என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்ட உள்ளாட்சிதுறை பணியாளர்கள் சங்கம் சார்பில் துப்புரவு பணியாளர்கள் இன்று ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் உள்ள தொழிலாளர்கள் நல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ. டி.யூ.சி. தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெரியசாமி, நல்லப்பன் மற்றும் நிர்வாகிகள் சக்திவேல், அப்புசாமி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மக்கள் தொகைக்கேற்ப அரசு விதிப்படி துப்புரவு தொழிலாளர்களை நியமிக்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் த.பாண்டியன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
காவிரி நீர் பிரச்சனையில் பா.ஜனதா மேல்மட்ட பொறுப்பாளர்கள் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையை தர மறுக்கிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இப்போது மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? இத்தனை நாள் எங்கே போனார்கள்? முல்லை பெரியாறுஅணை பிரச்சனையிலும் நியாயமான உரிமையை பெற்று தர மாட்டேன்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பிரதமர் மோடி பிரசாரம் செய்யும் போது தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டு எடுப்போம் என்று வாக்குறுதி கூறினார். இன்றுவரை அது வெறும் வாக்குறுதியாகவே உள்ளது.
தமிழக முதல்வரின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்து உள்ளது என்று அப்பல்லோ மருத்துவ குழுவினர் தினமும் மாலை முதல்வரின் உடல்நிலை பற்றி கூறி வருகிறார்கள். அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறுகிறார்கள். இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இதைவிட்டு வீணான வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு த.பாண்டியன் கூறினார்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகாவில் குத்தியாலத்தூர் ஊராட்சி அமைந்துள்ளது.சத்தியமங்கலம் ஒன்றியத்திலுள்ள 15 பஞ்சாயத்துகளில் அதிக வாக்காளர்களை கொண்டது. குத்தியாலத்தூர் ஊராட்சி 12581 வாக்காளர்களை உள்ளடக்கியது.
இதே போல் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் டி.என்.பாளையம் வனச் சரகத்திற்குட்பட்ட கிராமம்.மல்லியம்மன்துர்க்கம். இங்கு 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மொத்தம் 446 வாக்காளர்கள் உள்ளனர். கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் கொண்டது.
இப்பகுதி சட்டமன்ற தேர்தல் மட்டும் உள்ளாட்சித் தேர்தலின் போது போகவர 18 கி.மீ.தொலைவை அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை,சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட வன விலங்குகள் சர்வசாதாரணமாக நடமாடும். அதையெல்லாம் தாண்டி உயிரை கையில் பிடித்துக்கொண்டு தான் வந்து ஓட்டு போட வேண் டும்.
பொது மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் இந்த மலைப்பகுதியிலேயே நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலுக்கு வாக்கு சாவடி அமைத்தது. 75 சதவீதம் வாக்கு பதிவானது குறிப்பிடத்தக்கது. இக்கிராம மக்களிடையே வரவேற்பு கிடைத்தது.
ஆனால் தற்போது கல் கடம்பூர் வாக்குசாவடிக்கு சென்று தான் வாக்களிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களது கோரிக்கை என்னவென்றால் இப்பகுதியிலேயே வாக்கு சாவடி அமைக்க வேண்டும் இல்லையெனில் மாற்று ஏற்பாடாக எளிதில் சென்று வரக்கூடிய வகையில் வாகனங்கள் ஏற்பாடு செய்து பாதுகாப்பாக வாக்களித்து விட்டு மீண்டும் ஊரிலேவிட வேண்டும் என்பதே தவிர தேர்தல் புறக்கணிப்பல்ல என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகேயுள்ள மாத்தூர் ஊராட்சி மணல்காடு பகுதி மக்கள் சாலை வசதிக்காக இடிந்து கிடக்கும் தரைமட்ட பாலத்தை சரிசெய்து தரக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தியூர்அருகேயுள்ள மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது மணல்காடு கிராமம். இங்கு 80க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மணல்காடு பகுதிக்கு செல்ல மாத்தூரிலிருந்து 4 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். அப்படி செல்லும் வழியில் சித்தாறு பள்ளம் செல்கிறது.
இந்தப்பள்ளம் குறுக்கிடும் பகுதியில் உள்ள தரைமட்டப்பாலம் இடிந்து 10 ஆண்டுகளாகிறது. இந்த பகுதி வழியாக தினமும் 100க்கணக்கான போக்குவரத்து வாகனங்கள் வந்து செல்கிறது.
