என் மலர்tooltip icon

    ஈரோடு

    சிறுலூர் சுடுகாடு பகுதியில் அமர்ந்து பணம் வைத்து சூதாட்டம் ஆடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    சிறுவலூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சிறுலூர் சுடுகாடு பகுதி முள்வேலிக் காட்டில் சிலர் பணம் வைத்து சூதாட்டம் ஆடி கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர்.

    போலீசார் விசாரணையில் அவர்கள் சிறுவலூர் பகுதியை சேர்ந்த குணசேகரன், தமிழரசு, பழனிச்சாமி, லோகநாதன் என்று தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து சீட்டுகள் மற்றும் ரூ.1,670 பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஈரோடு பெருந்துறை ரோட்டில் ஜெயலலிதா படத்துடன் சசிகலா படம் இணைத்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதில் சசிகலா படம் மட்டும் கிழிக்கப்பட்டு இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி அ.தி.மு.க.வினர் ஈரோட்டில் பல்வேறு இடங்களில் அஞ்சலி போஸ்டர் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைத்து உள்ளனர்.

    மேலும் பல இடங்களில் ஜெயலலிதாவுக்கு அடுத்தப் படியாக சசிகலா பொதுச் செயலாளராக வர வேண்டும். கட்சியை வழி நடத்த வேண்டும் எனவும் பேனர்கள் வைத்துள்ளனர்.

    ஈரோடு பெருந்துறை ரோட்டில் ஜெயலலிதா படத்துடன் சசிகலா படம் இணைத்து பேனர் வைக்கப்பட்டிருந்தது.

    இதில் 3 பேனர்களிலும் சசிகலா படம் மட்டும் கிழிக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். மேலும் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்க கிழிக்கப்பட்ட பேனர்களை போலீசார் எடுத்து சென்று விட்டனர்.

    சசிகலா படத்தை கிழித்த ஆசாமிகள் யார்? என்று தெரியவில்லை. இது குறித்து அ.தி.மு.க.வினர் போலீசில் புகார் கூறி உள்ளனர்.

    ஈரோட்டில் ஸ்ரீ ஜெகந்நாதர் தேர்த்திருவிழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த திருவிழாவின் சிறப்பை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    ஒடிசா மாநிலம் பூரியில் ஸ்ரீ ஜெகந்நாதர் (ஸ்ரீகிருஷ்ணர்) தேர்த்திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது. அந்த தேர்த்திருவிழா தற்போது ஈரோட்டிலும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு 2-ம் ஆண்டு விழாவாக இந்த தேர்த்திருவிழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    அன்று மாலை 3 மணிக்கு பிரப் ரோட்டில் உள்ள செங்குந்தர் நர்சரி பள்ளியில் ஜெகந்நாதர் தேர் பவனி தொடங்கி பெருந்துறை மெயின் ரோடு வழியாக மாலை 6 மணியளவில் குருசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் தேர் நிலை சேருகிறது.

    இரவு 7 மணிக்கு கோவை இஸ்கானின் தலைவர் பக்தி வினோத சுவாமி மகராஜ், ஸ்ரீ ஜெகந்நாதர் லீலைகள் பற்றி உபன்யாசம் செய்கிறார்.

    தொடர்ந்து இரவு 7.45 மணிக்கு விசே‌ஷ பூஜையும் முடிவில் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது.

    இத்தேர்த்திருவிழா- ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ஈரோடு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே ரோட்டோரம் உள்ள வீட்டுக்குள் லாரி புகுந்த விபத்தில் உள்ளே படுத்து தூங்கி கொண்டிருந்த கணவன் - மனைவி படுகாயத்துடன் உயிர் தப்பினர்.
    ஈரோடு:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து கோவைக்கு ‘ஆசிட்’ (திராவகம்) ஏற்றி வர ஒரு டேங்கர் லாரி நேற்று இரவு புறப்பட்டு வந்தது. லாரியை மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரை சேர்ந்த பாலு (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி நேற்று இரவு 10 மணியளவில் ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி சந்தை கடை பக்கம் வந்து கொண்டிருந்தது.

    திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் உள்ள ஒரு ஓட்டு வீட்டை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது.

    அப்போது வீட்டுக்குள் படுத்து தூங்கி கொண்டிருந்த ராஜமாணிக்கம் (52). அவரது மனைவி கீதா (45) ஆகியோர் மீது லாரி மோதியதிலும், சுவர் இடிந்து விழுந்ததிலும் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அக்கம்பக்கம் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். பிறகு அவர்கள் கணவன்-மனைவி இருவரையும் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த லாரி டிரைவர் பாலுவும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி மோதியதில் வீடு முற்றிலும் இடிந்து சேதமாகி விட்டது.
    சென்னிமலை முருகன் கோவிலில் இந்த வருட மார்கழி பூஜை இன்று மார்கழி 1ந்தேதி தொடங்கியது. தினமும் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
    சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் முழுவதும் மார்கழி மாத விழாக்குழு சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

    இந்த வருட மார்கழி பூஜை இன்று மார்கழி 1-ந் தேதி தொடங்கியது. தினமும் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இதை யொட்டி முன்னதாக காலை 5.30 மணிக்கு கோமாதா பூஜை நடைபெறுகிறது.

    தெடர்ந்து முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இறுதிநாளில் பக்தர்கள் மேட்டுப்பாளையம் சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர்.

    மார்கழி மாதத்தின் நிறைவு பூஜை அன்று உற்சவமூர்த்திகளுக்கு தீர்த்த அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் விஷேச பூஜைகள் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை மார்கழி மாத விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். மதி குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர்.
    ஈரோடு அருகே பள்ளிக்கூடம் சென்ற 10-ம் வகுப்பு மாணவி மாயமானது குறித்து அவரின் தாய் சித்தோடு போலீசில் புகார் அளித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள ஆர்.என் புதூர் பாலன் நகர் என்ற இடத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சகுந்தலா. இவர்களது மகள் சந்தியா (வயது 17).

    சண்முகம் இறந்து விட்டதால் சகுந்தலா கட்டிட வேலைக்கு சென்று தனது குடும்பத்தை கவனித்து வருகிறார் .சந்தியா ஒலகடத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல இவர் சம்பவத்தன்று காலை பள்ளிக்கு சென்றார். ஆனால் மாலை வெகு நேரமாகியும் சந்தியா வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சகுந்தலா அக்கம் பக்கத்திலும் சந்தியாவுடன் படிக்கும் மாணவிகளிடமும் விசாரித்தார். ஆனால் சந்தியா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை,

    எனவே இது பற்றி சகுந்தலா சித்தோடு போலீசில் புகார் செய்தார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சந்தியாவை தேடி வருகிறார்.
    ஜெயலலிதா மறைவையொட்டி மாற்றுதிறனாளி வாலிபர் விஷம் குடித்து ஜெயலலிதா படத்தை நெஞ்சில் அணைத்தபடி இறந்து கிடந்தார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த அக்கரை பாளையம், குப்பா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்தான். இவரது மகன் பழனிச்சாமி(வயது40). மாற்றுத்திறனாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. தமிழக அரசின் உதவிப்பணம் இவருக்கு வருகிறது.

    பழனிச்சாமி தீவிர அ.தி.மு.க.தொண்டராக செயல்பட்டு வந்தார். ஜெயலலிதா மறைவு செய்தியை கேட்டதில் இருந்து பழனிச்சாமி மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார்.

    கடந்த 9-ந் தேதி தாழ்குனி கிராமத்தில் நடந்த மவுன ஊர்வலத்தில் கலந்து கொண்டு மொட்டைஅடித்து கொண்டார். அவரது பெற்றோர்கள் பழனிச்சாமிக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

    நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பழனிச்சாமி வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். முதல்வர் ஜெயலலிதா உருவபடத்தை நெஞ்சில் அணைத்தபடி கிடந்தார்.

