என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி தாளவாடி அருகே உள்ளது கும்பரகுண்டி. கர்நாடக- தமிழக மாநில எல்லையில் இந்த வனப்பகுதி ஊர் உள்ளது.
இந்த வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ஒரு ஜோடி ஒன்றாக ஒரே கயிற்றில் பிணமாக தொங்கி கொண்டிருந்தனர். இதுபற்றி தாளவாடி போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு ஒரே கயிற்றில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டஜோடியை மீட்டனர். பிறகு இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையொட்டி போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி என தெரிய வந்தது.
கர்நாடக மாநில அம்சவாடியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 28). திருமணம் ஆகவில்லை. அதே பகுதியை சேர்ந்தவர் சுருதி என்கிற மகாலட்சுமி இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு உல்லாசமாக இருந்து வந்தனர். இதுபற்றிய விஷயம் வெளியே வந்தது கள்ளக்காதல் ஜோடிக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
இதையொட்டி அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு வந்து அங்கு ஒரே கயிற்றில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி இலங்கையில் நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் ஈரோடு, இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவன் இனியன் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இவரது தந்தை பெயர் பன்னீர்செல்வம், தாயார் பெயர் சரண்யா. மேலும் 12 வயதுக்குட்பட்ட பிரிவில் மாணவி தர்ஷனா வெண்கல பதக்கம் வென்று முத்திரை பதித்தார். இவரது தந்தை சக்திவேல், தாயார் பானு.
சாதனை படைத்த மாணவன் இனியனை மாவட்ட கலெக்டர் பிரபாகர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
இதே போன்று மாணவி தர்ஷனாவையும் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். ஈரோடு சதுரங்க சர்க்கிள் செயலாளர் ரமேஷ் உடன் இருந்தார்.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள அய்யம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் அரசு பள்ளிகளின் சாதனை விழா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கு மாநில கோஆப்டெக்ஸ் இயக்குநர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளியின் முன்னாள் மாணவரும் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியின் செயலாளருமான வக்கீல் பி.சி.பழனிசாமி முன்னிலை வகித்தார்.
விழாவில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக திட்ட இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் அரசு பள்ளியில் படித்த காலத்தில் பள்ளிக்கு செல்ல சைக்கிள் மற்றும் செருப்பு கூட கிடையாது. அதே போல் மழை பெய்தால் கூட குடை இருக்காது. முன்பு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் தான் கணினி இருந்தது. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. அனைவரின் கையிலும் கணினி இருக்கிறது.
அதனால் அரசு பள்ளிகளின் தரம் முன்பை விட உயர்ந்துள்ளது. தற்போது படித்தவர்களுக்கு வேலை இல்லை என்பதை விட வேலைக்கு தகுந்த ஆட்கள் இல்லை என்றுதான் சொல்லும் நிலை உள்ளது. மாணவர்கள் எந்த மொழியில் படித்தாலும் வீட்டில் உள்ள பெற்றோர்களிடம் தமிழில் பேச வேண்டும். அப்போது தான் உறவு மேம்படும்.
தமிழில் படித்த எனக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு கிடைத்தாலும், இந்தியா எனக்கு போதுமான பணியை வழங்கியுள்ளது. தமிழில் படிக்கும் மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் படிக்க வேண்டும்.
இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். விழாவில் பசுவபட்டி பள்ளி கட்டிட குழு சங்க நிர்வாகி பொன்னையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்றும் அறிவிக்காவிட்டாலும் அனைத்து அரசியல் கட்சியினரும் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணியில் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளனர்.
இதேபோல் உள்ளாட்சி தேர்தலுக்கான விரிவான ஏற்பாடுகளையும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் பணி தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி சீதாராமன் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேர்தல் பற்றிய ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சீதாராமன் நேற்று ஈரோடு வந்தார். அவர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். உள்ளாட்சி தேர்தலுக்கு என்னென்ன ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன? தேர்தலுக்கு தயாராக மாவட்ட நிர்வாகம் உள்ளதா? என கேட்டறிந்தார்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் எத்தனை பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சிகள் உள்ளன? எந்தெந்த பகுதிகள் பதட்டமானவை? பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்தும் தலைமை தேர்தல் அதிகாரி அரசு அலுவலர்களுடன் கேட்டறிந்தார்.