இடிந்து கிடக்கும் பகுதி வழியாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லும் போது மிகுந்த அச்சத்தில் செல்லவேண்டியுள்ளது. பலமுறை இரவு நேரங்களில் வாகனகளில் செல்வோர் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தியுள்து.
மேலும் மழைக் காலங்களில் தண்ணிர் தரமட்ட பாலத்தை மூழ்கடித்துச் செல்லும் போது பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலங்கள் செல்பவர்கள் விடுமுறை எடுக்கும் நிலை உள்ளது.
இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த மண்ல்காடு பகுதி மக்கள் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 832 மூட்டைகளில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 846 கிலோ எடையுள்ள கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தர கொப்பரை அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.62.50-க்கும், குறைந்தபட்ச விலை ரூ.58.50-க்கும், இரண்டாம் தர கொப்பரை அதிகபட்ச விலை கிலோ ஒன்றுக்கு ரூ.58.65-க்கும் குறைந்த பட்சவிலை ரூ.43.65-க்கும் என மொத்தம் ரூ.79 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.
இதேபோல் 6 ஆயிரத்து 376 கிலோ எடையுள்ள 16 ஆயிரத்து 285 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிக விலை டன் ஒன்றுக்கு ரூ. 16 ஆயிரத்து 609, குறைந்த விலை டன் ஒன்றுக்கு ரூ.14 ஆயிரத்து 449 என ரூ.99 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.
தேங்காய் ஒன்றுக்கு ரூ.4.20 முதல் ரூ.7.94 வரை ஏலம் நடைபெற்றது.
காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழகம்-கர்நாடகம் இடையே இன்னும் இயல்பு நிலை சீராகவில்லை.
இரு மாநில பஸ்களும் எல்லை (புளிஞ்சூர்) வரை சென்று அந்தந்த மாநில பயணிகளை இறக்கி விட்டு ஏற்றி கொண்டு வருகிறது.
இதே போல் சரக்கு லாரிகளும் தொடர்ந்து செல்ல முடியாமல் தவித்து வருகிறது. கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு, சத்தியமங்கலத்தில் இருந்து தினமும் கர்நாடகா மாநிலம் மைசூர், கொள்ளேகால், சாம்ராஜ் நகருக்கு காய்கறி வேன்கள் மற்றும் மல்லிகை பூக்கள் ஏற்றி கொண்டு செல்லும்.
ஆனால் கர்நாடகாவில் தொடர்ந்து பதட்டம் காரணமாக இந்த காய்கறி சரக்கு வாகனங்களும் செல்ல முடியாமல் தவித்து வருகிறது.
மாநில எல்லையான புளிஞ்சூர் வரை சென்று அங்கிருந்து கர்நாடகா பதிவெண் கொண்ட சரக்கு வேனில் காய்கறிகளை அனுப்பி வந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக எல்லையில் உள்ள கர்நாடகா போலீசார் சத்தியமங்கலத்தில் இருந்து வரும் காய் கறி வேன்களுக்கு தடை விதிக்கிறார்கள். "காய் கறிகளை கொண்டு வராதீர்கள் திரும்பி போய் விடுங்கள்" என்று மிரட்டும் தொனியில் கூறி வருகிறார்கள். இதனால் என்ன செய்வது என தமிழக வியாபாரிகள் தவிக்கிறார்கள்.
இதையொட்டி தாளவாடி வரை வந்து செல்லும் கர்நாடகா மாநில தனியார் பஸ்களில் காய்கறிகளை வியாபாரிகள் அனுப்பி வருகிறார்கள்.
இதே போல் கர்நாடகா மாநில தனியார் பஸ்களிலும் தாளவாடிக்கு காய்கறிகள் மற்றும் இதர பொருட்கள் கொண்டு வரப்படுகிறது.
தாளவாடியில் இரு மாநிலத்தவர்களும் சம அளவில் வசித்து வருவதால் இதற்கு யாரும் தடை விதிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த 12 பேர் ஒரு காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். காரை சீனிவாசன் (42) என்பவர் ஓட்டிவந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகில் உள்ள ஜெகவீரபாண்டியபுரம் நான்கு வழிச் சாலையில் வந்த போது காரின் முன்பக்க டயர் வெடித்தது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதியது. மோதிய வேகத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் சென்னிமலையை சேர்ந்த கணேசன் (வயது 62), கார் டிரைவர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும் விசித்ரா (15), கவிதா (38), சுகன்பிரியா, சண்முகவள்ளி, சத்யா, வசிகரன், முருகேசன், ஜெய்ஸ்ரீ, மோகன்ராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சண்முகவள்ளி இறந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனளிக்காமல் வசிகரன் இறந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
விபத்து நடந்த இடத்தை விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம் பார்வையிட்டார். விபத்து குறித்து எப்போதும்வென்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சென்னிமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகே சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி மயங்கிய நிலையில் கிடந்தார்.
