என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்று மகாளய அமாவாசை: பவானி கூடுதுறையில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்
    X

    இன்று மகாளய அமாவாசை: பவானி கூடுதுறையில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்

    இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு பவானி கூடுதுறையில் பக்தர்கள் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    ஒவ்வொரு அமாவாசையும் சிறப்பு வாய்ந்ததாகும். குறிப்பாக மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் இந்த அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு அவர்களை போற்றி வழிபட்டு திதி கொடுத்தால் முன்னோர்கள் அதை பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவார்கள் என்பது ஐதீகம்.

    காவிரி ஆறு ஓடும் பகுதிகளில் இந்த மகாளய அமாவாசை வெகு சிறப்பாக நடக்கும். அதிலும் ஈரோடு மாவட்டம் பவானியில் வாணி, பவானி, காவிரி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள்.

    அந்த வகையில் மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை 4 மணியளவில் இருந்தே உள்ளூர் மற்றும் வெளியூர் மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் குவிந்தனர்.

    இவர்கள் பஸ் மற்றும் வேன் கார்கள் போன்ற வாகனங்களில் வந்தனர்.


    இவர்களில் பலர் குடும்பம்.. குடும்பமாக வந்தனர். கூடுதுறையில் புனித நீராடிய இவர்கள் காவிரி படி துறையில் வட்டமாக அமர்ந்து இறந்த தங்கள் முன்னோர்களை போற்றி அவர்களுக்கு பிடித்தமான உணவு பொருட்களை வைத்து வழிபட்டனர். பிறகு அவற்றை காவிரி ஆற்றில் விட்டு வணங்கினர்.

    பவானி கூடுதுறையில் இன்று காலை 7 மணிக்கெல்லாம் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

    ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்ட மக்கள் அதிகளவில் வந்திருந்தனர்.

    காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

    இதையொட்டி ஆழமான பகுதிக்கு மக்கள் சென்று விடாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தீயணைப்பு வீரர்களும் காவிரி ஆற்றில் பரிசல்களில் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    “ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. ஆழமான பகுதிக்கு சென்று விட வேண்டாம் கவனமாக இருங்கள்” என்று ஒலிபெருக்கி மூலம் தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் அறிவித்த வண்ணம் இருந்தனர்.  

    Next Story
    ×