என் மலர்tooltip icon

    ஈரோடு

    அந்தியூர் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் பர்கூர் மலை பகுதி ஈரெட்டி பகுதியை சேர்ந்தவர் ராயணன் (வயது 45). இவர் நேற்று இரவு தாமரைக் கரை பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.

    ஒருவர் கஞ்சாவுடன் நின்று கொண்டிருக்கிறார் என்ற ரகசிய தகவலின் பேரின் அந்தியூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் உத்தரவுப்படி பர்கூர் சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்பிரிவு போலீசார் மாதேஸ்வரன், கண்ணன் உள்பட போலீசார் தாமரைக்கரை பகுதிக்கு சென்றனர்.

    அந்த பகுதியில் கஞ்சாவுடன் நின்று இருந்த ராயனை பிடித்து விசாரித்து சோதனை செய்தனர். அப்போது அவர் ஒரு கிலோ கஞ்சா வைதிருந்தது தெரிய வந்தது. போலீசார் கஞ்வை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    அவர் வைத்திருந்த கஞ்சாவின் மதிப்பு ஒரு லட்சம் என்றும், கர்நாடகா மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    கொல்லம்பாளையத்தில் வீட்டு கதவை உடைத்து ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கொல்லம்பாளையம் பார்வதி கிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் காசிநாதன். இவர் தனியார் முட்டை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள்.

    இவர்களுக்கு 2 மகள்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. கணவன்- மனைவி இருவரும் கரூரில் நடந்த பேத்தி காது குத்து விழாவுக்கு நேற்று வீட்டை பூட்டி கொண்டு புறப்பட்டு சென்றனர்.

    வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் இவர்கள் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். உள்ளே மேஜை டிராயரில் இருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்தனர். அதன் பிறகு பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டில் தங்கி இருந்த வக்கீல் வீட்டின் கதவையும் உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு எதுவும் கிடைக்காததால் ஓட்டம் பிடித்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் பற்றி தகவல் கிடைத்தததும் சூரம்பட்டி போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர்.

    அங்கு வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தது. இந்த கொள்ளை குறித்து கரூர் சென்ற காசிநாதன் மற்றும் அவரது மனைவி பழனியம்மாளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் உடனடியாக வீட்டுக்கு திரும்பி வந்தனர். வீட்டு கதவு உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    கோபி அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோபி:

    கோபி அருகே உள்ள முருகன் புதூரை சேர்ந்தவரை சதாசிவம் (வயது 50). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வீட்டில் இருந்த சதாசிவம் சிறுநீர் கழிக்க வெளியே சென்றார்.

    அப்போது அவரது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சதாசிவம் தவறி விழுந்து விட்டார். 25 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் தண்ணீரில் தத்தளித்த அவர் கூக்குரலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.கோபி தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்தனர். அதற்குள் சதாசிவம் தண்ணீ ரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சதாசிவத்துக்கு பரிமளா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் திருச்சி பயணிகள் ரெயிலுக்கு கொண்டு வரப்பட்ட என்ஜின் தடம் புரண்டதையொட்டி அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
    ஈரோடு:

    ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு வழக்கம் போல் காலை 7.30 மணிக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு செல்லும்.

    அதே போல் இன்று திருச்சி பயணிகள் ரெயில் ஈரோடு ரெயில் நிலைய 4-வது பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்தது. பயணிகள் ஏறி அமர்ந்தனர்.

    அந்த ரெயிலுக்கு என்ஜின் ஈரோடு ரெயில் நிலைய செட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது. ரெயில் அருகே அந்த என்ஜின் வந்த போது திடீரென தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது. இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி ரெயில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

    உடனடியாக தடம் புரண்ட ரெயில் என்ஜினை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு என்ஜின் தூக்கி தண்டவாளத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

    இந்த என்ஜின் தடம் புரண்டதையொட்டி 4-வது பிளாட்பார்ம் வழியாக வரும் ரெயில்கள் வேறு தடங்களில் திருப்பி அனுப்பப்பட்டது.

    காலை 7.30 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு- திருச்சி பயணிகள் ரெயில் 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு புறப்பட்டு சென்றது.