கொடுமுடி:
கொடுமுடி சப்-இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
கொடுமுடியை அடுத்த தாமரைப்பாளையம் பகவதியம்மன் கோயில் அருகே உள்ள கள்ளுக்கட்டில் சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த குழந்தைசாமி, துரை, தங்கமுத்து, ராமலிங்கம், செங்கோட்டையன்,செந்தில் குமார், கண்ணப்பன், மாரப்பன், சுரேஷ்குமார் என தெரிய வந்தது.
பிடிப்பட்ட 9 பேரிடம் இருந்து ரூ.7 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பெரிய வெங்கடாச்சலம் பிள்ளை வீதியை சேர்ந்தவர் குட்டி என்ற முகமது அலிகான் (வயது 40).
முகமது அலி கான் சத்தியமங்கத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் சத்தியில் உள்ள ஒரு உணவு விடுதியில் நேற்று மதியம் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது அங்கு 5 பேர் வந்தனர். திடீரென தன்னை நோக்கி 5 பேர் வந்ததை கண்டு திடுக்கிட்ட முகமது அலிகானை அந்த 5 பேரும் பிடித்து தள்ளி கொண்டு தாங்கள் வந்த ஜீப்பில் ஏற்றினர்.
இது குறித்து அவரது சகோதரர் உஸ்மான் அலி அடையாளம் தெரியாத 5 பேர் என் சகோதரரை கடத்தி செல்வதாக சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் உடனடியாக இது குறித்து விசாரணையில் இறங்கினர். விசாரணையில் முகமது அலிகானை கைது செய்தது பெங்களூர் போலீசார் என தெரிய வந்தது.
கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் 3 ஆண்டுகளுக்கு பிறகு இவர் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
பெங்களூரு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஸ் தலைமையில் வந்த கர்நாடகா போலீசார் இவரை கைது செய்ததும் தெரிய வந்தது.
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு சத்தியை சேர்ந்த குட்டி என்ற முகமது அலிகானை பெங்களூர் போலீசா திடீரென கைது செய்ததை தமிழக முஸ்லீம் கழக முன்னேற்றத்தினர் கண்டனம் தெரிவித்துள்னர்.
மேலும் இதை கண்டித்து சத்தியமங்கலத்தில் இன்று ஆர்ப்பாட்டமும் செய்தனர். செல்போன் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் சத்தியமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முகமது அலிகான் கைதுக்கு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
‘‘பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு 3 ஆண்டாக நடந்து வருகிறது. இந்த நிலையில் முகமது அலிகானை குற்றவாளியாக சித்தரித்து கைது செய்துள்ளனர். அவருக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவரை விடுவிக்க வேண்டும்’’ என்று கூறினர்.
முத்தூர்:
வெள்ளகோவில் பஸ் நிலைய பகுதியில் கடந்த 10 ஆண்டாக ஒரு வடநாட்டு பெண் சுற்றி திரிந்தார்.
முதுமை வயதான அந்த பெண் அங்குள்ளவர்கள் கொடுக்கும் உணவுவையும், உதவியையும் வைத்து காலம் தள்ளினார்.
இந்த நிலையில் அந்த ஆதரவற்ற பெண் நேற்று காலை திடீரென இறந்து விட்டார்.
இது பற்றி தகவல் கிடைத் ததும் வெள்ளகோவில் போலீசார் அந்த பெண் உடலை மீட்டனர். அவர் மீது பரிதாபப்பட்ட அப்பகுதி மக்களும் அங்கு வந்தனர்.
பிறகு போலீசார் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து இந்துக்கள் முறைப்படி அந்த பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி அந்த பெண் உடலை குளிப்பாட்டி மாலை போட்டு புது சேலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இத்தனைக்கு அந்த பெண்ணின் பெயர் கூட அப்பகுதி மக்களுக்கு தெரியாது. மனித நேயத்துடன் செய்த இந்த செயலை மற்றவர்கள் பாராட்டினர்.
