என் மலர்
கடலூர்
கடலூர் புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் 5 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த திலகவதி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக கடலூர் 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சாட்சி விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதையடுத்து இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு மோகன் உத்தரவிட்டார். தற்போது இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் திருச்சி உறையூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கிழக்கு பூங்கா சாலையை சேர்ந்தவர் கிமஜாராம்சரண். பரதநாட்டிய கலைஞர். இவர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி கும்பிட வந்தார்.
அப்போது அவர் ஒரு கைப்பையில் வைர நகைகளை வைத்திருந்தார். இதனை நோட்டமிட்ட ஒரு பெண், அந்த பையை நைசாக திருடிக்கொண்டு ஓடிவிட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் கிமஜாராம்சரணிடம் இருந்து வைர நகைகளை திருடிச்சென்றது சிதம்பரம் குமரன் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி இந்திரகுமாரி (வயது 30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்திர குமாரியை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் வங்கக் கடலில் கலக்கும் ஆறுகளில் ஒன்று கெடிலமாகும். இந்த ஆறு கடலில் கலப்பதற்கு சுமார் 5 கிலோ மீட்டருக்கு முன்பாக கம்மியம்பேட்டை பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
இந்த தடுப்பணையில் தேங்கும் தண்ணீரால் கம்மியம்பேட்டை, திருவந்திபுரம், பில்லாலி தொட்டி மற்றும் கடலூர் நகராட்சியின் ஏராளமான பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கெடிலம் ஆற்றில் மீன்கள், இறால்கள் செத்து மிதந்தன. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த மீன்களை ஆற்றில் இருந்து வெளியே எடுத்து வந்தனர்.
கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு நெல்லிக்குப்பத்தில் உள்ள சர்க்கரை ஆலை கழிவுநீர் ஆற்றில் பாய்வதால் மீன்கள் செத்து மிதந்ததாக பொதுநல அமைப்புகள் குற்றச்சாட்டுகளை எழுப்பின. மேலும் பல ஆண்டுகளாக இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போதும் கெடிலம் ஆற்றில் மீண்டும் மீன்கள் செத்து மிதப்பதால் தொழிற்சாலை கழிவுகள் ஏதேனும் தண்ணீரில் கலந்துள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இது போன்ற சம்பவம் தொடர்ந்தால் கடலூர் நகரம் முழுவதும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினை ஏற்படுவதோடு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் உயிர் பலி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கராசு (வயது 44), சின்னத்துரை (36). இவர்கள் இருவரும் என்.எல்.சி. ஒப்பந்த துப்புரவு தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.
இன்று காலை வழக்கம்போல் அவர்கள் 2 பேரும் வேலைக்கு சென்றனர். 15-வது வட்டத்தில் அமைந்துள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டிருந்ததை சரி செய்ய இருவரும் சாக்கடைக்குள் இறங்கினர்.
அப்போது திடீரென அவர்கள் 2 பேரையும் விஷ வாயு தாக்கியது. இதில் இருவரும் மயங்கினர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தங்கராசையும், சின்னத்துரையையும் மீட்டனர்.
என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்கள் 2 பேரையும் சேர்த்தனர். அங்கு தங்கராசும், சின்னத்துரையும் பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாக்கடையை தூர் வாரிய போது விஷவாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு இன்று வெளியானது. இந்த தேர்வில் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த அருண்விக்னேஷ் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3–ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்தார்.
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக்பள்ளியைச் சேர்ந்த மிதுவர்ஷினி 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3–ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்தார்.
கடலூர் செயின்மேரிஸ் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த சொர்ணாமரிம் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3–ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்தார்.
கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு இந்த ஆண்டு 37,795 பேர் தேர்வு எழுதினர். இதில் 33,687 தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 89.13 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட 2.48 சதவீதம் கூடுதல் ஆகும். இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் கடலூர் மாவட்டம் 28–வது இடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட கடைகள் தற்போது மதியம் 12 மணிக்கு திறக்கப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் 225 மதுக்கடைகள் உள்ளன. இன்று 12 மணியளவில் இந்த கடைகள் திறக்கப்பட்டன.
வழக்கமாக டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்படும். ஆனால் இன்று 12 மணிக்கு திறக்கப்பட்டதால் மது குடிப்பவர்கள் மனவருத்தம் அடைந்தனர்.
கடலூரில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்று காலை 10 மணிக்கு மதுப்பிரியர்கள் வந்தனர். கடை மூடிக்கிடந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். காலையிலேயே மது குடிக்காததால் அவர்களுக்கு கை நடுக்கம் ஏற்பட்டது. சிறிது நேரம் என்ன செய்யலாம் என்று யோசித்தபடி இருந்தனர்.
புதுவையில் உள்ள மதுக்கடைகள் காலை 9 மணிக்கு திறந்துவிடும். அங்கு சென்று மதுகுடிக்கலாம் என்று முடிவு செய்தனர். புதுவை எல்லையில் உள்ள கன்னியக்கோவிலில் உள்ள மதுக்கடைக்கு ஷேர் ஆட்டோவில் சென்றனர்.