    ரெயில் என்ஜின் தடம் புரண்டதையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று காலை பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
    பவானிசாகர் அருகே விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 4 மாவட்டத்துக்கு சிலைகள் அனுப்பும் பணி தீவிரதமாக நடைபெற்று வருகிறது.
    பு,புளியம்பட்டி:

    விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு தேவையான 5000 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பவானிசாகர் அருகே பெரியகள்ளிப்பட்டி பகுதியில் தயாரிக்கப்பட்டு நேற்று முதல் சிலைகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

    மயில் வாகனம், பசுவாகனம், சிங்கம், எலி, அன்னம், சிவலிங்கம், முருகன், சித்திபுத்தி, நாகபாம்பு, கருடபகவான், யானை, மூன்றுமுக விநாயகர், மங்கள விநாயகர் உள்பட பல்வேறு வடிவங்களில் மூன்றரை அடி முதல் 11 அடி வரை உள்ள மொத்தம் 1300 சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் காகிதக்கூழ், கிழங்குமாவு, வாட்டர்கலர் பயன்படுத்தி வர்ணம் பூசப்பட்டுள்ள இந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது எளிதில் கரையும் வகையிலும், நீர்மாசு ஏற்படாத வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

    வரும் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவையொட்டி மாநகரம், நகர்ப்பகுதி மற்றும் கிராமப்புறங்களில் முக்கிய இடங்களில் இந்துமுன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் காவல்துறையில் அனுமதி பெற்று விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடுவர்.
    கோர்ட்டு தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பெண்களை இழிவுபடுத்தும் வகையில்- கொங்கு மண்டல கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழங்கப்பட்ட சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.

    அவினாசி- அத்திக்கடவு திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் அதை உடனே நிறைவேற்ற வேண்டும். நாட்டு இன மாடுகள் மற்றும் காங்கயம் இன மாடுகள் அடுமாட்டுக்காக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. எனவே பாரம்பரிய மாடுகளை காப்பாற்றுவதற்காக ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லை என்றால் கோர்ட்டு தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம். நீர்நிலைகளை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை தடை செய்ய வேண்டும். ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது பற்றி விவாதிக்க நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை பெருந்துறையில் இந்து மக்கள் கட்சி மற்றும் கொங்கு இளைஞர் பேரவை சார்பில் கருத்தரங்கு பேரணி- பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் குமார ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
    ஆப்பக்கூடலில் பிளஸ்-2 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் காமராஜ் காலனியை சேர்ந்தவர் குப்புசாமி விவசாய கூழி தொழிலாளி. இவரது மகள் தாரணி (வயது17).

    தாரணி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் ஒழுங்காக பள்ளிக்கூடம் செல்லாமல் இருந்தாராம்.

    இதனால் அவரது பெற்றோர் பள்ளிக்கூடத்துக்கு தினமும் சென்று நன்றாக படியும்மா.. என்று கூறி வந்தார்கள்.

    இந்த நிலையில் வழக்கம் போல் தாரணியின் பெற்றோர் விவசாய வேலைக்கு சென்று விட்டனர்.

    அவர்கள் திரும்ப வீட்டுக்கு வந்த போது தாரணி வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த அவர்கள் தாரணியை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு தாரணி பரிதாபமாக இறந்தார்.

    பிளஸ்-2 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆப்பக்கூடலில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தாரணியின் உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுத காட்சி மனதை உருக்குவதாக இருந்தது.

    இந்த சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் நேற்று மாலை 4 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடி-மின்னலுடன் பலமாக கொட்டியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நேற்று மாவட்டத்தில் பரவலான மழை பெய்தாலும் ஈரோட்டில் அதிகசட்ச மழை பெய்தது.

    ஈரோட்டில் நேற்று மாலை 4 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடி-மின்னலுடன் பலமாக கொட்டியது.

    சம்பத் நகர், திண்டல், வீரப்பன் சத்திரம், கருங்கல் பாளையம் மூலப்பாளையம் கொல்லம்பாளையம், நாடார் மேடு, மூலப்பாளையம், ஆணைக்கல் பாளையம் , வில்லரசம்பட்டி உள்பட நகரம் முழுவதும் மழை கொட்டியது.