கீழ்பவானி பாசன திட்டத்திற்கும், இதர பவானி பாசன திட்டத்திற்கும் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின் அடிப்படையில் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு தேதியினை அறிவித்த பின்பு மற்ற பாசனங்களுக்கு நீர் திறக்க வேண்டும் என கடந்த ஒரு மாதமாக கீழ்பவானி பாசன விசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
தடப்பள்ளி அரக்கன் கோட்டை, காளிங்காரயன் பாசனத்திற்கு அரசு கடந்த 12-ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டது இது கீழ்பாவனி பாசன விவசாயிகளை கொதிப்படைய செய்தது.
கீழ்பாவானி பாசனத்திற்கு நீர் திறக்காததை கண்டித்தும், நீர் திறக்கும் தேதியினை அறிக்க கோரியும் நாட்டின் 70 வது சுதந்திர தினமான இன்று சென்னிமலை பகுதியில் கீழ்பாவனி பாசன பகுதியான உப்பிலிபாளையம், பசுவபட்டி, பூச்சக்காட்டு வலசு, ஒட்டவலசு, கே.சி.வலசு, நல்லிக்கவுண்டன்வலசு, சொக்கநாதபாளையம், உட்பட பாசன வாய்க்கால் பகுதிகளில் உள்ள 100-க்கும் அதிகமான வீடுகளில் கறுப்பு கொடி கட்டியுள்ளனர்.
ஊர்களுக்கு செல்லும் முகப்புகளிலும் கறுப்பு கொடி தோரணம் கட்டியும் கறுப்பு கொடி ஏந்தியும் தட்டிகளை பிடித்தும் ஊர்வலமாக விவசாயிகள் ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றினர்.
கீழ்பவானி பாசன திட்டங்கள் 2.75 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனமும், ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் வளத்திற்கும் ஆதாரமாக உள்ளது.
அதனால் காவிரி நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை கணக்கில் கொண்டு விகிதாச்சார அடிப்படையில் 3 பாசனத்திற்கும் ஒரே காலத்தில் தான் தண்ணீர் திறக்க பொதுப்பணி துறையும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பவானிசாகர் அணையில் இருந்து மூன்று பாசனங்களுக்கும் உரிய பங்கீட்டை வழங்க போதுமான அளவு தண்ணீர் சேமிக்கப்படும் வரை அணையை திறப்பதை ஒத்திவைக்க வேண்டும் என அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
சென்னிமலை அருகே உள்ள வடமுகம் வெள்ளோட்டத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவர் இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு இன்று கையில் தேசிய கொடியுடன் வந்தார். மாநகராட்சியில் காலை சுதந்திர தினவிழா நடந்து கொண்டிருந்தது. மேயர் மல்லிகா பரமசிவம் கொடி ஏற்றினார்.
மாநகராட்சி அலுவலகம் முன் உள்ள காந்திசிலை முன் துரைசாமி திடீரென கையில் தேசிய கொடியுடன் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இதனால் மாநகராட்சி வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துரைசாமியை சுற்றி வளைத்தனர். அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.
கைது செய்யப்பட்ட துரைசாமி கூறும் போது, ‘‘வடமுகம் வெள்ளோடு பஞ்சாயத்துக்கு வீட்டுவரி கட்ட சென்றால் வரி வாங்க மாட்டேன்கிறார்கள். வீட்டு வரி ரசீதும் தர மாட்டேன்கிறார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலன் இல்லை’’ என்று கூறினார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி மூலக்காடு மோரூர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் சதீஸ் குமார் (வயது 34). இவர் தனது நண்பரை பார்க்க ஈரோடு அடுத்த சித்தோடுக்கு வந்தார்.
கனிராவுத்தர் குளம் அருகே அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி நின்று கொண்டிருந்தபோது ஈரோடு வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த சிவகுமார், கணேசன் என்ற 2 பேர் விலாசம் கேட்பது போல் சதீஸ்குமாரிடம் பேச்சு கொடுத்தனர்.
