என் மலர்
ஈரோடு
ஈரோடு:
மாநில அளவிலான கராத்தே போட்டி ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே உள்ள அரசு பள்ளியில் இன்று நடந்தது.
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
பல்வேறு பிரிவுகளின் கீழ் நடந்த இந்த போட்டியில் ஒற்றை கட்டா, குரூப்கட்டா மற்றும் குமித்தே போன்ற போட்டிகள் நடந்தன.
இந்த போட்டியை தென்னரசு எம்.எல்.ஏ தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். கராத்தே மாஸ்டர் திருமலை வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் முருகுசேகர், ஈரோடு நகர எம்.ஜி ஆர் மன்ற செயலாளர் குப்புசாமி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தெய்வநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியிலிருந்து ஒரு லாரி வெங்காய மூட்டைகளை ஏற்றி கொண்டு ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று நடக்கும் சந்தைக்கு இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
லாரியை முகமது முஜின் (வயது 34) என்பவர் ஓட்டி வந்தார். மேலும் 5 பேர் லாரி மீது அமர்ந்து வந்து கொண்டிருந்தனர். பர்கூர் மலையில் நள்ளிரவு 12 மணிக்கு வந்து கொண்டிருந்தது. பர்கூர் வனப்பகுதி மயான வளைவில் லாரி திரும்பும் போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுபாட்டில் இருந்து விலகி நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது.
நல்ல வேளையாக மலையின் பள்ளத்தில் கவிழவில்லை. அப்படி கவிழ்ந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். ரோட்டிலேயே கவிழ்ந்ததால் வெங்காய மூட்டைகள் சிதறி ரோட்டில் கிடந்தது. டிரைவருக்கு காலில் அடியுடன் தப்பினார். மேலும் லாரியின் மேல் இருந்த 5 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு பஸ்சுக்காக நின்று கொண்டிருந்த பயணி ஒருவரிடம் இருந்து அவரது செல்போன் வாலிபர் ஒருவர் திருடி கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் திருடன்...திருடன்...என குச்சலிட்டார். அருகில் இருந்த மற்ற பயணிகள் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பயணிகள் பிடித்து வைத்திருந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவன் தஞ்சாவூர் மாவட்டம் முனியப்ப ஆண்டவர் காலனியை சேர்ந்த சிவகுமார்(வயது24) என தெரியவந்தது. ஈரோட்டில் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்து அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
பெருந்துறை அருகே உள்ள காஞ்சிகோவில் நரிப்பாளையத்தை சேர்நதவர் சங்கர் (வயது 29). இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சங்கர் பெருந்துறை ஈரோடு ரோட்டில் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து அவ்வப்போது தற்கொலை செய்ய முயற்சி செய்த வந்தாராம். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி ஒர்க்ஷாப்புக்கு வந்த சங்கர் அங்குள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மனைவி ரம்மியா (27) பெருந்துறை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை (தனி பொறுப்பு) மந்திரி மகேஷ் சர்மா நேற்று ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் நடந்த பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பிறகு அவர் சென்னிமலைக்கு சென்றார். அங்கு சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.
திருப்பூர் குமரனின் உயிர் தியாகத்தை பற்றியும் அவர் நாட்டுக்காக உழைத்ததையும் மத்திய மந்திரியிடம் அங்குள்ளவர்கள் எடுத்து கூறினர்.
வெள்ளையர்களின் குண்டாந்தடி தன் உடம்பை பலமாக தாக்கினாலும் தேசிய கொடி கீழே விழாமல் தோளில் தாங்கி பிடித்தப்படி தன் உயிரை விட்டார் என்று கூறியதை கேட்டதும் மத்திய மந்திரி மகேஷ் சர்மா கண் கலங்கி அழுதார்.
இதைத்தொடர்ந்து சென்னிமலை தேர்நிலை அருகே உள்ள குமரனின் நினைவு இல்லத்துக்கு சென்றார். அங்கு குமரனின் வாரிசு அண்ணாதுரை மத்திய மந்திரியை வரவேற்றார். அவரது கையை பிடித்து மத்திய மந்திரி திருப்பூர் குமரனின் தியாகத்தை கூறி மெய்சிலிர்த்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தியாகி குமரனுக்கு நினைவு இல்லம் கட்ட மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் மாநில அரசு எங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மேலும் அதற்கு முன்பாக மாநில அரசிடம் அதற்கான நிலத்தை அதன் உரிமையாளர் ஒப்படைக்க வேண்டும். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த குமரனின் தியாகத்தை போற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அருகில் இருந்த குமரனின் வாரிசு அண்ணாதுரை தற்போது குரனின் நினைவு இல்லம் உள்ள இடத்தை வழங்குவதாக அறிவித்தார். உடனே அவரை மத்திய மந்திரி கட்டி அணைத்து கொண்டு பாராட்டினார்.
பவானி:
பவானி தேவபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு நேற்று ஒரு வேன் புறப்பட்டு சென்றது. அங்கு நடக்கும் திருமணத்துக்காக 15 பேர் அந்த வேனில் சென்றனர்.
