிருந்தது.
அப்போது வேன் டிரைவர் திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது. இதில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேகமாக வேன் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட கோவிந்தராஜ் கோவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
கல்வி கடனை தனியார் வசூல் செய்வதை கண்டித்து தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் ஈரோடு ஜவான் பவன் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ விடியல் சேகர் தொடங்கி வைத்தார்.
மாநில துணை தலைவர் ஆறுமுகம், மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கல்வி கடனை தமிழக அரசே ஏற்று கொள். வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு வேலை கொடு, கல்வி கடனை தனியார் மயமாக்காதே என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சந்திர சேகர்,மாநில வர்த்தக அணி செயலாளர் சரவணகுமார், நெசவாளர் அணி செயலாளர் ராஜேஷ் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
வக்கீல்களின் வேலை நிறத்தம் போராட்டத்தால் கோர்ட் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரையில் நடந்த கூட்டத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது அதன் அடிப்படையில் இன்றும் நாளையும் தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர்.
அதன்படி ஈரோட்டில் வழக்கறிஞர்கள் கட்டிடம் முன் இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கியது. மாலை 5மணி வரை நடக்கும் இந்த உண்ணாவிரதத்துக்கு பார் அசோசியேசன் ஈரோடு மாவட்ட துணைத்தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். செயலாளர் இளங்கோ வரவேற்றார்.
பொருளாளர் யு.கண்ணன் உள்பட நிர்வாகிகள் மற்றும் மாவட்டம் முழுவதிலிருந்தும் 250 வக்கீல்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
நாளை (புதன்கிழமை) 2-வது நாளாக உண்ணாவிரதம் நடக்கிறது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் வனப்பகுதியை அடுத்த கடம்பூர் காப்புக்காடு குன்றி மலை கிராமத்தை சேர்ந்தவர் தொட்டு சித்தையா (வயது 55) விவசாயி.
இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். மர்ம நோயால் மாடுகள் பாதிக்கப்பட்டது. இதனால் வனப்பகுதிக்கு சென்று மூலிகை செடி பறிக்கச் சென்றார்.
மூலிகை செடிகளை பறித்துக் கொண்டு அவர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள ஒரு வனக்குட்டையில் தண்ணீர் குடித்து கொண்டு ஒரு யானை எதிரே வந்தது.
யானையிடமிருந்து தப்பிக்க அவர் ஓட முயன்றார். ஆனால் அதற்குள் அங்கு வந்த அந்த யானை தொட்டு சித்தையாவை துதிக்கையால் தூக்கி வீசியது.
இதில் 10அடி தூரம் போய் விழுந்த அவர் படுகாயத்துடன் துடித்தார்.
அந்த யானை அவரை மீண்டும் தாக்க ஓடி வந்தது. இதை கண்ட அவர் வலியுடன் இறந்தவர் போல் அப்படியே கை-கால் அசைக்காமல் கிடந்தார். அவர் அருகே வந்த அந்த யானை அவரது உடலை காலால் தள்ளி புரட்டிப் பார்த்தது. அவர் அசைவற்று கிடந்ததால் அந்த யானை அங்கிருந்து சென்று விட்டது.
அந்த யானை வெகு தூரம் சென்ற பிறகு அவர் தனது ஊர் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே அவரது உறவினர்களும் பொதுமக்களும் ஓடி வந்து படுகாயத்துடன் துடித்த தொட்டு சித்தையாவை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஈரோடு மாவட்ட குழு கூட்டம் கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் வி.பி.குணசேகரன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் துணை செயலாளர் கே.சுப்பராயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் ஆகியவை பற்றி பேசினார்கள்.
கூட்டத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து போட்டியிடுவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகள் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்க சாவடி உள்பட அனைத்து சுங்க சாவடிகளையும் ரத்து செய்து அகற்ற வேண்டும். அத்தியாவசிய பொருட்களில் விலை உயர்வை கண்டித்து வரும் 17-ந் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கொடுமுடி, அனுமன்பள்ளி, சென்னி மலை, பெருந்துறை, பவானி, அந்தியூர், பர்கூர், கோபி, நம்பியூர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, பவானிசாகர், தாளவாடி, கடம்பூர் ஆகிய 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் கூட்டத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ப.பா.மோகன், துளசிமணி, மாதேஸ்வரன், பிரபாகரன், பாலதண்டாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன் சத்திரம் ஏ.பி.டி ரோட்டை சேர்ந்தவர் துரைசாமி (வயது 65). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வெட்டுக்காட்டு வலசில் உள்ள ஒரு டையிங் பட்டறை அருகே ஒரு லாரியில்இருந்த பீஸ் துணிகளை இறக்கி கொண்டு இருந்தார்.
அப்போது லாரியின் மேல் நின்று கொண்டு இருந்த துரைசாமி திடீர் என்று நிலைமாறி கீழேவிழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட துரைசாமி அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு தெற்கு கோட்டத்துக்கு உட்பட்ட எழுமாத்தூர் தொகுப்பு துணை மின் நிலையத்தில் வருகிற 9-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் சாரம் இருக்காது.
எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தா பாளையம், பாண்டிபாளையம், எல்லக் கடை, காதக்கிணறு, குல விளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகபட்டி, 60 வேலம் பாளையம், மணியம்பாையம், வெள்ளபெத்தாம் பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம் பாளையம், எரப்பம்பாளை யம், மின்னக்காட்டு வலசு, வெப்பிலி, 88 வேலம்பாளையம்.
இந்த தகவலை ஈரோடு தெற்கு மின் வாரிய செயற் பொறியாளர் கே.சின்னுசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் இன்று நடந்தது. மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக அவர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொங்குநாடு வளர்ச்சிக்கு உறுதி அளிக்கும் கருத்து ஒற்றுமை உள்ள அரசியல் இயக்கத்துடன் சேர்ந்து வரும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க உள்ளோம்.
பெருகி வரும் மயில்களினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே கோவா மாநிலத்தில் வன விலங்குகளை பிடிக்க மத்திய அரசு சிறப்பு ஒப்புதல் அளித்துள்ளது. அதே போல் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் மயில்களை பிடிக்கவும் அனுமதி வழங்க வேண்டும்.
சத்தியமங்கலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி சசிகுமார் ஆந்திராவில் தன்னை தானே துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார் என்று கூறப்படுகிறது.
ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி அதுவும் அவருக்கு திருமண ஏற்பாடு நடந்த போது தற்கொலை செய்து கொள்வாரா? என்ற சந்தேகம் உள்ளது.
ஒருவர் தற்கொலை செய்வது என்றால் வீட்டின் படுக்கை அறையில் தற்கொலை செய்து கொள்வார். ஆனால் ஐ.பி.எஸ். அதிகாரி சசிக்குமார் தான் வேலை பார்த்த அலுவலகத்தில் உட்கார்ந்த படியே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் பல சந்தேகங்கள் உள்ளது.
இது தொடர்பாக சசிக்குமார் பெற்றோர் தமிழக மற்றும் ஆந்திரா முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். தமிழக அரசு இதில் தலையிட்டு சசிகுமாரின் சாவை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது பற்றி அனைத்து தரப்பு விவசாயிகளையும் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தலைமை நிலைய செயலாளர் சூரியமூர்த்தி, நிர்வாகிகள் கே.கே.சி.பாலு, ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலி மற்றும் செந்நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக புலிகளின் எண்ணிக்கை 60-ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வனத்துறையினர் மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தலமலை, கெத்தேசால், கேர்மாளம், திம்பம், பண்ணாரி, தெங்குமரஹாடா ஆகிய வனத்தில் சிறுத்தை புலிகள் அதிகளகவில் நடமாடுகின்றன.
தலமலை காட்டுப்பகுதியில் இருந்து 10, 23, 25 மற்றும் 26ஆவது திம்பம் பாதை வழியாக பண்ணாரி காட்டுக்கு சிறுத்தை இடம்பெருவதால் திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடந்து செல்லும் காட்சி தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக, திம்பம் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை உலாவுவதை லாரி டிரைவர்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளர்.இதையடுத்து, வனத்துறையினர் மேற்கொண்டஇரவு நேர ரோந்து பணியில் சிறுத்தை பதுங்கியிருப்பதை உறுதி செய்தனர்.
கடந்த சில ஆண்டுகளில் திம்பம் மலைப்பாதையில் உலாவிய 3 பேர் சிறுத்தையால் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தாளவாடி, தலமலை, பெஜலட்டி, கேர்மாளம், ஆசனூர் உள்ளிட்ட 200க்கும் குக்கிராமங்களில் வசிக்கும் கிராமங்களில் மக்கள் பஸ் வசதி குறைவு காரணமாக, இரு சக்கர வாகனங்களை அதிகளவில் பயன்படுத்ததுவங்கியுள்ளனர்.
அவர்கள் 24 மணி நேரமும் இரு சக்கக வாகனத்தில் பயணிப்பதால் சிறுத்தை, யானை அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கருதி மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை திம்பம் மலைப்பாதையில் பயணிக்க வாகன ஓட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடை தற்போது மேலும் 2 மாதம் நீடிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் வாகனத்தை விட்டு இறங்கி செல்ல வேண்டாம் என்றும் லாரி பழுதாகி நின்றால் ஓட்டுநர்கள் உடனடியாக வனத்துறையினரின் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தருவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் சிறுத்தை நடமாடும் பகுதியில் நின்று செல்பி எடுப்பதும் இளைப்பாறுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த, பண்ணாரி வனச்சோதனை சாவடியில், வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியும் எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர். மாலை 6 மணிக்கு மேல் செல்லும் இரு சக்கர வாகனங்கள் திருப்பி அனுப்பிப்பட்டு வருகிறது.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதி பள்ளி வேன் ஒன்று குழந்தைகளுடன் எழுமாத்தூரிலிருந்து ஈரோடு ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அதேபோல் திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு ரோட்டில் ஒரு லாரியும் சென்று கொண்டிருந்தது.
எழுமாத்தூர் அடுத்த செல்லாத்தாபாளையம் பிரிவில் வேன் டிரைவர் பள்ளி குழந்தைகளை ஏற்றுவதற்காக வேனை நிறுத்தினார். இதில் எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதியது.
இதில் லாரியும், வேனும் பலத்த சேதமடைந்தது. இதில் பள்ளி குழந்தைகள் 15பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி டிரைவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.