    இந்த நிலையில் வெளியே சென்ற அவரது பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்து பழனிச்சாமி மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து பக்கது வீட்டில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பழனிச்சாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டமாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பெருந்துறை அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் பெண், 2 வயது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வாவிக்கடை சூலக்காத்தான் வலசு பகுதியை சேர்ந்தவர் மோகனப்பிரியா. இவரது கணவர் கலையரசு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிகிறார்.

    மோகனப்பிரியா தனது பெற்றோர் வீட்டில் பேக்கரி வைத்து நடத்தி வந்தார்.

    மோகனப்பிரியாவுடன் திருமணம் ஆகாத இவரது தங்கை திவ்யாவும் அதே பேக்கரியை பார்த்து வந்தார்.

    அக்காவும் தங்கையும் பேக்கரியை கவனித்து வந்தனர். மோகனபிரியாவுக்கு கார்த்தீயன் (6) என்ற மகனும் ஹர்சனா (2) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை பெருந்துறையில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க திவ்யா தனது அக்காள் மகள் சிறுமி ஹர்சனாவுடன் ஸ்கூட்டரில் சென்றார்.

    நீண்ட வரிசையில் காத்திருந்து ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக் கொண்டு ஸ்கூட்டரில் திவ்யா திரும்பினார்.

    பெருந்துறை அருகே டீச்சர்ஸ் காலனி நுழைவு பாலம் பைபாஸ் ரோட்டுக்கு செல்ல ரோட்டை கடக்க நின்று இருந்தார்.

    அப்போது பின்னால் அலுமினிய லோடு ஏற்றிக்கொண்டு வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் திவ்யா மற்றும் குழந்தை ஹர்சனா ஆகிய இருவர் மீதும் லாரி சக்கரம் ஏறி நசுக்கியது. இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் கூடினர். அவர்கள் இளம் பெண்ணுடன் குழந்தையும் நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு கண்ணீர் சிந்தினார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த இருவரது உடலையும் மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான திவ்யா மற்றும் குழந்தை ஹர்சனா உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுத காட்சி மிகவும் பரிதாபமாக இருந்தது.

    பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜெயலலிதா மறைவையொட்டி வாழ்நாள் முழுவதும் கருப்பு சட்டை அணிய போவதாக அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் சபதம் எடுத்து உள்ளார்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணியை சேர்ந்தவர் ஏ.எம்.ஆர்.ரவி. இவர் அ.தி. மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிதுணை தலைவராக உள்ளார்.

    முதல்வர் ஜெயலலிதா மறைவு இவரது மனதில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.தலையை மொட்டை அடித்தார். இதை தொடர்ந்து அவர் ஒரு சபதம் எடுத்து உள்ளார். இனி தனது வாழ்நாள் முழுவதும் கலர்சட்டை அணிவது கிடையாது. கருப்பு சட்டை தான் அணிவேன் என்று சபதம் எடுத்து உள்ளார்.

    இதைதொடர்ந்து ரவி இப்போது தினமும் கருப்பு சட்டை அணிந்து வருகிறார்.

    வழக்கு தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருந்தபோது ஜெயலலிதா விடுதலை பெறும்வரை கருப்பு சட்டை அணிந்திருப்பேன் என்று உறுதி எடுத்து அதன்படி கருப்பு சட்டை அணிந்திருந்தார்.

    ஜெயலலிதா விடுதலை ஆனதும் கருப்பு சட்டையை கழற்றினார். இப்போது ஜெயலலிதா மறைவையொட்டி வாழ்நாள் முழுவதும் கருப்பு சட்டை அணிவேன் என அவர் உறுதி பூண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சுற்றுலாதலமாக இருக்கும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் தற்போது மழை இல்லாததால் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோட்டுக்கும்- சென்னிமலைக்கும் இடையே இயற்கை சூழல் நிறைந்த ஊரான வெள்ளோடு உள்ளது. வெள்ளோடு ஊர் எல்லையில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சுற்றுலாதலமாக இந்த வெள்ளோடு பறவைகள் சரணாலயம் விளங்குகிறது.