இதேபோல் சோரியாங்குப்பத்தில் உள்ள மதுக்கடைக்கும் ஷேர் ஆட்டோக்களில் கூட்டம் கூட்டமாக சென்றனர். நெல்லிக்குப்பம், ரெட்டிச்சாவடி, கடலூர்சாவடி ஆகிய பகுதிகளில் உள்ளவர்களும் புதுவையில் உள்ள மதுக்கடைக்கு படையெடுத்தனர்.
இதனால் அங்குள்ள மதுக்கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. மது விற்பனை அமோகமாக இருந்தது. அந்த பகுதி திருவிழா கூட்டம் போல் கலகலப்புடன் காணப்பட்டது. அங்கேயே மதுக்குடித்தவர்கள் தங்கிவிட்டனர். அதனால் எங்கு பார்த்தாலும் குடிமகன்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது.
கடலூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கும் நேரம் மாற்றப்பட்டதால் விற்பனை குறைய வாய்ப்பு உள்ளது.
எனவே புதுவையில் மதுக்கடைகளில் விற்பனை களைகட்டும். காலையிலேயே குடிமகன்களுக்கு மது விற்பதற்காக சிலர் புதுவையில் இருந்து கடலூருக்கு மதுப்பாட்டில்களை அதிக அளவில் கடத்திவர வாய்ப்புகள் உள்ளது.
இதைதடுக்க ரெட்டிச்சாவடி, ஆல்பேட்டை, உண்ணாமலை செட்டிச் சாவடி, மருதாடு, மேல்பட்டாம்பாக்கம், வான்பாக்கம், அழகியநத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி மதுப்பாட்டில்களை கைப்பற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 225 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவைகளில் விற்பனை குறைவு மற்றும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்ற 75 கடைகளை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
கடலூர் மாவட்டத்தில் உள்ள 774 பள்ளி வாகனங்கள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஆண்டு தோறும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஆய்வு நாளை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம், சிதம்பரம் பகுதியில் சி.முட்லூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மைதானத்திலும், விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
இதில் கடலூரில் கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வினை பார்வையிட்டு தொடங்கி வைக்கிறார்.
ஆய்வின்போது வாகனத்திற்கு ஓட்டுனர் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், மஞ்சள் நிறம் பூசி இருக்க வேண்டும், ஜன்னல்களில் கிரில்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும், முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்பு கருவி இருக்க வேண்டும், வாகனத்தில் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்களின் சின்னம் மற்றும் பின்புறத்திலும், முன்புறத்திலும் பள்ளி வாகனம் என்று எழுதப்பட் டிருக்க வேண்டும். வாகனத்தின் தொழில் நுட்பத்திறன், காப்பு சான்று ,தகுதிச்சான்று அனுமதி சீட்டு ஆகியவை ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
வாகனத்தில் ஒரு வழி கதவு தான் இருக்க வேண்டும். இந்த பள்ளி வாகனத்தை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர், துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய உள்ளார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
என்.எல்.சி.யில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்கள் தங்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் பஞ்சப்படி உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, 2016–17–ம் ஆண்டிற்கு புதிய பஞ்சப்படியாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.39.40 உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாக என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தொகை 1–4–2016 அன்று முதல் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க செயலாளர் வெங்கடேசன் கூறுகையில், என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நடப்பு ஆண்டு பஞ்சப்படி ரூ.39.40 உயர்த்தியுள்ளது.
இந்த தொகை ஏப்ரல் 1–ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது என்றார்.
இதனால் ஊதிய உயர்வு பெறும் ஒப்பந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அமைதியான ஆன்மீக பூமி. எப்போதும் வேதமந்திரங்களின் முழக்கம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். எப்போதும் சிதம்பரம் பகுதி பரபரப்பாக காணப்படும்.
சிதம்பரத்தைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு மழை காலம் என்றால் பயம். அது ஏன் என்று கேட்கிறீர்களா? மழை காலத்தில் மேட்டூர் அணையிலிருந்து கீழணைக்கு தண்ணீர் வரும். அப்போது தண்ணீரோடு சேர்ந்து அங்கிருந்து முதலைகளும் வந்துவிடுகின்றன.
அந்த முதலைகள் பின்னர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரிக்கு வந்து விடுகின்றன.
முதலைகள் அந்த ஏரியிருந்து ஊர் சுற்றிப் பார்க்க புறப்பட்டு விடுகின்றன. வீராணம் ஏரியிலிருந்து பழைய கொள்ளிடத்திற்கு வருகின்றன. அங்கிருந்து கான்சாகிப் வாய்காலுக்கு வருகின்றன.
பழைய கொள்ளிடம் காட்டுமன்னார் கோவிலில் இருந்து சிதம்பரம் நகர எல்லை வரை வருகிறது. சிதம்பரம் எல்லையிலிருந்து சிதம்பரம் நகரம் வரை கான்சாகிப் வாய்க்கால் செல்கிறது. கொள்ளிடம் கரையோரம் வல்லம் படுகை, திட்டுக்காட்டூர், நந்தி மங்கலம் உள்பட 15–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
பழைய கொள்ளிடம் ஆற்றில் காலை நேரத்தில் முதலைகள் ஆற்றின் கீழ் பகுதியில் சென்று பதுங்கிக் கொள்ளும். இரவு நேரத்தில் ஆற்றின் நீர் மட்டத்திற்கு மேலே எட்டிப்பார்க்கும். சிறிது நேரம் ஆற்றில் அங்கும் இங்கும் நீந்தி விளையாடும். களைப்பு ஏற்பட்டவுடன் ஆற்றை விட்டு வெளியே வரும்.
