என் மலர்
தர்மபுரி
- ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
- மொரப்பூர்-பாலக்கோடு ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் ராமசாமி கோவில், கடைவீதி பஸ் ஸ்டாண்ட் , பாலக்கோடு ரோடு, மொரப்பூர் ரோடு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது. பல வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து மேற்கூரை, வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை அமைத்துள்ளனர்.
இதன் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். நாளுக்கு நாள் அதிகரித்து வந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதை அடுத்து கலெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை சார்பில் அவகாசம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காரிமங்கலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ராமசாமி கோவில் வரை ஆக்கிரப்புகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.
இதில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவிபொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் நவீன் குமார் ஆகியோர் மேற்பார்வையில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் ஆக்கி ரம்புகளை அதிரடியாக அகற்றினர். தொடர்ந்து இன்று மொரப்பூர் ரோடு, பாலக்கோடு ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
- டெங்கு பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய மருத்துவ சிகிச்சை குறித்து பேசினார்.
- பாதிக்கப்பட்ட வர்கள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
கடத்தூர்,
தமிழகத்தில் பல பகுதிகளில் டெங்கு பரவி வருகின்ற நிலையில் மருத்துவ துறையினர் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம், கடத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் டெங்கு பரவாமல் இருக்கும் வகையில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் கடத்தூர் மருத்துவ அலுவளர் கனல்வேந்தன், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் மதியழகன், சுகாதார மேற்பார்வையாளர்கள் ரமேஸ், பார்தீபன், விக்னேஸ் மற்றும் மருத்துவ குழுவினர் தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதில் பொதுமக்களிடம் டெங்கு பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், மே ற்கொள்ள வேண்டிய மருத்துவ சிகிச்சை ஆகியவை குறித்து விளக்கி பேசினார். மேலும் பாதிக்கப்பட்ட வர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
- காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடாக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தமிழகம் வந்தடைந்தது.
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.
பென்னாகரம்:
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால், அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் நீர்வரத்து அதிரிக்க தொடங்கியது.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் கனமழை காரணமாக இன்று காலை, வினாடிக்கு நீர்வரத்து 5845 கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக, அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் 2673 கனஅடி வெளியேற்றப்பட்டது.
இதேபோன்று கபினி அணைக்கு இன்று காலை, நீர்வரத்து 2359 கன அடி வந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் இன்று காலை 4 ஆயிரத்து 673 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடாக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தமிழகம் வந்தடைந்தது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
இதன் காரணமாக கடந்த 2 தினங்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீடித்து இருந்தது. இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீராலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும் ஒகேனக்கல்லுக்கு இன்று வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இந்த நீர்வரத்தை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
- யானை குழி வெட்டுதல் உள்ளிட்டவைகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
- வனத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பூதிப்பட்டி கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இப்பகுதியில் வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலங்கள் உள்ளதால் வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த வனவிலங்குகளால், வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களில், பயிரிடப்பட்டுள்ள ராகி, கம்பு, சோளம், வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்களை வனவிலங்குகள் தினமும் நாசம் செய்து வருகிறது.
இது குறித்து வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொது மக்கள், இன்று 50-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு, பென்னாகரம் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
யானை, பன்றி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனப்பகுதியை ஒட்டி, தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் மற்றும் யானை குழி வெட்டுதல் உள்ளிட்டவைகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
- பல்வேறு வகையான பயிர் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
- பாலக்கோடு நகர பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பாலக்கோடு, ஒகேனக்கல் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ஒகேனக்கலில் 27 மி.மீட்டர் மழை பதிவானது. பாலக்கோட்டில் 10.2 மி.மீ மழை பெய்தது.
இந்த நிலையில் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் இரவு பெய்த கனமழையால் அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உள்ளது.
மேலும், பாலக்கோடு நகர பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது.
மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் மழைப் பொழிவு குறைந்து இருந்தது. இதனால் ஏரி, குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர் இருப்பு குறைந்து காணப்பட்டது.
மானாவாரி விவசாய நிலங்களில் சிறுதானிய பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர் சாகுபடி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மானாவாரி பயிர் சாகுபடி பணிகள் மீண்டும் விறுவிறுப்படைந்துள்ளன.
தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக ஏரிகள், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் மழைநீர் கணிசமான அளவில் தேங்கியுள்ளது.
இதேபோல் விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வகையான பயிர் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
- தொட்டி கடந்த சில மாதங்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் குப்பைகள் நிறைந்து அசுத்தமாக காணப்படுகிறது.
- அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள பனைக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவியர் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டியில் துர்நாற்றம் வீசியதாக மாணவர்கள் பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து பள்ளி ஆசிரியர் கணேசன் தொட்டியை ஆய்வு செய்தபோது தொட்டியில் துர்நாற்றம் வீசியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பாப்பாரப்பட்டி போலீசில் கணேசன் புகார் அளித்ததை அடுத்து பென்னாகரம் டி.எஸ்.பி. மகாலட்சுமி பாப்பாரப்பட்டி போலீசார் மற்றும் பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசிராமன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொட்டியை சுத்தம் செய்து தொட்டிலிருந்த தண்ணீரை ஆய்வுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதா என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த தொட்டியில் இருந்து மாதிரிகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த குடிநீர் தொட்டி மாணவர்கள் தாகம் தீர்ப்பதற்காக வைக்கப்பட்டுள்ள தொட்டி அல்ல என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மாணவர்கள் கழிப்பறையில் பயன்படுத்துவதற்காக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியாகும்.
இந்த தொட்டி கடந்த சில மாதங்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் குப்பைகள் நிறைந்து அசுத்தமாக காணப்படுகிறது. இருந்தபோதிலும் துர்நாற்றம் வீசுவதால் தொட்டியில் இருந்து மாதிரி நீர் சேகரிகப்பட்டு பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆய்வறிக்கை வந்த பின்னரே மனித கழிவு தண்ணீரில் கலந்து உள்ளதா என தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளியில் குடிநீர் தொட்டி வேறு இடத்தில் இருக்கிறது. மனித கழிவு கலக்கப்பட்டதாக கூறப்படும் தொட்டி மாணவர்களின் கழிப்பிடத்திற்கு மட்டுமே பயன்படுத்தக் கூடியது. மேலும் இத்தொட்டியில் மனித கழிவு கலந்திருப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை. அதிகாரிகள் தொட்டிலிருந்த தண்ணீரை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்.
ஆய்வறிக்கையில் மனித கழிவு கலக்கப்பட்டது என்று தெரிய வந்தால் யாராக இருந்தாலும் காவல்துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரவு நேரங்களில் மது பிரியர்களின் தொல்லை அதிகமாக உள்ளது, எவ்வாறு நடந்தது என்று தெரியவில்லை என்றனர்.
அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பள்ளிக்கூடத்தில் கழிவறைகளுக்கு தண்ணீர் வழங்க கழிவறை வளாகத்தின் மேல் 2 தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
- பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது.
பாப்பாரப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பனைக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் 126 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் கழிவறைகளுக்கு தண்ணீர் வழங்க கழிவறை வளாகத்தின் மேல் 2 தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று ஊபள்ளி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதா?: அதிகாரிகள் ஆய்வுராட்சி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது பள்ளிக்கூடத்தில் உள்ள தொட்டிகளுக்கும் தண்ணீர் ஏற்றப்பட்டது. இதையடுத்து பள்ளி ஆசிரியர் கணேசன் என்பவர் கழிவறை மேல் உள்ள தொட்டியில் ஏறி தண்ணீர் முழுவதும் நிரம்பி விட்டதா? என பார்த்தபோது நீர் கலங்கலாக இருந்தது. துர்நாற்றமும் வீசியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் பாபுவிடம் தெரிவித்தார். பின்னர் தலைமை ஆசிரியர் தண்ணீரில் துர்நாற்றம் வீசுவது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கல்பனாவிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து பென்னாகரம் தாசில்தார் சவுகத் அலி, பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகாலட்சுமி, பென்னாகரம் உதவி கல்வி அதிகாரி துளசிராமன் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் (ஆர்.ஓ.) பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவிக்கப்பட்ட கழிவறைகள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து தடயவியல் நிபுணர் தீபா தண்ணீர் மாதிரியை எடுத்தார். இதையடுத்து அதிகாரிகள் நீரை பரிசோதனைக்காக தர்மபுரிக்கு எடுத்து சென்றனர். அங்கு நீரை பரிசோதனை செய்த பின்னரே தண்ணீரில் மனித கழிவு கலக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தெரியவரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக எழுந்த புகார் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது .
- அணிகளின் அமைப்பா ளர்கள் இளைஞர்களை , பெரும் திரளாக பங்கெடுக்க செய்ய வேண்டும் அணிகளின் அமைப்பா ளர்கள் இளைஞர்களை , பெரும் திரளாக பங்கெடுக்க செய்ய வேண்டும்
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் வருகிற 26-ம் தேதி இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது .
இந்நிகழ்ச்சிக்கு கழக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இதனை அடுத்து தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் கிழக்கு மாவட்டசெயற்குழு கூட்டம் துணை செயலாளர் உமாசங்கர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி கலந்து கொண்டு நிகழ்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். மேலும் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரியும் மாநில இளைஞர் அணி செயலாளருக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.
மேலும் விழாவிற்கு மாவட்டத்தில் உள்ள அணிகளின் அமைப்பா ளர்கள் இளைஞர்களையும், மாணவர்களையும், மகளிரையும் பெரும் திரளாக பங்கெடுக்க செய்ய வேண்டும் என்றும், அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் கலைஞரின் நூலகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.ஜி.சேகர், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், ரேணுகாதேவி, மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன், இளைஞர் அணி அமைப்பாளர் வெங்கடேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கௌதம் , ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- வியாபாரிகள் ரூ.3 முதல் 4 ரூபாய் வரை அடிமட்ட விலைக்கே வாங்கிச் சென்றனர்.
- தற்போது கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டு வருகிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
40 நாட்களில் அறுவடைக்கு வருவதால் பெரும்பாலான விவசாயிகள் முள்ளங்கியை சாகுபடி செய்து வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்ததால், நீர்நிலைகள் நிரம்பியது.
இதனால் தருமபுரி மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ள முள்ளங்கி அமோக விளைச்சல் அடைந்துள்ளது. தற்பொழுது மாவட்டத்தில் மாரண்டஅள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முள்ளங்கியை அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதம் முள்ளங்கி வரத்து அதிகரித்ததால், விலை குறைந்து கிலோ ரூ.8-க்கு விற்பனையானது. மேலும் விவசாய நிலங்களுக்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.3 முதல் 4 ரூபாய் வரை அடிமட்ட விலைக்கே வாங்கிச் சென்றனர்.
இதனால் அறுவடை செய்யும் கூலி கூட கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். விலை குறைவால் விவசாயிகள் மாற்றுப்பயிர்களான கத்தரி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ளதால் முள்ளங்கி சாகுபடி மாவட்டத்தில் வெகுவாக குறைந்துள்ளது. தற்போது தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி விளைச்சல் குறைந்து இருப்பதால் விவசாயிகள் அவற்றை உள்ளூர் சந்தைக்கு அனுப்பாமல் அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செயகின்றனர். இதனால் முள்ளங்கியின் விலை உள்ளூர் சந்தையில் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ 4 ரூபாய்க்கு விற்ற முள்ளங்கி தற்போது கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை ஏற்றம் கண்டுள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு முள்ளங்கி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது.
- சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே சின்ன கும்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளி, கூலி தொழிலாளி. இவரது கணவர் விவேக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் இவர்களுக்கு 17 வயதில் விஸ்வா என்ற மகன் பள்ளி படிப்பை முடித்து வீட்டில் இருந்து வந்தார்.
மேலும் சிறுவன் குடற்புண் காரணமாக அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 12-ம் தேதி வயிறு வலியால் அவதிபட்ட சிறுவன் மன விரக்தியில் விஷம் சாப்பிட்டு மயக்க மடைந்தார்.
அக்கம், பக்கத்தினர் இவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காலாவதியான பால், பட்டர் பாக்கெட்டுகள், சோயா சாஸ் உள்ளிட்டவை 5 லிட்டர் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது.
- 5 நபர்களுக்கு தலா ரூ.1000 வீதம் ஐந்தாயிரம் அபராதம் விதித்தனர்.