    இந்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு காந்திஜி ரோடு, நாச்சியப்பா வீதி, கொங்காளம்மன் கோவில் வீதி, மணிகூண்டு, பகுதி உள்பட முக்கிய வீதிகளில் மழை வெள்ளம் சீறி பாய்ந்து ஓடியது.

    இதனால் ரோடுகளில் வாகனங்கள் தட்டு தடுமாறி சென்றன.மழையால் முழுவதும் நனைந்த இரு சக்கர வாகனங்கள் அப்படியே ஓடாமல் நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பலர் தங்களது வண்டிகளை தள்ளி கொண்டு சென்றனர்.

    ஈரோட்டில் அதிபட்சமாக 35 மி. மீட்டர் மழை பதிவாகி இருந்தது.மேலும் மற்ற பகுதிகளில் மழை பலமாக பெய்யவில்லை.

    பவானி, கவுந்தப்பாடி, ஆப்பக்கூடல், அத்தாணி, கீழ்வாணி, வெள்ளாள பாளையம்,கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இந்த மழையால் வெப்பம் அடியோடு ஓய்ந்து குளிர் நிலவியது.

    ஒரு தலை காதலால் பெண்கள் கொலை செய்யப்படுவதை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    தமிழ்நாடு இறகு பந்து சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி ஈரோட்டில் நடந்து வருகிறது.

    இந்த போட்டி நடக்கும் இடத்துக்கு தமிழ்நாடு இறகு பந்து சங்க மாநில தலைவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று இரவு வந்தார்.

    இறகு பந்து வீரர்-வீராங்கனைகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இதன் பிறகு இரட்டையர் பிரிவில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு விளையாடினார். சுமார் 30 நிமிடம் விளையாடிய அவரை வீரர்- வீராங்கனைகள் மற்றும் பார்வையாளர்கள் கைதட்டி- ஆரவாரம் செய்தனர்.

    இந்த போட்டியில் முதல் போட்டியில் அன்புமணி ராமதாஸ் அணி 18 புள்ளிகள் பெற்றது. அவரை எதிர்த்து விளையாடிய அணி 21 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. அடுத்து நடந்த 2-வது போட்டியில் அன்புமணி ராமதாஸ் அணி21 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.

    தமிழ்நாடு இறகு பந்து சங்க மாநில செயலாளர் அருணாசலம், மாவட்ட தலைவர் செல்லையன், செயலாளர் செந்தில்வேலன் ஆகியோர் வெற்றி பெற்ற அன்புமணி ராமதாசுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இதன்பிறகு டாக்டர் அன்புமணி ராமராஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டுக்கு காவிரி அணையில் இருந்து ஒரு சொட்டு தண்ணணீர் கூட தரமாட்டோம் என்று 2 கர்நாடகா மந்திரிகள் கூறி உள்ளனர்.

    இது வாழ்வாதார பிரச்சனை மட்டும் அல்லாமல் 2 மாநிலங்களுக்கு இடையேயான சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாகும்.

    காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக முதல் அமைச்சர் ஜெயலலிதா உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் எம்.எல்.ஏக்கள் இது தொடர்பாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

    கெயில் பிரச்சனையால் 7 மாவட்டங்களை சேர்ந்த 6 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே விவசாய நிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் குழாய்களை பதிக்காமல் நெடுஞ்சாலை வழியாக குழாய்களை பதிக்க வேண்டும்.

    சிறுவாணி ஆற்றில் அணை கட்டுவதற்கு கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த அணையை கட்ட விட மாட்டோம். சிறுவாணி ஆற்றில் அணை கட்டப்படுவதை கண்டித்து விவசாயிகளை திரட்டி பா.மா.க சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்.

    ஒரு தலைக்காதலால் பெண்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும்.

    உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டு மிப்பெரிய வெற்றியை பெறும்.

    இவ்வாறுஅவர் கூறினார்.

