என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரத்து குறைவால் முள்ளங்கி விலை உயர்வு
    X

    மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு செல்ல முள்ளங்கியை விவசாயிகள் அறுவடை செய்த போது எடுத்த படம். 

    வரத்து குறைவால் முள்ளங்கி விலை உயர்வு

    • வியாபாரிகள் ரூ.3 முதல் 4 ரூபாய் வரை அடிமட்ட விலைக்கே வாங்கிச் சென்றனர்.
    • தற்போது கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டு வருகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    40 நாட்களில் அறுவடைக்கு வருவதால் பெரும்பாலான விவசாயிகள் முள்ளங்கியை சாகுபடி செய்து வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்ததால், நீர்நிலைகள் நிரம்பியது.

    இதனால் தருமபுரி மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ள முள்ளங்கி அமோக விளைச்சல் அடைந்துள்ளது. தற்பொழுது மாவட்டத்தில் மாரண்டஅள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முள்ளங்கியை அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதம் முள்ளங்கி வரத்து அதிகரித்ததால், விலை குறைந்து கிலோ ரூ.8-க்கு விற்பனையானது. மேலும் விவசாய நிலங்களுக்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.3 முதல் 4 ரூபாய் வரை அடிமட்ட விலைக்கே வாங்கிச் சென்றனர்.

    இதனால் அறுவடை செய்யும் கூலி கூட கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். விலை குறைவால் விவசாயிகள் மாற்றுப்பயிர்களான கத்தரி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ளதால் முள்ளங்கி சாகுபடி மாவட்டத்தில் வெகுவாக குறைந்துள்ளது. தற்போது தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி விளைச்சல் குறைந்து இருப்பதால் விவசாயிகள் அவற்றை உள்ளூர் சந்தைக்கு அனுப்பாமல் அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செயகின்றனர். இதனால் முள்ளங்கியின் விலை உள்ளூர் சந்தையில் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ 4 ரூபாய்க்கு விற்ற முள்ளங்கி தற்போது கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை ஏற்றம் கண்டுள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு முள்ளங்கி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×