பாலக்கோடு,
மாநிலம் முழுவதும் உள்ள அசைவ உணவகங்கள், இறைச்சி கடைகளில், சவர்மா, தந்தூரி சிக்கன், கிரில் சிக்கன் உள்ளட்டவற்றை ஆய்வு செய்து, குளிர்பதன பெட்டி, ப்ரிட்ஜ் ஆகியவை முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என கண்காணித்து தவறு இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் உணவு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அறிவுரைப்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானுசுஜாதா, மேற்பார்வையில் மாவட்ட முழுவதும் தொடர்ச்சியாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பாலக்கோட்டில் உள்ள அசைவ உணவகங்கள், துரித உணவகங்கள், தாபாக்கள் மற்றும் இறைச்சி கடைகளில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், உள்ளிட்ட குழுவினர் பாலக்கோட்டில் தருமபுரி ரோடு, தக்காளி மார்க்கெட், எம்.ஜி.ரோடு, பைபாஸ் மற்றும் புறவழிச் சாலை, சுற்று வட்டார பகுதியில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு செய்தார்.
இதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட உணவகங்களில் ஆய்வு செய்ததில் 3 உணவகங்களில் இருந்து நாள்பட்ட இறைச்சியும், குளிர் பதன பெட்டியில் வைத்திருந்த சமைத்த இறைச்சி 10 கிலோ மற்றும் வேக வைத்த கெட்டியான நிலையில் இருந்த பருப்பு ஆகியவை 5 கிலோ அழிக்கப்பட்டது.
மேலும் 2 உணவகங்களில் இருந்து தரம் குறைவான மையோனஸ் மற்றும் காலாவதியான பால், பட்டர் பாக்கெட்டுகள், சோயா சாஸ் உள்ளிட்டவை 5 லிட்டர் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது.
ஆய்வின் போது ஒரு டீக்கடையில் இருந்து தேயிலையை பரிசோதித்ததில் கலப்படம் கண்டறிந்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேற்படி விதிமுறை மீறிய உணவக உரிமையாளர்கள் மற்றும் டீக்கடைக்காரர் என 5 நபர்களுக்கு தலா ரூ.1000 வீதம் ஐந்தாயிரம் அபராதம் விதித்து உடன் எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மேலும் உணவகங்களில் இறைச்சி மற்றும் மூலப்பொருள்கள் தரமானதாகவும் உரிய நாளுக்குள் பயன்படுத்த தக்க வகையிலும் இருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்ற வலியுறுத்தப்பட்டது.
சமையலறை மற்றும் குளிர்பதன பெட்டி, ப்ரிட்ஜ் உள்ளிட்டவற்றை அடிக்கடி கண்காணித்திடவும் அனைத்து உணவகங்களும் உரிய உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று நுகர்வோர் காணும் வகையில் மாட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டது. இது குறித்த ஆய்வுகள் மற்ற பகுதிகளிலும் தொடர நியமன அலுவலர் உத்தரவிட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தெரிவித்துள்ளார்.
- பாதாள சாக்கடை இணைப்பு பணியினை நேரில் ஆய்வு செய்தார்.
- முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.
தருமபுரி,
தமிழகத்தில் அடுத்த மாதம் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையொட்டி தருமபுரி நகராட்சி, கொல்ல அள்ளிரோடு பகுதியில் மழைநீர் தேங்கும் இடங்களை கலெக்டர் சாந்தி, நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்கள். நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து குமாரசாமிபேட்டை, பென்னாகரம் ரோடு 10-வது வார்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையின் குறுக்கே கல்வெட்டு அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து, பணியினை விரைவாக முடித்திட அறிவுறுத்தப்பட்டது.
தருமபுரி நான்கு ரோடு பகுதியில் சரி செய்து கொண்டிருந்த பாதாள சாக்கடை இணைப்பு பணியினை நேரில் ஆய்வு செய்தார். பின்னர், வருகின்ற வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்கள். இந்த ஆய்வில் நகராட்சி ஆணையாளர் புவனேஷ்வரன், நகராட்சி பொறியாளர் புவனேஷ்வரி, துப்புரவு அலுவலர் ராஜ ரத்தினம், நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