இந்த வேன் சித்தோடு அருகே செல்லும் போது ரோட்டின் குறுக்கே ஒரு இரு சக்கர வாகனம் சென்றது. இதன் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் வேனை திருப்பினார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த 10 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று வேனில் வந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் பரவலாக மழை பெய்தது.மழை பெய்யாத பகுதியில் குளிர் காற்று வீசியது.
ஈரோடு கோபி, பெருந்துறை ஆகிய பகுதியில் பரவலாக மழை பெய்தது. அப்பகுதியில் இன்று காலையும் குளிர்ச்சி நிலவுகிறது.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள பெத்தாம்பாளையம், நரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர். அப்பாச்சி இவரது மகன் சங்கர்(29). இவர் பெருந்துறை- ஈரோடு ரோட்டில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார்.
இவருக்கு திருமணமாகி ரம்யா(27) என்ற மனைவியும் ராகுல்(4) என்ற மகனும் உள்ளனர். . தற்பொழுது இவர் ஈரோடு, வில்லரசம் பட்டி பகுதியில் வசித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து ஒர்க்ஷாப்புக்கு சென்றார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் சங்கர் வீடு திரும்பவில்லை.இதனால் அவரது மனைவி ரம்யா அவரை தேடினார்.
இந்த நிலையில் ஒர்க்ஷாப் பின் உள்புறமுள்ள ரூமின் மேற்கூரையில் இருந்த பேனில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு பெருந்துறை போலீசார் சென்று விசாரித்தனர்.
இதன்பிறகு சங்கரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்கு பதிவு செய்து சங்கர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள மூலக்கரை சுள்ளிக்காடு என்ற இடத்தை சேர்ந்தவர் நடராஜன. இவரது மகன் தீபக் குமார் (வயது 19). ஈரோடு குமலன் குட்டையைசேர்ந்த காஜா என்பவரின் மகன் அமீர்கான் (19).
இவர்கள் இருவரும் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ஈசி.ஈ படித்து வந்தனர்.
நண்பர்களான இவர்கள் நேற்று ஈரோடு-பெருந்துறை ரோட்டில் உள்ள எளையாகவுண்டன் பாளையம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.
மோட்டார் சைக்கிளை தீபக் குமார் ஓட்டினார். அமீர் கான் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.
அப்போது பின்னால் வந்த ஒருவேன் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டின் நடுவே போடப்பட்டு உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது.
இதில் தீபக் குமார், அமீர் கான் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் ஆபத்தான நிலையில் இருந்த தீபக் குமார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
அமீர்கான் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரும் சிகிச்சை பலன் இல்லாமல் இன்று அதிகாலை 3 மணிக்கு இறந்தார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் இறந்த 2 மாணவர்களின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மற்றும் சக மாணவர்கள் கதறி அழுதது காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது.
கோபி:
தமிழக சட்டசபையில் நேற்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர்.
மேலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு வாரம் சஸ்பெண்டும் செய்யப்பட்டனர். இதையொட்டி தமிழக சபாநாயகரை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோபி பஸ் நிலையம் அருகே இன்று தி.மு.க.வினர் சபாநாயகரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் நல்லசிவம் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்., ஜி.வி.வெங்கிடு சுப்பிரமணியம், ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சிறுவலூர் முருகன், (கோபி) சென்னிமலை (நம்பியூர்) மற்றும் கோபி நகர செயலாளர் நாகராஜன், கள்ளிப்பட்டி மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்து பஸ்களில் அழைத்து சென்றனர். தி.மு.க.வினரின் போராட்டத்தால் கோபியில் இன்று பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
காந்திநகர் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதியில் மின்சாரம் இருக்காது.
காஞ்சிக்கோயில், பள்ளப்பாளையம், கவுண்டம் பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம் பாளையம், அய்யன்வலசு, பெருமா பாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பானையம், கந்தம் பாளையம் பிரிவு, சாமிக்கவுண்டன் பாளையம், வேட்டை பெரியாம்பாளையம், காந்திநகர், நடுவலசு, கருக்கம்பாளையம்.
துடுப்பதி, பொன்னாண்டா வலசு, கொளத்தான்வலசு, சூரியம் பாளையம், பெத்தாம் பாளையம், இளையாம் பாளையம், ஓசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணார் பாளையம், தீர்த்தம் பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டம் பாளையம், பாலக்கரை, தொட்டியனூர் மற்றும் கோயில் காட்டுவலசு.
இத்தகவலை ஈரோடு மின் செயற்பொறியாளர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
சிவகிரி அருகே உள்ள கந்தசாமி பாளையம் விளாங்காட்டு வலசு என்ற இடத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 52) தொழிலாளி. கடந்த 4 வருடமாக இவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இதனால் பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் நோய் குணமாகாததால் பொன்னுசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் தோட்டத்துக்கு வைக்கப்படும் எலிமருந்தை (விஷம்) குடித்த பொன்னுசாமி மயங்கி விழுந்தார். உடனே அவரை சிவகிரி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் பொன்னுசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






