என் மலர்tooltip icon

    கடலூர்

    சேத்தியாத்தோப்பு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் சிற்பி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    சேத்தியாத்தோப்பு:

    மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் காமராஜர் நகரை சேர்ந்தவர் பாலமுத்து (வயது 19) சிற்பியாக உள்ளார். இவர் உள்பட 4 பேர் திருத்துறை பூண்டியில் உள்ள கோவிலில் சிற்ப வேலைக்காக காரில் நேற்று மாலை புறப்பட்டு சென்றனர்.

    இந்த கார் சேத்தியாத்தோப்பு அருகே நந்தீஸ்வரமங்கலம் பகுதியில் சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டுஓடி தடுப்புசுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பாலமுத்து சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியானார். காரில் வந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து சோழத்தரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். விபத்தில் பலியான பாலமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கல்லூரிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழிலிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அனுசுயா (வயது 20). இவர் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 17-ந்தேதி அனுசுயா கல்லூரிக்கு சென்றார். அதன்பின்னர் இரவு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அனுசுயாவை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பெற்றோர் காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து அனுசுயா என்ன ஆனார்? எங்கு சென்றார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பண்ருட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் பண்ருட்டி பஸ்நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஆய்வு செய்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி நகரில் இயக்கப்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், பள்ளி கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அருகில் சென்று. இந்த ஏர்ஹாரன்களை ஒலிக்கச் செய்வதால் மக்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் உத்தரவின்பேரில் பண்ருட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் பண்ருட்டி பஸ்நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஆய்வு செய்தனர்.

    அப்போது பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை அகற்றினர். ஒட்டு மொத்தமாக 20 தனியார் மற்றும் அரசு பஸ்களில் இருந்த ஏர்ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது போன்ற ஏர்ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது என டிரைவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கடலூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கடலூர் சூரப்பநாயக்கன் சாவடி சிபிஎம் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் நடைபெற்றது.
    கடலூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கடலூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கடலூர் சூரப்பநாயக்கன் சாவடி சிபிஎம் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் துரை, வி.சி.க மாவட்ட செயலாளர் அறவாழி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருதவாணன், உதயகுமார், ராஜேஷ்கண்ணன், சுப்புராயன், நகர செயலாளர் அமர்நாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் குளோப், நகர செயலாளர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    அத்தியாவசியப் பொருட்கள் விலையும் உயர்ந்து வருகிறது. மேலும் வேலைவாய்ப்புயின்மை அதிகரித்து உள்ளது. இதுமட்டுமின்றி பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளன. காய்கறி, தானியங்கள், உணவு எண்ணெய் விலை என அனைத்துமே அதிகரித்துள்ளது. நிலக்கரி பற்றாக்குறைக்கு வழிவகுத்த அரசின் கொள்கைகளால் இப்போது மின்சார உற்பத்தியும் பாதித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பில் இருந்து வருகின்றனர்.

    ஆகையால் இதனை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் மே 26-ந்தேதி வட்ட தலைநகரான கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி ஆகிய மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது மே – 28, 29, 30, 31 தேதிகளில் வீடுவீடாக சென்று நோட்டீஸ் விநியோகம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    திட்டக்குடி அருகே விநாயகர் கோவில் உண்டியலை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    திட்டக்குடி:

    திட்டக்குடி தெற்கு தெருவில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் அப்பகுதியில் மிக பிரபலமானது. இந்தக் கோவிலில் கடந்த ஒரு வாரம் முன்பு அன்னப்படையல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ஏராளமான பக்தர்கள் பணம் செலுத்தி இருந்தனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கோவிலுக்கு வந்தனர். கோவில் கேட்டின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோவிலில் இருந்த உண்டியலை மர்ம நபர்கள் எடுத்து சென்று உள்ளனர்.

    இன்று காலை பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கேட் உடைக்கப்பட்டு உண்டியல் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திட்டக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து உண்டியல் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    திட்டக்குடி:

    திட்டக்குடி அருகே அருந்ததியர் தெரு, ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. அவரது மனைவி ஜெயசக்தி (வயது30). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை ஜெயசக்தி வீட்டிலிருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்தார்.

    தகவல்அறிந்த ராமநத்தம் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இவர்களுக்கு திருமணமாகி 9 வருடங்கள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ராமநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    ×