புல் தரையில் தவழ்ந்து நிலா வெளிச்சத்தில் இளைப்பாறும். பின்னர் இரை தேடி அங்கும்–இங்கும் நோட்டமிடும். ஆடு, கோழி ஆகியவை அதற்கு விருப்பமான அசைவ அயிட்டம். அவை எங்கே இருக்கிறது என்று தேடி அலையும்.
ஆற்றின் கரையோரம் படுத்து கிடக்கும் ஆட்டுக் குட்டியை தன்கோரப் பற்களால் கடித்து இழுத்துக் கொண்டு ஆற்றுக்குள் சென்றுவிடும்.
அங்கு கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி ஏப்பம் விட்டு விடும். அது ஜீரணமாக 2 நாட்கள் ஆகும். அதன்பிறகு மெல்ல மீண்டும் வெளியே வரும். அப்போது ஆட்டு குட்டி கிடைக்காவிட்டால் வருத்தப்படாது.
கோழிக்குஞ்சுகள் சிக்கினால் அதையும் விழுங்கிவிடும். இரவில் அட்டகாசம் செய்யும் முதலைகள் காலை நேரத்தில் செய்யும் அட்டகாசம் அதைவிட அதிகம். என்ன என்கிறீர்களா?
காலையில் காலைக் கடன் முடித்து விட்டு யாராவது ஆற்றில் இறங்கினால் அவர்களது காலை கடித்து குதறி விடும். ஆற்றில் தண்ணீர் அதிகம் வருகிறதே குளிக்கலாம் என்று நினைத்து இறங்கினால் காலை துண்டாக்கிவிடும். சிதம்பரம் பகுதியில் முதலையால் கால் இழந்தவர்கள் பலர் உள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மழை வெள்ளம் வந்தபோது வீராணம் ஆற்றிலிருந்து ஏராளமான முதலைகள் சிதம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்களை அச்சுறுத்தி வந்தன.
மழை காலம் முடிந்த பிறகு முதலையின் அட்டகாசம் குறைந்து விட்டது என்று மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். தற்போது கோடைகாலம் மக்களை வாட்டி வதைக்க தொடங்கி உள்ளது. மேலும் முதலைகள் அட்டகாசம் செய்ய தொடங்கி உள்ளன.
இந்த நேரத்தில் முதலை எப்படி வருகிறது? மழை காலம் முடிந்த பிறகு கொள்ளிடம் ஆறு மற்றும் கான்சாகிப் வாய்க்காலில் முதலைகள் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.
அந்த பகுதியில் ஆற்றின் கரையோரம் துளை போட்டு பதுங்கி விடுகின்றன. கோடைகாலம் தொடங்கியதும் ஆற்றில் தண்ணீர் வற்றிய பிறகு இரை தேடி வெளியே வருகின்றன.
அப்போது சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் கிராம மக்கள் தூக்கமில்லாமல் தவிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் சிதம்பரம் அருகே உள்ள பிள்ளை முத்தாபிள்ளை சாவடி கிராமத்தில் ஒரு முதலை ஊருக்குள் புகுந்தது.
வனத்துறையினர் அதை மடக்கிப் பிடித்து சிதம்பரத்தில் உள்ள வக்கார மாரி குளத்தில் கொண்டுவிட்டனர். தற்போது மீண்டும் அதே பகுதியில் மீண்டும் மற்றொரு முதலை கிராமத்துக்குள் நுழைந்தது. வனத்துறையினர் அதை பிடித்து வக்காரமாரி குளத்தில் கொண்டு போய் விட்டனர். இந்த குளத்தில் 100–க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன.
அந்த குளத்தில் மீன்களை அவை சாப்பிட்டு வருகின்றன. இந்த குளத்தில் இருந்து கான்சாகிப் வாய்க்காலுக்கு முதலைகள் தப்பி வந்து விடுகின்றன என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.
ஊருக்குள் படையெடுக்கும் முதலைகளால் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவில் பகுதியில் உள்ள கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதை தடுக்க என்ன செய்யலாம்? சிதம்பரம் பகுதியில் முதலை பண்ணைகள் அரசு அமைக்க வேண்டும். அங்கிருந்து அவை தப்பிச் செல்லா வண்ணம் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? அவர்களின் அச்சம் தீருமா?
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கொங்கராயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 42). தே.மு.தி.க. கிளைச் செயலாளராக இருந்தார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் படுதோல்வி அடைந்தார். மேலும் தே.மு.தி. க.கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்ததால் சுப்பிரமணியன் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் மனமுடைந்த சுப்பிரமணியன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்த சுப்பிரமணியனுக்கு வீரம்மாள் என்ற மனைவியும், விஷ்ணு, திருமூர்த்தி ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.






