என் மலர்tooltip icon

    ஈரோடு

    பெருந்துறை அருகே கார்த்திகை தீபம் பற்ற வைத்த மூதாட்டி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள கணக்கம் பாளையம் என்றஇடத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மனைவி நாச்சம்மாள் (வயது 82)

    செல்லமுத்து இறந்து விட்டதால் நாச்சம்மாள் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் கார்த்திகை தீபம் என்பதால் தனது வீட்டின் முன்பு கார்த்திகை விளக்கு வைக்க அவர் எண்ணினார்.

    இதனால் கார்த்திகை விளக்கில் எண்ணை ஊற்றி தீப்பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாகஅவரது சேலையில் தீப்பிடித்து கொண்டது. இதனால் உடல் முழுவதும் தீ பரவி எரிந்தது. வேதனை பொறுக்க முடியாமல் நாச்சம்மாள் அலறினார்.

    இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நாச்சம்மாள் மீது எரிந்த தீயை அணைத்தனர். இதன் பிறகு கவலைக்கிடமாக இருந்த அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நாச்சம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ் பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்.

    விதிமுறையை மீறி பணம் பரிமாற்றம் செய்ததாக ஈரோடு வங்கி அதிகாரிகள் 4பேரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள பூந்துறை வேலாங்காட்டு வலசு என்ற இடத்தை சோந்தவர் என். ராமலிங்கம். இவா என். ஆர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரது அலுவலகம் ஈரோடு மூலப்பாளையம் தெற்கு ஸ்டேட் பாங்கி நகரில் உள்ளது.

    இது தவிர கோவை, சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற இடங்களிலும் இவருக்கு அலுவலகங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் சார்பில் கட்டுமான பணிகளும் மற்றும் பல்வேறு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மூலப்பாளையம் தெற்கு ஸ்டேட் பாங்க் ரோட்டில் உள்ள என் ஆர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    மற்றும் இந்த நிறுவனத்தின் சார்பில் ஈரோடு பகுதியில் செயல்படும் பல்வேறு அலுவலகங்கள், மற்றும் வீடுகளில் பெங்களூரில் இருந்து வந்த வருமானத்துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் பெங்களுரில் உள்ள காவிரி நீர்ப்பாசன கழக என்ஜினீயர் சிக்கராயப்பா, மாநில நெடுஞ்சாலை துறை என்ஜினீயர் ஜெயச்சந்திரா, மற்றும் 2 ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இதில் ரூ. 4¾ கோடி அளவுக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டன. இந்த அடிப்படையில் தான் ஈரோட்டில் உள்ள என். ஆர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    மேலும் இந்த ரூபாய் நோட்டுகளில் உள்ள சீரியல் எண்ணை வைத்து இந்த நோட்டுகள் எந்த பகுதிக்கு ரிசர்வ் வங்கியால் அனுப்பப்பட்டது? என்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்தனா.

    அப்போது இந்த நோட்டுகள் ஈரோட்டில் உள்ள தனியார் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டது தெரிய வந்தது.

    இது தொடர்பாக வருமான வரித்துறையினர் இந்த வங்கிகளில் சோதனை நடத்தியதாகவும் அவர்கள் இந்த வங்கிகளில் கடந்த நவம்பர் மாதம் 10-ந்தேதி முதல் நடந்த பண பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது.

    மேலும் தனியார் வங்கிகளில் என்ன நடைமுறையில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது? என்றும் விசாரணை நடந்தது.

    இந்த நிலையில் விதிமுறைகளுக்கு மாறாக பணபரிமாற்றம் நடந்ததாக கூறி ஈரோட்டை சேர்ந்த 4 வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இதையொட்டி ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பவானிசாகர் அருகே புதிய காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலனை தீர்த்துக் கட்டிய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம் பாளையத்தில் வசிப்பவர் செல்வராணி(வயது35). திருமணம் ஆகி கணவர் இறந்துவிட்டார். தற்போது இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    அதே கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வந்த துரைமுருகவேல் என்பவருடன் செல்வராணிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த ராஜூ என்பவருடன் செல்வராணிக்கு பழக்கம் ஏற்பட்டு அதுவும் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் துரைமுருகவேலுக்கு தெரியாமல் ஜாலியாக இருந்து வந்தனர்.

    இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் துரைமுருகவேலுக்கு தெரிய வந்தது. ஆத்திரம் அடைந்த அவர் செலவராணியை சத்தம் போட்டார். இது தொடர்பாக அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

    இது பற்றி புதிய கள்ளக்காதலன் ராஜூவிடம் செல்வராணி கூறி வருத்தப்பட்டார். துரைமுருகவேல் இருக்கும் வரை நம்மால் சந்தோஷமாக இருக்க முடியாது. அவரை தீர்த்துக்கட்டி விட வேண்டியது தான் என்று திட்டம் தீட்டினார்கள். அந்த திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    நேற்று முன்தினம் துரை முருகவேலுக்கு செல்வராணி தூக்க மாத்திரையை காப்பியில் கலந்து கொடுத்தார். அதை குடித்த துரைமுருகவேல் மயங்கினார். உடனே ராஜூக்கு தகவல் கொடுக்க உடனடியாக அவர் விரைந்து வந்தார்.

    பிறகு இருவரும் சேர்ந்து துரை முருகவேலின் கழுத்தை கயிற்றால் இறுக்கினர். சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பிறகு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்தநிலையில் துரை முருகவேலின் நண்பர் சுப்பிரமணி என்பவர் அவரை தேடி வந்தார். வீட்டில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு திடுக்கிட்டார்.

    இது குறித்து பவானிசாகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினர். செல்வராணியை பிடித்து விசாரித்த போது நானும் காதலன் ராஜூவும் சேர்ந்துதான் துரை முருகவேலை கழுத்தை நெரித்து கொன்றோம் என்று கூறினார்.

    இதையொட்டி செல்வராணி கைது செய்யப்பட்டார். புதிய கள்ளக்காதலன் ராஜூவை தேடி வருகிறார்கள்.
    கோபியில் இன்று அதிகாலை நின்ற அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

    கோபி:

    கோபியில் இருந்து ஈரோட்டுக்கு இன்று அதிகாலை 4.40 மணிக்கு பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் கோபி அரசு போக்குவரத்து டெப்போ முன் நின்று அங்கு நின்ற பயணிகளை ஏற்றிகொண்டிருந்தது.

    அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அதே சமயத்தில் ஈரோட்டில் இருந்து கோபிக்கு ஒரு தனியார் பஸ் வந்தது. அந்த பஸ் திடீரென நிலைதடுமாறி நின்று கொண்டிருந்த அரசு பஸ்மீது முன் பக்கத்தில் நேருக்கு நேர் மோதியது.

    இதில் 2 பஸ்களின் முன்பக்கமும் சேதம் ஆனது. பயணிகள் பயத்தில் கூக்குரலிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த திடீர் விபத்தில் 2 பஸ்களிலும் உள்ள கோபியை சேர்ந்த தர்மலிங்கம் (வயது39), முருகேசன் (48), கோபி அருகே உள்ள அரசூரை சேர்ந்த சரவணகுமார் (38), ரதி (45), சத்யா (30), ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த ராஜகுரு (48), சேலம் சத்யராஜ்(45), உள்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இவர்கள் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஈரோட்டுக்கு திடீரென வருகை தந்தார். அங்கு பழமை வாய்ந்த ஓங்காளியம்மன் கோவிலுக்கு சென்ற விஜயகாந்த் பயபக்தியுடன் வழிபட்டார்.

    ஈரோடு:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஈரோட்டுக்கு திடீரென வருகை தந்தார். அவரது வருகை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாருக்கும் தெரிய வில்லை.

    கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவருக்கு மட்டும் தான் ஈரோடு வருவதாக விஜயகாந்த் கூறி உள்ளார்.

    அவரும் விஜயகாந்த் வருகைக்காக காத்திருந்தார், அவரது வருகையை யாரிடமும் சொல்லவில்லை. சொன்னபடி விஜயகாந்த் மட்டும் தனியாக காரில் வந்தார்.

    பிறகு ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு விஜயகாந்த் சென்று சிறிது நேரம் தங்கினார். அப்போது நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் சிலரிடம் விஜயகாந்த் பேசி உள்ளார். உடனடியாக நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் சிலரும் விஜயகாந்த் அழைப்பை ஏற்று ஈரோட்டுக்கு விரைந்து வந்தனர்.

