என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட சாஸ்தா கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
    X

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட சாஸ்தா கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

    • சாஸ்தா அவதரித்த நாளாக பங்குனி உத்திரம் கருதப்படுகிறது.
    • அனைத்து சாஸ்தா கேவில்களிலும் கூட்டம் அலைமோதியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    முருகப்பெருமானுக்கு உகந்த இந்த நாளில், முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த நாளில் வள்ளியை முருகப்பெருமான் திருணம் செய்தார் என்பதால் பக்தர்கள் 3 மாவட்டங்களிலும் உள்ள முருகன் கோவில்களில் வழிபடுவார்கள். இதையடுத்து இன்று பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன.

    தென் மாவட்டங்களில் குலதெய்வமாக வணங்கப்படும் சாஸ்தா அவதரித்த நாளாக பங்குனி உத்திரம் கருதப்படுகிறது. இதனால், இந்த நாளில் பக்தர்கள் தங்கள் குலதெய்வமான சாஸ்தா கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். இதனால் அனைத்து சாஸ்தா கேவில்களிலும் கூட்டம் அலைமோதியது.

    நெல்லை மாவட்டத்தில் கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில், சேரன்மகாதேவி செங்கொடி சாஸ்தா, நெல்லை சந்திப்பு மேகலிங்க சாஸ்தா, பூதத்தான் குடியிருப்பு பொன் பெருமாள் சாஸ்தா, கல்லிடைக்குறிச்சி மலையன்குளம் பாடக மகாலிங்க சாஸ்தா, பிராஞ்சேரி வீரியபெருமாள் கரையடி மாடசாமி சாஸ்தா, நெல்லை டவுன் முருங்கையடி சாஸ்தா, சீவலப்பேரி மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா, வள்ளியூர் அருகே பூசாஸ்தா கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இதனால் நேற்று மாலை முதலே ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் வந்து தங்கினர். குழுவாக இருந்து கோவில் வளாகத்தில் சமைத்து சாப்பிட்டு பேசி மகிழ்ந்தனர். தொடர்ந்து இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    அப்போது நேர்த்திக்கடனாக பலரும் முடி காணிக்கை செலுத்தினர். மேலும் நேமிதமாக ஆடுகளையும் பலியிட்டனர்.

    பெரும்பாலான பக்தர்கள் இன்று காலை முதல் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். இதனால் காலை 7 மணி முதலே முக்கிய சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நிறைந்து காணப்பட்டது. நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலிலும் இன்று பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

    தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி கை கொண்டார் சாஸ்தா, கடையம் சூட்சமடையார் சாஸ்தா, பாப்பான்குளம் பூரண பெருமாள் சாஸ்தா, களக்கோட்டீஸ்வரர் சாஸ்தா கோவில் உள்ளிட்ட ஏராளமான சாஸ்தா மற்றும் அய்யனார் கோவில்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

    கடையம் தோரணமலை முருகன் கோவிலில் முருகன்-வள்ளி திருக்கல்யாண திருவிழா இன்று நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். அவர்கள் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கோவிலில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு மாலையில் வீடு திரும்பினர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அருஞ்சுனை காத்த அய்யனார், கற்குவேல் அய்யனார், பூலுடையார் சாஸ்தா, இலங்குடி சாஸ்தா ஆகிய கோவில்களில் இன்று பங்குனி உத்திரத்தையொட்டி பந்தல்கள் அமைக்கப்பட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை செய்யப்பட்டி ருந்தது.

    விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடை பெற்று வருகின்றன. பக்தர்கள் பொங்கலிட்டும், சைவ படையலிட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இரவு 12 மணிக்கு பிறகு, கருப்பசாமி மற்றும் பிற பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு, கிடா வெட்டி அசைவ படையல் போட்டு பக்தர்கள் வழிபடுவார்கள்.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி யில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பக்தர்கள் சிரமமின்றி சாஸ்தா கோவில்களுக்கு சென்றனர். மேலும் வாடகை ஆட்டோ, வேன் உள்ளிட்டவற்றிலும் குடும்பம் குடும்பமாக சென்றனர்.

    இந்த திருவிழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். கோவில் திருவிழாக்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    பங்குனி உத்திர திருவிழாவால் நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பூட்டிக்கிடந்த கோவில்கள் வர்ணம் பூசப்பட்டு பளிச்சென காட்சியளிக்கிறது. மேலும் இரவு நேரத்தில் பல வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

    Next Story
    ×