அங்கிருந்தவர்கள் உதவியுடன் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவரது உடல் அரசு ஆஸ்பத்திரி சவகிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள ஜீவா வீதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி குப்பாயி (வயது 77).
இவர் நேற்று மாலை தனது வீட்டு திண்ணையில் உட்கார்ந்து இருந்தார். அப்போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க டிப் டாப்பாக உடை அணிந்த ஒரு ஆசாமி மோட்டார் சைக்கிளில் வந்தார். குப்பாயி தனியாக உட்கார்ந்து இருப்பதை பார்த்த அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
இதன்பிறகு அந்த ஆசாமி குப்பாயியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். அப்போது அவர் உங்களது பெயர் குப்பாயி தானே. உங்களுக்கு ரூ. 10 ஆயிரம் முதியோர் உதவிப்பணம் வந்து உள்ளது. இதை நான் பெற்று தருகிறேன்.
இவ்வளவு பணம் யாருக்கும் வந்தது இல்லை. இந்த பணம் உங்களுக்கு கிடைக்க அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவே ரூ. 1000 மட்டும் கொடுங்கள் என்று கேட்டார்.
இதற்கு குப்பாயி என்னிடம் பணம் எதுவும் இல்லை. ஓய்வூதிய பணத்தை நீங்கள் வாங்கி கொடுத்தவுடன் நீங்கள் கேட்ட பணத்தை அதில் எடுத்து கொள்ளுங்கள் என்று கூறினார்.
ஆனால் அந்த ஆசாமியோ அதிகாரிகளுக்கு பணம் கொடுத்தால் தான் முதியோர் பணம் ரூ. 10 ஆயிரம் கிடைக்கும். இல்லை என்றால் அந்த பணம் உங்களுக்கு கிடைக்காது என்று கூறினார்.
இதை உண்மை என்று நம்பிய குப்பாயி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் ரூ.100, 200 என்று கடன் வாங்கி ரூ.1000-த்தை சேர்த்து அந்த ஆசாமியிடம் கொடுத்தார்.
அந்த பணத்தை வாங்கி கொண்ட அந்த ஆசாமி, குப்பாயியை என்னுடன் வாருங்கள். பணத்தை உடனே பெற்று கொள்ளலாம் என்று கூறினார்.
இதனால் குப்பாயியும் அந்த ஆசாமியின் மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்தார். அப்போது அந்த ஆசாமி குப்பாயியிடம் இருந்த செல்போனை வாங்கி அதிகாரிகளிடம் பேசுவது போல நாடகம் ஆடினார்.
பிறகு அந்த செல்போனை குப்பாயியிடம் கொடுக்காமல் தானே வைத்து கொண்ட அவர் ¼ கி மீட்டர் தூரத்தில் உள்ள சிவகிரி பஸ் நிலையம் அருகே சென்றார்.
அங்கு ஒரு இடத்தில் குப்பாயியை இறக்கி விட்ட அந்த ஆசாமி இங்கேயே இருங்கள். சம்பந்தப்பட்ட அதிகாரியை பார்த்து பேசி வருகிறேன் என்று கூறி மோட்டார் சைக்கிளில் ஒரு குறுகலான சந்தில் சென்றார். பிறகு வெகு நேரமாகியும் அந்த ஆசாமி வரவில்லை அப்போது தான் குப்பாயி தன்னை அந்த ஆசாமி ஏமாற்றி விட்டதை உணர்ந்தார்.
ரூ. 1000 பணம் மற்றும் செல்போனை பறித்த சென்ற ஆசாமி பற்றியும் தான் ஏமாந்தது பற்றியும் குப்பாயி அருகில் வசிப்பவர்களிடம் அழுதபடி கூறி புலம்பினார்.
இந்த நூதன மோசடி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அருகே வனப்பகுதி உள்ளது. ஓங்கிய மலைகளும் அடர்ந்த வனப்பகுதியுமான இந்த வனத்தில் யானைகள் காட்டெருமைகள், மான்கள் மற்றும் கரடி, சிறுத்தை போன்றவை ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகிறது.