    அதன்பிறகு விஜயகாந்த் அவர்களை அழைத்துக்கொண்டு ஈரோடுஅருகே உள்ள பள்ளிபாளையம் அடுத்துள்ள கருமகவுண்டம் பாளையம் சென்றார். அங்கு பழமை வாய்ந்த ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்திப் பெற்ற இக்கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டால் விசே‌ஷ பலன் கிடைக்கும் என்பது அவ்வூர் மக்களின் ஐதீகமாக உள்ளது.

    இந்த ஓங்காளியம்மன் கோவிலுக்கு சென்ற விஜயகாந்த் பயபக்தியுடன் வழிபட்டார். கிட்டதட்ட ஒருமணி நேரம் கோவிலில் இருந்து அம்மனை வழிபட்டு உள்ளார். அதன்பிறகு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்று விட்டார்.

    முதல்வர் ஜெயலலிதா மறைவு இதனால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை அடுத்தக்கட்டமாக தே.மு.தி.க. எடுக்க உள்ள நடவடிக்கை கட்சியின் வளர்ச்சி போன்ற பல்வேறு பிரச்சினையில் விஜயகாந்த் திடீரென ரகசியமாக ஓங்காளியம்மன் கோவிலில் சாமிகும்பிட்டுவிட்டு சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே விஜயகாந்த் ஈரோடு வந்துள்ள ரகசிய தகவல் கட்சி தொண்டர்களுக்கு தெரியவர அவர் தங்கிய ஓட்டல் முன் கட்சி கொடிகளுடன் திரண்டனர்.

    பல மணி நேரம் காத்திருந்தும் விஜயகாந்த் வராததால் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் சுற்றுலா சென்ற பயணி ஒருவர் யானை தாக்கி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சத்தியமங்கலம்:

    மதுரையை சேர்ந்த நண்பர்கள் சிலர் ஈரோடு மாவட்டத்துக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் சத்தியமங்கலம் வனப்பகுதியில் சுற்றுலா சென்று பல்வேறு இடங்களை பார்வையிட்டனர். பிறகு ஆசனூர் அருகே உள்ள அரேப்பாளையத்தில் உள்ள ‘‘கே.ஏ.எஸ். பார்ம்’’ என்ற ஒரு தங்கும் விடுதியில் அவர்கள் தங்கினர்.

    சுற்றுலா பயணிகளில் ஒருவரான ஷியாம்குமார் (வயது 45) என்பவர் இன்று அதிகாலை அறையை திறந்து வெளியே வந்து இயற்கை உபாதை கழிக்க அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.

    அப்போது அங்கு புதர் பகுதியில் இருந்த ஒரு ஆண் யானை அவரை தாக்கியது. தனது தந்தங்களால் அவரின் வயிற்றில் குத்தியது. இதில் குடல் சரிந்த நிலையில் அவர் கீழே விழுந்தார்.

    அவர் போட்ட அபாய குரலை கேட்டு நண்பர்கள் மற்றும் அந்த பகுதி உள்ள மக்கள் திரண்டு சென்றனர். அவர் அருகில் நின்று கொண்டிருந்த யானையை சத்தம் போட்டு விரட்டியடித்தனர். பிறகு குடல் சரிந்த நிலையில் கிடந்த ஷியாம்குமாரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் கோவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கபட்டனர்.
    ஈரோட்டில் குழந்தைக்கு பால் காய்ச்சிய இளம்பெண் தீயில் கருகி பலியானார். காப்பாற்ற சென்ற கணவனுக்கு காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகமது அலிராஜா (வயது25). இவரது மனைவி குளோப்ஷாசாத்துன் (22). இவர்களுக்கு 2 வயதில் ஐந்தர் அலி என்ற மகன் உள்ளார்.

    முகமதுஅலிராஜா குடும்பத்துடன் ஈரோடு கருங்கல் பாளையத்தில் வசித்து வருகிறார். கணவன்- மனைவி இருவரும் அங்கு உள்ள பிளாஸ்டிக் பேப்பர் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணியளவில் முகமதுஅலிராஜாவின் மகன் பசியால் அழுதுள்ளான். இதனால் மகனுக்கு பால் காய்ச்ச குளோப்ஷாசாத்துன் எழுந்து ஸ்டைவ்வை பற்ற வைத்து பால்காய்ச்சி கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத வகையில் அவர் அணிந்திருந்த பர்தா மீது தீப்பிடித்தது. இதனால் அவர் அலறினார். மனைவியின் அலறல் சத்தத்தை கேட்டு முகமதுஅலிராஜா திடுக்கிட்டு எழுந்து மனைவியை காப்பாற்ற ஓடி வந்தார்.

    இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து கணவன்-மனைவி இருவரையும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி குளேபர்ஷாசாத்துன் இன்று காலை பரிதா பமாக இறந்தார். முகமது அலிராஜாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    சென்னிமலை:

    தருமபுரி மாவட்டம், மேதூர் பகுதியினை சேர்ந்தவர் மினியப்பன் இரவது மனைவி பாஞ்சாலி. இவர்களது மகள் ஜோதி (வயது 20).

    கட்டிட தொழிலாளியான மினியப்பன் கடந்த சில வருடங்களாக பெருந்துறை டவுன் அய்யப்பா நகரில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். மகள் ஜோதி 10-வது படித்து விட்டு பெருந்துறையில் ஒரு துணிக்கடையில் பணியாற்றி வருகிறார்.

    மேலும் இவர் பெருந்துறையில் உள்ள டுட்டோரியல் கல்லூரியில் படித்து வருகிறார்.

    சென்னிமலை அடுத்துள்ள மேலப் பாளையம் சர்கார் கிணறு வீதியில் வசிப்பவர் செல்வராஜ் மகேஸ்வரி தம்பதியினர். இவர்களது மகன் குணசேகரன் ( 23). ஜோதி படித்த டுட்டோரியல் கல்லூரியில் இவரும் படித்து வந்தார். அப்போது இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

    5 வருடமாக காதலித்து வந்தது அவர்களின் பெற்றோருக்கு தெரியவந்தது அவர்கள் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து ஜோதி- குணசேகரன் சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இதன்பிறகு பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீசில் தஞ்சமடைந்தனர். இருவர் வீட்டிலும் பெற்றோர்களை வரவழைத்து போலீஸ் அறிவுரை கூறி சமாதானம் செய்து அனுப்பினர். பின்பு குணசேகரன் குடும்பத்தினர் வந்து மருமகளை ஏற்று கொண்டு வீட்டு அழைத்து சென்றனர்.

    முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேர் அதிர்ச்சியில் இறந்துள்ளனர்.
    கவுந்தப்பாடி:

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் தமிழ்நாட்டில் பலர் அதிர்ச்சியிலும் வேதனையிலும் இறந்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று வரை 7 பேர் அதிர்ச்சியில் இறந்தனர். இன்று மேலும் 2 பேர் அதிர்ச்சியில் இறந்து விட்டனர்.

    கவுந்தப்பாடி அடுத்த பெருந்தலையூர் இங்குள்ள கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது 53) விவசாய கூலித் தொழிலாளி.

    இவர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி, சென்னியப்பனின் மகன் யுவராஜ் காவல் துறையில் பணியற்றி வருகிறார். யுவராஜ்க்கும் அதே ஊரை சேர்ந்த தழிழ் செல்விக்கும் கடந்த 5-ந் தேதி காலை தான் பெருந்தலையூரில் திருமணம் நடந் தது.

    திருமண நிகழ்வுகள் நடந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5-ந் தேதி மாலை காலமானர் என்ற செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது .

    தனது மகனின் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது என்று கூட பார்க்காமல் 6-ந்தேதி 12 மணிக்கு, சென்னியப்பன் டிவியின் முன்பாகவே அமர்ந்து ஜெயலலிதாவின் உடலுக்கு அனைவரும் மரியாதை செய்வதை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

    பலர் அவருக்கு ஆறுதல் கூறியும் சமாதனம் அடையாத சென்னியப்பன் திடீர் என்று நெஞ்சு வலிப்பதாக கூறினார். அருகில் இருந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்குள் சென்னியப்பன் இறந்து விட்டார்.

    கல்யாண வீட்டில் மணமகனின் தந்தை திடீர் என இறந்ததையொட்டி சுற்று வட்டார பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. பெரும் சோகமாகவும் அமைந்தது.

    இதே போல் ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அம்மாசை (68). தீவிர அ.தி.மு.க. தொண்டர் கூலி தொழிலாளி.

    முதல்வர் ஜெயலலிதா மரணம் செய்தியை கேட்டதிலிருந்து மிகவும் வேதனையுடன் காணப்பட்டார். டி.வி.யில் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் நிகழ்ச்சியை பார்த்து துக்கம் தாங்காமல் கதறி அழுதார்.

    இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் வீட்டில் நாற்காலியில் அமர்ந்திருந்த அவர் மிகவும் வேதனையில் அழுது கொண்டே இருந்தார்.

    பிறகு திடீரென அதிர்ச்சியில் நாற்காலியில் இருந்து மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

    இறந்த அம்மாசைக்கு 2 மகன்கள் உள்ளனர். அவரது உடலுக்கு அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
    தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் வேதனையடைந்துள்ள விவசாயிகள் விளைந்து என்ன லாபம்...? விலை இல்லையே காய் பறிக்கும் கூலி கூட இல்லை என புலம்புகின்றனர்.

    சென்னிமலை:

    தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் வேதனையடைந்துள்ள விவசாயிகள் விளைந்து என்ன லாபம்...? விலை இல்லையே காய் பறிக்கும் கூலி கூட இல்லை என புலம்புகின்றனர்.

    சென்னிமலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை தொடங்கி நடந்த வாரச் சந்தையில் தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தது இதன் விலை கடுமையாக சரிந்து விட்டது கடந்த வாரம் ரூ.400-க்கு விற்ற பெட்டி நேற்று ரூ.120-க்கு தான் விலை போனது. இந்த விலை குறைவால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

    தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் தொடர்ந்து விலை சரிந்து வருகிறது. தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், விளைச்சல் மேலும் அதிகரித்துள்ளது.

    இதனால் சந்தைக்கு வரத்து கூடியுள்ளது. காய் பறிக்கும் செலவே கிடைக்காது என புலம்பினர். சில்லறை விற்பனையில் தாக்காளி கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்தனர். பீர்க்கங்காய் கிலோ ரூ.20-க்கும், கத்தரிக்காய் ரூ.60-க்கும் விற்பனை ஆனது. கத்தரி வரத்து மிக குறைவாக இருந்ததால் விலை ரூ40-ல் இருந்து ரூ.60-க்கு எகிறியது.

    கோபி அருகே அரசு பெண் ஊழியரிடம் 10 பவுன் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோபி:

    கோபி தமிழ் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி லதா (வயது 47). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். லதா ஈரோட்டில் கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் இளநிலை ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதனால் தினமும் காலை கோபியில் இருந்து ஈரோட்டில் பஸ்சில் சென்று இரவு வீடு திரும்புவது வழக்கம்.

    இதே போன்று நேற்று இரவும் லதா வேலையை முடித்து கொண்டு ஈரோட்டில் இருந்து கோபிக்கு பஸ்சில் எல்.கள்ளிப்பட்டி பஸ் நிறுத்ததில் இறங்கினார். தனது மகளுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் இரண்டு மர்ம நபர்கள் வந்தனர். ஒருவன் வண்டியை ஓட்ட மற்றொருவன் பின்னால் உட்கார்ந்தபடி வந்தான். திடீரென லதா மீது மோதுவது போல் வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை கண் இமைக்கும் நேரத்தில் பறித்து சென்றனர்.

    இதில் லதா நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரது மகள் திருடன்...திருடன்...என்று கூச்சலிட்டார். ஆனால் இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை. வழிப்பறி கொள்ளையர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து கோபி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கீழே விழுந்ததில் காயம் அடைந்ததால் லதா கோபியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு கவுந்தபாடியில் அனைவரும் விரைவில் பணப்பிரச்சினையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று சாய்பாபாவுக்கு பழைய மற்றும் புதிய ரூபாய் நோட்டுக்களில் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி நகரின் மைய பகுதியில் உள்ள பழனிசாமி வீதி விநாயகர் கோவில் வளாகத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு வியாழக்கிழமை மற்றும் விசே‌ஷ தினங்களில் சிறப்பு புஜைகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பகுதியை சுற்றி உள்ள ஆண்கள், பெண்கள் அதிக அளவில் வழிபாடுகளில் கலந்து கொள்கிறார்கள். தற்போது பழைய 1000, 500 நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் ‘‘அனைவரும் விரைவில் இந்த பணப்பிரச்சினையில் இருந்து மீண்டு வர வேண்டும்’’ என்று சாய்பாபாவுக்கு பழைய மற்றும் புதிய ரூபாய் நோட்டுக்களில் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பாபாவின் பக்தி பாடல்பாடி வேண்டிக்கொண்டார்கள். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வழிபாட்டு குழுவினர்கள் செய்திருந்தார்கள்.



    ×