பிறகு அவர்கள் சதீஸ் குமாரிடம் ‘‘எங்களிடம் பெண்கள் உள்ளனர். ரூ.1000 கொடுத்தால் எந்த பெண்ணிடமும் உல்லாசமாக இருக்கலாம்’’ என்று ஆசை வார்த்தை அள்ளி வீசினர். பிறகு அவரை 2 பேரும் அழைத்து ஒரு வீட்டுக்கு சென்றனர்.
அந்த வீட்டில் 3 பெண்கள் இருந்தனர். அந்த பெண்களிடம் சதீஸ்குமார் விசாரித்த போது, ‘‘வேலை தேடி வந்த எங்களை கணேசனும், சிவகுமாரும் அழைத்து வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்தனர். பிறகு வேலைக்கு போனால் அதிக பணம் கிடைக்காது. விபாசாரத்தில் தான் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி இங்கு வைத்துள்ளனர். எங்களை காப்பாற்றுங்கள்’’ என்று கூறினார்களாம்.
பிறகு தன்னை அழைத்து வந்த 2 வாலிபர்களிடம் சதீஸ்குமார் தன்னிடம் பணம் கொஞ்சம் குறைவாக உள்ளது. பக்கத்தில் உள்ள ஏ.டி.எம். சென்டரில் பணம் எடுத்து கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.
பிறகு அவர் ஈரோடு வடக்கு போலீசில் இது பற்றி புகார் செய்தார். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று வீட்டில் இருந்த 3 இளம் பெண்களையும் மீட்டனர். வீட்டில் இருந்த கணேசன் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபியில் நேற்று மாலை இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெரியார் திடல் சென்ற போது அங்கு ஒரு நபர் சந்தே கப்படும்படி நின்று கொண்டிருந்தார். அவர் கையில் ஒரு பை இருந்தது.
அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கோபி, சிலேட்டர் ஹவுஸ் பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 35) என தெரிய வந்தது. அவரது பையை சோதனை செய்ததில் தமிழ் அகதி, ஜாக்சன்துரை, ராஜாமந்திரி உள்பட 21 புதுப்பட சி.டி.க்களை பறி முதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூரை சேர்ந்தவர் மணிகண்டன். வேன் டிரைவர். இவருடைய மனைவி ரஞ்சனி. இவர்களுடைய மகள்கள் சிவானி (வயது 5), சாய் தாரணி (1½). இதில் சிவானி கோபியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறாள். தினமும் பள்ளிக்கு வேன் மூலம் சிவானி சென்று வந்தாள்.
நேற்று காலை 9 மணிக்கு வழக்கம்போல் வீட்டுக்கு முன் பள்ளிக்கூட வேன் வந்தது. ரஞ்சனி, சிவானியை அழைத்து சென்று பள்ளிக்கூட வேனில் ஏற்றி விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். இதற்கிடையே ரஞ்சனிக்கு பின்னால் ஓடி வந்த குழந்தை சாய்தாரணி பள்ளிக்கூட வேன் முன்னால் நின்று கொண்டிருந்தது. இதை ரஞ்சனி கவனிக்கவில்லை.
இந்த நிலையில் வேனில் சிவானி ஏறியதும், டிரைவர் வேனை நகர்த்தினார். அப்போது முன்னால் நின்ற சாய் தாரணி மீது வேன் மோதியது. இதில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் அலறியபடி குழந்தை உயிருக்கு போராடியது. திடீரென தன் மகள் சாய் தாரணியின் அலறல் சத்தம் கேட்கிறதே என நினைத்த ரஞ்சனி சட்டென்று திரும்பி பார்த்தார்.
அப்போது குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தையை தன் மடியில் தூக்கி வைத்து கதறி அழுதார். பின்னர் அங்கிருந்தவர்கள் குழந்தை சாய்தாரணியை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பள்ளிக்கூட வேன் டிரைவர் குமாரை (46) கைது செய்தனர்.