    பேட்டியின்போது பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் ஆறுமுகம், வேலுச்சாமி, துணை தலைவர்கள் பரமசிவம், வடிவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.
    கடம்பூர் அருகே கஞ்சா செடி பயிரிட்டதாக தந்தை-மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    டி.என்.பாளையம்:

    கடம்பூர் மலைப்பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையொட்டி பங்களா புதூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மேற்பார்வையில் கடம்பூர் அருகே உள்ள உகினியம் பகுதியில் கடம்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது உகினியம் பொள்ளாக்காடு என்ற இடத்தில் ஒருதோட்டத்தில் குச்சி கிழங்கு செடிகளுக்கு இடையே கஞ்சா பயிரிடப்பட்டிருந்தது தெரிய வந்தது. மொத்தம் 60 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

    இந்த கஞ்சா செடிகளை பயிரிட்டதாக ரங்கசாமி (வயது 63), இவரது மகன் பத்திரன் (28) மற்றும் மாது, நஞ்சுண்டன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 4 பேரையும் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    பெருந்துறை அருகே தொழில் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த என்ஜினீயரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை, பழைய பஸ் நிலையம் ரோடு, முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் ராசு என்ற சந்திரசேகரன். தொழில் அதிபர்.

    இவர் பெருந்துறை போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    நான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அரசின் முறையான அனுமதி பெற்று பெருந்துறையை அடுத்துள்ள தென்முகம் வெள்ளோடு, உலகபுரம் பகுதியில் கிராவல் மண் எடுத்து தொழில் செய்து வந்தேன். தற்போது இந்த தொழிலை நிறுத்தி விட்டேன்.

    இந்த நிலையில் பெருந்துறை, காஞ்சிக்கோவில் ரோடு, தாஸ்கண்ட் வீதியை சேர்ந்த என்ஜினீயர் நந்தகுமார் என்பவர் நான் சட்ட விரோதமாக கிராவல் மண் வெட்டியெடுத்து விற்பனை செய்வதாக ஊர் மக்கள் அனுப்பியது போல் அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் மனு கொடுத்துள்ளார்.

    மேலும் தன்னை நேரில் சந்தித்தும், போனில் தொடர்பு கொண்டும் தனக்கு ரூ.10 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் புகார் கொடுத்து தொழில் செய்ய முடியாமல் தடுத்து விடுவேன் என்றும் மிரட்டினார்.

    நான் சட்ட விரோதமாக எந்த தொழிலும் செய்யவில்லை, எனவே பணம் தரமுடியாது என கூறினேன். மேலும் இது தொடர்பாக ஈரோடு எஸ்பி-யிடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி கூறினேன். இது பற்றி தெரிந்து கொண்ட நந்தகுமார் எனது வீட்டுக்கு வந்து என்னை பற்றி புகார் கொடுக்கிறாயா? உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி என்னை தாக்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் என்ஜினீயர் நந்தகுமாரை கைது செய்து பெருந்துறை கோர்ட்டில் ஒப்படைத்தார். வழக்கினை விசாரித்த நீதிபதி ரெய்கானா பர்வீன் அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
    பு.புளியம்பட்டியில் பிளக்ஸ் பேனர் வைப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
    பு.புளியம்பட்டி:

    பு.புளியம்பட்டி பஸ்நிலையம் அருகே பொதுமக்கள் சார்பில் ஒரு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதை மறித்து முன்னால் இந்து முன்னணி சார்பில் ஒரு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையொட்டி நகராட்சி மற்றும் போலீஸ் தரப்பில் இரு பிளக்ஸ் பேனரையும் அவர்களே அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று கூறினர்.

    இதை தொடர்ந்து பொது மக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை அவர்களே எடுத்து சென்றனர். ஆனால் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட பேனர் அகற்ற படாமல் இருந்தது.

    அதே சமயம் இந்து முன்னணி சார்பில வைக்கப்பட்டிருந்த பேனர் அகற்றப்படவில்லை. இதனால் அந்த பேனரை அகற்ற பு.புளியம்பட்டி நகராட்சி ஊழியர்கள் அங்கு வந்தனர்.

    அந்த பேனரை அகற்ற முயன்றபோது இந்து முன்னணி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி காரசார கருத்து மோதல் நடந்தது. மேலும் இந்து முன்னணியினர் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்துக்கு சத்தி டி.எஸ்.பி. மோகன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு சமாதானம் ஏற்பட்டது. மறியலை கைவிட்டனர்.
    ×