டி.என்.பாளையம் வனப் பகுதியில் உள்ள குண்டேரிபள்ளம் அணைக்கு கூட்டம், கூட்டமாக தண்ணீர் குடிக்க வரும். இந்த நிலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள முட்டியாங்கிணறு என்ற பகுதியில் திடீர்.... திடீரென ஒரு ஒற்றை யானை புகுந்து அப்பகுதி விவசாயிகளையும், பொது மக்களையும் மிரட்டி வருகிறது. அப்பகுதியில் உள்ள சித்தையன் என்பவரது தோட்டம் வனத்தையொட்டி உள்ளது. இந்த தோட்டம் அருகே ஒற்றை யானை நின்று கொண்டிருந்தது. யானையை கண்டு நாய் குறைத்தது.
இதனால் தோட்டத்தில் தூங்கி கொண்டிருந்த சித்தையன் எழுந்து பார்த்தபோது யானை நிற்பதை கண்டு திடுக்கிட்டார். ஏற்கனவே தோட்டத்தில் தயாராக வைத்திருந்த பட்டாசுகளை எடுத்து வெடித்தார்.
மேலும் பட்டாசை பற்ற வைத்து தூக்கி வீசினார். இதன் சத்தத்தைக் கேட்டு அந்த ஒற்றை யானை அங்கிருந்து நகன்று காட்டு பகுதிக்குள் சென்றுவிட்டது. இதே ஒற்றை யானை இப்படி அடிக்கடி அப்பகுதிக்குள் நுழைந்து விடுவதால் விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர்.
பவானிசாகர் அருகே உள்ள ஓரிச்சேரி புதூர் என்ற இடத்தை சேர்ந்தவர் செந்தில் என்ற ஆறுமுகம் (வயது 26). திருமணம் ஆனவர். இவர் திருமணம் ஆனதை மறைத்து பவானிசாகர் பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார்.
பின்னர் அவரை பல இடங்களுக்கு அழைத்து சென்று மேல்மருவத்தூர் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டார். செந்தில் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தததாக கூறப்படுகிறது. இது பற்றி கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஈரோடு மகளிர் கோர்ட்டு நீதிபதி திருநாவுக்கரசு குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் செந்திலுக்கு மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதற்காக 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதை கட்ட தவறினால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் இதை கட்டதவறினால் 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு வக்ககீல் சுமதி ஆஜரானார்.
ஒவ்வொரு அமாவாசையும் சிறப்பு வாய்ந்ததாகும். குறிப்பாக மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் இந்த அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு அவர்களை போற்றி வழிபட்டு திதி கொடுத்தால் முன்னோர்கள் அதை பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவார்கள் என்பது ஐதீகம்.
காவிரி ஆறு ஓடும் பகுதிகளில் இந்த மகாளய அமாவாசை வெகு சிறப்பாக நடக்கும். அதிலும் ஈரோடு மாவட்டம் பவானியில் வாணி, பவானி, காவிரி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள்.
அந்த வகையில் மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை 4 மணியளவில் இருந்தே உள்ளூர் மற்றும் வெளியூர் மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் குவிந்தனர்.
இவர்கள் பஸ் மற்றும் வேன் கார்கள் போன்ற வாகனங்களில் வந்தனர்.

இவர்களில் பலர் குடும்பம்.. குடும்பமாக வந்தனர். கூடுதுறையில் புனித நீராடிய இவர்கள் காவிரி படி துறையில் வட்டமாக அமர்ந்து இறந்த தங்கள் முன்னோர்களை போற்றி அவர்களுக்கு பிடித்தமான உணவு பொருட்களை வைத்து வழிபட்டனர். பிறகு அவற்றை காவிரி ஆற்றில் விட்டு வணங்கினர்.
பவானி கூடுதுறையில் இன்று காலை 7 மணிக்கெல்லாம் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.
ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்ட மக்கள் அதிகளவில் வந்திருந்தனர்.
காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.
இதையொட்டி ஆழமான பகுதிக்கு மக்கள் சென்று விடாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர்களும் காவிரி ஆற்றில் பரிசல்களில் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
“ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. ஆழமான பகுதிக்கு சென்று விட வேண்டாம் கவனமாக இருங்கள்” என்று ஒலிபெருக்கி மூலம் தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் அறிவித்த வண்ணம் இருந்தனர்.