    இந்த சரணாலயத்துக்கு உள்நாட்டு பறவைகளோடு சைபிரியா, ரஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வெளிநாட்டு பறவைகளும் வரும். இப்படி வரும் பறவைகள் இங்கு இனப்பெருக்கம் செய்துவிட்டு அதன் குஞ்சுகள் வளர்ந்த பிறகு மீண்டும் தாயகம் திரும்பி சென்று விடும்.

    இப்படி சிறப்புமிக்க வெள்ளோடு பறவைகள் சரணாலயம் தற்போது வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. சரணாலய குளத்துக்கு போதிய மழையின்றி தண்ணீர் வருகையின்றி குளம் போல் காட்சி அளிக்கிறது.

    எனினும் குளத்தை சுற்றி இருக்கும் மரங்களில் இன்னும் பல வெளிநாட்டு பறவைகள் கூடுகட்டி வசித்து வருவதையும் அவை வட்டமாக சுற்றி திரிந்து பறப்பதையும் குதூகலத்துடன் பார்க்க முடிந்தது.
    ஜல்லிக்கட்டை பொங்கல் பண்டிகைக்கு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று த.மா.கா. இளைஞர் அணி தலைவர் யுவராஜா கூறினார்.

    ஈரோடு:

    தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞர் அணி கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று ஈரோட்டில் நடந்தது. இதில் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 9 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக த.மா.கா. இளைஞர் அணி தலைவர் யுவராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக நிவாரணைம் வழங்க வேண்டும்.

    500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு 35 நாட்கள் ஆகியும் பணத்தட்டுப்பாட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் படும் அவலத்துக்கு மத்திய அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

    பழைய நோட்டுகள் தடை செய்யப்பட்டதால் சுமார் 4 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை கருப்பு பணம் வங்கிகளுக்கு வரும் என பிரதமர் கூறி உள்ளார். அவ்வாறு அந்த அளவுக்கு கருப்பு பணம் வந்தால் அந்த தொகையை கல்விக்கும் விவசாயத்துக்கும் பயன் படுத்தி அதிகளவில் மானியத்துக்கு பயன்படுத்த வேண்டும் விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும்.

    வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் உடனே வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டை பொங்கல் பண்டிகைக்கு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு யுவராஜா கூறினார்.

    சத்தியமங்கலத்தில் பனி மூட்டத்தால் ரோட்டில் மினி வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.
    டி.என்.பாளையம்:

    சத்தியமங்கலத்திலிருந்து நால்ரோடு வழியாக மினி வேன் ஒன்று வாழைக்காய் லோடு ஏற்றிக்கொண்டு அத்தாணி மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது தனியார் கல்லூரி அருகே வந்த போது எதிரே வந்த லாரி டிரைவர் பனிமூட்டமாக இருந்ததால் முகப்பு விளக்கை எரிய விட்டபடி வந்துள்ளார். வேனை தாளவாடியை சேர்ந்த டிரைவர் ராஜீ (55) ஓட்டி வந்தார்.

    வண்டியை இடது புறமாக ஓரங்கட்ட அவர் நினைத்த போது நிலைதடுமாறி மினிவேன் கவிழ்ந்தது. மினிவேனில் இருந்த தாளவாடியை சேர்ந்த சித்தராஜ்(49) பங்காரு(45) ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். டிரைவர் ராஜீ எட்டி குதித்து தப்பியுள்ளார்.

    வண்டியிலிருந்த வாழைக்காய்தார்கள் கீழே விழுந்து சேதமானது. அவ்வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். காயமடைந்த 3பேரையும் மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ×